Tag: சு. ரவி

  • ஏழுமலையான் அந்தாதிப் பதிகம்

    சு.ரவி

     

     

    வெய்யதோர் பாலை வனமாய்க் கிடந்த மனத்தும் உந்தன்

    துய்யமெய்க் காதல் அரும்பக் கவிதை துளிர்க்கவைத்தாய்

    மைம்முகில் வண்ணா! மலையே ழுகந்தமர் மாணிக்கமே!

    உய்யுமா றென்னையும் ஆண்டுகொள் நானுன் அடைக்கலமே!

     

    அடைக்கலம் வந்த அரக்கனின் தம்பிக்(கு) அரசுதந்த!

    புடைத்தெழும் தோள! புலத்தியன் தோன்றல் புழுதிசாய்த்தோய்!

    இடைக்குலம் உய்ய இரவிலே மாறி இடம்பெயர்ந்தோய்

    குடைக்கொரு கோவர்த் தனகிரி தூக்கிய கோவிந்தனே!

     

    கோவித் தெனைநீ புறம்விட லாமோ? குழவியென்றே

    பாவித்  திடுவது பாரமோ? தாயாய்ப்  பரிந்தணைத்தால்

    தாவித் தழுவிடும் சேய்நான் இதுபோல் தவிக்கலாமோ?

    வாவிப் பொழில்சூழ் வடமலை மேவும் வரதுங்கனே!

     

    வரதம் வலமும், அபயம் இடமும் வழிநடத்தும்

    விரதக் கனலில் இருளறும் உள்ளே விழிதிறக்கும்

    சுருதிப் பொருளே, நவில்தொறும் நாமம் சுவைபெருக்கும்

    அரவம் விரித்த அணைமேல் துயிலும் அரவிந்தமே!

     

    அரனும், அரியும், உமையும், குகனும் ஒருவடிவாய்த்

    திரளும் திருமலைத் தெய்வமே, வாசத் துழாயலங்கல்

    புரளும் புஜங்கள் புவனங்க ளேழும் புரந்திருக்க

    இருளும், ஒளியும்  கடந்த வெளியாய் இருப்பவனே!

     

    இருப்பதும், நிற்பதும், பாதங்கள் நீட்டிக் கிடப்பதும் உன்

    விருப்புடைக்  கோலம். பனிபோல் முகில்கள் படர்ந்திருக்கும்

    பருப்பதம்  ஏழும்  பரவும்  பரனே,  பரிந்தெமக்குன்

    திருப்பதம் தந்தாய்; திதிப்பினில் நெஞ்சம் திளைக்கின்றதே!

     

    திளைக்கலாம், தோய்ந்து கிடக்கலாம், கண்களில் முத்திரண்டு

    முளைக்கலாம், வேத முதல்வனைப் போற்றிப் பரவசத்தில்

    களிக்கலாம், இந்தக் கலியுகம் உய்யக் கருணைகொண்டு

    சுளைப்பலா  வேரிற்  பழுத்ததே,  வாரீர்  சுவைக்கலாமே!

     

    சுவைதரும் நாமம் சுகம்தரும் வாழ்வின் சுமைவிலக்கும்

    அவைதொறும் வெற்றி நடைதரும்; மந்திக் குரங்கினங்கள்

    கவைதொறும் தாவும் கவின்வேங் கடத்துறைக் கற்பகக்கா

    எவையெலாம்  வேண்டும் அவையெலாம் அன்பர்க் களித்திடுமே!

     

    அளிமுரல் சோலை அணிதரும் மாமலை வேங்கடத்தே

    ஒளியுறக் கோயில் உகந்தஎம் மானை அணுகுபோதே

    களிவரல், பேச்சறல், நெஞ்சகம் விம்மிக் கசிந்துகண்ணீர்த்

    துளிவரல் என்று பலவா(று) இதயம் துடிக்கின்றதே!

     

    துடியிடை நாயகி துய்யசெந் தாமரை வீற்றிருப்பாள்
    வடிவுடை யாள்,திரு வேங்கடத் தான் திரு மார்பிலென்றும்
    குடியுடை யாள் பது மாவதித் தாயை மணந்துகொண்டு
    நெடிதுயர்ந் தானை நினைந்தவர்க் கென்றும் நிகரில்லையே!


     


    Share
  • குடுமியான் மலை மன்மதன்

     

    சு.ரவி

    வணக்கம், வாழியநலம்

    குடுமியான்மலைக் கோயிலில் கம்பீரமாகக் கிளிவாகனத்தில்
    காட்சி தரும் மன்மதன் ஓவியம்,
    பார்க்க,படிக்க, ரசிக்க

    காதல் என்ற கற்கண்டு மதத்தை
    மதித்துண ராது மமதை மிகுந்து
    நாத்திக னாக நான்திரிந் திருந்தேன்!
    ஓவியம் என்ற ஒருநுண் கலைதான்
    ஓசைக ளின்றி உள்ளே நுழைந்தது;
    புதராய்ப் பதராய்க் கிடந்த மனமோ
    கவிதைக ளாலே மலர்வனம் ஆச்சு!.
    கவிதைப் பூக்கள் கனவுகள் தந்தன.
    வசந்த காலம் வாழ்வில் மலர்ந்தது
    எனைமறந் திருந்த ஏதோ ஒருநாள்
    இசையென் இதயக் கதவம் திறந்தது.
    இசையும், கவியும், கலையும் சேர்ந்தெனைக்
    காதல் மதத்தைத் தழுவச் செய்தன.
    கரும்பு வில்லைக் கைகளில் ஏந்திக்
    கருவண்டுகளே நாணாய் இலங்க,
    ஐவகை மலர்களை அம்புகளாக்கித்
    தென்றல் என்றொரு தேரினில் இவர்ந்து
    கிளிவாகனத்தில் ஒளியுறத் தோன்றி,
    அன்னவா கனத்தாள் அழகிய ரதியொடு
    உலகம் எங்கும் உலவிடும் தேவன்
    காமன், அனங்கன், காதற் கடவுள்,
    மன்மதன் என்னை மதம் மாற்றினனே!

     

    Share
  • விடைவாகனன் பதமே கதி என நாடுக மனமே!

     

    -சு.ரவி

    வணக்கம், வாழியநலம்

     

    விடைவாகனன் எண்ணெய் வண்ண ஒவியமும்( இணைப்பில்), விடைவாகனன் பஞ்சகமும்..

     

    விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

     

    சடைவார்குழல்   நதியோடொரு   மதிசூடிய     பெருமான்

    கொடியாமிடை   உடையாள்உமை ஒருபோதிலும்பிரியான்   

    தடையாவையும்  பொடியாய்விழ   உடனேஅருள் புரிவான்

    விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

     

    பனிவார்சடை    அரவோடொரு  பிறைசூடிய    பெருமான்

    கனிவாய்மொழி   கருணாகரி     கணமேயினும்  பிரியான்

    இனியோரிடர்     தொடராவணம் இனிதேயருள்   புரிவான்

    விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

     

    முகிலோடிய      சடைமீதினில்   நிலவோடிய   பெருமான்

    துகில்மூடிய       நகிலாள்உமை  துணையோர்கணம்பிரியான்

    புகல்நாடிய        அடியாரிடர்     கெடவேஅருள்   புரிவான்

    விடைவாகனன்    பதமேகதி        எனநாடுக    மனமே!

     

    புகைபோல்படர்    சடைமீதினில்    புனல்சூடிய   பெருமான்

    முகைபோலிரு    முலையாள்உமை முகமோர்கணம்பிரியான்

    பகை, நோய்,பிணி அணுகாவணம்    பதமாயருள் புரிவான்

    விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

     

    மலர்சூடிய     சடைமீதினில்     மதிசூடிய    பெருமான்

    லலிதாம்பிகை  உமையாள்இடம்  ஒருவேளையும் பிரியான்

    கலியாம்விதி   தொடராவணம்    கடிதேயருள்  புரிவான்

    விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

    Share
  • குடுமியான்மலைக் கோயில்- ரதி

     

    சு. ரவி

    வணக்கம், வாழியநலம்,

    உயிர்ச்சங்கிலியின் தொடர்ச்சிக்கு ஆதார தேவதை.

    காதலுக்கு அதிபதியான தேவனையே காதலில் வீழ்த்தும் நாயகி.
    பரமனின் விழிவெப்பத்தால் ” புறாவின் கழுத்துத் தூவிகள்” போல ( நன்றி:உவமைக் கவிஞன் காளிதாஸன்)
    சாம்பலாகிப் பறந்த மன்மதனை அனங்கனாகவேனும் உயிர்ப்பித்த உத்தமி.
    அன்னவாகனத்தில் வீற்றிருக்கும் அழகுத் தெய்வம்.
    குடுமியான்மலைக்கோயிலில் காட்சி தரும் ரதிதேவியின் ஒயில் வடிவம்.

    Share
  • மதுரையம் பதி காளி

     

    – சு.ரவி

     

    வணக்கம், வாழியநலம்

    மதுரையம்பதியில் காளிமாதாவின் ஆக்ரோஷக் கோலம்…

    ஆடலில் வென்றான் ஐயன்

     

    அம்மை நீ தோற்றாய் அல்லை!

    கூடலில் போலே இங்கும்

    தோற்றவர் வென்றார் அன்றோ?

    கூடலில் கோயில் கொண்டு

    குறையறக் காக்கும் காளீ!

    தேடலில் அடியேன் வெல்ல

    தேவி நீ அருளல் வேண்டும்!

     

    மாடமா மதில்கள் சூழும்

    மதுரையம் பதிவாழ் தேவி!

    காடுவாழ் சிவனைக் கண்டு

    காதலுற் றாயோ, காளீ!

    வீடு நான் வேண்டேன்; வேறு

    விழுமிய செல்வம் வேண்டேன்!

    பாடலால் உந்தன் பாதம்

    பரவிடும் சுகமே போதும்!

     

    கண்ணனோ(டு) இடத்தை மாற்றிக்

    கம்ஸனைக் கலங்க வைத்தாய்!

    எண்ணெழுத் தறியா மூடன்

    இலக்கியம் படைக்கச் செய்தாய்!

    மண்ணிலே உயிர்கள் வாழ

    மாரியாய்ப் பொழிந்து நின்றாய்!

    உள்நினைந் துருகிப் பாடும்

    ஒருகவி போதும் தாயே!

     

    எட்டய புரத்துக் காரன்

    எம் தமிழ்ப் பாட்டுக் காரன்

    கொட்டிய கவிதைக் குள்ளே

    கொழுந்துவிட் டெரியும் தேனே!

    மட்டவிழ் மலர்கள் சூடி

    மதுரையை ஆளும் தாயே!

    பட்டமும், பரிசும் வேண்டேன்

    பதமலர் தருவாய் காளீ!

     

    பண்டரி பரத்தில் விட்டல்

    பக்தரோடி ழைந்ததைப் போல்

    பண்டொரு நாளில் சொக்கன்

    பலவிளை யாடல் செய்த

    மண்ணினை, மதுரை ஆளும்

    மரகத வல்லித் தாயே!

    திண்ணமாய் நின்னைப் பற்றத்

    திருவுளம் செய்வாய் காளீ!

     

    Share
  • தாய்

    சு.ரவி

    ஒருகவளம் சோறும், ஒருகுவளை நீரும்
    தருபவரெல் லாமெனக்குத் தாய்!

    அடக்கமில் லாமல் அதிர நடந்தால்
    தடுக்கிடும் கல்லுமென் தாய்!

    முலைப்பால் கொடுத்தென் முகத்தையும் சேலைத்
    தலைப்பால் துடைப்பவள் தாய்

    அம்மாநீ எந்தன் அருகிருக்கும் தைரியத்தில்
    சும்மா இருத்தல் சுகம்!

    பன்னுமாக மத்தாள் பசித்தவர் ஓட்டிலிடும்
    அன்னவாக னத்தாள் அவள்.

    ஓயா தியங்கி இயக்கத் துறங்குவாள்
    மாயா மனோன்மணி தாய்!

    எண்ணமும், எண்ணும் மனமும்ஆங் கெண்ணத்தால்
    எண்ணப் படுவதும் தாய்.

    மூலத் துறங்கி முனைப்பிற் கிளர்ந்தெழுவாள்
    கோலக் குமிண்சிரிப் பாள்.

    ஸ்ரீபுரத்தாள், மாமதுரைக் கோபுரத்தாள், பண்ணிசைக்கும்
    நூபுரத்தாள் நெஞ்சே நினை.

    அன்பே சிவம் அதன் ஆன்மா அவள் எனவே
    அன்பே அவளேன் றறி!

    சு.ரவி

    Share
  • அம்மா

    சு.ரவி

    அம்மாவுக்கு இறுதி விடை கொடுத்து வீடு திரும்பியாச்சு!
    பாசம், பரிவு, அன்பு என்று இளகிய மனமும், இரும்பு போன்ற மன உறுதி,வைராக்கியம், பிடிவாதம், தான் கொண்ட கொள்கையில் பிடிப்பு என்ற இறுக்கமும், ‘கண் பார்த்தால் கைசெய்யும்’ என்ற அளவில் எந்த ஒரு கைவினையையும் சுலபமாகக் கற்றுத்தேறும் ஆர்வமும்-

    ஓர் அபூர்வக் கலவை அம்மா!.

    பொருளாதார வசதி குறைவாய் இருந்த காலகட்டங்களிலும், எப்போதும் வீட்டுக்கு எத்தனை விருந்தினர் வந்தாலும், அத்தனை பேருக்கும் சுவையான உணவு இருக்கும். பண்டிகை நாட்களிலோ ‘குறைவொன்றும் இல்லை கோவிந்தா’ தான்! தீபாவளி என்றால் உள்ளாடை முதல்,கர்சீப் வரை எல்லாருக்கும் புதிதாக அடுக்கப்பட்டிருக்கும். 2 ஸ்வீட், 4 காரம், லேகியம் என்று அனைத்தும் வீட்டிலேயே தயாராகும்.

    உழைப்புக்கு அஞ்சாத அம்மா!

    தையல் கலையில் தேர்ச்சிபெற்று, மயிலையில் ஒரு மாதர் சங்கக் கூட்டுறவு அமைப்பில் சேர்ந்து, ஸ்கூல் யூனிஃபர்ம் போன்ற ஆர்டர் எடுத்து, வீட்டில் தைத்துக் கொடுத்து அந்த சிறு வருமானத்தையும் வீட்டுப் பொருளாதாரத்திற்கு முட்டுக் கொடுத்து-

    தன் நேரத்தை வீணாக்காத அம்மா!

    அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளையும், எங்கள் நண்பர்களையும் தன் மக்களாகப் பாவித்து அன்புகாட்டும் மனம். ஒருமுறை பக்கத்து வீட்டுப் பெண்குழந்தை (வயது3) வீட்டிலிருந்த தூக்க மாத்திரைகளை மிட்டாயென்று எண்ணித் தின்றுவிட்டுத் துவண்டு தலைதொங்க, அத்தனை பேரும் செய்வதறியாது திகைத்த போது, போட்டது போட்டபடி விட்டு, குழந்தையை அள்ளிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி, அவள் உயிரை மீட்டு வந்த

    செயல்வீராங்கனை அம்மா!

    எந்த ராஜா எந்தப் பட்டினம் போனாலும், அப்பாவோடு சேர்ந்து காலை அலுவல்களுக்கிடையே லலிதாஸஹஸ்ரநாமம் தினசரி பாராயணம் செய்யும் அம்மா!

    மயிலை கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி மாத ப்ரம்மோத்ஸவத்தின் முக்கியத்திருவிழாக்களுக்கு (3ஆம் நாள் அதிகாரநந்தி, 5ஆம் இரவு வெள்ளிவிடை, 7ஆம் நாள் திருத்தேர், 8 ஆம் நாள் அறுபத்துமூவர், அன்றுமாலை வைரமுடி சேவை) வருடம் தவறாமல் அழைத்துச் செல்லும் அம்மா!

    வீட்டுப் பொருளாதாரச் சிக்கல்களுக்கு நடுவே எங்கள் வாழ்க்கைத்தரத்தை மெல்லமெல்ல முன்னேற்றி, ஒரு சொந்தவீடு என்ற கனவைத் திட்டமிட்டு நனவாக்கிய அம்மா!

    1967ஆம் ஆண்டு, எனக்குப் பொறியியல் படிப்புக்காகக் கோவையில் கிடைத்த உத்தரவை, ஒரு குடும்ப நண்பருடைய உதவியுடன் தொழில்நுட்பப் படிப்பின் இயக்குனரைச் சந்தித்து கிண்டி கல்லூரிக்கு மாற்றல் வாங்கித் தந்த அம்மா!

    1973 ஆம் வருடம், பிள்ளைகள் நாங்கள் வாழ்க்கையில் காலூன்றாத நிலையில் அப்பா திடீரென்று காலமானபோது, எங்கள் வாழ்க்கைப் படகு தத்தளிக்காமல் தேர்ந்த மாலுமியாகச் செயல்பட்டு எங்களைக் கரை சேர்த்த அம்மா!

    தனக்குக் கிடைத்த குடும்ப ஓய்வூதியத்தொகையை, சேமித்து வைத்து அதைக் கண்ணும் கருத்துமாகத் துல்லியமாகக் கணக்கிட்டுத் தன்பிள்ளைகளுக்கும், பேரன், பேத்திகளுக்கும், அவ்வப்போது தவறாமல் பங்கீடு செய்யத் தவறாத அம்மா!

    தன்மக்கள் நலம் வேண்டி, தன் உடல் வருத்தி, உப்பில்லாத உணவும், உணவே இல்லாத நோன்புமாகத் தன் வாழ்வைத் தியாகவேள்வியாக வாழ்ந்த அம்மா!

    நான் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அறுவை சிகித்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாட்களிலும், என் ஐமபது வயதில் அம்மையின் வெம்மையால் வீழ்ந்தபோதும், இரவு பகல் பாராமல் என்னை அருகிருந்து அகலாமல் காப்பாற்றிய அம்மா!

    கால்மூட்டுகள் தேய்ந்தபோதும், 75 வயதில் அதற்குப் பயிற்சி கொடுக்க, எக்ஸர்சைஸ் ஸைக்கிள் வாங்கிப் பயிற்சி செய்த அம்மா! தன் கடைசிகாலங்கள் வரை தன் வேலையைத்தானே பார்த்துக் கொள்வதென்ற பிடிவாத அம்மா!

    நினைவு மழுங்கிய இறுதி நாட்களிலும் பயிற்சி தரவந்த ஃபிஸியோ தெரப்பிஸ்டிடம்
    “Don’t Touch me; self Help is the Best Help”என்று சொல்லி அசத்திய அம்மா!
    “என்னை என் அம்மா அழைக்கிறார்; ஆனால் நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்” என்று திடமாக எமனை எதிர்த்துப் போராடிய அம்மா!

    அம்மாவைப் பற்றிய நினைவுப் பதிவுகளுக்கு ஏது எல்லை!

    அம்மா,
    சிறுவனாக இருந்த நாட்களில், எங்களை வீட்டில் விட்டுவிட்டு, அப்பாவோடு மாலையில் வெளியில் செல்லும் நீங்கள் வீடுதிரும்ப நேரமானால், தவித்துத் தவித்து, வந்தவுடன் தாவிஅணைத்து ஆறுதல் பெறுவேனே, அம்மா-

    இன்றைக்கு….?

    சு.ரவி

    Share
  • விஞ்ஞான,கணித மேதைகள்-Fibonacci

    சு.ரவி

    LEONARDO FIBONACCI (1170-1230)

    இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கணித மேதை ஃபிபோனாக்கி தந்த கணக்கு இது:

    ” உன்னிடம் ஒரு ஜோடி முயல்கள் ( ஓர் ஆண், ஒரு பெண்) உள்ளன.

    இவை ஒவ்வொரு மாதமும் ஒரு ஜோடி ( 1ஆண், 1 பெண்) முயல்குட்டிகளை ஈனும்.
    பிறந்த குட்டிகள் ஒரு மாதத்தில் இனப்பெருக்கத்துக்குத் தயாராகும். இவையும் 1ஆண்,1பெண் குட்டிகளை
    ஈனுமெனில், வருடமுடிவில் உன்னிடம் எத்தனை ஜோடி முயல்கள் இருக்கும்?
    ( முயல்களின் இனப்பெருக்கத்துக்கு, உறவுமுறைத் தடைகளெதும் கிடையாது; மற்றும், இந்த ஒரு வருடத்தில்
    எந்த முயலும் இறக்கவில்லை என்றும் கொள்க).

    மேற்படி கணக்கைப் போட்டுப் பார்க்கலாம்:

    வருட முடிவில் 144 ஜோடி முயல்கள் இருக்கும்.

    ஒவ்வொரு மாத இறுதியிலும் இருக்கும் எண்ணிக்கையின் வரிசையே “ஃபிபோனாக்கி நிரல்” எனப்படும்;இந்த நிரலில் அமைந்த எண்கள் ‘ஃபிபோனாக்கி எண்கள்” எனப் படும்.

    “1,1,2,3,5,8,13,21,34,55,89,144….”

    பெரிய ஆச்சரியம், இயற்கை, ஃபிபோனாக்கி வரிசைப்படி பல அமைப்புகளைக் கொண்டிருப்பது- ஒரு கிளையைச் சுற்றிப் படர்ந்து துளிர்விடும்
    இலைகளின் எண்ணிக்கை. சூரியகாந்திப் பூவின் அல்லிவட்டத்தில் விதைகள் பரவியிருக்கும் அமைப்பு, பைன் மரத்தின் செதில்கள்- இவை யாவும்
    ஃபிபோனாக்கி நிரல் சார்ந்தவை. Cumulative Growth என்பதே ஃபிபோனாக்கி வரிசைப்படிதான் நிகழும்.

    அரேபிய எண்களை உலகமயமாக்கியதிலும் ஃபிபோனாக்கிக்குப் பெரும் பங்கு உண்டு.

    என் காலை நேரக் கைவண்ணத்தில் இதோ ஃபிபோனாக்கியின் ஓவியம்.

    (இதை வரைய ‘முயல்’ வது எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது!)

    Share
  • வங்கக் கவிமணி

    சு. ரவி

    “சங்க இலக்கியம்போல் வங்க இலக்கியத்தைத்
    தங்க மலராக்கித் தரணியிலே- எங்கும்
    மணம்வீச வைத்தாய் மாமுனியே வாழ்க
    கணந்தோறும் உந்தன் கவி”.

    ” பண்ணொழுகு பாடலைப் பாடென்றனக்கருள்
    பாலிக்கும் வேளை யிந்த…

    எனத்தொடங்கி,

    நண்ணுதற் கான வழி வேறெதும் கண்டிலேன்
    நானுமென் களிமயக்கால்
    நண்பனென் றேஅழைக் கின்றனன் என்னையாள்
    நாதனே ஞானபரனே”

    என்று இறைவனோடு தோழமை யோகம் பாராட்டிய அன்னாரின் கீதாஞ்சலியை அருமையான இரட்டைஆசிரிய விருத்தத்தில்
    மொழிபெயர்த்த எங்கள் கவிமணியும் நினைவினில் நிழலாடினர்.

    உயிர்நாடிகளை மீட்டும் உன்னத எழுத்துக்குச் சொந்தக்காரரை வரையும் ஆவல் உந்தியதின் விளைவு…
    கீழ்க்காணும்  ஓவியங்கள்…

     

    Share
  • உமையொருபாகன்

     

    சு.ரவி

    வணக்கம், வாழியநலம்,

     

    சிதம்பரம் கோயிலின் கீழ்க்கோபுரத்தருகிலுள்ள

    அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் இங்கே கோட்டோவியமாக…

     

    ஒருபாதி ஆண்மைக்குரிய திண்மையும், உறுதியும், மறுபாதியில்

    பெண்மையின் மென்மையும், நளினமும்..

    உமையொருபாகனைச் சிலை செய்த சிற்பியின் கைவண்ணம்

    புலப்படும் வண்ணம், இருபாதிகளையும் வெவ்வேறு வண்ணப்

    பின்புலன்களில் கொடுத்தும் இணைத்துள்ளேன்…

     

    உமையொருபாகன்….

     

    ஈருடல் வேண்டோம் நாங்கள்

      என்றுமே ஒன்றாய் ஆனோம்

    ஓருடல் போதும் என்றே

       உமையொரு பாகன் ஆனாய்!

    நீருடன் நிலவைச் சூடி

       நீறணி  நீலகண்டா!

    சீருடைத் தில்லை மேவும்

      சிதம்பரா, நமச்சிவாயா!                      1

     

     

    சூரியன் ஒருகண் என்றால்

        சுடர்மதி மற்றோர் கண்ணாம்!

    வீரியத் தோளோர் பக்கம்

       விளங்குமென் தோளோர் பக்கம்,

    கூரிய மழுவோர் கையில்

       குளிர்மலர் இடமேற் கையில்

    நாரியோர் பாகம் வைத்த

      நாயகா,   நமச்சிவாயா!                                        2

     

     

    காலனை உதைத்த பாதம்

      காமனை எரித்த நேத்ரம்

    ஆலினால் கறுத்த கண்டம்

      ஆனைதோல்போர்த்தமேனி

    லீலைகள் போதாதென்றோ

       பிரமனின் சிரத்தைக் கொய்தாய்?

    சூலமும், மானும் தாங்கும்

        சுந்தரா, நமச்சிவாயா!                                       3

     

    பெண்டிரை வணங்கேன் என்று

       பெருமையே பேசிக் கொண்டு

    வண்டுருக் கொண்டு வந்தோன்

       வன்தவம்  நாணித் தாழ

    பெண்ணையோர் பங்காய் வைத்துப்

       பேரருள் காட்டி நின்றாய்

    கண்டியூர்த் தேவா, தேவி

       காதலா, நமச்சிவாயா!                                         4

           

    அமையுறு தோளி பாகா,

       அண்ணலுன் திருமுன் பெங்கள்   

    சுமையெலாம் இறக்கி வைத்தோம்.

      சுழன்றிடும் கோள்கள், மீன்கள்

    எமையினி  வருத்திடாமல்

        என்றுமே துணை இருப்பாய்!

    உமையோரு பாகம் வைத்த

        உருத்திரா, நமச்சிவாயா!                                     5

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    ஆமாம்.. இந்த விஷயம் இப்போதெல்லாம் தனி மனிதன் வாழ்வில் மிகவும் உள்ளூற ஊறிவிட்டதுதான். நாம் நம் ஞாபகசக்தியை நன்றாக கூர் தீட்டிக்கொண்டே இருக்கவேண்டும்.. இது உண்மையில் நமக்குக் கிடைத்த சாதகமா அல்லது சாபமா என பல சமயங்களில் முழித்துள்ளேன். இனி வரப் போகும் காலங்களில் இது மிக மிக அத்தியவாசியமாகிப் போய்விடும் என்று இப்போதே கண்கூடாகத் தெரிகிறது.

    ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.. இனி இது இல்லையென்றால் உங்களையே உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டி அடுத்தவரை நாட வேண்டிய நிலைக்கு நம்மைத் தள்ளி விடும் என்று மட்டும் சொல்லிக் கொண்டு கீழே பெரியவர் கல்பட்டு நடராஜன் அவர்கள் ‘இதை’ப் பற்றி எழுதிய கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்.

    கணினி திறந்தேன்

    மடல்கள் படித்திட

    கேட்டதது கடவுச் சொல்


    கணினி வழியே

    கட்டிட நினைத்தால்

    மின் கட்டணம்

    கேட்கிறதது கடவுச் சொல்

    தானியங்கி வங்கி சென்றேன்

    வாங்கி வரப் பணம்

    அட்டை உள்ளே செலுத்திடக்

    கேட்டதது கடவுச் சொல்

    தெருவிலே சிறார்

    ஆடுகின்றார் ஓர் விளையாட்டு

    நின்றபடி இருவர்

    நீட்டிய அவர் கைகளைக் கோர்த்தபடி

    இணைந்திருந்த கைகளின்

    அடி வழியே நுழைந்திட

    முயல்கிறான் மூன்றாம் சிறுவன்

    பாம்பன் பாலமென மேலெழும்பு கின்றன

    கோர்த்திருக்கும் கைகள் ஒரு கணம்

    மறு கணம் திரும்பிட அக் கைகள்

    சிறையிலே சிறுவன் இப்போது

    விட்டிட வெளியே அவனைக்

    கேட்டிடுறார் கடவுச் சொல்

    கோர்த்த கைகள் கொண்டோர்

    கடவுச் சொல் கடவுச் சொல்

    கடந்திட எதையும்

    தேவையாம் கடவுச் சொல்

    வாழ்க்கையை வெறுத்தேன்

    உயிரை விட்டேன்

    சென்றடைந்தேன் எமலோகம்

    நின்றிருந்த காவலாளி சொன்னார்

    தேவையில்லை கடவுச் சொல்லேது மிங்கு

    சென்றிடலாம் தாராளமாய்

    உள்ளே நீ யென்று.

    எட்டிப் பார்த்தேன் உள்ளே

    திறந்திருந்த கதவின் வழியே

    பெரியதொரு எண்ணெய்க் கொப்பரை

    அதனடியே எரிகின்ற நெருப்பு

    நின்றிருந்தார் கிங்கரர் இருவ ரங்கு

    தலை கீழாய் ஆளொருவரை

    முக்கி முக்கி எடுத்தபடி

    கொதித்திடும் எண்யெய்க் கொப்பரையி லவரை.

    பறந்தேன் அங்கிருந்து சுவர்க்க லோகம்

    நின்றிருந்த காவலாளி கேட்டிட

    கடவுச் சொல் என்ன வென்று

    திரு திருவென விழித்தேன்

    திருடனைப் போல நான்.

    மறந்தனையா கடவுச் சொல்

    கடவுச் சொல் லென்பதன்

    முதல் மூன் றெழுத்துடனே

    சேர்த்திட ஓரெழுத்து

    கிடைத்திடுமே உன் கடவுச் சொல்

    மறவாதிருந்தால் உன் கடவுச் சொல்லதை

    வருத்த மேதுமின்றி வாழ்ந்திருக்கலாமே நீ

    புவியிலே பல காலம் என்றார் காவலாளி

    வருந்தினேன் திருந்தினேன்

    கடவுச் சொல்லதை

    மறந்த நான்

    ஒரு ஆன்மீகப் பெரியவர் சென்றவாரம் இந்தக் கடவுச் சொல்லைப் பற்றிக் குறிப்பிடுகையில் வைகுண்டம் போவதற்கு கடவுச்சொல் நாராயணா என்றும், கைலாயம் போவதற்கு கடவுச்சொல் நமசிவாய என்றும் இதைக் கடைசிக் காலத்தில் சொல்லிக்கொண்டே இருப்பாயானால் இந்தக் கடவுச் சொல் நிச்சயம் கைகொடுக்கும் என்று தொலைக்காட்சி அருளுரையில் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஆனாலும் ஆனானப்பட்ட ஆழ்வார் பெருமக்களே இப்படி கடைசி கால கடவுச்சொற்களைப் பற்றிப் பேசும்போது ‘அப்போதெல்லாம் அந்தக் கடைசிக் கணங்களில் நான் மறந்துவிட்டாலும் மறந்துவிடுவேன், அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன், அரங்கமாநகரருளானே’ என்று ஆண்டவனிடம் பெர்மிஷன் வாங்கி வைத்துக்கொண்டனர். அவர்கள் பகவானின் தூதர்கள். அவர்களுக்குப் பர்மிஷன், நடைமுறை ரிலாக்சேஷன் அனைத்தும் உண்டுதான். ஆனால் சாதாரண மானிடராகிய நாம் என்ன செய்யப் போகிறோம்.. வேறு வழியில்லை.. முடிந்தவரை கடவுச்சொல்லை நினைவில் வைத்துக்கொண்டு முணுமுணுத்துக் கொண்டே இருக்கவேண்டியதுதான்..

    பெரியவர் கல்பட்டு நடராஜன் அவர்களை இந்த வார வல்லமையாளராக ஒருமனதாக தேர்ந்தெடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி எங்களுக்கு. இந்த வல்லமையாளர் என்பதைப் பார்க்க எந்தவிதக் கடவுச் சொல்லுமில்லாமல் நேரடியாக வல்லமையைத் திறந்து பார்க்கலாம்தான். ஆனால் இந்தப் பதிவைப் பற்றி யாராவது எழுத வேண்டுமென்றால் இந்தக் கடவுச்சொல் தொல்லை இருக்கத்தான் செய்யும் என்பதை முன்கூட்டியே தெரிவித்து, கடவுச்சொல்லைப் பற்றிய அழகிய கவிதையை அளித்த கல்பட்டாருக்கு நம் வாழ்த்துகளையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

    கடைசி பாரா: திரு சு. ரவியின் ஊடலும் சமாதானமும் :

    சுர நதிப் பெண்ணாள் கங்கை

    சுந்தரா நின்னைத் தேடி

    சரசரத் திறங்கிப் பாய்ந்த

    சரசத்தில் மயங்கினாயோ!

    வருவது வரட்டும் என்று

    வார்சடை ஏற்றாய்! வெள்ளிப்

    பருவதன் மகளின் ஊடல்

    பரமனே, பார்த்தாய் அன்றோ?

     

    ஆடகப் பொன்னால் வேய்ந்த

    அம்பலம் ஆடும் தேவா!

    ஊடலும், ஊடலின் பின்

    ஒன்றி நீர் கூடலும் உம்

    நாடகக் காட்சி…………………….

    ========================

    படத்திற்கு நன்றி: தமிழமுதம்

     

    Share
  • ஊடலும், சமாதானமும்…

     

    -சு.ரவி

    வணக்கம், வாழியநலம்

    இப்போது போலவே அது ஒரு வேனிற்காலம்!

    நந்திதேவருக்கு தாகம் நாவை வரட்டுகிறது.

    நந்திதேவரின் நிலைகண்டு அவரின் தாகம் தீர்க்க அன்னை வேண்ட, ஐயன் கங்காதரன் தன்

    திருமுடியிலிருந்து கங்கை நீர்த்தாரையை வெளிப்படுத்துகிறான்.

    தமக்குத் தெரியாமல் மற்றோர் பெண்ணைத் தலைமேல் மறைத்தார் என்று அன்னை ஊடல் செய்ய,

    அன்னையின் முகவாய் பற்றி சிவன் சமாதானம் செய்யும் திருக்கோலம்…

    சிதம்பரம் கோயிலின் கீழ்க்கோபுர வாயிலுக்கருகில் அமைந்துள்ள இக்காட்சியின் கோடோவியமும்,

    பஞ்சகமும்…

     

    ஊடலும், சமாதானமும்…

     

    விடைஉறும் வெம்மை கண்டு

    விடாயினைத் தீர்க்க வேண்டி

    சடையிலே கரந்த கங்கை

    சற்றுநீ வார்க்கப் போந்தாய்!

    உடனுறை உமையாள் ஆங்கே

    ஊடலால் பிணங்கிச் செல்ல,

    தடநெடுங் கையால் கன்னம்

    தாங்கிநீ தணிக்கப் பார்த்தாய்!

     

    ஆடலுக் கரசே! உந்தன்

    அழகிய சடை முடிக்குள்

    மூடியோர் பெண்ணை வைக்கும்

    முன்புநீ யோசித் தாயா?

    ஊடலால் பிணங்கும் அன்னை

    உமையவள் முகவாய் பற்றி

    நாடிநீ கெஞ்சும் கோலம்

    நாதனே தேவை தானா?

     

    என்னதான் உடலில் பாதி

    ஈந்தனை எனினும் மற்றோர்

    பெண்ணை நீ ஏற்றுக் கொண்டால்

    பெண்மனம் பொறுக்குமோ,சொல்!

    என்னதான் துணிவோ, வாழ்வில்

    இன்னொரு பெண்ணை ஏற்க!

    அன்னையின் ஊடல் பற்றி

    ஐயநீ அறிகி லாயோ?

     

    சுர நதிப் பெண்ணாள் கங்கை

    சுந்தரா நின்னைத் தேடி

    சரசரத் திறங்கிப் பாய்ந்த

    சரசத்தில் மயங்கினாயோ!

    வருவது வரட்டும் என்று

    வார்சடை ஏற்றாய்! வெள்ளிப்

    பருவதன் மகளின் ஊடல்

    பரமனே, பார்த்தாய் அன்றோ?

     

    ஆடகப் பொன்னால் வேய்ந்த

    அம்பலம் ஆடும் தேவா!

    ஊடலும், ஊடலின் பின்

    ஒன்றி நீர் கூடலும் உம்

    நாடகக் காட்சி அஃதை

    நயம்படச் சித்திரத்தில்

    பாடலில் வடித்து வைத்தேன்

    பார்ப்பவர் ரசிக்கத்தானே!

     

    Share
  • ஶ்ரீவைகுண்டம் கோதண்ட ராமன்

     

    சு. ரவி

    சித்திரை, நவமி, புனர்வஸு நக்ஷத்திரம் கூடிய நன்னாளில் ஶ்ரீ ராம அவதாரம் நிகழ்ந்தது.

     

    “நீதிதன்னைநிலைநாட்ட-

    நைந்தவர்க்கு வழிகாட்ட

    வேதமந்த்ர சுகமார்க்கம்-மண்ணில்

    வாழ்ந்துகாட்ட வந்த மேகம்”

    என்றும்,

    “விழிகளரவிந்தம்-அதில்

    கருணை மகரந்தம்

    விதி கதி கலங்கவரும் கோதண்டம்”

    என்றும்,

    நணபன், கவிஞன் க.ரவியின் சொல்வண்ணத்திலே தீட்டப்பெற்ற

    கோதண்ட ராமனின் நெடிதுயர்ந்த திருக்க்கோலத்தை, ஶ்ரீவைகுண்டம் கோயிலில் உள்ளபடி

    அனுமன் மற்றும், சீதை சமேதனாகக் கோட்டோவியத்தில்

    முயற்சித்துள்ளேன் (இணைப்பு காண்க).

    பார்க்க, படிக்க, ரசிக்க…..

    தனுவினை இடக்கரத்தில்

    தாங்கிடும் தடந்தோள் வீரா

    இனகுலம் விளங்க வந்த

    இணையிலாக் கருணை ஊற்றே!

    அனுமனை வலக்கரத்தால்

    அணைந்து நீ நிற்கும் கோலம்

    மனமெலாம் நிறைத்ததையா!

    மலரடி சரணம் ராமா!

    வில்லிலே வீரம் வைத்தாய்

    விழியிலே ஈரம் வைத்தாய்

    சொல்லிலே வாய்மை வைத்தாய்

    செயலிலே நேர்மை வைத்தாய்

    இல்லிலெம்    ஜானகித்தாய்

    ஒருத்தியை இருத்திவைத்தாய்

    கல்லிலும் உயிர்கொடுத்தாய்

    கழலிணை சரணம் ராமா!

    விண்திரள் கார்மேகம் போல்

    விளங்கிடும் கரியமேனி

    கண்களோ பொய்கை பூத்த

    கமலமாய் விரிந்திருக்கும்

    திண்திறல் புஜங்கள் எங்கள்

    துயரெலாம் தாங்கிக் கொள்ளும்

    மண்ணிலே நடந்து சென்ற

    மலரடி சரணம் ராமா!

    கங்கையின் ஓடக்காரன்,

    குகனொரு தம்பி என்றாய்

    அங்கொரு வானரர் கோன்

    அவனையும் தம்பிஎன்றாய்

    வெங்களம் சரண்புகுந்த

    வீடணன் தம்பியானான்

    இங்கெனை ஏற்றுக் கொள்ள

    இன்னுமேன் தயக்கம் ராமா!

    வயோதிகம் நெருங்கும் போது

    வார்த்தையும் வருவதில்லை!

    வியாகுலம் சூழ்ந்த நெஞ்சில்

    விளைவகள் விளங்கவில்லை

    அயோத்தியின் அரசே, நானுன்

    அடைக்கலம், ஏற்றுக்கொள்வாய்!

    தயாபரா!   தாமதம் ஏன்?

    தளிர்ப்பதம் சரணம் ராமா!

    சு.ரவி
    Vice President – IT
    Alicon Castalloy Limited
    Gat No: 1426, Village Shikrapur, Tal. Shirur,
    Dist. Pune 412 208  Maharashtra, India

    Share
  • அழகார்ந்தநாயகி

     

    அழகார்ந்தநாயகி பஞ்சகம்

     

    சு. ரவி

     

     

    அழகினுக் கழகைத் தந்த

    அழகியே, அம்மை யே!பூம்

    பொழிலிடைப் பூந்துருத்திப்

    பொய்யிலி நாதர், கையில்

    மழுவினை, மானை ஏந்தும்

    மன்னவன் பாகம் கொண்டோய்!

    பழவினைக் காட்டைத் தீய்க்கும்

    பதமலர்    சரணம்   தாயே!    1

     

     

    தேவியே, மறைகள் நான்கும்

    தேடுமெய்ப் பொருளே! ஈசன்

    ஆவியே, அமுதம் தோய்ந்த

    அழகியே, அரனார் பாகம்

    மேவிய மேன்மையே நின்

    மென்மலர்ப் பாதம் பாக்கள்

    தூவிநான் தொழுது போற்றத்

    துணைவர வேண்டும் தாயே!    2

     

     

    பிரமனங் கிருக்க ஒட்டான்

    பிறப்பெனும் சிட்சை செய்வான்!

    இரக்கமில் எமனோ என்னை

    இவ்விடம் இருக்க ஒட்டான்!

    உரமழிந் தோய்ந்தேன்,தேய்ந்தேன்

    உதையுறு பந்தாய் ஆனேன்!

    அரனொரு பாகம் சேர்ந்த

    அழகியே, சரணம் தாயே!       3

     

     

    பொன்னிலே விருப்பம் இல்லை

    பொருளிலே நாட்டம் இல்லை

    உன்னையன் றின்றி யாரும்

    உறவெனக் கில்லை அம்மே!

    இன்னமு தழகீ! ஈசன்

    இடப்புறம் கவர்ந்த தாயே!

    மின்னலாய் முதுகுத் தண்டின்

    மிசையெழு சுடரே!போற்றி!        4

     

     

    பூரண நிலவாய்ப் பூத்த

    பூவன நாதர் வாழ்வே!

    நீறணி நிமலர் பாகம்

    நிறைவுசெய் அழகீ! அன்ன

    பூரணீ! புதுமைக் கெல்லாம்

    புதுமையே! உலகுக் காதி

    காரணீ! காளீ! காக்கும்

    கழலிணை சரணம் தாயே!         5

     

     

    Share