Category: தொடர்கள்

  • பரிமேலழகர் உரைத்திறன் – 13

    பரிமேலழகர் உரைத்திறன் – 13

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                  
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    சொன்னவையும் பெற்றவையும்

    முன்னுரை

    ‘பரிமேலழகர் உரைத்திறன்’ என்னுந் தலைப்பில் வெளிவந்து கொண்டிருக்கும் இத்தொடர் பரிமேலழகர் உரைவழித் திருக்குறள் பொருண்மையை முழுமையாகக் காண்பதையே தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது. திருக்குறளுக்குத் தான் விரும்பியவழி உரையெழுதும் பரிமேலழகர் அவ்விருப்பத்தைத் தன்னிச்சையாகச் செய்யாது அறிவியல் அடிப்படையில் வலிமையான சான்றுகளின் அடிப்படையில் பதிவு செய்கிறார். தான் இப்படி உரை காண்பதற்குரிய காரணங்களை அவர் அடுக்கியுரைக்கிறபோது கற்பார்க்கு வியப்பும் அதிர்ச்சியும் ஏற்படுகிறதேயன்றிக் குழப்பம் என்பதே இல்லாமற் போய்விடுகிறது. (1) குறளுக்கு உரையெழுதுகிறார். (2) அதில் அமைந்துள்ள சீர் அல்லது தொடருக்குத் தனித்த பொருள் கொள்கிறார். (3) இந்தப் பொருளன்றி உண்மையில் உணர்த்துகின்ற பொருள் வேறொன்று என்பதைக் குறிக்கின்றார். (இதுபற்றிய விளக்கம் கடந்த வாரக் கட்டுரையில் தரப்பட்டது) (4) இறுதியாக இந்தக் குறட்பா கூறவரும் கருத்துப் பிறிதொன்று என வினைமுடிபு செய்கிறார். இந்த நான்கனுள் ஏற்றபெற்றி அமைத்துக் கொண்டு இத்தொடரைக் கற்றாலன்றித் தொடர்ப்பயன் கிட்டுவது எளிதன்று. அறிமுகத்தை முன்னிறுத்திச் சொல்வோமேயானால்,

    “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
    ஆகுல நீர பிற” (34)

    என்னும் குறட்பாவில் மன மாசை முன்னிறுத்துகிறார் வள்ளுவர். இந்தப் பாட்டில் பயின்றுவந்த சொற்களைக் கொண்டு சொல்லப்பட்டிருக்கும் கருத்து, “உள்ளத்தில் குற்றமில்லாது இருத்தலே அறம். அதுவன்றி ஏனைய சொல்லும் ஒப்பனையும் ஆரவாரத்தன்மையுடையன” என்பது மட்டுமே. ஆனால் ‘வித்தின் பழுது விளைச்சலில்’ என்பதை உணர்ந்த பரிமேலழகர், மனத்தது மாசோடு கூடிய  ஏனைய சொல்லும் செயலும் பயனற்றன என்னும் குறட்பாவில் சொல்லாத கருத்தினைப் பெற்றுச் சொல்லுகிறார்.

    “மனத்து மாசுடையன் ஆயவழி அதன்வழிய ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம் பெறப்பட்டது”

    இந்தத் தெளிவால் குறட்பாவின் கருத்து முழுமையாகக் கற்பாரைச் சென்றடைவதைக் காணலாம். குறட்பா மனத்து மாசைச்சுட்டி ஏனையவற்றின் தன்மையை விவரிக்கப், பரிமேலழகர் ‘அவற்றால் எந்தப் பயனும் இல்லை’ என்னும் கூடுதல் தகவலைக் கூறுகிறார் என்பதாம். வள்ளுவர் சொன்னவற்றோடு இவ்வாறு தம் நுண்மான் நுழைபுலத்தால் பெற்றறிந்து உரைப்பதைத்தான் ‘சொன்னவையும் பெற்றவையும்’ என்னும் தலைப்பு குறிப்பதாகக் கொள்ளலாம்.

    ஆகம அளவையும் காட்சி அளவையும்

    அறத்தின் வலிமையை உணர்த்த வந்த அதிகாரம் ‘அறன் வலியுறுத்தல்’. அதனுள் அமைந்த குறட்பா ஒன்று இப்படி அமைந்திருக்கிறது.

    “அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோடு ஊர்ந்தா னிடை (37)

    இந்தக் குறளுக்கு,

    “அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா. சிவிகையைக் காவுவானோடு செலுத்துவான் இடைக் காட்சியளவைத் தன்னானே உணரப்படும்”

    என்று பொழிப்புரை எழுதுகிறார். இது முதல் நிலை. ‘இனி அறத்தின் பயன் இது’ என்பதை ‘ஆகம அளவையால் சொல்ல வேண்டியதில்லை’ என்பதற்கும் ‘காட்சியளவையால் காணலாம்’ என்பதற்குமான மூலம் (மூலச்சொல்) குறட்பாவில் இருக்க வேண்டும் அல்லவா? நம் கண்ணுக்குத் தெரியாதது அவர் கண்ணுக்குத் தெரிகிறது. எப்படி? ‘என’ என்னும் எச்சத்தால் ‘சொல்’ (ஆகமம்) என்பதைப் பெற்றாராம். ‘பொறுத்தானோடு ஊர்ந்தானிடை’ என்பதால் காட்சியளவையைப் பெற்றாராம். அதாவது ஒரு பொருளை உணர்த்துவதற்குரிய மூன்று வழிகள் ‘அளவைகள்’ என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன.

    “பொறிகளால் காணும் காட்சியும் குறிகளால் உயத்துணரும் அனுமானமும்  கருத்தா மொழி ஆகிய ஆகமும் என மூன்று” (242)

    என்னும் அவருடைய உரைப்பகுதியாலேயே இதனை அறிந்து கொள்ளலாம். திருக்குறளில் அமைந்துள்ள,

    “என’ என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், ‘பொறுத்தானோடு ஊர்ந்தானிடை’ என்றதனால் காட்சியளவையும் பெற்றாம்”

    இந்த இரு சொற்களைக் கொண்டுதான் ஆகம அளவை என்பதையும் காட்சியளவை என்பதையும் உணர்ந்து கொண்டு உரையெழுதுவதாகப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறார் பரிமேலழகர். இத்தகைய தர்க்க அறிவியல் சார்ந்த நெறிமுறையைப் பற்றியே இந்தக் கட்டுரை ஆராய்கிறது. அதாவது குறட்பாச் சீர்களை அவற்றின் உள்ளடக்கம் அறியும் கருவிகளாகத் தான் பயன்படுத்திக் கொள்வதாகப் பரிமேலழகர் கூறுகிறார். இவ்வாறு குறட்பாத் தொடர்களிலிருந்து பரிமேலழகர் பெற்றுக் கொண்ட ‘பொருட்செல்வத்தைப்’ பற்றிய ஆய்வு தொடர்கிறது.

    பலருக்கும் பொதுவான ‘பனுவல்’

    ஒழுக்கத்தை வற்புறுத்தாத சமயங்களோ சமுதாயமோ இல்லை. எல்லாச் சமயங்களுக்கும் சமுதாய அமைப்புக்களுக்கும் ஒழுக்க நெறி பொதுவானது. இன்றியமையாதது. மானுடத்திற்கு அழியாப் புகழை அளிப்பது. திருவள்ளுவர் கூறிய பத்து உடைமைகளில் அதுவும் ஒன்று. இல்லறத்தில் கடைப்பிடிக்கப்படும் அவ்வொழுக்கம் துறவறத்தில் பிசகிவிடுமானால் அது கூடாவொழுக்கம் ஆகிவிடும். அதனால்தான் அதனை உலகத்து நூல்களெல்லாம் உயர்த்திப் பிடிக்கின்றன என்பது திருவள்ளுவர் கருத்து. அதனை,

    “ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
    வேண்டும் பனுவல் துணிவு” (21)

    என்னும் குறட்பாவில் பதிவு செய்திருக்கிறார்.

    “தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும்  இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு”

    என்னும் பொழிப்புரையைத் தொடர்ந்து பரிமேலழகர் எழுதுகிறார்.

    ‘பனுவல்’ எனப் பொதுப்பட கூறிய அதனான் ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றாம்.

    ‘நூல்கள் சொல்லுகின்றன’ என்பதுதான் குறட்பா கூறவரும் கருத்து. ஆனால் எத்தகைய நூல்கள் அல்லது எந்தச் சமயத்து நூல்கள் என்பதைத் திருவள்ளுவர் கூறவில்லை. நூலின் அகக்கட்டுமானத்தைக் கருத்திலிருத்தி உரையெழுதும் பரிமேலழகர் ‘எல்லாச் சமயத்திற்கும் திருவள்ளுவர் பொதுவானவர்’ என்னும் தனது உட்கிடக்கையை இதன் வழி வெளிப்படுத்துகிறார். பரிமேலழகர் உரையில் எல்லாச் சமயத்து நூல்களும் உரைவிளக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது நோக்குதற்குரியது.

    ‘பனுவல்’ என்பது எல்லாச் சமயங்களையும் தழுவி நிற்கும் ஒரு பொதுச்சொல் திருவள்ளுவர் ‘பனுவல்’ என்று பொதுப்படக் கூறுகிறாரேயன்றி ‘இன்ன சமயத்து நூல்’ என விதந்தோதவில்லை. அது மட்டுமன்றி இணக்கமான சமயங்கள் என்றும் முரண்பட்ட சமயங்கள் என்றும் வடகலை, தென்கலை என்றும் பாசுரங்கள், பதிகங்கள் என்றும் வழங்கப்படும் சொற்களை நோக்கினால் உண்மை புரியக்கூடும். எனவே மாறுபடு சமயங்கள் வேறுவேறாயினும் ஒழுக்கம் என்பது மாறாத எல்லாரும் ஏற்றுக் கொள்கிற ஒன்று. இதனைத்தான் பரிமேலழகர் அந்தப் பொதுச்சொல்லிலிருந்து பெற்றுக் கொண்டதாக எழுதிக் குறட்பாவின் பொருளடர்த்தியை மிகுவிக்கிறார்.

    இனித் திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட சமயச் சிமிழுக்குள் அடக்க முற்படுவாருக்கும் பரிமேலழகர் வடமொழிச் சார்பாளர் என்னும் கருத்தியல் கொண்டவர்க்கும் அவரை வைணவர் என அடையாளப்படுத்துவார்க்கும் இவ்வாறு பரிமேலழகர் எழுதிக்காட்டும் உரைநெறியே அவர்தம் கருத்து பிசகானது என்பதற்குப் போதுமான சான்றாகலாம். அதாவது பரிமேலழகர் எந்த நிலையிலும் எந்தக் குறடபாவிலும் தன் கருத்தினைத் திருக்குறளுக்கு ஏற்றிக் சொல்லவில்லை என்பதாம். காரணம் திருவள்ளுவர் எல்லாச் சமயங்களுக்கும் தத்துவங்களுக்கும் பொதுவானவர் என்னும் கருத்தியலால் கவரப்பட்டவர் பரிமேலழகர் என்பதும் அதனைக் கருத்திற்கொண்டே அவர் உரை அமைந்திருக்கிறது என்பதும் இங்கே முன்னெடுக்கப்படுகிறது.

    ‘இனிய’, ‘இன்னாத’ எப்படிச் சொற்களாகும்?

    ‘இனியவை கூறல்’ என்னும் அதிகாரத்தின் இறுதியில் அமைந்திருப்பது,

    “இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” 100

    என்னும் குறட்பாவாகும். இந்தக் குறளை உற்று நோக்குவார்க்கு ஓர் உண்மை புலப்படக் கூடும். ‘இனிய’ என்பது பண்படியாகப் பிறந்த உடன்பாட்டுப் பெயர்ச்சொல். அதாவது ‘இனிமையானவை’ என்பது பொருள். ஆனால் ‘எவை இனிமையானவை?’ என்னும் விளக்கக் குறிப்பு பாட்டில் இல்லை. அதுபோலவே ‘இன்னாத’ என்பதும் பண்படியாகப் பிறந்த எதிர்மறைப் பெயர்ச்சொல். அதாவது ‘இன்னாதவை’ என்பது பொருள். ஆனால் “எவை இன்னாதவை?” என்னும் விளக்கக் குறிப்பு பாட்டில் இல்லை. அதிகாத்தின் தலைப்பு ‘இனியவை கூறல்’ என்பதாகும். பரிமேலழகரின் பொழிப்புரை இப்படி அமைகிறது.

    “அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க அவற்றைக் கூறாது, பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல் இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க அவற்றை நுகராது இன்னா காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும்”

    ‘இனிய, இன்னாத’ என்று குறிப்பாகவே குறட்பாவில் பயின்றிருக்கப் பரிமேழகர் அவற்றிற்கு ‘இனிய சொற்கள்’ ‘இன்னாத சொற்கள்’ என உரைகாண்கிறார். அவ்வாறு உரை காண்பதற்கு அந்தக் குறட்பாவில் ஏதேனும் இடமிருக்கிறதா என்றால் இருக்கிறது. இருப்பதும் அவருக்குத் தெரிகிறது!. எங்கே? ‘கூறல்’ என்ற வினைச்சொல்லை நோக்கி உரையெழுதுகிறார். சொல்லைத் தானே கூறுவார்கள்?. எனவே ‘கூறல்’ என்ற வினைச்சொல் பொதுவாக அமைந்திருப்பதால் ‘சொற்கள்’ என்பதாகத் தான் உரை காண்பதாக விளக்கமளிக்கிறார்.

    “கூறல் என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம்”

    இது பரிமேலழகரின் சுருக்க உரை. ‘இன்னாத கூறல்’ என்னும் தொடரில் உள்ள ‘கூறல்’ என்னும் உடன்பாட்டை உற்று நோக்கி, அதனை ‘இனிய’ என்பதோடு எதிர்மறையாகப் பொருத்தி உரை காணும் நுண்ணியம் உணரத்தக்கது. அதிகாரத்  தலைப்பு, குறட்பாவில் சொற்களின் பயன்பாடு ஆகியவற்றை நோக்கி உரையெழுதுவதை இயல்பாகக் கொண்ட பரிமேலழகர் தான் உரைகாண்பதற்கான மூலத்தைக் குறட்பாவிலிருந்தே காட்டுவதைக் காணலாம்.

    என்பில்லாததும் அன்பில்லாததும்

    மேலே காட்டிய குறட்பாவில் ‘கூறல்’ என்னும் வினையால் சொற்கள் என்பதைப் பெற்றுக் கொண்டதைப்போல இன்னொரு குறட்பா அமைந்திருக்கிறது. ‘அன்பு’ என்பது உயிர்ப்பண்பு. அப்பண்பு இல்லாவிடின் மானுடம் சிறக்காது. ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பது வள்ளுவம் அத்தகைய அன்பு ஒருவனுக்கு இல்லாவிட்டால் தெய்வ நிந்தனைக்கு ஆளாவான் என்பது வள்ளுவர் சொல்லவரும் கருத்து. இதனை ஓர் உவமத்தின் வழி நின்று விளக்குகிறார்.

    “என்பிலதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம்” 77

    என்பது அந்தப் பாட்டு. இதற்கு,

    “என்பில்லாத  உடம்பை வெயிற் காய்ந்தாற்போலக் காயும், அன்பில்லாத உயிரை அறம்”

    எனப் பொழிப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். இந்தக் குறட்பாவில் ‘என்பிலது’ எனவே இருக்க, பொழிப்புரையில் ‘உடம்பு’ என உரைகாண்கிறார். அதுபோலவே ‘அன்பிலது’ எனவே குறட்பாவில் இருக்க ‘உயிர்’ என உரை காண்கிறார். இவ்வாறு அவ்விரு சொற்களுக்கும் உரைகண்டதற்குரிய காரணத்தை விளக்குகிறார். உடம்பும் எலும்பும் இணைந்தேயிருக்கும். எலும்பில்லாத உடம்பு என்றால் அதனால் நிற்க இயலாது. வெப்பத்தைத் தாங்காது. மென்மையான தோல் மட்டுமே இயக்கத்திற்கு உதவும் ‘புழு’ என்பது கருத்து. அன்போடு இயைந்த வழக்காதலின் அன்பு உயிர்ப்பண்பு ஆயிற்று. எனவே அன்பிலது என்பதனால் அன்பில்லாத உயிர் என்பது கருத்து. இதனை,

    “என்பிலது என்றதனான் உடம்பு என்பதும் அன்பிலது என்றதனான் உயிர் என்பதும் பெற்றாம்.”

    திருவள்ளுவர் சொன்ன சொற்களிலிருந்து சொல்ல நினைத்த கருத்தினைப் பெற்றுக் கொள்ளும் பரிமேலழகரின உரைத்திறன் இதுவாம்.

    ‘பாவம்’ மறுமைக்கானது

    மாற்றானுடைய மனைவியை விரும்பியொழுகும் ஒழுக்கத்தை வன்மையாகக் கண்டிப்பது திருக்குறள். அவ்வாறு விரும்பி ஒழுகுபவனிடத்தில் இருக்கக்கூடிய பண்புகளாக நான்கினைப் பட்டியலிடும் குறட்பா இவ்வாறு அமைந்திருக்கிறது.

    “பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
    இகவாவாம் இல் இறப்பான் கண்”  146

    “பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து, பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம்” என்பது இப்பாட்டிற்குப் பரிமேலழகர் எழுதிய பொழிப்புரை. இந்தப் பாட்டு இல்லறவியலில் ஒழுக்கமுடைமை என்னும் அதிகாரத்தை அடுத்து அமைந்துள்ளது. இல்லறவியலில் சொல்லப்படும் எதிர்மறை நெறிகளுக்கான விளைவு இம்மைப் பயன் இழப்பதே, இல்லறம் இம்மை நோக்கியதாதலின். ஆனால் பிறனில் விழைதலாகிய இம்மைப் பாவத்தைச் செய்பவன் மறுமைப்பயனையும் இழக்கிறான் எனச் சொல்ல வரும் பரிமேலழகர்  பார்வையில் ‘பாவம்’ என்னும் சொல் படுகிறது.

    “எனவே இருமையும் இழத்தல் பெற்றாம்.”

    என்னும் ஒரு தொடரால் பிறனில் விழைபவனுக்கு மறுமைப்பயனும் கிடையாது எனத் தெளிவுபடுத்துகிறார். அதாவது பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கனுள் ‘பாவம்’ மறுமைக்காக, ஏனைய மூன்றும் இம்மைப் பயனை இழக்கச் செய்வது. எனவே இருமைப் பயனையும் அவன் இழப்பதாக உரையெழுதுகிறார். குறட்பாவில் பயின்று வந்துள்ள சொற்களை அப்படியே பின்பற்றி உரையெழுதாமல் ஆசிரியரின் உள்ளக்கிடக்கைக்கு ஏற்ப நுட்பமாக உரையெழுதும் அவருடைய ஆற்றல் இதனால் புலப்படக் கூடும்.

    களிற்றை எதிர்ப்பதுதான் காளையின்  வீரம்

    ‘என’ என்னும் எச்சத்தால் ஆகம அளவை என்பதைப் பெற்றுக் கொள்கிறார். ‘கூறல்’ என்னும் தொழிற்பெயரால் ‘சொற்கள்’ என்னும் செயப்படுபொருளைப் பெற்றுக் கொள்கிறார். ‘என்பிலது’ என்பதால் உடம்பையும் ‘அன்பிலது’ என்பதால் உயிரையும் பெற்றுக் கொள்கிறார். பயின்று வந்துள்ள சொற்களின் சரியான பொருத்தப்பாட்டினை அறிந்து பாவம் என்பது மறுமைக்கானது என்பதைப் பெற்றுக் கொள்கிறார். இன்னொரு வகையாகவும் அவர் இவ்வாறு பெற்றுக் கொள்வதை அறிய முடிகிறது. சித்திரிக்கும் காட்சியைக் கொண்டு சித்திரிக்கப்படாத காட்சியைப் பெற்றுக் கொள்கிறார்.

    பொருட்பாலில் படையினது தன்மை எனப் படையினது இயல்புகளைக் கூறும் அதிகாரத்திற்குப் ‘படைமாட்சி’ என்று பெயர். படை அங்கங்களுள் சிறந்தது என்பதும் அதனுள்ளும் மூலப்படை சிறந்தது என்பதும் அதுதன்னுள்ளும் வீரன் சிறந்தவன் என்பதும் அந்த அதிகாரம் விளக்கும் பொருண்மையாகும். அந்த வீரனின் வீரச்செருக்குப் பற்றிக் கூறுவதே அடுத்த அதிகாரமாகிய  ‘படைச்செருக்கு’. இந்த அதிகாரத்தில் ஒரு பாட்டு இப்படி அமைந்திருக்கிறது.

    “கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
    மெய்வேல் பறியா நகும்” (774)

    இந்தக் குறட்பா ‘படைச் செருக்கு’ என்னும் அதிகாரத்தில் வருகின்ற பத்துப்பாடல்களில் நான்காவதாக அமைவது. போர்க்களத்தில் எதிர்கொள்கின்ற இடர்களைப் பொருட்படுத்தாது மேன்மேலும் முன்னோக்கிச் செல்லும் போராண்மையை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டது. இதற்குப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “கைப்படையாய வேலைத் தன்மேல் வந்த களிற்றோடு போக்கி, வருகின்ற களிற்றுக்கு வேல் நாடித் திரிவான் தன் மார்பின்கண் நின்ற வேலைக்கண்டு பறித்து மகிழும்”

    என்று விளக்குகிறார். பாட்டில் சொல்லப்படும் கருத்துக்கள் இரண்டே.

    1. கைப்படையாகிய வேலைக்கொண்டு தன் மேல் முதலில் பாயவரும் களிற்றினை உயிரோடு போக்குகிறான்
    1. தொடர்ந்து தன் மேல் பாயவரும் களிற்றினை எறிவதற்கு வேல் இல்லையே என்ற நிலையில் ஏற்கனவே பகைவர்கள் எய்து, தன் மார்பில் தைத்திருக்கும் வேல்களில் ஒன்றினைக் கண்டு மகிழ்கிறான். அவ்வளவுதான்!.

    பரிமேலழகர் சிந்தனையில் கூடுதலாக மூன்று வினாக்கள் தோன்றுகின்றன.

    1. முதலில் தாக்கியது களிறு என்பது சரி. தொடர் தாக்குதலுக்கு வந்ததும் களிறுதானா? என்பதற்கான குறிப்பு பாட்டில் இல்லை.
    2. வேல் கிடைக்காது திகைத்தவன் தன் மார்பில் தைத்த வேல்கண்டு மகிழ்கிறான் என்றால் அவன் மார்பில் பகைவர்களின் வேல் தைத்ததை அவன் அறியவில்லை. இந்தக் குறிப்பு பாட்டில் இல்லை.
    3. ஒரு களிறு அடக்கியது போதுமென எண்ணாது தொடர்போரில் அவன் மனம் ஈடுபட்டது என்பது பாட்டில் குறிக்கப்படவில்லை.

    ஆனால் இந்த மூன்றும் இருந்தால்தான் அது படைச்செருக்கு. ‘படைச்செருக்கு’ என்பதற்கு வீரத்தனம் என்பது பொருள். வழக்கில் இது ‘சூரத்தனம்’ எனப்படும். படைவீரர்களின் போர்க்குணம். இந்தப் போர்க்குணத்தைத் தம் மனக்காட்சியால் பெற்றுக் கொண்டு உரையெழுதுகிறார் பரிமேலழகர்.

    “இதனுள் களிற்றையல்லது எறியான் என்பதூஉம் சினமிகுதியான் வேலிடை போழ்ந்தது அறிந்திலன் என்பதூஉம், பின்னும் போர் விருப்பினன் என்பதூஉம் பெறப்பட்டன.”

    இரண்டு வினைகளோடு முற்றுப்பெறும் ஒரு குறட்பாவை ஐந்து வினைகளோடு முடித்துக்காட்டும் பரிமேலழகரின் உரைத்திறனை என்னென்பது? எப்படிப் புகழ்வது?

    நிறைவுரை

    குறட்பாவிலிருந்து இவ்வாறு வேண்டியனவற்றைப் பெற்றுக் கொண்டு உரையெழுதும் இத்தகைய உரைநெறி பரிமேலழகர் உரையில் ஏறத்தாழ தொண்ணூறு (90) இடங்களில் பின்பற்றப்படுகிறது. இந்த உரைநெறியை எந்த மேனாட்டுத் திறனாய்வுக் கொள்கை கொண்டும் அளக்க முடியாது. அதனால் அளக்கவும் கூடாது. அளந்தால் பயன் தராது. இந்த உரை நெறி தமிழுக்கேயுரியது. உலகமொழி இலக்கியங்களில் காணற்கரிய காட்சி இது. தமிழ் உரையாசிரியப் பெருமக்களின் உரைநெறிகள் தனித்த நோக்கிற்கும் ஆழமான ஆய்வுக்கும் உரியவை. மூலநூல் ஆசிரியனின் உள்ளம் கண்டுணரும் பேரார்வம் இருந்தாலேயொழிய இத்தகைய உரைத்திறன் கைவரப்பெறுவது அரிது. பரிமேலழகருக்கு அந்த ஆர்வம் அளவு கடந்தது. அதனால் அது கைவரப்பெற்றது!

    (தொடரும்…)

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 24

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 24

    மீனாட்சி பாலகணேஷ்

    (பந்தாடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பெண்குழந்தைகளின் விளையாட்டுகளென இன்னும் பல உள்ளன. பிள்ளைத்தமிழ் நூல்கள் விரித்துரைப்பதென்பன சிலவே! அவற்றுள் கடைசியாக நாம் காணப்போவது பந்தாடல் பருவம்.

    பத்துப்பருவங்களுக்குள் பிள்ளைப்பருவ நிகழ்வுகளைப் பாடும் வழக்கினின்று வழுவாது பாடவேண்டி, அனைத்து விளையாட்டுகளையும் ஒரு பாடலிலேயே அம்மானைப் பருவத்தில் கூறிவிடுவதும் உண்டு! பக்தி, கலைநயம், கற்பனை அனைத்தும் கலந்தோடும் பிள்ளைத்தமிழ்ப் பருவப் பாடல்கள் இலக்கியச்சுவையிலும் மிகச் சிறந்தவையாகும்.

    பாடல்களைக் காணுமுன் பந்தாடுதல் பற்றிய மற்ற இலக்கியக் குறிப்புகளைக் கண்டு மகிழலாமே!

    பந்தாடுவது பெண்களுக்கு ஒரு இன்பமான பொழுதுபோக்கு; அருமையான விளையாட்டு! சங்ககாலத்திலிருந்தே  ‘பந்தாடுதல்’ பெண்களுடன் மட்டுமே இணைத்துப் பேசப்பட்டு வந்துள்ளது.

    மதுரை மாநகரின் கோட்டைவாயிலில் மன்னர்கள் பெண்கள் விளையாடும் பந்தையும் பாவையையும் கட்டித் தொங்கும்படிச் செய்திருந்தார்களாம். இதன்பொருள், ‘எம்மை வெல்லும் ஆண்மையாளர் எவரும் இல்லை! பகைவர்களை நாங்கள் பந்தும் பாவையும் விளையாடும் பெண்களைப் போன்று எண்ணுகிறோம். வீரம் மிகுந்தோர் யாராவது இருந்தால் இவற்றை வந்து அறுக்கலாம்,’ என்பதாகும் என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது!

                ‘வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
             பொருநர்த் தோய்த்த போரருவாயில்1‘ என்பன பாடல் வரிகள்.

    நெட்டி, பஞ்சு, பட்டுநூல், மயில்பீலி, மயிர் இவற்றால் பின்னி பந்துகளைச்செய்து சோலைகளிலும் மாடங்களிலும் விளையாடிக் களித்தனர். இவர்கள் விரைந்து பந்துவிளையாடும்போது குதிரையின் குளம்படிச் சத்தம்போல ஒலியெழுந்ததாம்; சிலம்பும் மேகலையும் கைவளைகளும் ஒலிக்கப் பெண்கள் பந்தாடினார்களாம்! எத்துணை பாடல்கள்! வருணனைகள் – சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும்!

    சீவகசிந்தாமணியின் விமலையார் இலம்பகப்பாடல் ஒன்று பந்தடிக்கும் லயத்துடன் ஒத்திருப்பதைப் படித்து ரசிக்கலாமா?

    இராசமாபுரத்து வீதிகளின் அழகைக்காணச் சீவகன் சென்று கொண்டிருக்கிறான்; விமலை எனும் அழகியபெண் பந்தாடிக்கொண்டிருந்தாள். அவள் எவ்வாறு பந்தடித்து விளையாடினாள் எனச் சீவக சிந்தாமணி விளக்கும் விளையாட்டின் வழிமுறைகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன!

    விமலை தனது உள்ளங்கையில் பொருந்தும்படி ஐந்து பந்துகளை வைத்துக்கொண்டு மேலே வீசியாடுகிறாள். ஒரு மலர்மாலையைச் சுற்றிமொய்க்கும் வண்டுகளைப்போல் அவை அவளைச்சுற்றிக் கீழேவந்து உடனே அவள் கைகளால் அடிக்கப்பட்டு மேலெழும்பிச் செல்லுகின்றனவாம். திரும்பக் கீழே விழுவதில்லை! பந்துகளின் போக்கையே பார்த்துக் கொண்டிருக்கும்அவளுடைய கண்களில் அழகான பிம்பமாகத் திரிகின்றனவாம்!

             அங்கையந்த லத்தகத்த ஐந்துபந்த மர்ந்தவை
             மங்கையாட மாலைசூழும் வண்டுபோல வந்துடன்
             பொங்கிமீதெ ழுந்துபோய்ப்பி றழ்ந்துபாய்தல் இன்றியே
             செங்கயற்கண் புருவம்தம் முளுருவம்செய்யத் திரியுமே2!

    மேலே அடிக்கப்பட்ட பந்துகள் சில அவளுடைய முல்லைமாலையில் மறைந்தன; பின்பு அவள் கையை வந்தடைந்தன.  கருங்கூந்தலைத் தாண்டிப்பறந்த பந்துகள் முகத்தருகே வந்தனவாம்; தலையில் மறைந்தவை மார்பில் மாலையருகே வந்துசேர்ந்தன. சில கைவிரலில் அமர்ந்தன. இவ்வாறு பந்துகள் எங்கே என்று காண்பவர் வியக்கும்படி அவற்றை வீசியும், அடித்தும் வேகமாக ஆடினாள் விமலை. இப்படியெல்லாம் ஆடினால் என்னவாகும்? மார்பில் பூசிய குங்குமமும் பொற்சுண்ணமும் நெற்றிச்சந்தனமும் வியர்வையில் கரைந்து கொங்கைகளிடையே வழிந்தோடியது வானவில் போன்று இருந்ததாம். ஆடியாடி அவளும் சிறிது தளர்ச்சி அடைந்துவிட்டாள் போல இருக்கிறதே! அவள் கையிலிருந்து ஒருபந்து நழுவி, மார்பிலணிந்த முல்லைமாலையைத் தொட்டுக்கொண்டு வீதியில் வந்துகொண்டிருந்த சீவகன்முன்பு போய் விழுந்ததாம். பின்பு என்னவாயிற்று? கண்ணோடு கண்ணிணை கலந்து திருமணத்தில் முடிந்தது என்கிறது சீவக சிந்தாமணி! இங்கு இதைச் சொன்னது விமலையார் பந்தாடும் அழகை விவரிக்க மட்டுமே!!
    —————————
    அம்பிகையும், மற்றப்பெண்களைப்போல் பந்தாடுவதில் விருப்பமுள்ளவள் என்பது தேவாரத்தில் காணும் வர்ணனைகளால் விளங்குகிறது. ‘பந்தணை விரலி’ எனச் சம்பந்தப்பெருமான் அம்பிகையைப் பற்றிக் கூறியுள்ளார். சுந்தரரும் கூட, ‘பந்தும் கிளியும் ஆகியனவற்றை எப்போதும் கரங்களில் வைத்திருப்பவளான அம்பிகையின் சிந்தைகவர்ந்த நாதனாகிய இறைவன் வாழும் ஒற்றியூர்,’ என ஈசனையும் அவன் வாழும் ஊரையும் சிறப்பிக்கிறார்.

             பந்தும் கிளியும் பயிலும் பாவை
             சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர்
             எந்தம் அடிகள் இறைவர்க் கிடம்போல்
             உந்தும் திரைவாய் ஒற்றி யூரே3 (சுந்தரர் தேவாரம்- திருவொற்றியூர்)

    கைலாயத்திலிருந்த பார்வதிதேவிக்கு ஒரு சமயம் பந்துவிளையாடும் ஆசை ஏற்பட்டது; உற்சாகமாக அவளும் தோழியருடன் நீண்டநேரம் பந்து விளையாடுகிறாள். நேரம் சென்றதே தெரியவில்லை. இவள் விளையாடுவதற்காக சூரியனும் மறையாமல் வெளிச்சம் தருகிறான். மறைந்தால் விளையாட்டு தடைப்பட்டுவிடுமே; அதனால் அம்பிகை தன்னிடம் கோபித்துக்கொண்டால் என்னசெய்வது என்று ஒருபுறம் பயம்வேறு! இதனால் மாலை மயங்காது போயிற்று; முனிவர்கள் எல்லாரும் சந்தியாவந்தனம் செய்யமுடியாமல் திண்டாடினார்கள்.

    சிவபிரானிடம் சென்று அவர்கள் முறையிட, அவர், சூரியனைக் கடிந்துகொண்டு, நேரம்காலம் கருதாமல் விளையாட்டில் ஈடுபட்ட அம்பிகையைப் பசுவாகும்படி சபித்தார். மனம்வருந்திய பார்வதி சாபவிமோசனத்தை வேண்டுகிறாள். சிவன் பந்தினைக் காலால் எற்ற அது பூமியில் ஒரு சரக்கொன்றை மரத்தடியே விழுகின்றது. அந்த மரத்தினடியே உள்ள சிவலிங்கத்திற்குப் பசுவான அம்பிகை பால்சொரிந்து அபிஷேகம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்கிறார் பெருமான். ‘பந்து அணைந்த தலம்’ ஆதலால் ‘பந்தணைநல்லூர்’ என இத்தலம் வழங்கப்படுகிறது. காலப்போக்கில் ‘பந்தநல்லூரு’ம் ஆகிவிட்டது! அப்பந்தும் அச்சிவலிங்கத்தின் சடையில் விழுந்து கலந்தது.

    திருமால் பசுவான தன் தங்கையைக் காக்க இடையனாக பூமிக்கு வருகிறார். நாள்தோறும் பசுக்களை மேய்த்து வருகிறார். ஒருநாள் பார்வதியான அப்பசு புற்றிலிருந்த சிவலிங்கத்தைக் கண்டு பாலை முழுவதும் அதன்மீது சொரிந்து வழிபடுகிறது. அப்பூசையால் மகிழ்ந்த சிவபிரான் அந்த லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு பார்வதிக்குக் காட்சிதந்து அவளை அணைத்துக் கொள்கிறார். பசுவடிவு நீங்கிய அவளும் மேலும் வடக்குநோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டாள். தவத்தால் மகிழ்ந்த சிவபிரான், முனிவர்கள் – தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பராசக்தியைத் திருமணம் செய்து கொண்டார். கல்யாணசுந்தரர், பசுபதீஸ்வரர் (பசுவின் பதியாக வந்தவர்) எனும் பெயரையும் பெற்றார். அச்சிவனது சிரசில் பந்தணைந்த அடையாளம் இன்றும் காணப்படுகின்றது.

    இது அம்பிகையின் பந்தாடும் ஆசைபற்றிய அருமையான ஒரு புராணக்கதை. சீவகசிந்தாமணியில் பெண்கள் பந்து விளையாடும் முறையைப் பார்த்தோம். ஆகவே இது மிகவும் நுட்பமாக, கைவேகத்தையும், கண்- கை- கால் ஆகியவற்றின் இணைந்த செயல்பாட்டையும் விவேகத்தையும் கொண்டு விளையாடப்படும் ஆட்டம் என அறியலாம். நாள்தோறும் நன்கு பயிற்சி செய்யவும் வேண்டும்.

                ____________________________

    இத்தனை அழகும் நயமும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த விளையாட்டிற்கு மற்றவற்றைப்போல் பாடல்கள் இல்லையோ என எண்ணவேண்டா. சிலப்பதிகாரத்தில் பெண்கள் பாடியாடுவதாக சில பாடல்களைக் காணலாம். கண்ணகிக்குக் கோவிலெடுத்து வழிபடும்போது பெண்கள் மூவேந்தர்களின் புகழையும் பாடி ஆடிக் களிக்கிறார்கள். பந்திற்குக் ‘கந்துகம்’ எனவொரு அழகான பெயருமுண்டு. பெண்கள் பந்தடிக்கும்போது பாண்டியமன்னர்களின் புகழைக்கூறி ‘கந்துகவரி’யைப் பாடுகிறார்கள்.

    “பொற்கொடி போன்றபெண்ணே! நமது அழகான பொன்மாலைகளும் மின்னல்போல ஒளிவீசும் மேகலைகளும் அசைந்தாடும்படி, ‘எங்கள் பாண்டியமன்னன் நீடூழி வாழ்க! தேவர்களின் ஆரத்தை மார்பிலணிந்தவன் வாழ்க!’ எனக்கூறிப் பந்தடிப்போமாக!” என்று ஒருத்தி பாடுகிறாளாம்.

    “விரைந்து வரும் இப்பந்து நமது கையில் இருந்ததும் இல்லை! நீண்ட நிலத்திலிருந்து அந்தரத்தே எழுந்ததும் இல்லை பாராய்! என்று உலகத்தோர் கூறும்வண்ணம் பாண்டியமன்னன் வாழ்க எனப்பாடிப் பந்தடிப்போம்!” என இன்னொருத்தி பாடுகிறாள்.

    துன்னிவந்து கைத்தலத்து இருந்ததில்லை நீணிலம்
    தன்னினின்றும் அந்தரத்து எழுந்ததில்லை தானெனத்
    தென்னன்வாழ்க வாழ்கவென்று சென்றுபந் தடித்துமே
    தேவரார மார்பன்வாழ்க வென்றுபந் தடித்துமே4.

    இது அவர்கள் வெகு விரைவாக இப்பந்தாட்டத்தை ஆடுவதனைக் குறிக்கின்றது. பந்தைத் தூக்கி எறிந்து பிடித்து விளையாடும் விளையாட்டல்ல இப்பந்தாட்டம்! பந்தடித்தல் என்று ஒருத்தியே  பந்துகளை மேலே வீசி அவை கீழேவிழுமுன் ஓடியோடிப்பிடித்து உயரப்பந்தடித்து விளையாடும் விறுவிறுப்பான பந்தாட்டம் இதுவாகும்! நல்ல உடற்பயிற்சியும் கூட!

                _____________________________

    கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை எனும் காப்பியம் உதயணன் எனும் மன்னனின் பிரதாபங்களைக் கூறுவது.

    இதில் ‘பந்தடி கண்டது’ எனும் காதையில் பந்துகளைச் செய்யும் முறை விரிவாக விளக்கப்படுகிறது.

    தொழில் நுணுக்கம் அறிவோரால் செய்யப்பட்ட பந்துகள் நெட்டியும் பஞ்சும் இடையிடையே வரிந்து கட்டிய  உலண்டு நூலும் சேர்த்து அழுத்தி அவையிவற்றை அமைவாக உருட்டிக்கட்டி, மேலே மயிற்பீலியும் மயிருங்கொண்டு நன்றாகப் பின்னி, அவற்றின்மேல் நூலாலும் கயிற்றாலும் நுண்ணியதாகச் சுற்றி அழகாகக் கையிற்கொண்டு அழுத்தி, அதன்மேல் பாம்புத்தோல் போலவும் மயில் தோகையின் கண் போலவும் அழகிய நீர் நுரை போலவும் தோன்றும்படி தைத்துப் பிடித்த மென்மையினையுடையனவும் பல்வேறு தொழில் திறம் அமைந்தனவுமாகிய பந்துகளை வைத்து (விளையாடினர்).

                       கிடையும் பூளையு மிடைவரி யுலண்டும்
                                அடையப் பிடித்தவை யமைதியிற் றிரட்டிப்
                                பீலியு மயிரும் வாலிதின் வலந்து
                      நூலினுங் கயிற்றினு நுண்ணிதிற் சுற்றிக்
                                கோல மாகக் கொண்டனர் பிடித்துப்
                                பாம்பின் றோலும் பீலிக் கண்ணும்
                        பூம்புன னுரையும் புரையக் குத்திப்
                                பற்றிய நொய்ம்மையிற் பல்வினைப் பந்துகள்5.

    பெருங்கதையின் வத்தவ காண்டத்தில் பந்தடி கண்ட காதையில் வாசவதத்தையும் பதுமாவதியும் தங்கள் தோழியரின் பந்துவிளையாடும் போட்டியைக் காண்கின்றனர். வயந்தகனும் உதயணனும் மறைந்து நின்று பந்தடி காணுகின்றனர். தோழியர்கள் இராசனை, காஞ்சனமாலை, அயிராபதி, விச்சுவலேகை, ஆரியை ஆகியோரின் ஒப்பற்ற பந்தாட்டம் விளக்கமாகக் கூறப்படுதலைக் காணலாம். இத்தகைய விரிவான வேகமான, வியக்கவைக்கும் ஆட்டமிதுவா என பிரமிக்க வைக்கும் விளக்கங்களைக் கண்டு மகிழலாம்.

    இனி பிள்ளைத்தமிழைக் காணச் செல்லலாமா? முன்பே கூறியதுபோல, நல்லதுக்குடி கிருட்டிணையர் இயற்றியுள்ளதில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் ஒன்றே பெண்குழந்தையின் பந்தாடல் பருவத்தைப் பத்துப்பாடல்களில் அழகுற விவரிக்கின்றது.

    சிவகாமசுந்தரி அன்னை  வெள்ளிமலையாகிய கைலாயத்தில் பிரம்மாண்டமான மலைகளாகிய பந்துகளைக் கையில் எடுத்து விறுவிறுப்பாகப் பந்தாடி மகிழ்கிறாள். அப்போது அவளுடைய சிவந்த தாமரை மலரடிகளின் குதிகால் பந்துகள் அசைந்தாடுகின்றன; பந்தினையொத்த திருமுழந்தாள் அசைந்தாடுகிறது. பந்துபோன்ற வடிவில் முடியப்பட்ட உச்சிக்கொண்டை உடன் ஆடுகின்றது. குங்குமம் பூசிய கொங்கைகள் பந்தாடுகின்றன; இருவிழிகளும் பந்துகள் செல்லும் பாதையையே நோக்குவதனால் அவையும் அதே வேகத்தில் சுழன்றாடுகின்றனவாம்.

    நமது உள்ளங்களையும் உவகையில் பந்தாடச் செய்கின்ற பாடல்!

                செந்தாமரைப் பதம் பந்து அசைந்தாட
                       வரும் திருமுழந்தாள் பந்துமே
             திண்புவி பதிந்தாட இனிய பந்துக்
                       கொண்டை சென்றுடன் பந்தாடவே
             நந்தாத குங்குமக் கொங்கை
                       பந்தாட இருநயனங்கள் ஆடவே
             ……………………………………………..
             பந்தாட வேதண்ட மூதண்ட கூட
                       நற்பந்து விளையாடி அருளே!
             பங்கயச் சிவகாம சுந்தரி என்
                       அம்மையே! பந்து விளையாடி அருளே6!     

    அன்னை பராசக்தி தனது ஆணைப்படி இவ்வுலகில் அனைத்தையும் நடத்துவிக்கிறாள் எனப் பெரியோர் கூறுவர்! பிள்ளைத்தமிழ் நூல்களில் அன்னை பராசக்தி சிறுவீடுகட்டி விளையாடுவதெனக் கூறுவது, அன்னையானவள் இந்த உலகங்களைப் படைப்பதனையும், அம்மானை, பந்து, கழங்கு முதலியன விளையாடுவது அவற்றைத் தனது ஆணைப்படி காத்து இயக்குவதனையும், சிவனெனும் பித்தன் அச்சிற்றிலை அழிப்பது, உலகங்களை அழிப்பதனையும், இச்செயல்கள் தொடர்ந்து இடைவிடாது சுழற்சியாக நடந்துகொண்டே இருப்பதையும் உட்பொருளாக விளக்கும்.

    இப்பருவத்தின் பத்துப்பாடல்களும் ஒவ்வொரு நயத்தை விளக்கும். மூன்றாம்பாடல் பலவிதமான விதங்களில் தோன்றும் உயிரினங்களான முட்டையினின்று விளைபவை, கருப்பையினின்று பிறப்பவை, வியர்வையினின்று தோன்றுவன எனும் தத்துவன (நுண்ணுயிரிகள்!), ஊர்வன, பறப்பன, நடப்பன, கிடப்பன, இருப்பன ஆகிய வெவ்வேறு உயிர்களைப் படைத்தும், அடுத்தடுத்த பிறவிகளில் வெவ்வேறாக மாறிமாறிப் பிறப்பதற்கும் ஆகிய நிலைமையுடைய உயிர்க்கூட்டங்களை பந்தென அடித்து விளையாடுபவளான உமையம்மையே!

                ………………………………………………
             தத்துவன ஊர்வன தவழ்ந்திடுவ நிற்பன
                       தனித்தனி பறப்பனவுமே
             ………………………………………..
             பத்திபெறு பல்லுயிர்ப் பந்தடித்து ஆடும்
                       உமைபந்து விளையாடியருளே7‘ என வேண்டுவதாக அமைந்த பாடல்.
    வேறொரு பாடலில் இசை சங்கீதத்துடன் பந்தடித்தருளுக என்பார்.

    மற்றொன்றில், அணிந்துள்ள அணிமணிகள் செய்யும் தாளத்துடன் இணைந்து பந்தடித்தருளுக என வேண்டுவார்.

    வேறொன்றில் எங்கள் பந்தபாசங்கள் தீரும்வண்ணம் பந்தடித்தருளுக என்பார்.

    ஆக, இறைவியின் பந்தாடும் செயலானது உயிர்களின் பந்தபாசத்தை நீக்குவதும், ஐந்தொழில் புரிவதும் ஆகியவற்றினை அவள் எளிதாகக் காலந்தோறும் பந்தாடும் விளையாட்டாகவே செய்துவருவதனை உணர்த்துகின்றது.

    இந்தப் பந்தாட்டத்தில்தான் என்னவெல்லாம் கற்பனைகள். கருத்துக்கினிய புனைகதைகள், காட்சிகள்! காலங்கள்தோறும் பலவகைப்பட்ட விளையாடல்களின் உள்ளங்கவர் காட்சிகளைப் பிள்ளைத்தமிழ் எனும் ஒப்பரும் ஒரு பிரபந்தத்தின் இனிய பாடல்களாக்கி அளித்த அருமைத் தமிழின் பெருமை தனித்துவமானது அன்றோ?

    இத்துணை நாட்கள் பிள்ளைத்தமிழின் நயமான பருவங்களையும் அவை தொடர்பான பாடல்களையும் கண்டுகளித்தோம்.

    விரைவில் இதுபோன்ற வேறொரு தொடருடன் சந்திப்போம்.

    வணக்கம்.

    (நிறைந்தது).

                            ________________________________

     பார்வை நூல்கள்:

    1. நக்கீரர் – திருமுருகாற்றுப்படை.
    2. திருத்தக்க தேவர்- சீவக சிந்தாமணி – விமலையார் இலம்பகம்.
    3. சுந்தரமூர்த்தி நாயனார் – திருவொற்றியூர் தேவாரம்.
    4. இளங்கோவடிகள்- சிலப்பதிகாரம் – கந்துக வரி.
    5. கொங்குவேளிர் – பெருங்கதை – வத்தவகாண்டம்- பந்தடி கண்டது.
    6. 7. நல்லதுக்குடி கிருட்டிணையர் – தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்.
    Share
  • பழகத் தெரிய வேணும் – 37

    பழகத் தெரிய வேணும் – 37

    நிர்மலா ராகவன்

    தானே தன்னை அறிய

    “ஓயாம என்ன விஷமம்?” என்று குழந்தைகளை அதட்டியோ, அடித்தோ செய்கிறவர்கள் குழந்தைகளின் மனதைப் புரிந்துகொள்ளாதவர்கள்.

    பெரியவர்களுக்குத் தவறு என்றுபடுவது எது என்று குழந்தைகளுக்குப் புரியாது. இன்னும் அதிகமாகச் `சோதித்து’க்கொண்டே இருப்பார்கள்.

    சில நடிக நடிகையர் திரைப்படங்களில் தம் இயற்கையிலிருந்து மாறுபட்டு நடிக்கிறார்களே, அவர்களைக் கேளுங்கள், இத்திறமை எப்படி சாத்தியமாகிறது என்று.

    `பிறரது சரீரத்திற்குள் புகுந்துகொள்வதால்,’ என்று பதில் வரும். நம்மை இன்னொருவராகப் பாவித்தால், அவரது எண்ண ஓட்டம் புரியும். அதாவது, அவருடைய கண்ணால் நாம் பார்க்கவேண்டும், அவருடைய காதால் கேட்கவேண்டும்.

    தலைவர்களும், பிறரது துன்பத்தைத் துடைக்க விரும்புகிறவர்களும், எழுத்தாளர்களும் கற்க வேண்டிய தன்மை இது.

    நாம் சந்திக்கும் பலதரப்பட்ட மனிதர்களின் உணர்ச்சிகள் மட்டுமின்றி, அனுபவங்கள், கண்ணோட்டம் எல்லாமே தெளிவாகும். அப்போதுதான் பிறரைப் பழிக்கத்தோன்றாது.

    (எச்சரிக்கை: நீண்ட மாதங்கள் தொடர்ந்து இப்படி நடந்தால், அவர்களாகவே மாறிவிடும் அபாயமும் உண்டு. சுயநிலைக்குத் திரும்ப சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.

    தொழுநோயைப்பற்றி நிறைய ஆராய்ச்சியுடன் ஒரு தொடர்கதை எழுதிக்கொண்டிருந்தபோது, நான் அவர்களுடைய உணர்ச்சிகளை என்னுடையதாக ஆக்கிக்கொள்ள, உடல்நிலை சீர்கெட்டு, மூச்சே விட முடியாது போய்விட்டது. நள்ளிரவில் மருத்துவரிடம் போக வேண்டிய நிலை ஏற்பட்டது).

    கதை

    பரீட்சையில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் வாங்கிய என் மாணவன், “இன்று அப்பாவிடம் பிரம்படி வாங்கப்போகிறேன்,” என்று நடுங்கியவாறு கூறினான்.

    வயதுக்கு மீறிய வளர்த்தியுடன் இருந்த அவனது சகா, “திருப்பி அடித்துவிட்டுப் போயேன்!” என்றான் அலட்சியமாக.

    இந்த உரையாடலைச் செவிமடுத்தபடி இருந்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

    வெகு நேரம் யோசித்தபின் ஒன்று புரிந்தது. காரணமில்லாது அவனை அடிக்கடி அடித்து நொறுக்கும் அப்பா. மனம் வெறுத்து, அவரை எப்படித் தடுப்பது என்று அப்படி யோசித்திருக்கலாம்.

    வேறொரு சமயம், அவனை அழைத்துக் கேட்டபோது, வாரம் முழுவதும் அவன் எப்படி இருக்கிறான் என்றுகூட பாராது, சனிக்கிழமையன்று, காரணமேயின்றி பிரம்பும் கையுமாக அவனை வீட்டுக்குள் துரத்தித் துரத்தி அடிக்க வருவார் என்று ஒப்புக்கொண்டான்.

    “தான் குடும்பத் தலைவன். அதனால், பெரிய அதிகாரம் என்று காட்டிக்கொள்வதாக அப்பாவுக்கு எண்ணம்!” என்று அவன் வெறுப்புடன் கூறியபோது, என் அதிர்ச்சி அதிகரித்தது.

    பையனுக்கு அப்பாவைப் புரிந்த அளவுக்கு அவரால் மகனைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

    அப்பா என்றால் அடக்குவதுதானா, அன்பு செலுத்த வேண்டாமா என்று அவன் யோசித்திருக்கிறான்.

    `நல்ல வேளை, நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையவில்லையே!’ என்ற நிம்மதியும், `அவன் நிலையில் நான் இருந்தால், இதைவிட மோசமாக இருந்திருப்பேனோ, என்னவோ!’ என்ற நினைப்பும் ஒருங்கே எழுந்தன.

    ஒருவரது நலனைப்பற்றிய உண்மையான அக்கறை இருந்தால், `நீ என்ன, இவ்வளவு கேவலமாக நடக்கிறாயே!’ என்ற எண்ணம் உதிக்காது.

    பிறரது துன்பங்களை நம்முடையதுபோல் பாவித்து, அவர்களை அப்படியே ஏற்றால்தானே நம்முடன் நெருங்குவார்கள்?

    அதன்பின், தம்மைப்பற்றி, வலிய வந்து சொல்லிக்கொள்வார்கள், நாம் கேளாமலேயே.

    சிலர் அவலமான தம் கதையைப் பிறரிடம் சொல்லிக்கொள்ள விரும்பி மெல்ல ஆரம்பிப்பார்கள்.

    `எனக்கே எத்தனையோ கஷ்டங்கள்! உங்களுடையதை வேறு கேட்கணுமா?’ என்பதுபோல் மற்றவர் அசிரத்தை காட்டினால், வாயை இறுக மூடிக்கொள்வார்கள்.

    கதை

    “நீங்க இன்னிக்குப் பேசப்போறதா கேள்விப்பட்டேன். ஒங்களைப் பாக்கத்தான் வந்தேன்,” என்று ஒருவர் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

    அப்போது சிற்றுண்டி நேரம். சற்றுத் தொலைவில் இருந்த நாற்காலிகளில் அமர்ந்துகொண்டோம்.

    மிகுந்த தயக்கத்துடன், இளமையில் தாம் `எப்படி எப்படியோ’ இருந்ததாகவும் அதனால் திருமணமே செய்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

    “ஆண்கள் தமக்கு வரும் மனைவி யோக்கியமானவளாக இருக்கவேண்டும் என்று நினைப்பதுபோல்தானே பெண்களும் விரும்புவார்கள்? அதனால், `கெட்டுப்போன’ ஒரு பெண்ணையே மணக்க உறுதி பூண்டிருக்கிறேன்!” என்று கூறினார்.

    “அப்படி ஒரு பெண்ணை எப்படித் தேடுவது?” என்று அயர்ந்தவருக்கு நாற்பது வயதுக்குமேல் இருக்கும்.

    அவர் புண்ணியத்தால் எனக்கு ஒரு நல்ல கதை கிடைத்தது.

    பல வருடங்களுக்குப்பின், அவரை ஒரு பெண்ணுடன் பார்த்தேன்.

    “கல்யாணம் ஆயிடுத்தா?” என்று ஆவலுடன் விசாரித்தேன்.

    “இல்லே. ஆனா, ஆயிடுச்சுன்னு எல்லார்கிட்டேயும் சொல்லிட்டிருக்கேன்,” என்ற பதில் வர, நான் புன்னகைத்தேன்.

    நாம் பேசுவதைப் பிறர் கேட்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் உண்டு. அதுபோல்தானே மற்றவருக்கும் இருக்கும் என்று யோசித்தால் தானே சகிப்புத்தன்மை வளரும்.

    தம்மைவிட வித்தியாசமானவர்களைச் சிலரால் ஏற்க முடியாது.

    “இந்தியாவில் சாதி வித்தியாசம் நிறைய பார்ப்பார்களாமே, உண்மையா?” என் சக ஆசிரியைகள் என்னைச் சூழ்ந்து உட்கார்ந்துகொண்டு கேட்டார்கள்.

    “எந்த நாட்டில் இந்தமாதிரியான குணம் கிடையாது? சொல்லுங்கள் பார்க்கலாம்!” என்று சவால் விட்டேன்.

    என் பதில் அவர்களை யோசிக்கவைத்தது.

    மலேசியா போன்ற நாடுகளில் இன வேறுபாடு, பிற நாடுகளில் மொழி, மதம் அல்லது நிறத்தால் உயர்வு-தாழ்வு என்கிற நிலை.

    மொத்தத்தில், மனிதனுக்கு அன்பு செலுத்துவதைவிட வெறுப்பது எளிதாக இருக்கிறது.

    கதை

    என் சக ஆசிரியை மலர் ஓயாது சீனர்களை `மஞ்சத்தோல்’ என்று பழிப்பாள். எல்லா மாணவர்களுக்கும் அவளைக் கண்டால் வெறுப்பு.

    “எங்கள் வகுப்பு மாணவர்கள் மலர் டீச்சரைப் படாதபாடு படுத்துவார்கள்!” என்று ஒரு மாணவி என்னிடம் கூறிச் சிரித்தபோது, நான் அலட்சியமாக, “அவள் racist! (இனவெறி பிடித்தவள்)” என்று தெரிவித்தேன். (அதே மாணவர்கள் என்னிடம் மிக மரியாதையாக நடந்துகொள்வார்கள்).

    மலர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவள். ஆனால், இந்தியனில்லை. நெற்றியில் குங்குமத்துடன் விபூதி, தன்னை பக்தி நிறைந்தவள் என்று காட்டிக்கொள்வதுபோல். எல்லாரும் தன்னைப்போல் இருக்கவேண்டும் என்று (இயலாத) ஒரு கருத்தைக் கொண்டவள்.

    மலரை `பக்திமான்’ என்று மகாத்மா காந்தி ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார். ஏனெனில், “எவருக்குப் பிறர் அனுபவிக்கும் துன்பங்கள் புரிகிறதோ, அவரே ஆன்மிகவாதி!” என்ற கருத்து கொண்டவர் ஆயிற்றே!

    துணுக்கு

    பூவுலகில் தன் காலம் முடிந்தவுடன், நற்குணவானான ஒரு மனிதன் சொர்க்கத்திற்குப் போனான். அது காலியாக இருந்தது. வேறு பக்கத்திலிருப்பவர்கள் சிரித்தபடி மகிழ்ச்சியாக இருந்தார்கள். அங்கோ ஒரே கும்பல்.

    “என்னையும் அங்கே அனுப்பிவிடுங்கள்,” என்று இவன் கோரிக்கை விட, “நீ இருக்க வேண்டிய இடம் அதுவல்ல. அது நரகம். அங்கிருப்பவர்கள் எப்போதும் ஆத்திரம் கொண்டு, பிறரது துயரத்தால் மகிழ்ச்சியும் லாபமும் அடைந்தவர்கள்,” என்ற பதில் கிடைத்தது.

    ஆத்திரத்திற்கு எதிர்ப்பதம் என்ன தெரியுமா?

    அமைதி என்கிறீர்களா?

    இல்லை. அடுத்தவரைப் புரிந்துகொள்வது. அவரை நம் இதயத்தால் தொடுவது.

    பிறருடைய இடத்தில் நம்மை வைத்துப் பார்த்தோமானால், எவரையும் ஏற்க முடியும்.

    தன்னைத்தானே புரிந்துகொள்ள ஒருவருக்கு இதைவிடச் சிறந்த வழி கிடையாது.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 100 (மறைத்தவன்)

    சேக்கிழார் பாடல் நயம் – 100 (மறைத்தவன்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    மறைத்தவன்    புகுந்த   போதே   மனமங்கு   வைத்த  தத்தன்
    இறைப்பொழு   தின்கண்   கூடி   வாளினால்   எறிய   லுற்றான்
    நிறைத்த  செங்குருதி   சோர   வீழ்கின்றார்  நீண்ட   கையால்
    தறைப்படும்   அளவில்   ‘’தத்தா   நமர்’’எனத்   தடுத்து  வீழ்ந்தார்!

    பொருள்

    மறைத்தவன் உள்ளே புகுந்த போதே,அங்கே மனம் வைத்துப் பார்த்திருந்த வனாகிய தத்தன் மிக விரைவில் அவ்விடத்திற் கூடி வாளினாலே அவனை வெட்ட முற்பட்டான்; மிகவும் இரத்தம் பெருகுதலால் விழுகின்ற வராகிய நாயனார், தாம் தரையில் வீழ்கின்ற அந்த அளவுக்குள் தமது நீண்ட கையினால் “தத்தா! நமரேகாண்“ என்று சொல்லி அவன்  செய்கையைத் தடுத்து வீழ்ந்தார்.

    விளக்கம்

    முத்தநாதன் அரண்மனை   வாயிலில்  காவலர்களால் தடுக்கப்பெற்றான். சிவனடியார் வேடத்தை நோக்கிப்  பலரும்  வழிவிட்டனர்.  எல்லாத் தடைகளையும்  கடந்து உள்ளே  சென்ற முத்தநாதனை அந்தப்புர வாயிலில் நின்ற அணுக்கத்  தொண்டனாகிய தத்தன்  என்பவன் தடுத்து  நிறுத்தினான்.

    ‘’அந்தப்புரத்தினுள்  சமயமறிந்து  அனுமதி பெற்று அதன்பின் செல்ல வேண்டும், இப்போது எங்கள்  இறைவனாகிய  அரசன்,   அரசியுடன்  படுத்து உறங்கும்  நேரம் இது!’’  என்று அவனைத்  தடுத்தான்.

    தத்தன்  தடுத்தபோதே  விரைவாக  அவனிடம்,  ‘’நீயும்  இங்கேயே நில்!  யான்  அரசர்க்கு உறுதிப்பொருளைக்  கூறப் போகிறேன்’’, (இறுதிப்   பொருள் என்பது தொனிப்பொருள்!) என்று கூறி  அவனையும்  கடந்து அந்தப்புரத்தினுள்ள  முத்தநாதன் சென்றான்!  அங்கே பொன்னாலான கட்டிலில் படுக்கைமேல் அனைவரையும் காக்கும் அரசராகிய  நாயனார் துயின்று கொண்டிருந்தார்; அவரருகே நறுமணம்  கமழும்கூந்தலையுடைய அரசமாதேவி இருப்பதைக் கண்டான்!   கண்டபின்னும் முத்தநாதன்  சிறிதும்  கூசாமல்   நெருங்கிச் சென்றான். அப்போது, ‘யாரோபடுக்கை யறையினுள்  நுழைகிறார்கள்’ என்பதைப்  பயிர்ப்பினால் அறிந்து கொண்ட அரசியார் துணுக்குற்று விரைவாக அமளியிலிருந்து இறங்கினார். வண்டுகள்  மொய்க்கும் மாலையணிந்து  உறங்கிய அரசரைத் துயிலுணர்த்தி எழுப்பினார்!

    அருகேசென்ற முத்தநாதனைக்  கண்ட  அரசர், “இவர் நம்   சிவபிரானின்  தொண்டரல்லவா?’’ என்று எண்ணிக் கரங்குவித்த படியே இறங்கி, விரைந்து முத்தநாதன் எதிரே நின்று தம் கொள்கையின்படி மிகப்பணிந்து வணங்கினார். அப்போது ‘’ஆகமநூல்  கொண்டு  வந்தேன்! இதனை  உமக்கு  உரைக்கும்போது  நாமிருவரும் வேறிடத்தில்  தனித்து  இருக்க வேண்டும்.’’ என்றவுடன் ‘’நீங்கள் சிரமப்படவேண்டாம்; இங்கேயே எனக்குஉறுதியைக் கூறுக!‘’ என்று அரசியாரை அப்புறப்  படுத்திய பின் முத்தநாதனை உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தினார். தானும் தரையில் அமர்ந்து மிகவும் போற்றி, வீழ்ந்துவணங்கி  அவ்வாறே தலைதாழ்த்தி, ‘’இனி அந்தநூலை எனக்கு  உரைத்தருள  வேண்டும்’’ என்றார்.

    அரசன் கீழே அமர்ந்துவணங்கிய போது, மேலேஅமர்ந்திருந்த முத்தநாதன் தன் மடியில் அப்புத்தகக் கட்டினை வைத்து, மெல்லப் பிரிப்பவன்போல, அவர் மிகப் பணிந்து வணங்கும்போதே, கையில்  மறைத்து வைத்திருந்த கத்தியை  எடுத்து, தான்  எண்ணிக்கொண்டு வந்த  கொல்லும்  செயலைச்செய்து  விட்டான்! அரசர் அடியாரின்  மெய்யான  தவ வேடமே உறுதிப்பொருள்!’’  என்று  கூறி  குத்தப்பட்ட போதும் குத்தியவனைத் தொழுதார்! அவ்வகையில் தம் கொள்கையில் தவறாது  நின்று வென்றார்!

    மறைத்தவன்புகுந்தபோதே மனம்அங்கு வைத்த தத்தன் என்ற தொடரில் மறைத்தவன் என்ற சொல், மறைகளிற் சொல்லிய தவத்திருவேடம் தாங்கியவன் என்றும், தவவேடத்திற்குள்ளே தன்னை மறைத்துக் கொண்டவன் என்றும், “நின்றிடு நீயும்“ என்றும் தன்னையும் மறுத்துப் புகுந்தவன் எனவும் பலவாறு பொருள்பட அமைத்த அழகு நினைக்கத்  தக்கது!

    இவையே.  தத்தன்  மனம் அங்கு வைக்கக் காரணமாயின. அங்கு மனம் வைத்த என மாற்றுக. மனம் வைத்தல் – அதுவே கருத்தாக மனத்துட் கொள்ளுதல். “பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணை“ என்பது திருத்தொண்டத்தொகை.

    இறைப்பொழுது , என்பது  கணப்பொழுது – நொடி – மாத்திரையைக்  குறிக்கும். . இது தனது காவற் கடமை செய்வதில் தத்தனுக் கிருந்த தீவிரத்தை  உணர்த்துகின்றது.

    நிறைத்த செங்குருதி சோர வீழ்கின்றார் என்ற தொடர், முத்தநாதன் பத்திரம் வாங்கிச்செய்த செயலால் நாயனாரது திருமேனியினின்றும் நிறையக் குருதி சோர்ந்து, அதனால், அவர் வீழ்கின்றாராக.என்பதைக் குறித்தது.  குருதி – செம்புண்ணீர். சோர – சோர்தலால்; குருதி சோர்தல் – இரத்தம் வடிதல். உடலினின்றும் இரத்தம் பெருக வெளிவருவது மிக்க அயர்ச்சிக்கும், இறுதியில் இறப்புக்கும் காரணமாம் என்பது உடல் நூற்றுணிபு. Death due to Hemorrage and loss of blood என்பர் நவீன மருத்துவர். இரத்தம் உயிர் நிலைப்பதற்கு ஆதரவாம்; அதன் கழிவு உயிர் போதற்குக் காரணமாம் என்பர். இரத்தத்தை Life blood என்ற ஆங்கில வழக்கும் காண்க.

    வீழ்கின்றார் – உபதேசங் கேட்கத் தாம் இருநிலத்திருந்தவர் அவ்வாறிருக்க மாட்டாதவராகிக், குருதி சோர்தலால் தரையிலே வீழ்வாராயினவர். நிகழ்கால வினையாலணையும் பெயர். வீழ்கின்றாராகிய நாயனார் (தடுத்து) வீழ்ந்தார் என்ற வினைமுற்றுக்கொண்டு முடிந்தது. வீழத் தொடங்கிய அவர் வீழ்தலாகிய அச்செயல் முற்றுமுன், தத்தனைக் கையால்   தடுத்துவிட்டு அதன் பின் வீழ்ந்தார். வீழ்தலின் தொடக்கத்துக்கும் முடிவுக்கும்  இடையில் தடுக்கும் சொல்லும் செயலும் நிகழ்ந்தன. குருதி சோர வீழ்கின்ற அந்நிலையினும் அவரது மனம், மொழி, மெய்என்ற முக்கரணங்களினுடைய, நினைக்கவுமரிய, உண்மை நிலையினை இவை காட்டியவாறு கண்டுகொள்க.

    நீண்ட கை – கை நீண்டிருத்தல், அரசுச் செல்வமுணர்த்தும் உறுப்பிலக்கணமெனவும், அது வள்ளற்றன்மை குறிக்கும் எனவும் கூறுவர். ஆஜானுபாகு – என்பது வடநூல் வழக்கு. பெருங் கொடையாளியைப்பற்றிப் பேசுவோர் “அவனுக்குக் கை நீளம்“ என்று கூறுவதும் ஒரு பழமொழி யாயிற்று.நீண்டகை என்பது இங்குக் குறைவறக் கொடுத்து வந்தகொடையிற் சிறந்த கை என்க. இங்கு நாயனார் திருவேடத்தாரின் குறிப்பின்படி தம் உயிரினையே ஒப்புக் கொடுத்ததுமன்றி, அவ்வஞ்சகனுக்குப் உயிர்ப்  பிச்சையுங் கொடுத்தலின் இவரது மிக்க வள்ளற்றன்மையின் மிக்கது முண்டோ?  அதுபற்றி நீண்டகை என இங்குச் சிறப்பித்தவாறு.

    தத்தா! நமர் – “தத்தனே! நீ இவரை வேற்றவர் என்று கருதி வாளினால் எறியலுற்றாய். அற்றன்று. இவர் நம்மவரே“ என்று வாக்கினாற் கூறினார். ஆதலின் நீ உன் செயலினைத் தவிர்தி என்பது குறிப்பு. அதனைக் கையினாற் செய்து முடித்தார் என்க. என – வாக்கினாற் சொல்லிக் கையாற்றடுத்து என்று கூட்டுக.

    தத்தா நமர் – நமர் – நம்மவர் என்றது நமர் என நின்றது. இது பழஞ் சாசன வெட்டுக்களிற் கண்ட தொடர். இராசராசச் சோழர் எடுத்த தஞ்சை இராசராசேச்சரத்திருக்கோயிலில் அமைத்த நாயன்மார் படிமங்கள் பலவற்றில் இந்நாயனார் திருவுருவமும் ஒன்றாம். இதனில் “தத்தா நமரே காண் என்ற மெய்ப்பொருள் நாயனார்“ என்று பெயர் பொறித்துள்ளார். இச்சொற்றொடரை வகைநூலாரும் “தத்தா நமரே! எனச் சொல்லி“ என்று எடுத்தாண்டுள்ளார். இதனையே ஆசிரியர் இங்குத் தலைப்பெய்து வைத்தனர்.சரித்திரத்தின் முந்தைய  தரவுகளை ஆசிரியர் போற்றும் அரியமுறை காண்க. நாயனார் இங்குச் செய்த அரிய செயல் “கொல்லாமை“, “எவ்வுயிர்க்குந் தீங்கு செய்யாமை“, “அஹிம்சை“ என்ற பொது அறத்தின் பாற்படும் என்று ஆராய்ச்சி செய்வாருமுண்டு. வேதங்களில் விதித்த “தர்மம் சர“, “அஹிம்சா பரமோ தர்ம:“ என்ற அறங்கள் வேறு; இங்கே குறித்தவை சாமானிய உலக நீதியாகிய பசு தருமங்கள். “கொல்லாவிரதம்“,

    “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயஞ் செய்துவிடல்“

    “கொல்லாவிரதம்“,  முதலியனவாக நமது பெரியோர்கள் விதித்தனவும். “ஒரு கன்னத்தில் ஒருவன் அடித்தால் மற்றொரு கன்னத்தைக் காட்டு“ முதலியனவாகப் பிறநாடுகளிலும் பிறரும் உரைத்த உபதேசங்களும் இவ்வாறே வேறாவன.

    இங்கு நாயனார் “தத்தா! நமர்“ எனத் தடுத்ததின் கொள்கை வேறு. இவைகள் ஒன்றாக மயங்கி உணரற் பாலனவல்ல. இங்கு நாயனார் செயலுக்கு அடிப்படையாய் நின்றது “திருவேடமே மெய்ப்பொருள்“ என்றும், “திருவேடத்தார் கருத்தறிந்து ஏவல் செய்தல்“ என்றும், கொண்ட கொள்கையைக் காத்தலாகிய பதி தருமம். இந்நாயனார்பால் முன்எதிர்த்துப் போர்செய்த இந்த முத்தநாதன் தனதுயானை முதலிய சேனைகளைப் “பன்முறை இழந்து தோற்றுப் பரிபவப்பட்டுப் போனான்“ என்பதையும், அந்தப் போர்களில் எத்தனை பேர் உயிர் துறந்தனர் என்பதனையும் இங்கு நினைவு கூர்ந்தால் நாயனார் கொண்ட அறத்தின் உண்மைநிலை புலப்படும். திருவேடந்தாங்காது வந்திருப்பின் முத்தநாதன் நிலை எவ்வாறிருந்திருக்கும் என்பதைச் சிந்திப்பின் இவற்றின் வேறுபாடு நன்கு புலனாகும்.

    சாமானிய உலக நீதிகளின் மேம்பட்டு, உலகிறந்தசிவபுவனத்திற் சஞ்சரித்து, வெளிப்பார்வைக்கு மட்டும் உலகர்போல, உண்டுடுத்து, அரசர் முதல் ஆள்வரை பல நிலைகளிலும் வாழ்ந்து, உலகை வாழ்வித்த எந்தம் பெருமக்களின் வாழ்க்கை நிலையினை உலக நீதிகளான அற விதிகளைக் கொண்டு அளத்தல் நம்மை உண்மை நெறியினின்றும் வழுக்கி விடுவதனோடு அபசாரத்திற்கும் இடம் தரும்.

    இப்பாடலில் ‘’தான் நினைந்த அப்பரிசே செய்தான்‘’ என்ற தொடர், ‘’கொன்றான்’’  என்பது  போன்ற தீய, மனம் நடுங்கும் சொற்களைச்   சிறந்த  நூலாசிரியர்கள் கூறார் என்பதைக்  காட்டியது

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 24

    கதை வடிவில் பழமொழி நானூறு – 24

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 49

    நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி நன்றுணராப்
    புல்லவையுள் தம்மைப் புகழ்ந்துரைத்தல் – புல்லார்
    புடைத்தறுகண் அஞ்சுவான் ‘இல்லுள்வில் லேற்றி
    இடைக்கலத்து எய்து விடல்’.

     பழமொழி – ‘இல்லுள்வில்லேற்றி இடைக்கலத்து எய்து விடல்‘.

    நேற்றுதான் நான் மும்பையிலிருந்து வந்தேன். ஆனா அதுக்குள்ள எனக்கு எத்தன நண்பர்கள் கிடைச்சிட்டாங்க. யோசித்துக்கொண்டே மாமா வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கிறேன்.

    இந்த ஊர்ல எல்லாரும் மனசுல வஞ்சகமில்லாம பழகறாங்க அப்போதுதான் வெளியில் வந்த அத்தையிடம் சொல்வதைக் கேட்டு என்னடா மருமகனே! எங்க ஊர் உனக்குப் பிடிச்சிருக்கா. சாயங்காலமா ஆத்துப்பக்கம் நடந்துட்டு வா. அந்த நல்ல காத்த சுவாசிச்சா உடம்புல ஒரு வியாதி அண்டாது. இதெல்லாம் சொன்னாப் புரியாது. அனுபவிச்சுப் பாக்கணும். மாமா செல்லமுத்து சொல்லிவிட்டு விறுவிறுவென்று எங்கோ போய்விட்டார்.

    சரி. கேட்டுத்தான் பார்ப்போமே எனக் காலார நடந்து ஆத்துப் பக்கம் வருவதற்குள் எத்தனை காட்சிகள். வழியில் சில சிறுவர்கள் தென்னை மரம் ஏற முயற்சிப்பதைப் பார்த்து நானும் ஆசைப் பட்டதில்முட்டி பேந்ததுதான் மிச்சம்.

    என்ன தம்பி பட்டணத்துக்காரரா. டவுசர் கிழிஞ்சுடும். இதப்போட்டுக்கிட்டு ஏற முடியாது. தலைப்பாகை கட்டிய பெரியவரின் வார்னிங்கையும் மீறி ஏறுவது போல் பாவனை செய்து போட்டோ எடுப்பதற்குள் கீழே விழுந்ததில் சின்ன சிராய்ப்பு.

    அண்ணே ஆத்துல போயி காலக் கழுவிக்கிடுங்க. எங்க ஆத்து மீன் நக்கினா புண்ணு வராது. என் குட்டி நண்பனின் வைத்திய அறிவுரையைச் செவிமடுத்து ஆத்தங்கரைக்குப் போனேன்.

    அங்கிருந்த இருவர் பேசிக்கொள்கிறார்கள். நம்ம வேலாயுதம் மகன் பேச்சக் கேக்க நீ ஏன் வரல. என்ன அருமையாப் பேசினாந்தெரியுமா. கூட்டத்துல ஒரே விசில், கைதட்டல் தான். மைக்க எடுத்தா வார்த்த அருவியா கொட்டுதே. நல்ல பய. பெரிய ஆளா வருவான். பேசிக்கொண்டே இருவரும் சென்றதால் முழுவதும் கேக்க முடியவில்லை.

    என்ன அண்ணே. கீழ விழுந்திட்டீங்க போல. கொஞ்சநேரம் இந்த மண்ணுல கிட்டிப்புல் விளையாண்டுட்டுப் போலாமா. என் குட்டி நண்பர்கள் குழு என்னை அழைக்கிறது.

    ஆமா. இந்த ஊர்ல வேலாயுதம் மகன்னு சொல்றாங்களே அவர் அரசியல் தலைவரோ?

    அட அத விடுங்கண்ணே. அந்தண்ணன் பேச்சப் பேசாதீங்க அவர வெத்து டப்பானு எங்கப்பா சொல்லுவாங்க. இப்ப வெளையாட வாங்கண்ணே நேரமாகுது.

    அவர்கள் கையைப் பிடித்து இழுத்தும் எனக்கு வேலாயுதம் மகனைப் பற்றியே நினைப்பு. வீட்டுக்குப் போனவுடன் முதல் வேலயா அத்தைகிட்ட கேட்டேன்.

    அட அவனா நாலுந்தெரிஞ்சவங்க முன்ன பொத்திக்கிட்டு நிப்பான். வெவரந்தெரியாத அப்பாவிங்களாப் பாத்து கூட்டங்கூட்டி எல்லாந்தெரிஞ்சாமாதிரி வீண் பேச்சு பேசுவான்.

    கேட்டுக்கொண்டே உள்ளே வந்த மாமா. ‘இல்லுள்வில்லேற்றி இடைக்கலத்து எய்து விடல்‘.னு பழமொழி சொல்றார். பகைவரைப் பாத்து பயந்தவன் வீட்டுக்குள்ளயே உக்காந்துட்டு இருக்கற பானை, சட்டி மேலயெல்லாம் அம்பு உடுவானாம். அதுமாதிரிதான் இவன் கதையும்னு.

    பரவாயில்ல இங்க வந்த இரண்டு நாள்ல பல விசயங்களக் கத்துக்கிட்டேன். .

    பாடல் 50

    சுடப்பட்டு உயிருய்ந்த சோழன் மகனும்
    பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் – கடைக்கால்
    செயிரறு செங்கோல் செலீஇயினான் ‘இல்லை
    உயிருடையார் எய்தா வினை.’

    பழமொழி- ‘இல்லை உயிருடையார் எய்தா வினை.‘

    அன்னிக்கு நடந்தத நினைச்சா இப்ப சிரிப்புதான் வருது. ஆனா அது சிரிக்கக் கூடிய விசயமா. அந்த நிகழ்ச்சிதான் என்னோட வாழ்க்கைய முழுமையா மாத்திரிச்சு.

    இல்லாட்டி நான் இப்ப இங்க பேராசிரியா இந்தப் பசங்க முன்ன நின்னு சிரிச்சிட்டிருக்க முடியுமா. அங்க தெரியற புளிய மரத்துல பேயாத்தான் தொங்கிட்டிருப்பேன். மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

    சின்னப் பசங்க மனசுக்குள்ள என்ன இருக்குனு தெரிஞ்சிக்கவே முடியறதில்லனு  சொல்ற ஒவ்வொருத்தரும் தான் அந்தப் பருவத்தக் கடந்து வந்தப்போ ஏற்பட்ட அனுபவங்கள நினைச்சுப் பாக்கணும். பெரும்பாலும் அனுபவ முதிர்ச்சி பெற்றவுடனே ஏதோ தாங்க பொறந்ததுலேந்து ரொம்ப தெளிவா இருந்தா மாதிரியே பாதிபேர் நினைச்சிக்கிறாங்க. எல்லாரும் ஏதோ ஒருவிதத்துல அவமானப்பட்டிருப்போம், ஏமாற்றப் பட்டிருப்போம், வேதனைப் பட்டிருப்போம் இந்த மாதிரி நிறைய அனுபவங்கள்தான் நம்மள சமநிலைப் படுத்துது.

    பொத்தி பொத்தி வச்சு வளர்த்த பசங்க பிற்காலத்துல சமூகத்த எதிர்நோக்கத் தயங்குவாங்க. சின்னச்சின்னத் தடங்கல்கள் கூட அவங்களுக்கு வெறுப்பக் கொடுக்கும். எனக்கு மட்டும் ஏன் இப்படினு நினைச்சு கடைசியில கோழைகளா மூலையில தள்ளப்படுவாங்க.

    பதினெட்டு வயசு வரை இந்தப் பிரச்சினை இருக்கறது சகசம்தான். அதுக்குப்பறமும் நீடிச்சிதுன்னாதான் கஷ்டம். சரி நான் இப்போ என் முன்னால வந்து உட்காரப்போற மாணவனுக்கு அறிவுரை சொல்லணும். வரலாற்றுப் பேராசிரியரான என்னையும் நம்பி அவன் அம்மா அப்பா என்கிட்ட கூட்டிக்கிட்டு வராங்க. நான் என்ன சொல்லணும்னு யோசிக்கறத உட்டுட்டு இப்டி ஏன் குழம்பறேன். இருந்தாலும் என் மனசு என் அனுபவத்தையே அசை போடுது.

    அன்றைக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வந்த தினம். எல்லாரும் சந்தோசமா இருந்தாங்க. எனக்கு மட்டும் மனசுக்குள்ள பெரிய உறுத்தல். எல்லாப் பாடத்துலயும் தொண்ணூறு மதிப்பெண்களுக்குமேல எடுத்த நான் வரலாறு புவியியல் பாடத்துல மட்டும் அறுபத்தைந்து மதிப்பெண் எடுத்திருக்கேன். யாருமே எதுவுமேசொல்லாத போதும் அதெப்படி அவ்வளவு கேவலமாவா நான் எழுதினேன்னு மனசு உறுத்திக்கிட்டே இருந்துச்சு. நான் நல்லாத்தான் எழுதியிருந்தேன். மதிப்பெண் தான் சரியா வரலனு சொன்னா யாராவது நம்பப் போறாங்களா என்ன. பேசாம வயல் பக்கம் போயி கிணத்துல உழுந்துடலாம் அப்பறம் யாரையும் பாக்க வேண்டி வராதுபாருனு நினைச்ச மனதுக்குக் கட்டுப்பட்டு நடக்க ஆரம்பிச்சேன். வயக்காட்டுக்குள்ள இருக்கற மொட்டக்கிணறுக்குள்ள  குதிச்சிரணும். இருட்ட ஆரம்பிக்கும்போது போயிடணும். மனசுக்குள்ள தீர்மானித்துக்கொண்டே அந்திப்பொழுதில் நடக்க ஆரம்பிச்சவுடனே என் நண்பன் மாசிலாமணியும் சேர்ந்துகொண்டான்.

    டேய் இந்நேரத்துக்கு எங்கடா போற. எனக்கும் போரடிக்குது. நானும் வரேன். தனியாப் போகாதடா நாய் இருக்கும். அவன் தொடர்ந்து பேசிக்கொண்டே வர பொறுக்க முடியாம அவனை விரட்டுவதற்காக உண்மையச் சொல்லவேண்டியதாப்போச்சு..

    அவ்வளவுதான்.  டேய் லூசு.  இந்த மார்க்குக்கெல்லாம் கெணத்துல குதிப்பாங்களாடா. அப்பறம் பேயாத்தான் அலையுவ. பேசாம எங்கூட வா. நாம நேரா சோஷியல் டீச்சர் வீட்டுக்குப் போய் மார்க்கச் சொல்லலாம். அவர் திட்டினா நீ நேரா கிணத்துக்குப்போயிடு. நான் ஒண்ணும் சொல்லமாட்டேன். சொல்லிவிட்டு அவன் என் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றான்.

    ஏதோ மனசுக்குச் சரியெனப் படவே ரெண்டு பேரும் ஆசிரியர் வீட்டுக்குப் போனோம்.

    அவரிடம் மார்க் சொல்லுவதற்கு முன்பே முந்திரிக்கொட்டை மாதிரி என் நண்பன் உளறிவிட்டான். அவர் பதட்டத்தை வெளிக்காட்டாமல் அறிவுரையை ஆரம்பித்தார்.

    தம்பி இந்த மதிப்பெண் எல்லாம் நம்ம வாழ்க்கையை அளக்காது. இது இல்லன்னா அடுத்த தடவ முயற்சி செய்யலாம். ஆனா அதுக்கு நாம உயிரோட இருக்கணும். அப்டி இருந்தாத்தான் நினைச்சதச் சாதிக்க முடியும். ‘இல்லை உயிருடையார் எய்தா வினை.’னு பழமொழியே இருக்குல்ல. கரிகாற்பெருவளத்தானப் பத்தி படிச்சிருப்பீங்க. அவர உதாரணமா வச்சிக்கிட்டு உங்கள வாழ்க்கையில உயர்த்திக்குங்க. இன்னும் பல விசயங்கள படிச்சு தெரிஞ்சுக்கிங்க. இப்ப மனசப் போட்டுக் குழப்பிக்காம சந்தோசமா வீட்டுக்குப் போங்க. என அனுப்பி வைத்தார்.

    அப்புறம் மனதில் பதிந்த அந்த வடுதான் என்னை வரலாற்றுப் பேராசிரியர் ஆக்கி விட்டிருக்கு போல. சரிதான். இதையே வரப்போகும் பையனுக்குச் சொல்லிவிடலாம் தீர்மானித்துக்கொண்டேன்.

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 12

    பரிமேலழகர் உரைத்திறன் – 12

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                  
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    விரும்பிக் கூறிய ‘வேண்டாதவை’

    முன்னுரை

    நூல்களுக்குப் புற அழகு ஓவியர்களாலும் அச்சகத்தாலும் வழங்கப்படும் வண்ணங்களால் அமையலாம். அக அழகு அவ்வாறு கொடுத்து அமையாது. முன்னது கண்ணுக்குரியது. அதனால் அது சாத்தியம். பின்னது புலன்களுக்கு உரியது. அதனால் அது அவர்களால் இயலாது. படைப்பாளனின் உள்ளம் மொழிவழி வெளிப்படும் அழகுக் கோலமே நூலின் அக அழகைத் தீரமானிக்கும். சிலப்பதிகாரம், கம்பராமாயணம், திருக்குறள் முதலிய நூல்கள் புறத்தோற்றத்தில் பெரியன. சிவஞான போதமும் ஆத்திசூடியும் அளவால் மிகச் சிறியன. இவ்விரண்டு தன்மையிலமைந்த நூல்களின் பெருமையை உள்ளடக்கமே தீர்மானிக்கிறது. எத்தனைப் பக்கம் என்பதல்ல அவற்றுக்குப் பெருமை சேர்ப்பது. எவ்வளவு ஆழமான கருத்துக்கள் எப்படிச் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதுதான் பெருமை சேர்க்கும். கருத்தாழமும் அக்கருத்துக்களை வெளிப்படுத்தும் உத்திகளின் பேராற்றலுமே நூல்களின் வெற்றிக்கு மூலதனம். காதல், வீரம் என்னும் இரண்டே பாடுபொருள்களைப் பற்றி இத்தனையாயிரம் பாடல்களைச் சங்கச் சான்றோர்கள் சலிப்படையாமல் பாடியிருப்பதற்கும் நாமும் சலிப்படையாமல் தலைமுறைகள் பல தாண்டியும் படித்து வருகிறோம் என்பதற்கும் சொல்லும் முறைதான் காரணம். அவ்வாறு சொல்லும்போது இருக்க வேண்டிய அழகு, நீக்க வேண்டிய குற்றம் இவைகளைப் பற்றியெல்லாம் தமிழிலக்கணங்கள் விரிவாக ஆராய்கின்றன. குற்றமேதும் இல்லாத நூலை எழுதுபவனைத்தான் ‘வினையின் நீங்கி விளங்கிய அறிவன்’ என்பர். அந்தக் குற்றங்களுள் ‘வெற்றெனத் தொடுத்தல்’ என்பதும் ஒன்று. வேண்டாது கூறலும் என்றாலும் பொருந்தும். எத்தகைய பயனும் இல்லாமல் தேவையின்றிச் சில சொற்கள் சில நூல்களில் பயின்று வருவது கண்கூடு. சான்றோர் செய்த நூல்களிலும் இத்தகைய குற்றங்கள் இருக்குமா? இருந்தால் அதனைக் கண்டிக்க இயலுமா? இல்லையாயின் அதற்கான காரணமாகிய அமைதியைக் கண்டறிய  இயலுமா? என்னும் ஐயங்கள் எழுவது இயற்கை. திருக்குறளில் ஒரு சில குறட்பாக்களில் பயின்று வந்துள்ள வேண்டாத சொற்களைப் பற்றி ஆய்கின்ற இக்கட்டுரையில் அதற்கான விளக்கம் ஓரளவு கிடைக்கலாம்.

    ‘வேண்டாத சொற்கள்’ ஒரு விளக்கம்

    “ஐயா நீங்க உங்க வாயால சொல்லாதீங்க!” இத்தகைய வழக்காற்றினைப்  பலரும் செவிமடுத்திருக்கக்கூடும். எல்லாவகையிலும் உயர்ந்தார் ஒருவர் மனம்புழுங்கிச் சில சொல் சொல்லுகிறபோது ‘அவை பலித்துவிடுமோ?’ என்னும் அச்சமும் ‘பலிக்கும்’ என்னும் நம்பிக்கையும் சமுதாயத்தில் நிலவும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று. சமுதாயம் அச்சொற்களை ஒலியின் காரியமாகக் கருதாமல் சத்தியத்தின் வெளிப்பாடாகக் கருதுவதே இத்தகைய மனநிலைக்குக் காரணம். இதனால் என்ன மாற்றம் என்றால், சொல்லுக்குக் கருவியான வாய் பதவியிழப்புக்கு ஆளாகிறது. அதிலிருந்து வருகிற சொற்களுக்கான காப்புரிமை சொல்கிறவருடைய பண்பாடு, ஒழுக்கம், சான்றாண்மைக்குச் சென்றுவிடுகிறது. அந்தத் தொடரில் அழுத்தம் ‘வாய்க்கு’ அன்று. ‘உங்க’ என்னும் சொல்லுக்கு என்பதை நோக்குதல் வேண்டும். அவர் வாயினது சிறப்புக்கு அச்சொற்கள் பொருந்தாமையை நோக்கி மக்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சி வெளிப்பாடு இது. நாம் எதனைக் கவனிப்பதில்லை? ‘வாயால் சொல்லாதீர்கள்’ என்பதை!. வாயைத்தவிர வேறு எக்கருவியால் சொல்ல இயலும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். பேசுவதற்கான கருவி வாய்!. இருந்தாலும் கேட்டு அமைதியடைகிறோம்!.

    இதனை உடன்பாடாகவும் கேட்டிருக்கக்கூடும்!. “நீங்க உங்க வாயால ஒரு சொல் சொல்லுங்கள் அது போதும் எனக்கு” எதிர்மறையை மறுதலித்த நாம் உடன்பாட்டுக்காக ஏங்குகிறோம். இருநிலையிலும் சொல்வார் பெருமையே சொற்களின் காரணமாக உணரப்படும். அல்லவர் வசவினைப் பெறுதலின் நல்லவர் வாழ்த்தினைப் பெறுவது சிறப்பு. ‘அறம் பெருக அல்லவை தேய்வது’ இயல்பல்லவா?  இவ்விரண்டிடங்களிலும் ‘வாய்’ என்பது சொல்லுக்கான கருவி என்னும் நிலையிலிருந்து மாறிச் சொல்வார்தம் பண்புக்கான குறியீடாகிவிடுவதைக் காணலாம். ஒருவன் பண்புகளால் உயர்ந்திருப்பான் எனின் உலக வழக்கு இப்படியும் அமையும் “அவன் வாயில் விழாதே!’ ‘வாயில் விழாதே’ என்றால் ‘வாயில் சென்று விழுதல்’ என்று பொருளன்று. அவரின் எதிர்மறை வசவுக்கு நீ ஆளாகிவிடாதே!’ என்று பொருள்.

    மொழி மக்களுக்கானது. மொழியியல் அறிஞர்களுக்கானதன்று. அது பாமர மக்களின் பண்பாட்டுக் கூறுகளில் தலையாயது. ஓரினத்தின் உயிர் அடையாளம் மொழியே!. அவ்வினத்தின் வழக்கு நிலைகள் பெரும்பாலும் அம்மொழியின் இலக்கிய இலக்கணங்களில் தாக்கத்தை உண்டாக்கும் என்பது தொல்காப்பிய நெறி. அந்த நெறியில் நூல் செய்த திருவள்ளுவர் வேண்டாதன சிலவற்றை விரும்பிக் கூறிய நுட்பத்தை இனி ஆராயலாம்.

    வள்ளுவர் கண்ட வாய்ச்சொல்

    திருவள்ளுவர் இரண்டு வகையான மனிதர்களின் வாய்ச்சொற்களைப் பற்றியும் பேசியிருக்கிறார். உடன்பாட்டு வகையால் அதாவது உயர்பண்புகளின் தொகுப்பாக விளங்கிப் புகழ்பெற்ற சான்றோர்களின் வாய்ச்சொற்களின் சிறப்புக்களைப் பதிவிடுவதைக் காணலாம். எழுத்துக்களின் காரியமாக வெளிப்படுவதால் தமிழில் எழுத்துப் பிறக்கும் இடங்களிலிருந்து சொற்கள் பிறக்கும் இடங்கள் மாறுபடுவதில்லை. அதே நேரத்தில் புற உறுப்புக்களின் தன்மையைச் சொற்களுக்கு அவர் ஏற்றுவதில்லை. விளக்கமாகச் சொன்னால் சொற்களின் இறுதிவாயில் உதடுகள். அவ்வுதடுகளின் இனிமையைச் சொற்களுக்கு ஏற்றியுரைக்கும் இயல்பு திருவள்ளுவருக்கு இல்லை.

    இன்சொல்லுக்கு வரைவிலக்கணம் தந்த வள்ளுவர் உயிரிரக்கம், மனத்துக்கண் மாசின்மை, வீடுபேற்றுக்கு நிமித்த காரணமாகிய செம்பொருள் கண்டார் சொல்வது என்னும் மூன்று பண்புகளின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்பதை,

    “இன்சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம்
    செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்” (91)

    என்னும் குறட்பாவில் தெளிவுபடுத்தியிருக்கிறார். தற்காலத்தில் வழங்கும் ‘பழகுதற்கு இனியவர்’ என்னும் ‘உதட்டுறவு’ உதிர்க்கும் பாசாங்கு மொழி திருவள்ளுவர் அறியாதது. இந்தக் குறட்பாவுக்குப் பொழிப்புரை தந்த  பரிமேலழகர்,

    “அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் சொல் இன்சொல்லாவன“

    என வரையறைக்குக் கூடுதல் தெளிவு தருகிறார். அன்பு, வஞ்சனையற்ற தன்மை, அறமுணர்தல் ஆகிய முப்பெரும் பண்புகளுக்கும் சொற்களின் மூலாதாரமான தொண்டை, நா முதலிய உறுப்புக்களுக்கும் நிலவும் தொடர்பின்மையைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். இத்தகைய பெருமக்கள் அடிமனத்திலிருந்து வரும் உண்மையான சொற்கள் வாய்வழியாக வெளிப்படுகிறபோது அந்த வாயும் அகப்பண்புகளால் சிறப்படைகிறது என்பதாம். அதனால்தான்,

    “‘வாய்’ என வேண்டாது கூறினார் தீய சொல் பயிலா என்பது அறிவித்தற்கு”

    என்று பரிமேலழகர் நுண்ணியம் காண்கிறார். ‘சொல்’ என்ற அளவிலேயே ‘வாய்’ என்பது பெறப்படுதலின் ‘வாய்ச்சொல்’ என்னும் தொடரில் ‘வாய் என்னும் முன்னொட்டு வேண்டாதது. ஆனால் வேண்டாத அச்சொல்லைப் பெருமக்களின் சிறப்புடைய வாயென்பதைப் பிரித்துக் காட்டலின் திருவள்ளுவர் விரும்பியே எழுதினாராம்! அந்த இடத்தில் ‘வாய்’ என்பது ஒலித்தொகுப்பின் வாயில் அல்லவாம்! பண்புக்கூறுகளின் வாயிலாம். இது பரிமேலழகர் பார்வை!.

    வழுக்கத் தெரியாத வாய்

    ‘நாக்கு தவறிச் சொல்லிவிட்டேன்’, ‘வார்த்தை பிசகிவிட்டது’, ‘அவசரத்தில் சொல்லிவிட்டேன்’, ‘பதற்றத்தில் ‘சொல்லிவிட்டேன்’, ‘கவனிக்காமலேயே சொல்லிவிட்டேன்’ இதுபோன்ற தொடர்களை நம்மில் பலரும் கேட்டிருக்கக் கூடும். இந்தத் தொடர்களை ஊன்றிக் கவனித்தால் நாக்கின் பிறழ்வாகவே சொற்பிழைகள் தோன்றுகின்றன என்னுமாறு அமைந்திருப்பதைக் காணலாம். அடிமனத்தில் உள்ளதுதான் வாய்வழியாக வெளிப்படுகிறது என்பது உளவியல் உண்மை. இந்த உண்மையை உணர்ந்தவர் திருவள்ளுவர்.

    “ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
    வழுக்கியும் வாயாற் சொலல்” (139)

    என்பது ஒரு குறள். இதற்கு,

    “மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள் ஒழுக்கம் உடையவர்க்கு முடியா”

    எனப் பொழிப்புரை தருகிறார் பரிமேலழகர். இந்தப் பொழிப்பிலேயே இந்தப் பத்தியின் தொடக்கக் கருத்துக்களின் சாரத்தைக் காணமுடியும். ‘வழுக்குதல்’ என்பது புறத்தொழில். ‘தரை வழுக்கும்’, ‘வழுக்கு நிலம்’, ‘பாறை வழுக்கியது’, ‘வழுக்கி விழுந்தான்’ என்பன நோக்குக. ஆனால் பரிமேலழகர் வழுக்கியும் என்னும் சொல்லுக்கு ‘மறந்தும்’ என உரை காண்கிறார். ‘மறத்தல்’ நினைவு தடுமாறுதல். நல்ல பண்போ தீய பண்போ அது பழக்கமான, வழக்கமான ஒன்றாகிவிடுமானால் அதனை அவ்வளவு எளிதில் மாற்ற இயலாது. சொற்கள் வாயினது செயலாக மட்டும் இருக்குமானால் இந்தத் தவறு நடக்காது. உரையும் பொருந்தாது. அது மனத்தின் வெளிப்பாடாக, நடத்தையின் வெளிப்பாடாக,  ஒழுக்கத்தின் வெளிப்பாடாக அமைந்தால்தான் இந்த உரை பொருந்தும். மற்றவர்களுக்கெல்லாம் சொற்களுக்கு வாயும் நாக்கும் கருவிகள். ஆனால் சான்றோர்களுக்கு அவை தடங்கள். மூலம் உள்ளம். உள்ளம் தூய்மையாயின் வாக்கு அதனை வெளிப்படுத்தும். ‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே வாய்மையுண்டாகும்’ என்னும் மகாகவியின் தொடர் நோக்குக.  விளக்கவுரையில் பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்,

    “சொலல்’ எனவே அமைந்திருக்க ‘வாயால் என வேண்டாது கூறினார் ‘நல்ல சொற்கள் பயின்றது எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு”

    மிகத்தெளிவாக அமைந்திருக்கும் இந்த விளக்கவுரையில் வாய் என்பது எப்படி வேண்டாத சொல் என்பதையும் விளக்கிவிடுகிறார் பரிமேலழகர். விளக்கி ‘நல்ல சொற்கள் பயின்ற நா, இத்தகைய சொற்களை மறந்தும் கூறாது’ என்னும் தனது கருத்தினைக் குறிப்பாகப் புலப்படுத்தவே ‘வாய்ச்சொல்’ என்று கூறினாராம்! சொல்லுக்குக் கருவியாக வாய் இருப்பினும் அவ்வாயை ஒழுக்கத்தின் தலைவாசலாகக் கருதுகிறார் என்பதாம்!

    இல்லறத்தான் வெல்லுமிடம் இதுதான்!

    ‘துறவறம்’ உயர்ந்தது என்பதனால் ‘இல்லறம்’ தாழ்ந்தது என்பதன்று.  இல்லறத்தின் நோக்கம் துறவறம் என்பதாலும் வாழ்வின் உச்சநிலை ‘வீடுபேறு’ என்பதாலும் இவற்றுக்கெல்லாம் அடிப்படையாகிய இல்லறம் தனக்குரிய மதிப்பை என்றும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. திருவள்ளுவர் சில அறங்களைத் துறவறத்திற்கே ஒதுக்கியிருக்கிறார். உலகியல் நோக்கி அத்தகைய அரிய அறங்களை இல்லறத்தான் கடைப்பிடிக்க இயலாது என்பதே அதன் காரணமாகும். உலகியலில் கடுஞ்சொற்களைத் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை இல்லறத்தானுக்கு ஏற்படும். பொய், குறளை, கடுஞ்சொல், பயனிலசொல் என்னும் சொற்குற்றங்கள் நான்கனுள் திருவள்ளுவர் பொய்யை இல்லறத்தானுக்கு விதிவிலக்காக்கி அதனைத் துறவறவியலில் ‘வாய்மை’ என்னும் அதிகாரத்தில் விளக்கிக் காட்டுவார். சொற்குற்றங்களைப் பொறுக்கும் பேராற்றல் துறவியைவிட இல்லறத்தானுக்கே உண்டு என்பது இதனால் பெறப்படும். இதனைத்,

    ‘துறந்தாரின தூய்மை உடையர் இறந்தார்வாய்
    இன்னாச்சொல் நோற்கிற்பவர் (159)

    என்னும் குறுட்பாவில் பதிவு செய்திருக்கிறார் திருவள்ளுவர். “இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற்பவர் துறந்தாரின் தூய்மை உடையார்’ என்னும் இந்தக் குறட்பாவிற்கு,

    “நெறியைக் கடந்தார்வாய் இன்னாச் சொல் பொறுப்பவர், இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார்போலத் தூய்மையுடையார்.”

    எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர், ‘நெறிகடந்தவர் சொல்’ என்னாது ‘நெறிகடந்தவர் வாய்ச்சொல்’ என்னும் குறட்பா தொடர் பற்றி விளக்கவுரையில் கூறுகிறார். துறவிகள் ‘துறப்பினமாதலின்’ அங்கே தர வேறுபாடுகள் இல்லை. அதனால் இத்தகைய நெருடல் இல்லை. இருக்க வாய்ப்பில்லை. உலகியலில் பலதரப்பட்ட மக்களோடு வாழவேண்டிய கடப்பாடு இல்லறத்தானுக்கு உண்டாதலின் ‘நெறிகடந்தவர்தம் வாய்ச்சொல்’ என விதந்தோதுகிறார். நெறி கடப்பதற்கு இங்கே வாய்ப்புண்டு ஆதலின்.

    “வாய் என வேண்டாது கூறினார், தீய சொற்கள் பயின்றது எனத் தாம் வேண்டியதன் இழிபு முடித்தற்கு”

    ‘நெறிகடந்தவனுடைய வாய்ச்சொல்’ என்பதால் நெறிகடந்ததால் பண்பற்ற சொற்கள் என்பது பெறப்படும். நல்ல சொல்லுக்கும் தீய சொல்லுக்கும் வாயே கருவியானாலும், இங்கே நெறிகடந்தவனுடைய இழுக்கம் சொல்வடிவில் வாய்வழியாக வருகிறது என்பதாம். ஒழுக்கமுடையார் வாய்ச்சொல், செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் என்னும் இவற்றுக்கும் இறந்தார் வாய்ச்சொல்லிற்கும் உள்ள வேறுபாட்டினை இதனால் புரிந்து கொள்ள இயலும். முன்னவரின் உயர்வு அவர்தம் சொல்லால் வெளிப்படுவதுபோலப் பின்னவரின் இழிவும் அவருடைய சொல்லால் வெளிப்படுகிறது என்பதாம். மூன்றும் வாய்ச்சொற்களே! நடத்தை வேறுபாடு நாவில்!

    உள்ளமா? நெஞ்சமா? மனமா?

    மூளையைச்  சிந்தனைக்கருவியாகக் கொண்டால் உள்ளம், நெஞ்சம், மனம் ஆகியவற்றை உணர்வுக்கருவிகளாகக் கொள்ளலாம். திருவள்ளுவர் இவற்றோடு ‘அகம்’ என்பதையும் இணைத்துக் கொள்கிறார். ‘அகம் நக’ என்பது குறட்பாத் தொடர். ‘நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்’, ‘மனத்தொடு வாய்மை மொழியின்’, ‘உள்ளத்தால் பொய்யாதொழுகின்’ என்பனவெல்லாம் திருக்குறளில் காணக்கிடக்கின்ற சொற்களே! எனினும் இவற்றுள் நுட்பமான வேறுபாடு நிலவுகிறதோ என்னும் ஐயம் உண்டு. அது பற்றிய ஆராய்ச்சி தனி. இம்மூன்று சொற்களிலும் வினைமுதலாகக் கொள்ளப்படுவது உள்ளமே!, உள்ளுவதால் உள்ளம்!. உள்ளம் உள்ளும்! நெஞ்சத்திற்கும் மனத்திற்கும் அத்தகைய வினைப்பயன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. நெஞ்சத்தின் வினை, மனத்தின் வினை ஆகியவற்றை அறியக்கூடவில்லை. இந்நோக்கு திருக்குறளை மட்டும்  அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. ‘வாய்ச்சொல்’ என்னும் தொடரில் ‘வாய்’ என்பது எவ்வாறு வேண்டாத சொல்லாக நின்றதோ அவ்வாறே ‘உள்ளத்தால்’ என்ற சொல்லும் வேண்டாத சொல்லாக நிற்பதைத் தொடர்ந்து காணலாம்.

    நினைவும் செயலும் ஒன்றே

    திருக்குறள் அடையாளப்படுத்தும் பத்து உடைமைகளில் செம்பாகம் அறத்துப்பாலுக்குரியது. அவற்றுள் ஒழுக்கமுடைமை, அன்புடைமை என்னும் இரண்டு உடைமைகளைச் சொற்களுக்கான மூலாதாரமாகக் கருதுகிறார் திருவள்ளுவர். ‘ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்’லும் ‘ஈரம் அளைஇ செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்லும்’ ஆராயப்பட்டன. அருளை உடைமையாகக் கொண்ட அருளாளர்கள் தீயன எண்ணமாட்டார், தீயன சொல்லமாட்டார், தீயன செய்யமாட்டார் என்பது நியதி.

    “உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக்
    கள்ளத்தால் கள்வேம் எனல்” (282)

    என்னும் குறட்பா தீயன எண்ணல் பற்றிக் கூறுகிறது. இல்லறச் சூழல் காரணமாக மனத்தளவில் (ஒழுக்க நெறிகளில்) வழுவும் நேர்வுகள் உண்டு. துறவறத்தில் அது முற்றிலும் கடியப்படுகிறது. எனவே அருளாளர்கள் தீயனவற்றை உள்ளத்தாலும் நினைக்கமாட்டார்கள் என்பதாம். இந்தக் குறட்பாவிற்குக்,

    “குற்றங்களைத் தம் நெஞ்சால் கருதுதலும் பாவம்! ஆதலால் பிறனொருவன் பொருளை அவன் அறியா  வகையால் வஞ்சித்துக் கொள்வோம் என்று கருதற்க”

    என்னும் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    ‘உள்ளத்தால்’ என வேண்டாது கூறினார், அவர் உள்ளம் ஏனையோர் உள்ளம் போலாது சிறப்புடைத்து என்பது கருதியது முடித்தற்கு.”

    என விளக்கவுரையில் உள்ளுதலாகிய வினைக்கேயுரிய உள்ளத்தை ‘உள்ளத்தால் உள்ளலும்’ எனக் கூறியது பற்றிய தனது கருத்தினைப் பதிவு செய்கிறார். மற்றையோர் உள்ளம் ஊழ் காரணமாகத் தீயன எண்ணிவிடுமாம். ஆனால் துறந்தாராகிய அருளாளர் வழுக்கியும் தீயன எண்ணமாட்டாராம். அந்தக் கருத்தினைப் புலப்படுத்தவே (அந்தச் சிறப்புடைய) ‘உள்ளத்தால் உள்ளலும் தீது’ எனச் சொல்லுகிறாராம்!

    அருளிருக்கும் இடத்தில் சினத்துக்கு இடமில்லை!

    துறவிகளுக்கு எதிரி வெகுளி. செல்லிடத்தும் தீது. செல்லாவிடத்தும் அது தீது. அது அவர்தம் இனத்தைச் சுடும். தீய பிறக்கும். இத்தகைய எதிர்மறைச் செயல்களை அது செய்யுமென்றால் ‘வெகுளாமை’ இவற்றுக்கு மறுதலையான செயல்களை செய்ய வேண்டுமென்று திருவள்ளுவர் சொல்ல வேண்டுமல்லவா?  சொல்லுகிறார்.

    “உள்ளிய எல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
    உள்ளான் வெகுளி எனின்” (309)

    வெகுளியை ஒரு பொருளாகக் கொள்ளாத துறவி தான் எண்ணியதையெல்லாம் ஒரே நேரத்தில் உடனே பெறுவான் என்பது குறள். இந்தக் குறட்பாவின் கருத்தினைத்,

    “தவம் செய்யும் அவன் தன் மனத்தால் வெகுளியை ஒரு காலும் நினையான் ஆயின் தான் கருதிய பேறெல்லாம் ஒருங்கே பெறும்”.

    என்னும் பொழிப்புரையால் பெறலாம். விளக்கவுரையில் உள்ளுவதே உள்ளத்தின் தொழிலாய் இருக்கவும் உள்ளத்தால் உள்ளான் எனின் எனத் திருவள்ளுவர் வேண்டாது கூறியதற்குக் காரணம் கூறுகிறார்.

    “உள்ளத்தால் என வேண்டாது கூறிய அதனால் அருளுடை உள்ளம் என்பது முடிந்தது.”

    துறவியின் உள்ளம் தவ உள்ளம். தவத்தைச் செய்து முதிர்ச்சியடைந்த உள்ளம். அந்த உள்ளத்தில் வெகுளி தோன்றாது. வெகுளி தோன்றாத, அருளுடைய அந்த உள்ளத்தைப் பிரித்துக்காட்டுகிறாராம் திருவள்ளுவர்.

    பிரிக்க முடியாததும் கலந்தே நிற்பதும்!

    இணைந்திருந்தாலும் நகமும் சதையும் பிரிக்க முடியும். மலரும் மணமும்  கலந்தே நிற்பதால் பிரிக்க இயலாதது. ‘வாசமில்லா மலரிது’ என்பது திரையிசைப்பாடல் தொடர். ‘மலரும் மணமும் போல’ என்பது உலகியல். கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம். ‘பண்’ பாட்டோடு இணைய வேண்டும். ‘பண்ணோடு பிறந்தது இராகம், குலப்பெண்ணோடு பிறந்தது நாணம்’ என்பது வழக்கு. இந்தப் பின்புலத்தில்தான் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் பெண்ணியப் பண்புகளை நோக்க வேண்டியதிருக்கிறது.

    “பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
    பெண்ணே பெருமை யுடைத்து” 907

    என்னும் குறளுக்கு,

    “(நாண் இன்றித்) (தன்) இல்லாளது ஏவல் தொழிலைச் செய்து நிற்கின்றவனது ஆண் தன்மையின் நாணினை உடைய (அவள்) பெண்தன்மையே மேம்பாடு உடைத்து”

    எனப் பொழிப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். ‘நாணம்’ என்பது பெண்ணுக்குரியது ‘நாண்’ என்பது ஆணுக்குரியது. ‘நாணுடைமை’ என்னும் அதிகாரம் சான்றோர்களுக்குரியது. இது தமக்கு வரும் பழியையும் பிறர்க்கு வரும் பழியையும் ஒப்ப மதிப்பது. உண்மையில் இந்த ‘நாண்’ ஆணுக்குப் பெருமை தரும். அந்த நாணம் பெண்ணுக்குப் பெருமை தரும். அக்காலச் சூழலில் புறத்தொழுக்கம் அறியாத பெண் பழிபாவங்களுக்கு அஞ்சும் நிலை இருந்திருக்க வாய்ப்பில்லை.

    கணவன்வழி மனைவியொழுகுதலே இல்லறம். மனைவி சொல் கேட்டுக் கணவன் ஒழுகுதல் இல்லற நெறியன்று. எனின் இல்லறத்தைக் கொண்டு செலுத்தும் ஆற்றலும் பண்பும் ஆணிடம் நிறைந்திருக்க வேண்டும் என்பது பொருள். இது மாறி நிகழுமாயின் இல்லறம் தடம்புரளும். நாணமில்லா ஆண்மையினும் நாணமுடைய பெண்மை போற்றுதற்குரியதாக ஆகிவிடும். இதனைத்தான் மேற்கண்ட குறட்பாவில் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். அவ்வாறு வலியுறுத்தும்போது, ‘நாணுடைப் பெண்’ எனச் சுட்டுகிறார். இதனால் ‘நாணமில்லாத பெண் இருப்பாளோ?’ என்னும் ஐயம் வருதல் இயல்பு. அதனைக் களைகிறார் பரிமேலழகர். எப்படி?

    “நாணுடைப் பெண் என வேண்டாது கூறியது அவள் ஏவல் செய்வானது நாணின்மை முடித்தற்காதலின் அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது”.

    நாணமில்லாத ஆண்தான் பெண்ணேவல் செய்வான். அதனைக் குறிக்க எண்ணுகிறார். வள்ளுவர் ‘யாப்பு காரணமாக ‘ஆண்மையின்’ என வாளா கூறிப் பெண்ணுக்கு உரிய நாணத்தை அவளுக்கு அடையாக்குகிறார். இருப்பவளுக்குரிய பண்பை வேண்டாது எடுத்துமொழியும் வள்ளுவர் இருக்கக்கூடாத பண்பைப் பெற்றிருக்கின்ற நாணமில்லாத ஆணை அடையாளப்படுத்துகிறாராம். ஆணின் நாணமின்மையைச் சுட்டுதற்குப் பெண்ணின் நாணம் பயன்பட்டிருக்கிறது என்பதாம்!

    நிறைவுரை

    ‘நடந்தான்’ என்றாலே ‘கால்’ என வேண்டுவதில்லை. ‘கேட்டான்’ என்றாலே போதும்! செவி எதற்கு? ‘நோக்கினான்’ போதாதா? ‘கண்களால்’ என்பதைச் சொல்ல வேண்டுமா? ‘கொடுத்தான்’ என்றாலே ‘கைகள்’ நினைவுக்கு வராதா?  ஆனால் திருவள்ளுவர் கூறுகிறார். ‘சொல்லுகிற வாய்’, ‘உள்ளுகிற உள்ளம்’, ‘நாணுடைப் பெண்’ என்றெல்லாம் வேண்டாது கூறினாலும் அவற்றை விரும்பித்தான் கூறியிருக்கிறார். எல்லா வாயும் ஒரே வாய் அல்ல. எல்லா உள்ளமும் ஒரே உள்ளம் அல்ல. இவற்றைப் பிரித்துணர்த்த விரும்பிய திருவள்ளுவரின் உட்கிடக்கை அறிந்து உரையெழுதியதுதான் பரிமேலழகர் உரைத்திறன்!

    (தொடரும்…)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 36

    பழகத் தெரிய வேணும் – 36

    நிர்மலா ராகவன்

    அச்சம் என்பது மடமைதான்

    ‘உனக்கு எவ்வளவு தைரியம்!’ என்று சிலரைப் பாராட்டுகிறோம். ‘இவர்களுக்கெல்லாம் பயம் என்பதே கிடையாதா!’ என்ற பிரமிப்பு எழுகிறது.

    ஏன் இல்லாமல்?

    பழக்கமில்லாத ஒரு காரியத்தில் இறங்க நேரிட்டால் எவருக்கும் அச்சம் எழத்தான் செய்யும். அதற்காக எதுவும் செய்யத் துணிவில்லாமல் சும்மா இருக்கமாட்டார்கள் இப்படிப்பட்டவர்கள்.

    பயம் என்பதும் ஓர் உணர்வுதான். எந்த மனிதருக்கும் இயற்கையாகவே அமைந்திருப்பது.

    “அச்சமும் தைரியமும் சகோதரர்கள்” (பழமொழி).

    எதற்கெல்லாம் பயப்படக்கூடாது என்று புரிந்துவிட்டால், அநாவசியமாக எல்லாவற்றிற்கும் பயப்பட வேண்டியதில்லை.

    அச்சத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும் தைரியமும், அதன் விளைவாக தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. பயந்துகொண்டே இருந்தால், மகிழ்ச்சி ஏது! அனுதினமும் ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.

    எதற்குப் பயப்படலாம்?

    பயமே கூடாது என்றும் சொல்லிவிட முடியாது. `தீய பழக்கங்களில் ஈடுபட பயம்’ என்பது சரி.

    சட்டத்திற்கு விரோதமான காரியங்களைச் செய்யத் துணிவதும் முட்டாள்தனம்.

    உலகமே ஒரு சின்ன நோய்க்கிருமியால் ஆடிப்போயிருக்கிற தற்போதைய நிலையில், `வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதாவது!’ என்று பலர் கோலாலம்பூரில் உள்ள ஒரு குளத்தில் மீன்பிடிக்கப் போயிருக்கிறார்கள். பதினைந்து கார்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனவாம். ஆக, `உணவுப்பொருட்கள் வாங்க காசில்லை’ என்ற ரகமில்லை.

    இவர்களது இந்த `துணிச்சலான’ செய்கையால் பலருக்கும் நோய் பரவக்கூடும். அதற்கான தண்டனை: தலா 1,000 ரிங்கிட் (20,000 ரூபாய்) அபராதம்.

    ‘என்னமோ தொற்று நோயாம். பரவுகிறதாம். அதற்காக வீட்டிலேயே அடைந்து கிடக்க யாரால் முடியும்!’ என்ற அலுப்புடன் 286 பேர், இரவு விடுதிகளுக்குப் போய் உல்லாசமாக இருக்க முடிவு செய்தார்கள். சுயநலமாக நடந்ததால், தண்டனை.  அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தால், அரசாங்கத்திற்கு லாபம்.

    குழந்தை மாதிரி

    ‘சிறுவர்களுடனேயே பழக நேர்வதால் பெரும்பாலான ஆசிரியைகள் குழந்தைத்தன்மை மாறாது இருக்கிறார்கள்!’ என்று ஒரு தோழி என்னிடம் கூறிச் சிரித்தாள்.

    வயதில் பெரியவர்களைக் கண்டு குழந்தைகள் அஞ்சி, அவர்கள் சொன்னபடி நடக்கலாம்.

    ஆனால், எத்தனை வயதானாலும், உயர் அதிகாரிகளைக் கண்டு பயந்து நடந்தால் என்ன ஆகும்?

    கதை

    எங்கள் பள்ளியில், ஈராண்டுகள் தலைமை ஆசிரியை இருக்கவில்லை. அந்த இடம் மூத்த உதவியாளராக இருந்த நபீசாவின் கையில். அதிகாரத் திமிருடன் எல்லாரையும் ஆட்டிவைத்தாள், உணர்வு ரீதியாக வதைத்தாள்.

    தனக்கு மேலே வேறு ஒருவர் வரப்போகிறார் என்ற செய்தி கேட்டு, பயம் எழுந்தது நபீசாவுக்கு.

    “இப்போது வரவிருக்கும் தலைமை ஆசிரியை புலிமாதிரி!” என்று அச்சுறுத்திவிட்டு, “எனக்கும்தான் உத்தியோக உயர்வு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது,” என்று நம்பத்தகுந்த சில அப்பாவிகளிடம் நைச்சியமாகக் கூறினாள்.

    அவர்களும் பரிதாபப்பட்டு, எல்லா ஆசிரியர்களையும் அழைத்து, “நபீசா இங்கேயே தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருக்கிறோம். ‘எஸ்’ என்று எழுதுங்கள்,” என்றுவிட்டு, ஒரு காகிதத்தைக் கொடுத்தார்கள்.

    எல்லாரும் பயந்து, அதன்படி எழுதிக் கொடுத்தார்கள்.

    ஒருத்தி மட்டும் `நோ’ என்று பெரிதாக எழுதினாள்.

    எரிச்சலுடன், “அவள்தான் நம்மைப் படாதபாடு படுத்துகிறாளே! எதற்காக ஒத்துக்கொண்டீர்கள்?” என்று சிலரைக் கேட்டாள் அவள். (யார் என்று புரிகிறதா?)

    “நாளைக்கே அவள் உயர்பதவி ஏற்று, இங்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான்!” என்ற பதில் கிடைத்தது.

    “ஒரு கரடியை அது இருப்பதைவிடப் பெரிதாகக் காட்டுகிறது அச்சம்,” என்று சரியாகத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    நல்லவேளையாக, நபீசாவின் திட்டம் பலிக்கவில்லை. அவளை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டார்கள்.

    அங்கிருந்த ஆசிரியர்கள் ஆரம்பத்திலேயே, `உன்னைப் பற்றி நிறையக் கேட்டிருக்கிறோம். உன் அதிகாரத்தை எங்களிடம் காட்டலாம் என்று நினைக்காதே,” என்று மிரட்ட, அவள் அடங்கிப் போனாளாம்.

    நம்மை அச்சுறுத்த நினைப்பவர்களின் எண்ணம் பலிக்காவிட்டால் அந்த பயம் அவர்களையே போய்ச் சேர்ந்துவிடும்.

    எங்கள் பள்ளியில் பயத்தால் எல்லாரும் பணிந்துபோனார்கள் – என்னைத் தவிர. அதனால் மேலும் குறுகிப்போனார்கள்.

    சிறப்பான வாழ்க்கை தற்செயலாக அமைவதில்லை. நம் கனவுகளை நனவாக்க நாம் மாறுவதைப் பொறுத்தே அது அமைகிறது. வீண் பயம், கனவுகளைத் தகர்த்துவிடும்.

    கதை

    அரசாங்கத்தின் ஓராண்டுக் கால மேற்பயிற்சி அது – விடுமுறைக் காலங்களுடன்.

    முழுமையாகக் கலந்துகொண்டவர்களுக்கு மாத வருமானத்தைத் தவிர கூடுதலான போனஸ் பணமும் உண்டு, ஆனால் விடுமுறையின்போது அவர்களுக்கு அளிக்கப்படும் வீட்டுப் பாடங்களை முதலிலேயே முடித்துக் கொடுத்துவிட வேண்டும்.

    அதன்படி நடந்து, ‘வெளிநாடு போகப்போகிறேன்,’ என்று எழுதியும் கொடுத்தேன்.

    ‘வெளிநாடு போனவர்களுக்குப் பணம் கிடைக்காது,’ என்று பயிற்சி ஒருங்கிணைப்பாளர் நவாவி முரட்டுத்தனமாக அறிவித்தார்.

    நான் தனிமையில் அவரைச் சந்தித்து, “விதிப்படி, நான் எல்லாம் முறையாகச் செய்திருக்கிறேனே!” என்று விவாதித்தேன்.

    உடலை இறுக்கிக்கொண்டு, “நான் இந்த விதிகளை எழுதவில்லை,” என்றார் நவாவி.

    பயிற்சி முடிவடையும் தறுவாயில், மேலிடத்திலிருந்து ஒருவர் வந்து அதில் கலந்துகொண்ட 450 பேருக்கு உரை நிகழ்த்தினார்.

    “உங்களுக்கு எதிலாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்,” என்றார்.

    நான் சும்மா இருப்பேனா? என் வழக்கைச் சொன்னேன்.

    “இதுபற்றி பிறகு பேசலாம்,” என்று சமாளிக்கப் பார்த்தார்.

    “இல்லை. எனக்கு இப்போதே தெரியவேண்டும்,” என்றேன், பிடிவாதமாக. “நான் எல்லாம் சரியாகச் செய்திருக்கிறேன். பணத்துக்காகக் கேட்கவில்லை. என்னைத் தண்டிப்பதுபோல் பணம் கொடுக்க மறுப்பது என்ன நியாயம்?”

    அவர் பயந்தார். “நீங்கள் சொல்வது சரிதான். எங்கள் தவற்றுக்கு மன்னியுங்கள்,” என்று பின்வாங்கினார். “நீங்கள் என்னிடம் சொன்னதை ஒரு கடிதத்தில் எழுதிக் கொடுங்கள்,” என்று சமரசத்துக்கு வந்தார்.

    ஒரு கேலிப் புன்னகையுடன், நான் மேடையைவிட்டு இறங்குமுன், நவாவி அடைத்த குரலில், “எனக்கு முதலிலேயே தெரியாது,” என்றார்.

    அவரது மன்னிப்பை ஏற்கும் வண்ணமாக, நான் தலையை ஒருமுறை லேசாக மேலும் கீழும் ஆட்டிவிட்டு நடந்தேன்.

    அன்று நான் கதாநாயகியாக உயர்ந்துவிட்டது பிறகுதான் புரிந்தது. நான் பழகியிராத சில பெண்கள், “உங்கள் விலாசத்தைக் கொடுங்கள்,” என்று உறவாடினர்!

    என் நிலையிலிருந்த சிலர், “என்ன எழுதவேண்டும்? சொல்லிக் கொடுங்கள்,” என்று என்னைப் பிடித்துக்கொள்ள, `தைரியம் என்ற குணம் ஏன் இவ்வளவு அரிதாகிவிட்டது?’ என்ற அலுப்புதான் ஏற்பட்டது.

    நான் ஒரு பள்ளியிலிருந்து மாற்றல் கேட்டுப் போகையில், “ஐயோ! எங்களுக்காகச் சண்டை போடுகிறவர் நீங்கள் மட்டும்தான். நீங்களும் போய்விட்டால் நாங்கள் என்ன செய்வது!” என்று ஆசிரியை ஒருத்தி அரற்ற, “Fight your own battles (உங்கள் சண்டைகளை நீங்களே போடுங்கள்),” என்றேன் எரிச்சலுடன்.

    எதற்கெடுத்தாலும் சண்டை போடவேண்டும் என்று எனக்கு மட்டும் ஆசையா?

    சண்டை போடுவதால் நிறைய சக்தி விரயமாகிறது. சில சமயம் பலனளிக்கக்கூடும். விரோதிகளும் பெருகுவர்.

    அதனால் என்ன? உரிய காலத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்தோம் என்ற திருப்தி நிலைக்குமே!

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 23

    கதை வடிவில் பழமொழி நானூறு – 23

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 47

    பெரியநட் டார்க்கும் பகைவர்க்கும் சென்று
    திரிவின்றித் தீர்ந்தார்போல் சொல்லி அவருள்
    ஒருவரோ டொன்றி ஒருப்படா தாரே
    ‘இருதலைக் கொள்ளியென் பார்’.

    பழமொழி – இருதலைக் கொள்ளியென் பார்

    இன்னிக்கு இண்டர்வியூவுக்கு வந்த வந்தவங்கள்ல எனக்கு ரேஷம் குமார ரொம்பப் பிடிச்சிருந்தது.  நீங்க என்ன சொல்றீங்க என்னிடம் கேட்கிறார் மும்பையிலிருந்து வந்திருக்கும் என் மேலதிகாரி.

    தனியார் விமான நிறுவனத்தில் மானேஜர் பதவியில் இருக்கும் நான்யோசிக்கத் தொடங்கினேன். அன்றைக்கு வந்த ஐந்து பேரும் எப்படி கேள்விகளுக்குப் பதில் அளித்தார்கள் என்று. படிப்புத் தகுதியை வைத்துப் பார்த்தால் அனைவருக்கும் சமமே. அனுபவத்தை வைத்துதான் மதிப்பிட வேண்டும். முதலாமவர் பன்னாட்டு விமானசேவையில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். அதுவும் தில்லி விமான நிலையத்தில்.  அடுத்த இரண்டுபேருக்கும் எந்த அனுபவமும் இல்லை. நான்காமவர் டிராவல்சில் விமான டிக்கெட் கொடுக்கும் பணியில் இருந்தவர். ஐந்தாமவர்தான் ரேஷம்குமார் உள்நாட்டு விமானசேவையில் அனுபவம் உள்ளவர். அவருக்கு எல்லாவித தகுதியும் பயிற்சியும் அனுபவமும் இருப்பதாகத் தோன்றினாலும் ஏதோ ஒன்று மனதை உறுத்தியது.

    வந்திருக்கும் அதிகாரியோ முதலாமவரையும் ஐந்தாமவரையும் பரிந்துரைக்கிறேன். இருவரில் உங்களுக்கு ஏற்ற ஒருவரை நீங்களே தேர்வு செய்துகொள்ளுங்கள் என்றுவிட்டார்.

    எங்களது விமான நிறுவனம் இப்போது தான் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. திருச்சியிலிருந்து மும்பைக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான குறைந்த பட்ச ஆட்கள் எடுக்கும் நிகழ்வுதான் தற்போது நடைபெறுகிறது. இப்போதைக்கு என்னைத் தவிர ஒருவரை மட்டும் நியமிக்க வேண்டும். அதற்குத்தான் இத்தனை யோசனை.  அவர்கள் இருவரையும் இரண்டாம் முறை அழைத்து நேர்முகத்தேர்வு நடத்த முடிவு எடுத்தேன்.

    இம்முறை கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லும் விதத்தைக் கவனிக்க வேண்டும். தீர்மானத்துடன் அமர்ந்தேன்.  பன்னாட்டு விமான சேவையில் அனுபவம் மிக்க விஷால் தன் அனுபவங்களைச் சுருக்கமாகப் பகிரத் தொடங்கினார். முதல் நேர்முகத்தேர்வில் சொன்ன அதே தகவல்களைத் தான் மீண்டும் சொல்கிறார். கடைசியில் அவர் முடிக்கும்போது எந்தவித நெருக்கடியையும் என்னால் சமாளிக்க முடியும் என்றார். ஆனால் ரேஷம் குமாரோ சந்தர்ப்பவாதிபோல் பேசுவதாகப் படுகிறது. எங்களது  எதிரி விமான நிறுவனத்தில்தான் அவர் ஆறு வருடங்கள் வேலை பார்த்து இருக்கிறார். தொழில் முறையில் எதிரி என்றாலும் தேவையான பயிற்சியும், வேலையும் ஒரேமாதிரிதானே.  முந்தைய நிறுவனத்தை விட்டு ஏன் வந்தீர்கள் என்ற என் வினாவிற்கு விஷால் புதிய அனுபவத்தைத் தேடிஎன  சமயோசிதமாய் பதிலளித்தார். ஆனால் குமாரோ பழைய கம்பெனியில் பலவித தவறுகள் நடப்பதாகவும் அதில் கூட வேலை செய்பவர்கள் திறமையற்றவர்கள் எனவும் அதனால் தன்னால் முன்னேற முடியவில்லை என்றும் கூறுகிறார். இந்தப் பதில்தான் முன்பும் எனக்கு உறுத்தியது.

    தெளிவுபடுத்துவதற்காக எந்த மாதிரி தவறுகள் நடந்தன எனக் கேட்கிறேன். பயணிகளுக்கு போர்டிங் பாஸ் குடுப்பதற்காக ஒவ்வொரு கார்டிலும் இருக்கையின் எண் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டுவது வழக்கம். இது தினமும் நடக்கும் வாடிக்கையான நிகழ்வுதான்.  விமானத்தின் இருக்கை எண்ணிக்கைக்கு ஏற்ப கார்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு தேதி பொறிக்கப்பட்ட சீல் குத்தப்பட்டு கவுண்டரில் பயணிகளுக்கு விநியோகிக்கப்படும். ஒருவேளை பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பின் விமானம் வெளிக்கிளம்பியவுடன் கவுண்டரில் மீதமிருக்கும் கார்டுகளைக் கிழித்து எறிந்து விட வேண்டும். அப்படிச்செய்யாது விட்டதால் அடுத்த நாள் புது கார்டுகளுடன் அவை கலந்து இருநபர்கள் ஒரே இருக்கை எண்ணைப் பெற நேரிட்ட சம்பவங்கள் நிறைய நிகழ்ந்துள்ளன. அத்தகைய நாளில் விமான இருக்கைகள் ஏதேனும் காலியாக இருந்தால் பயணியை அங்கு அமரச்செய்து தப்பித்துக் கொண்டிருக்கிறோம். இருக்கை காலியாக இல்லாத நாட்களில் நிறுவனத்திற்கு பெரும் நட்டமும் பிரச்சினைகளும் ஏற்பட்டதுண்டு.

    மேலும் விமானம் வந்திறங்கியவுடன் வெளியே செல்லும் பயணிகளின் கார்டுகளின் பின்புறம்  ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரின் எண்ணும் அவருடைய உடைமையில் போடப்பட்டிருக்கும் பட்டியின் எண்ணும் ஒத்து உள்ளதா எனச் சரியாகப் பரிசோதித்து அனுப்பாததால் பல நாட்கள் பயணிகள் அவசரத்தில் ஒரே நிறம் கொண்ட வேறு ஒருவரின் பையை எடுத்துச்சென்று விடுவர்.  இப்படி கவனக்குறைவினால் ஏற்படும் தவறுகள் அந்த நிறுவனத்தில் மிக அதிகம்.

    அவர் பேசப்பேச நான் யோசித்தேன். எங்களை மகிழ்விக்கும் விதத்தில் தொழில்எதிரியின் திறமைக்குறைவை இவர் சுட்டிக்காட்டுகிறார்.  ஒருவேளை எங்கள் நிறுவனத்தில் சேர்ந்தபின் மீண்டும் பழைய நிறுவனத்தில் பெறும் பதவி தறுவதாக ஆசை காட்டினால் அங்கு அமர்ந்துகொண்டு நம்மைப் பற்றிப் பேச இவர் தயங்கமாட்டார் என மனதில் தோன்றியது.

    ஏனோ மனதில் ‘இருதலைக் கொள்ளி என்பார்’ எனும் பழமொழி நினைவுக்குவருகிறது. பகையுள்ள இருவரிடத்தும் நண்பர் போல் பழகி ஒருவருடனும் மனம் ஒருமைப்பட்டு விளங்காதவர் மிகவும் கெட்டவர்கள் என தீர்மானத்துடன் எழுந்தேன் விஷாலை நியமிப்பது எனும் முடிவுடன்..

    பாடல் 48

    இஞ்சி அடைத்துவைத்(து) ஏமாந்(து) இருப்பினும்
    அஞ்சி அகப்படுவார் ஆற்றாதார் – அஞ்சி
    இருள்புக் கிருப்பினும் மெய்யே வெரூஉம்புள்
    ‘இருளின் இருந்தும் வெளி’.

    பழமொழி – ‘இருளின் இருந்தும் வெளி‘

    என்ன ஆகிவிட்டது பிரியான்ஷி ஆண்ட்டிக்கும் கரிமா ஆண்டிக்கும். ஒருத்தருக்கொருத்தர்  நாலு நாளா முறைச்சிட்டிருக்காங்க. என்னையப் பொறுத்தவரை ரெண்டுபேரும் நல்லவங்கதான். என்னை அவர்களின் பெண் மாதிரிதான் நடத்துவாங்க. தப்பு ஒண்ணுமில்ல. நேரம் பாத்து கேட்டுடணும்.

    டிசம்பர் மாதத்தில் குளிர்காய்வதற்காக வெயிலில் அமர்ந்த போது ரெண்டுபேரும்தான் வற்புறுத்தி எனக்கு ஸ்வெட்டர் பின்ன சொல்லிக்கொடுத்தாங்க. அப்போ எவ்ளொ நல்லா இருந்துச்சு. காலை பதினொரு மணிக்கே வேலையெல்லாம் முடிச்சிட்டு சொசைட்டி பார்க் புல்வெளியில உட்கார்ந்து கரிமா ஆண்டி கொண்டு வரும் வேர்க்கடலையத் தொலி உரிச்சு சாப்பிட்டுக்கிட்டே ஸ்வெட்டர் பின்னுவோம். சிலநாள் பச்சைப் பட்டாணி கொண்டு வந்து உரிச்சு எடுத்துட்டுப் போவாங்க.சில நாள் வெந்தயக் கீரை இலைகளைப் பிரிக்கும் பணி. இப்டி தினமும் பீகாரைச் சேர்ந்த கரிமா ஆண்டியும் ராஜஸ்தானைச் சேர்ந்த பிரியான்ஷி ஆண்டியும் இவ்ளோ வருசம் ஒற்றுமையாத்தான் இருந்தாங்க. இப்போ சமீபத்துல மே மாசத்திலேந்துனு நினைக்கறேன் என்ன ஆச்சோ. எதப் பேசினாலும் ரெண்டுபேரும் எதிரும்புதிரும் தான்,

    என்னவா இருக்கும் யோசித்துக்கொண்டே டில்லியில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நான் கீழே உலாத்திக்கொண்டு இருக்கிறேன். எதிரில் என் வயதொத்த மராட்டியப் பெண் நித்திகா வருகிறாள்.

    பரஸ்பர நலம் விசாரிப்புக்குப் பின் அவளே ஆரம்பித்தாள் நக்கலாக . ஆமாம் உன் ரெண்டு வளர்ப்புத்தாய்களுக்கும் இடையில பிரச்சினை போல. சொசையிட்டியே பேசிக்குது. போனவாரம் எ பிளாக்ல நடந்த சத்திய நாராயண பூசையிலும் ரெண்டு பேரும் தனித்தனியே உக்காந்திருந்தாங்களாம்.

    இருக்கலாம் நான் போகல. இது என் பதில்.

    இன்னிக்கு சாயங்காலம் என் வீட்ல சுந்தரகாண்ட் வச்சிருக்கேன். என் பையன் பிறந்த நாளுக்காக. அவசியம் நீ கலந்துக்கோ. அதச் சொல்லத்தான் வந்தேன். அவங்க ரெண்டுபேரையும் சேத்து கூட்டிட்டு வா. உன்னால மட்டுந்தான் முடியும். அவங்களுக்கு நான் தனித்தனியா போன்ல சொல்லிட்டேன். மறந்துராத மூணு பேரும் சேந்து வரணும். அவங்க ரெண்டு பேரும் சேந்துதான் ஆரத்தி பாட்டு பாடணும். உன் பொறுப்பு புரிஞ்சுதா. அவள் போய்விட்டாள்.

    நல்ல சந்தர்ப்பம் என நினைத்து கீழ்த்தளத்தில் இருக்கும் கரீமா ஆண்டி வீட்டுக்குப் போனேன். முன்ன மாதிரியில்ல அவங்க முகம். ஏதோ குழப்ப ரேகை. ஆமா சுசீலா நீ போட்டிருக்கிற சிவப்பு வளையல் ராஜஸ்தானி குடுத்ததுதானே.

    என்ன ஆச்சரியம். கரிமா ஆண்ட்டிக்கு.  பெயரைச் சொல்லாமல் ராஜஸ்தானி என்கிறாள். அந்த வளையல்களை என் கையிலிருந்து கழற்றி வெளியிலிருந்த வாழை மரத்தடியில் வைத்து விட்டாள். அப்பறம்தான் அவளுக்கு நிம்மதி.

    இந்த பாரு சுசீலா உங்க தமிழ்நாட்ல எப்படியோ தெரியாது ராஜஸ்தான்காரங்க ரொம்ப வசியம் பண்ணுவாங்க. அவங்க குடுக்கற குங்குமம், வளையல் எதையும் இனிமே வாங்காத புரிஞ்சுதா. வீட்ல ஏதும் வாங்கி வச்சிருந்தன்னா வாழ மரத்தடியில வச்சிடு. தானம் குடுக்கறேன்னு அவங்க பாவத்தயெல்லாம் மத்தவங்கமேல ஏத்தி உட்டுருவாங்களாம்.

    நான் ஏன் பிரியான்ஷிகிட்ட பேசலைனு உனக்குத் தெரியாது. இப்போ சீதளா மாதாக்கு பண்டிகை வந்திச்சுல்ல அப்போ அந்த அம்மனுக்கு சாதம் படைச்சு அத அக்கம்பக்கத்து கன்னிப்பெண்களுக்கு சாப்பிடக்குடுத்தாங்க. இது எல்லா வருசமும் அந்த அம்மா செய்யறதுதான்.. ஆனா இந்த வருசம்தான் எனக்கு இந்த உண்ம தெரிஞ்சது. அவங்கவீட்டு வாசல் சுவத்துல குங்குமத்தால ஸ்வஸ்திக் வரைஞ்சு வச்சி பிரசாதத்த மத்த பிள்ளைகளுக்குக் கொடுத்துட்டா அவங்க வீட்ல யாருக்கும் அம்மை நோய் வராதாம். அத அந்த அம்மாவே பேச்சு வாக்ல சொல்லிச்சு. அப்பறம் தான் நான் நம்ம டாலி கிட்ட விசாரிச்சேன். அவதான் ராஜஸ்தான் மக்களப் பத்தி நிறையகதை சொன்னா.

    இவ்ளோ நாள் நான் அந்த அம்மாவ நம்பி நிறைய வாங்கி சாப்பிட்டிருக்கேன். எனக்கு என்னவெல்லாம் வசியம் வச்சுச்சோ.  இப்பயெல்லாம் என்னால பத்து சப்பாத்தி தொடர்ந்து இட முடியல தெரியுமா. மாவு பிசிஞ்சா விரல் எல்லாம் மடங்கி நிக்குது. முன்ன மாதிரி சக்தியேயில்ல.

    ஓ இவ்வளவுதானா. டாலி ஊர்வம்புக்காரினு கேள்விப்பட்டிருக்கேன். இவங்கசண்டையில அந்தஅம்மா டைம்பாஸ் பண்ணுது போல.

    நான் ஆரம்பித்தேன். ஆண்ட்டி எங்க ஊர்ல ‘இருளின் இருந்தும் வெளி னு ஒரு பழமொழி சொல்லுவாங்க.  பயம் உள்ளவங்க நெசமான ராத்திரி நேரத்து இருட்டுல கோட்டைக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டு இருந்தாலும் பாதுகாப்பா இருக்கோம்னு நம்பாம எதிரி நம்மள அழிச்சிருவானோனு பயப்படுவாங்களாம்.

    உங்களுக்குதான் டாலி ஆண்ட்டி பத்தி தெரியுமில்ல. அப்பறம் எதுக்கு அவங்க பேச்ச நம்பறீங்க. இப்ப நீங்க ராஜஸ்தானப் பத்தி சொன்னதெல்லாம் அவங்களோட நம்பிக்கை.  அதுமாதிரி வேற யாரோ உங்க பீஹார்காரங்களப் பத்தியோ அல்லது எங்க தமிழ் நாட்டுக்காரங்களப் பத்தியோ தப்பா சொல்லிக்கிட்டு அலையலாம். அதுக்கெல்லாம் பயந்தா எப்படி. ஒவ்வொரு இடத்திலயும் ஒவ்வொரு வழிபாடு. அதுமாதிரி அவங்களுக்கு சீதளாதேவி வழிபாடு. உங்களுக்கு வயசானதால ரொட்டிமாவு பிசிய முடியல கை வலிக்குது.  எல்லாத்தையும் ஒண்ணா யோசிச்சு குழப்பிக்கிறீங்க. இன்னிக்கு சாயங்காலம் நித்திகா வீட்டு கீர்த்தன்ல ரெண்டுபேரும் ஒண்ணா உக்காந்து ஜய் ஜகதீசஹரே னு ஆரத்தி பாட்டு பாடுங்க. நான் டோலக் அடிக்கறேன். எல்லாம் சரியாயிடும். சொல்லிவிட்டு நடந்தேன்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 99 (பேறெனக்கு)

    சேக்கிழார் பாடல் நயம் – 99 (பேறெனக்கு)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல் :

    ‘’பேறெனக்கு  இதன்மே  லுண்டோ? பிரானருள்   செய்த இந்த
    மாறில்ஆ   கமத்தை   வாசித்  தருள்செய   வேண்டும் ‘’  என்ன
    ‘’நாறுபூங்   கோதை   மாது   தவிரவே   நானும்  நீயும் 
    வேறிடத்து   இருக்க  வேண்டும் ‘’  என்றவன்  விளம்ப   வேந்தன் ,

    பொருள் :

    “எனக்கு இதனின் மேலாம் பேறு வேறுண்டோ? இறைவன் அருளிச்செய்த இந்த மாறில்லாத ஆகமத்தை வாசித்து அருளிச் செய்யவேண்டும்“ என்று அரசர் சொல்ல,“வாசனையுடைய பூமாலை யணிந்த தேவியாரும் இவ்விடத்தி  னின்றும்  நீங்கவே, நானும் நீயும் தனியாகிய இடத்தில் இருத்தல்வேண்டும்“ என்று அவன் சொல்ல, அரசர்,

    விளக்கம் :

    ‘’பேறு எனக்கு இதன்மேல் உண்டோ? ‘’  என்றதொடர், ஆகம ஞான உபதேசத்தின் மிக்க பேறு இல்லை, எல்லா நலன்களிலும் மிக்கதாகிய வீடுபேற்றைத் தருதலான் எனப்  பொருள்தரும். இங்கு இவன் செய்யும் செயல் பாதகமேயாயினும், அது நாயனார் கொண்ட அன்பின் திறத்தாலே அப்பயனையே விளைத்து,

    “அருட்கழல்  ந ழல்சேரக் கொண்டவாறு   இடையறாமற் கும்பிடுங் கொள்கை“

    யையே பயந்ததும் காண்க.

    ‘’மாறில் ஆகமம்’’  என்ற  தொடர்,   எதிரும் இணையும் இல்லாத ஆகமம் என்ற  பொருளைக்காட்டும்  தமக்குள் ஒன்றற் கொன்று  மாறுபடாத வேதங்கள் தாமும் இறைவனருளியனவே, ஆயினும் அவை உயிர்களின் பக்குவபேத நோக்கிப் பல தெய்வங்களையும் பேசும். அவை வெளித்தோற்றத்தில் மாறுபடுபவனவாகக் காணப்படினும் ஞானாசாரியார்களால் ஒப்புக் காணத்தக்கன. ஆயின் ஆகமங்களோ அவ்வாறன்றி எவ்வாற்றானும் தமக்குள் மாறுபடாதனவும், முழுமையும் உண்மையேயாகி உண்மை  நிலையிற்  சிறிதும் மாறுபடாதனவுமாம்.

    இதனைக் கம்பர்  தம்  இராமாயணத்தில்

    கல்லிடைப்  பிறந்து   போந்து   கடலிடைக்   கலந்த   நீத்தம்
    எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது என்ன
    தொல்லையில் ஒன்றே ஆகி துறை-தொறும் பரந்த சூழ்ச்சி
    பல் பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது அன்றே

    நன்கு விளக்குகிறார்.

    “வாசித்து அருள் செயவேண்டும்”  என்ற தொடர்,  முன்னர் அவன் இயம்பக் கொடுவந்தேன் என்றமையால் அவ்வாறே வாசித்துப் பொருள் கூறி உபதேசித்தருள்புரிக என்றார்.

    ‘’நாறுபூங் கோதை மாது தவிரவே‘’ என்றதொடர் மாது இங்கு நின்று நீங்கவே. என்றும் பொருள்தந்தது!  மேலும் ‘‘இம்மாது இனி நாறு பூங்கோதை அணித்தலைத் தவிர்க்கவே’’  என்ற  அபசகுனப் பொருளையும்  தந்தது!

    ‘’நானும்நீயும் வேறிடத்து இருக்கவேண்டும்’’ என்ற  தொடர்,  நான் தூயஉலகிலும் ,  நீ  தீயஉலகிலும்   வெவ்வேறு   உலகில்  இருக்க வேண்டும் என்ற பொருளைத் தந்தது.

    ‘’பேறெனக் கிதன்மே லுண்டோ’’ என்றதொடர்   இப்போது நீ எண்ணிய வஞ்சனையை முடித்துவிடப் போகின்றாயாதலின், இது வரை நாயன்மாரை வழிபட்டு வந்தபேறு எனக்கு இனிமேல் உளதாகுமோ? இல்லை!  எனவும்; நாறுபூங் கோதை மாது தவிர – மாது கோதை தவிர – அதாவது நாயனார் அருட்கழனீழல் சேரப்போகின்றமையால் இவ்வுலக நிலையிலே பூமாலை சூடும் தன்மை (சுமங்கலித்துவம்) தேவி தவிர்வாராக எனவும்; நானும் நீயும் வேறிடத்திருக்க வேண்டும் – இச்செயலின் பின், நான்(முத்தநாதன்) சிவனடியார்பால் அபசாரப்பட்ட பெரும் பாவத்திற்காக எரிவாய் நரகத்திற் புகவும், நீ இறைவ னருட்கழ னீழலாகிய பேரின்பத்திற் புகவும் ஆக, இங்கு ஓரிடத்திலிருந்த நாமிருவேமும் இனி வெவ்வேறான இடங்களில் இருக்க வேண்டும் எனவும், இப்பாட்டு முழுமையும் முற்குறிப்பு எனும் தொனிப்பொருள்  தருகிறது  உணரத்தக்கது. வேறிடம் – வெவ்வேறிடம்.

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 11

    பரிமேலழகர் உரைத்திறன் – 11

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                                                         
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘சொல்லும் பொருளும், உணர்த்தும் பொருளும்’

    முன்னுரை

    எழுத்தால் அமைவது சொல். அது பொருளையுணர்த்துவதைத் தனது பணியாகக் கொள்ளும். பொருளுணர்த்துவதும் நேரடியாக உணர்த்துவது,  குறிப்பாக உணர்த்துவது என இருவகைப்படும். அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப் பகுதியில் சொற்கள் வேறுபட்ட நிலையில் பொருளுணர்த்தும் பாங்கினைத் தொல்காப்பியப் பொருளியல் ஆராய்கிறது. ‘பொருளியல்’ என்பதற்குச் சொற்பொருள் விளக்கம் தந்த ஆசிரியர் நச்சினார்க்கினியர், “இவ்வோத்துப் பொருளிலக்கணம் உணர்த்தினமையின் பொருளியலென்னும் பெயர்த்தாயிற்று. ஏனை ஓத்துக்களும் பொருளிலக்கணமன்றே உணர்த்தின. ‘இதற்கிது பெயராயவாறு என்னை?’யெனின், சொல்லதிகாரத்தில் கூறிய சொற்களை மரபியலின் இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத் திரிபில் சொல்லென்பராதலின் அவை ஈண்டு தம் பொருளை வேறுபட்டிசைப்பினும் பொருளாம் எனவும், இப்பொருளாதிகாரத்து முன்னர்க் கூறிய பொருள்களிற் பிறழ்ந்திசைப்பனவும் பொருளாமெனவும் அமைத்துச் சொல்லுணர்த்தும் பொருளும் தொடர்மொழி உணர்த்தும் பொருளும் ஒருங்கே கூறலின் பொருளியல் என்றார்.” என்னும் கருத்து இங்கே சிந்திக்கத்தக்கது. ‘வேறுபட்டிசைப்பினும் பொருளாம்” என்பதுபோலத் திருக்குறளில் சொற்கள் கருத்து விளக்கத்திற்காக வெளிப்படையாகப் பொருளுணர்த்துவதன்றிக் குறிப்பாகப் பொருளுணர்த்தும் பாங்கினைப் பரிமேலழகர் உரைவழி நின்று இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

    சொற்கள் பொருளுணர்த்தும் முறை

    எழுத்துக்களால் ஆகியிருந்தாலும் சொற்கள் பொருளுணர்த்துங்கால் பல நிலைகளைக் காண முடிகிறது. ‘ஆ’ என்பது எழுத்திலும் ஓரெழுத்து ஒரு மொழியிலும் ஆகாரமே. அது அகரத்தின் நீட்சியாகி நெடிலாக அமைந்தாலும் ‘ஆ’ என்பது பெயர்ப் பொருளைச் சுட்டியும் வியப்பிடைச் சொல்லாக உணர்த்தியும் பொருளுணர்த்தி நிற்பதை அறிய முடியும். எனவே எழுத்துக்கள் எழுத்துக்களாகவே இருக்கலாம். ஆனால் சொல் ஒரே முறையில் ஒரு பொருளைத்தான் உணர்த்த வேண்டும் என்பதில்லை.

    • ‘மாணடி சேர்ந்தார்’ (3) என்பது ஒரு திருக்குறள் தொடர். இதற்கு ‘இறைவனுடைய திருவடியைச் சேர்தல்’ என்று பொருள் கொண்டால் பாட்டின் மையக்கருத்துக்கு அது முரணாகும். பரிமேலழகர் தன் புலமையாற்றலால் ‘சேர்தல் – ‘இடைவிடாது நினைத்தல்’ என உரையெழுதுகிறார்.
    • ‘ஓஒ இனிதே’ (1176) என்று, தலைமகள் அழுகின்ற தன் கண்களைத் தனக்குக் காதல் நோயைக் கொடுத்த பாவத்திற்காக ‘நன்றாக அழு’ எனச் சபிப்பதாகத் திருவள்ளுவர் கற்பனை செய்கிறார். ஓகாரம் தம்முள் இணைந்து தேமாவாக நின்றாலும் பரிமேலழகர் ’ஓ’ என்பது மிகுதி பொருட்கண் வந்த குறிப்புச்சொல்’ என்னும் உரையெழுதி அதன் பொருளுணர்த்தும் ஆற்றலை வெளிப்படுத்துவதைக் காணலாம்

    ‘சொல்’ என்றால் நிகழ்த்துதல்

    ‘புதல்வரைப் பெறுதல்’ என்னும் அதிகாரத்தில் ஒரு குறட்பா. அவையத்து முந்தி இருப்பச் செய்கிறான் தந்தை. அத்தந்தைக்கு மகன் என்ன கைம்மாறு செய்ய வேண்டும் என்பதைத் திருவள்ளுவர் சுட்டுகிறார். அந்த மகனைப் பார்க்கிறவர்கள் ‘இவன் தந்தை இவனை மகனாகப் பெறுவதற்கு என்ன தவம் செய்தானோ?’ என்று சொல்ல வேண்டுமாம்!.

    “மகன்தந்தைக் காற்றும் உதவி ‘இவன்தந்தை
    என்னோற்றான் கொல்? எனும் சொல்” (70)

    கல்வியுடையன் ஆக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது, தன் அறிவும் ஒழுக்கமும் கண்டார், இவன் தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தான்கொல்லோ? என்று சொல்லும் சொல்லை நிகழ்த்துதல். இதுதான் பாட்டின் பொருள். ஆனால் இந்தப் பொருளைத் தருகிற அளவில் பாட்டில் சொற்கள் அமைந்திருக்கிறதா என்றால் உறுதியாக இல்லை. ‘என்ன தவம் செய்தானோ என்ற சொல்” என்ற அளவிலேயே குறட்பா நிறைவுற்றிருப்பதைக் காணலாம்.

    பரிமேலழகர் உரைத்திறன்

    குறட்பாவில் ‘தந்தைக்கு’ என வாளா இருக்க, பரிமேலழகரோ ‘கல்வியுடையவனாக்கிய தந்தை’ என எழுதுகிறார். ‘கல்வியைத் தந்த’ என்று கூட அவர் எழுதவில்லை. காரணம் கல்வி பிறிதின் கிழமையாகிய பொருளன்று அன்று. உயிருக்கு உடம்புபோன்ற தற்கிழமை. அழியாத உடைமை. அதனால்தான் வெகு நுட்பமாகக் ‘கல்வியுடையவனாக்கிய’ என்று எழுதுகிறார். எழுதிச் ‘சொல்’ என்று வள்ளுவர் கூறுகிறாரே, சொல் தானாக வருமா? சொன்னால்தானே சொல்வரும்? சரி. தானாகச் சொல்வார்களா? அரசியல் வாதியா காசுகொடுத்துச் சொல்லச் சொல்லுதற்கு? சொல் காரியம். எது காரணம்? சொல் வருமாறு ஒழுகுதல் காரணம். காரணமின்றிக் காரியம் இல்லை. குறட்பாவில் காரியம் மட்டுமே உள்ளது. பரிமேலழகர் காரணத்தைக் கண்டறிந்து கூறுகிறார். எப்படி?

    ‘சொல்’ நிகழ்த்துதலாகிய தன் (சொல்லுக்கான) காரணம் தோன்ற நின்றது. நிகழ்த்துதல் – அங்ஙனம் தோன்ற ஒழுகல்”

    என்று எழுதிக் காட்டுகிறார். பொழிப்புரையில் ‘தன் அறிவும் ஒழுக்கமும் கண்டார்’ என விளக்கமாக எழுதித், தந்தையளித்த கல்வியின் பயன் அவ்விரண்டுமே என்பதனை நுட்பமாகக் காட்டுகிறார். இந்த விளக்கவுரையில் ‘சொல்’ என்பது சான்றோர் புகழும் சொல்லாக இருந்தாலும் அச்சொல்லுக்குப் பின்னாலே உள்ள மகனின் நடத்தையாகிய காரணத்தைத் தோற்றுவிக்கிறது என்பது பரிமேலழகர் கருத்து. எனவே ‘சொல்’ என்பது சான்றோர் சொல்வது. ஒழுகுதலாகிய காரணம் என்பது சொல் உணர்த்துவது!

    கொள்ளுவது நன்றா? கொடுப்பது தீதா?

    ‘ஏற்பது இகழ்ச்சி’ என்பது ஆத்திசூடி. ‘இலன் என்னும் எவ்வம்’ என்பது திருக்குறள். ஆனால் இவற்றுக்கு முரண்படுவதுபோல் திருக்குறள் ஒன்று அமைந்திருக்கிறது.

    “நல்லாறு எனினும் கொளல் தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று”  (222)

    என்னும் குறட்பா “ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது ஈந்தார்க்கு அவ்வுலகம் இல்லையென்பார் உளராயினும் ஈதலே நன்று” என்னும் பொருள்பட அமைந்திருக்கிறது. அதிகாரம் ‘ஈகை’ யாதலின் அதற்கு மறுதலையான இரத்தலாகிய கொளலைப் பொய்யாக உயர்த்திச் சொல்லவேண்டிய நிலை ஆசிரியருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பரிமேலழகர் புரிந்து கொள்கிறார். கொண்டு, ஏற்பது வீட்டு நெறிக்கு வழிகாட்டும் என்பாரும் இலர். ஈதல் வீடுபேற்றிற்குத் தடையாகும் என்பாரும் இலர் என்னும் தெளிவை முன்னிறுத்த விழைகிறார். ஆனால் குறட்பா அமைப்பு அவ்வாறு பொருள் கொள்ளுமாறு இல்லையே என எண்ணுகிறார். எண்ணி, ‘எனினும்’ என இருவழியும் வந்த சொல்லை உற்று நோக்கி அந்த உம்மையை எதிர்மறையாக்கி விளக்கமளிக்கிறார். எப்படி? இப்படி!

    “எனினும் என்பது இருவழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது”

    இந்த விளக்கத்தில் ‘எனினும்’ என்னும் சொல் ‘இல்லையென்று சொன்னாலும்’ என்னும் சொற்பொருளைக் கொண்டிருந்தாலும் ‘இன்மை’ என்னும் பொருளையே உணர்த்துகிறது என்பதைப் பரிமேலழகர் உரையால் புரிந்து கொள்ள இயலும்.

    ‘சினம்’ என்னும் நெருப்பு

    ‘ஆறுவது சினம்’ என்பது முதுமொழி!. ‘கோபத்தை அடக்கா வேந்தன்’ என்பது விவேக சிந்தாமணி! இத்தகைய மொழிகள் சினம் மனிதன் கைக்கொள்ள வேண்டாத பொருள் என்பதை உணர்த்துகின்றன. திருவள்ளுவர் வெகுள்தல் என்னும் இந்தப் பண்பை எதிர்மறையால் ‘வெகுளாமை’ என அதிகாரப் பகுப்புச் செய்வார். இந்த எதிர்மறையே அப்பண்பு கூடாத பண்பு என்பதைக் குறிப்பாய்ப் புலப்படுத்தும். இந்த அதிகாரத்தில் உள்ளதொரு குறட்பா,

    “சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
    ஏமப் புணையைச் சுடும்” (306)

    என்னுமாறு அமைந்திருக்கிறது. இந்தக் குறட்பாவிற்குச் சினம் என்னும் நெருப்பு தனக்கு இடமானவரையேயன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புணையைச் சுடும்’ எனப் பொழிப்புரை கண்ட பரிமேலழகர்,

    ‘சினமென்னும் நெருப்பு’ என்ற விதப்பு, ‘உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே! இந்நெருப்பு தான் சேராத இடத்தையும் சுடும் என்னும் வேற்றுமை தோன்ற நின்றது”

    என்று விளக்கவுரையில் எழுதுகிறார். இயல்பான நெருப்புக்கும் சினமாகிய நெருப்புக்கும் என்ன வேறுபாடு என்றால் பற்றுகிற இடத்தினை மட்டும் எரிப்பது இயல்பான நெருப்பு! தன்னைக் கொண்டவனை மட்டுமன்றி அவனுக்கு நல்வழி காட்டுகின்ற இனமாகிய நண்பர்களையும் எரித்தழிப்பது சினம் என்னும் நெருப்பு.  ‘சினநெருப்பு’ என்னாமல் ‘சினம் என்னும் நெருப்பு’ என்னும் விரியுருவகத்தால் (முகத்தாமரை – உருவகம். ‘முகம் என்னும் தாமரை’ – விரியுருவகம்) கூறியது விதப்பு. இந்த விதப்பினைப் பயன்படுத்திப் பரிமேலழகர் தனது உரையாற்றலைக் காட்டுகிறார். சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்பது சொற்பொருள்  இயல்பான நெருப்புக்கும் சினமென்னும் நெருப்புக்கும் உள்ள வேறுபாட்டை உணரச்செய்வது சொல் உணர்த்தும் பொருள்!.

    அறிவுச் செல்வமும் அறியாமை வறட்சியும்

    செல்வம் பலவகைப்படினும் பெரும்பாலும் பொருட் செல்வத்தையே அது குறிப்பதாகக் கொள்வது ஒரு நடப்பியல் உண்மை. ‘அவன் செல்வன்’ என்றால் அவன் வாங்கிய பட்டங்கள் யாருடைய நினைவுக்கும் வராது. அதுபோல அவன் ‘வறியன்’ என்றால் அவனுடைய வயிறும் பசியுமே நினைவுக்கு வருமேயன்றி அவனுடைய அறியாமையோ அதனால் பெற்ற அவமானமோ நினைவுக்கு வராது. ஆனால் பரிமேலழகருக்கு வரும்!

    “இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
    சிலர் பலர் நோலாதவர்” (270)

    என்னும் குறட்பா ‘தவம்’ என்னும் அதிகாரத்து இறுதியாக அமைந்திருப்பது. இந்தக் குறட்பா இவ்வுலகில் செல்வம் உடையார் சிலராகவும் வறுமையால் துன்புறுவோர் பலராகவும் இருப்பதற்குக் காரணம் தவம் செய்வார் சிலராகவும் அது செய்யாதார் பலராகவும் இருப்பதே காரணம் என்ற கருத்தினை முன்னெடுக்கிறது.  இதனை,

    “உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின், தவம் செய்வார் சிலராக அது செய்யார் பலராதல்”

    என்னும் பரிமேலழகர் பொழிப்புரையாலும் புரிந்து கொள்ள இயலும். ‘இலர்’ ‘உளர்’ என்பவற்றிற்கான செயப்படுபொருட்கள் குறட்பாவில் இல்லை. பரிமேலழகர் அவற்றைச் ‘செல்வம்’ எனக் கருத்தாகக் கொண்டு உரையெழுதுகிறார். அடுத்துச் ‘சிலர் நோற்பார்’ என்பதைக் கொண்டு அதற்கியைய (குறட்பாவில் குறிக்கப்படாத) செல்வர் சிலராகவும் என உரையெழுதுகிறார். தொடர்ந்து செல்வத்தை அறிவோடு பொருத்தி ‘நுண்ணுணர்வு உடைமையே செல்வம் நுண்ணுணர்வு இல்லாமை வறுமை’ என்னும் கூடுதல் விளக்கத்தையும் தருகிறார். இந்த விளக்கத்தில் அவர் வளத்தையும் வறுமையையும் பொருட்செல்வத்தோடு மட்டும் பொருத்திப் பார்க்காமல் அறிவின் உண்மை இன்மைகளோடு பொருத்திப் பார்க்கிறார். இவ்வாறு அவர் பார்ப்பதற்குத் துணை நின்றது அவருடைய பன்னூல் புலமை.

    “செல்வம் நல்குரவு என்பன அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன. என்னை? நுண்ணுணர்வு இன்மை வறுமை அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்  (நாலடியார் 251)”

    பரிமேலழகர் உரையால் ‘வளப்பம்’ என்பது பொருளை மட்டும் குறிக்காது. அறிவுடைமையையும் குறிக்கும் ‘வறுமை’ என்பது பொருளில்லாமையை மட்டும் குறிக்காது. அறிவின்மையையும் குறிக்கும் என்பது புலனாகிறதல்லவா? செல்வம் பொருளைக் குறிப்பது சொற்பொருள். அது அறிவுடைமையும் குறிப்பது உணர்த்தும் பொருள். ‘வறுமை’ பொருளின்மையைக் குறிப்பது சொற்பொருள். அது அறிவின்மையைக் குறிப்பது உணர்த்தும் பொருள். இவ்விருவகைப் பொருளையும் கண்டறிந்து கூறும் பரிமேலழகரின் தொடர் “செல்வம் நல்குரவு என்பன அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன” என்பதாகும்!.

    உண்மை பிறத்தல்! இன்மை இறத்தல்!

    “நேற்றிருந்தவர்கள் இன்றில்லை” என்பது வழக்கு. இந்த வழக்கில் நிலைமையாகிய உணர்வு வெளிப்படுவது என்பது உண்மையே. ஆனால் என்றோ தோன்றியது நேற்றுவரை இருந்திருக்கிறதே என்ற உண்மையும் இருக்கிறது என்பதைப் பலரும் அறியார். நிலையாமை என்பது தோன்றிய கணமே மறைவது. அதாவது ‘தோன்றுதல் – மறைதல்’ என்பதே நிலையாமையேயன்றித் தோன்றுதல்; இருத்தல் – மறைதல் என்பது நிலையாமை ஆகாது. ‘கணந்தோறும் பிறந்திறப்பது’ என்பதும் அது. பிறந்த நொடியே இறப்பது. எனவே நேற்று (வரை) இருந்தவர்கள் இன்றில்லை என்பது நிலையாமையின் முழுப்பொருண்மையாகாது. அதனால்,

    “நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும்
    பெருமை யுடைத்திவ் வுலகு” (336)

    என்னும் குறட்பாவிற்கு உரையெழுதிய பரிமேலழகர் அவ்வழக்கினையும் உட்கொண்டு,

    “ஒருவன் நெருநல் உளனாயினான் அவனே இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து இவ்வுலகு”

    என்று பொழிப்புரை எழுதுகிறார். இதில் ‘நேற்று’ என்பதை வழக்கிலிருந்து எடுத்துக் கொள்கிறார். ‘இருந்தான்’ என்பதை மாற்றி ‘உளன் ஆயினான்’ அதாவது ‘தோன்றினான்’ என்னும் தன் கருத்தினை இணைத்துக் கொண்டு உரையெழுதுவதைக் காணலாம். உலகியல் வழக்கு ‘நேற்றுவரை இருந்தான்’ என இருக்க, பரிமேலழகர் ‘நேற்று தோன்றியவன்’ என விளக்கமளிக்கிறார் ‘உளன்’ என்பதற்கு ‘உண்மை’ (உளதாம் தன்மை) என்றும், ‘இலன்’ என்பதற்கு ‘இல்லை’ (இலதாம் தன்மை) என்றும் உரை காண்கிறார். கண்டு “உளன் ஆயினான் இலனாயினான்” என நூலாசிரியரின் நுண்ணியம் கண்டு உரையெழுதுகிறார்.

    “ஈண்டு உண்மை பிறத்தலையும் இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன”

    பரிமேலழகர் உரையால் நேற்று பிறந்தவன் (உளன் ஆயினான்) இன்று இல்லையாயினான் (இலனாயினான்) என்னும் நிலையாமையின் ஆழம் புரிகிறது. பாட்டில் இதற்கான சொல் இல்லையாயினும், ‘உளன்’ ‘இலன்’ என்னும் இரண்டு சொற்களோடு ஆக்கச் சொல்லை வருவித்துக் கொண்டு ‘பிறத்தல் மற்றும் இறத்தல்’ என உணர்த்துகிறார். உண்மை என்பது ‘உளது’ என்னும் பொருளைத் தருவது. அது சொற்பொருள். அது ‘பிறப்பு’ என்னும் பொருளைத் தருவது உணர்த்தும் பொருள். இன்மை என்பது ‘இலது’ என்னும் பொருளைத் தருவது. அது இறத்தல் என்னும் பொருளைத் தருவது உணர்த்தும் பொருள்!

    பிரிவதற்காகவே பிறந்த உறவு

    ‘சேர்ந்தே இருப்பது புலமையும் வறுமையும்’ என்னும் திரைப்பட உரையாடல் பலருக்கும் நினைவிருக்கலாம். சில அரசியல் கட்சியினர் கலைவதற்காகவே கூடுவதையும் அறிந்திருக்கலாம். ‘பிரிவதற்காகவே வந்த உறவு’ பற்றித் திருவள்ளுவர் சிந்தித்திருக்கிறார். உயிர்வழி நீங்கிய வழிக் கிடக்கும் உடம்பு பற்றிப் ( பரிமேலழகர் உரை – 340) பேசுகிறார். வழக்கில் பயன்படுத்தப்படும் பல தொடர்கள் எதிர்மறைப் பொருளைத் தருவதைப் பலரும் உணர்வதில்லை. சான்றாக அன்பால் பிணைந்தவர்களை வாழ்த்துங்கால் ‘உடம்பும் உயிரும் போல’, ‘மலரும் மணமும் போல’, ‘நகமும் சதையும் போல’ என்றெல்லாம் சொல்வார்கள்.  இவர்கள் உடம்போடு சேர்ந்து பிறக்கும் உயிர் இறுதிவரை உடம்பினைவிட்டுப் பிரியாது என்னும் மயக்கத்தில் கூறுவதை ஓர்ந்திலர். இந்த மயக்கம் குறள் கண்ட தலைமக்களுக்கும் இருந்திருக்கிறது.

    “உடம்பொடு உயிரிடை என்ன? மற்று அன்ன
    மடந்தையொடு எம்மிடை நட்பு” (1122)

    என்னும் தலைவன் மொழிகேட்டு நம்பிய தலைவியைத் திருக்குறள் காட்டுகிறது. உண்மையில் இது பொருந்துமா என்பதைக்,

    “குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
    உடம்போடு உயிரிடை நட்பு” (338)

    என்னும் குறட்பாவில் திருவள்ளுவர் ஆராய்கிறார். அக்குறட்பாவை ஆராய்ந்த பரிமேலழகர்,

    “முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்து புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து போன தன்மைத்து உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு”

    என்னும் பொழிப்புரையைத் தருகிறார். இந்தப் பொழிப்புரையில் உடம்பை முட்டையாகவும் உயிரைப் பறவையாகவும் உருவகம் செய்த திருக்குறளின் திறனைப் பாராட்டுகிறார். ‘ஒரு குறிப்பிட்ட காலம் வரை முட்டையும் பறவையும் ஒன்றாக இருந்ததைச் சுட்டிப் புள்ளுப் பருவம் வந்துழித் தனித்தறியாத முட்டையைத் தனித்துவிட்டுப் புள் பறந்துவிடும் என்னும் நுண்ணியம் காட்டுகிறார். ‘உடம்போடு உயிர்’ என்பதைப் ‘பிரியாத நிலை’ என்று கருதுவார்க்கு (உவமம் கொண்டு) அதன் ‘பிரிநிலையை’ விளக்குகிறார் பரிமேலழகர். ‘நட்பு’ என உடம்புக்கும் உயிருக்குமான உறவைச் சுட்டும் திருவள்ளுவர் அதற்குக் காட்டிய உவமம் முட்டையும் புள்ளுமாகும் என்பதை நோக்கி உரையெழுதுகிறார். பிரிந்து போகக் கூடியதை உவமமாகக் காட்டியதால் ‘நட்பு’ என்பதும் பிரிந்து போகக் கூடியதே என்பதைக் குறிப்பாகக் காட்டியது என்று விளக்கமளிக்கிறார்.

    “‘நட்பு’ என்றது குறிப்பு மொழியால் ஈண்டு நட்பின்றிப் போதல் உணர்த்தி நின்றது”

    இங்கே குறிப்பு மொழி என்றால் என்ன? ‘நட்புத்தான்! அது எது போல என்றால் முட்டையும் புள்ளையும் போல’ என்றாம்!. “பழகுதற்கு இனியவர், ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தணியாத நட்பை என்மீது காட்டியவர், கருத்து வேறுபாடுகள் நட்பு முரிவதற்கான காரணங்கள் ஆகா” என்னும் இன்றைய நடப்பியல் சமுதாயத்துப் பசப்பு மொழிகளையெல்லாம் இந்தப் பாட்டிற்குப் பரிமேலழகர் தரும் அரிய விளக்கவுரை தவிடுபொடியாக்கிவிடுகிறது. அவர் எழுதுகிறார்.

    “சேதனமாய் அருவாய் நித்தமாய உயிரும், அசேதனமாய் உருவாய் அநித்தமாய உடம்பும் தம்முள் மாறாகலின், வினைவயத்தால் கூடியதல்லது நட்பில என்பது அறிக”

    எனச் செவியில் அறைவதைக் காணலாம். உயிருணர்ச்சியாகிய நட்பு உள்ளங்களின் இடப்பெயர்ச்சியால் தோன்றுவது என்பது இதனால் புலனாம். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் பிரியாதது போலவும் உண்மையில் பிரியக்கூடியதே என்பதையும் ‘நட்பு’ என்னும் சொல் சுட்டுகிறதாம். ‘நட்பு’ என்பது உணர்ச்சியால் பிரியாத உறவு என்பது சொற்பொருள். அது பிரியக்கூடிய உறவே என்பது சொல் உணர்த்தும் பொருள்!.

    நிறைவுரை

    மூலநூலாசிரியனின் உள்ளங் காண முயல்வதும் தாம் கண்டவற்றைச் சான்றுகளோடு முன்மொழிவதுமே உரையாசிரியர் கடன். அந்த வகையில் திருக்குறள் உரையாசிரியர்களில் முன்னிற்பவர் பரிமேலழகர். நூலைப்  பன்முறை நோக்கி ஆசிரியரின் உள்ளமறிந்து அதற்கேற்ப உரைகாண்பதற்குச் சொற்களையும் அவை பொருளுணர்த்தும் முறைகளையும் நன்கு உள்வாங்கி உரையெழுதுகிறார். சொல்லுக்குரிய நேரடிப் பொருளால் குறட்பொருள் சிறக்காது என்னும் நிலையில் அதனின்றும் விலகிச், சொல் உணர்த்தும் பொருளைக் கண்டறிந்து காட்டும் அவர் உரைத்திறன் புலப்படக் கூடும்.

    (தொடரும்…)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 35

    பழகத் தெரிய வேணும் – 35

    நிர்மலா ராகவன்

    மகிழ்ச்சி எங்கே?

    `சிலபேருக்குதான் வாழ்க்கை நன்றாக அமைகிறது!’ என்று ஏக்கப் பெருமூச்சு விடுகிறவர்கள் பலர்.
    வாழ்க்கையை அமைத்துக்கொள்வது அவரவர் கையில்தான் இருக்கிறது.

    பிறரால்தான் மகிழ்ச்சியா?

    `உனக்கு எப்போது குழப்பமோ, வருத்தமோ ஏற்படும்?’ என்று என் சக ஆசிரியை ஃபாத்திமாவிடம் கேட்டேன்.

    “தெரிந்தவர்கள் யாராவது என்னைப் பார்த்துவிட்டு, சிரிக்காமல் போனால் வருத்தமாக இருக்கும்,” என்றாள்.

    நம்மைக் கடந்து செல்பவர்கள் ஆழ்ந்த சிந்தனையிலோ, ஏதாவது குழப்பத்திலோ இருக்கலாம். இது புரியாது, அவர்களுக்கு நாம் ஒரு பொருட்டாகப் படவில்லையே என்ற வருத்தம் எழுவது எதற்கு?

    நம் மகிழ்ச்சிக்குப் பிறரை எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் எழும்.

    செல்வத்தால் மகிழ்ச்சி?

    பெரும் செல்வந்தர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால், சிலருக்கு அது ஒரு பொழுதுபோக்கு, வெறும் விளையாட்டு என்றே தோன்றுகிறது. பிறரை வெல்லவேண்டும் என்ற ஓயாத துடிப்பு வேறு.

    எத்தனை கோடிச் செல்வம் இருந்தாலும் பேராசை அடங்குவதில்லையே, பொருளீட்டுவதால் மகிழ்ச்சி எப்படிக் கிட்டும்?

    இலக்கு

    வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டுமானால் ஓர் இலக்கு அவசியம். அது பெரிதாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. `நாளை என்ன செய்யலாம்?’ என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிக்கொண்டு, உபயோகமான காரியம் எதையாவது யோசித்துவைத்தாலே போதும்.

    நமக்குப் பிடித்த காரியத்தைச் செய்யாது, பிறருக்காக விட்டுக்கொடுத்தால், நம் மகிழ்ச்சி பறிபோய்விடும்.

    பெண் எழுத்தாளர்களின் சங்கடம்

    பெண்கள் எழுத்துத்துறையில் ஈடுபட்டு, `எங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு,’ என்பதுபோல் எழுதினால், ஆண்களின் கண்டனத்துக்கு ஆளாகிறார்கள்.

    “நீங்க எழுதறமாதிரி, ஆண்களைக் குறை சொல்லலாமோ, கூடாதோன்னு பயந்துக்கிட்டிருந்தேன்,” என்று ஒரு பெண்மணி தயங்கியபடி என்னிடம் தெரிவித்தாள்.

    “தப்பு செய்யறதிலே ஆண் என்ன, பெண் என்ன? நான் ரெண்டு பேரைப்பத்தியும் எழுதறேனே!” என்றேன்.

    உண்மையாக நடந்த ஆண்களின் உரையாடல் (ஆங்கிலத்தில்):

    “நிர்மலா ராகவன்னு ஒரு காரக்டர். உங்களுக்குத் தெரியுமா?”

    “கேள்விப்பட்டதேயில்லை!” பதில் கூறியது என் கணவர்.

    “அவங்க எழுத்தைப் படிக்கும்போது கோபம் வருது. ஆனா, அதிலே உண்மை இருக்கு. அதனாலதான் எரிச்சலா இருக்கு”.

    இப்படியெல்லாம் விமரிசனத்துக்கு ஆளாகப் பயந்தே பல பெண்கள் தம் ஒவ்வொரு எழுத்தையும் தாமே தணிக்கை செய்துகொள்கிறார்கள். நிறைவு எப்படிக் கிட்டும்?

    “நிறைய கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்காதே. எல்லாம் கடவுளின் சித்தப்படி நடக்கிறது என்று புரிந்துகொள்,” என்று எழுத்தின்மூலம் என்னைக் கண்டித்தாள் விரிவுரையாளர், கொடீஜா (KODIJAH), ஒரு மேற்பயிற்சியின்போது.

    கற்பனைத்திறன் வளர, நம்மைச் சுற்றி நடப்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். `ஏன்?’ `எப்படி?’ என்ற கேள்விகளைக் கேட்டாகவேண்டும். அவளுக்கு அது தெரியவில்லை.

    அத்துடன், பிறர் எப்படி நடக்கவேண்டும் என்று குறை கூறிக்கொண்டிருப்பது வீண். நமக்கு நேரம் அதிகமில்லையே! நம் வாழ்க்கையை ஒழுங்காக வாழ்ந்தால் போதாதா?

    கதை

    என் ஒரே மகனைச் சிறுவயதிலேயே பறிகொடுத்த துக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். ஈராண்டுகள் கழிந்தபின்னரும் துக்கம் குறையவில்லை.

    எப்போதும்போல் ஏதாவது புதினத்தைப் படிக்கலாம் என்றால், அதில் `மரணம்’ என்று ஒரு வார்த்தை கண்ணில் பட்டால் போதும், கண்ணில் நீர் வழியும்.

    துக்கம் தொண்டையை அடைக்க, பாடவும் முடியவில்லை. வெறி பிடித்தவள்போல், காலால் தரையில் அழுந்தத் தட்ட, ஓரளவு சமாதானம் ஆகியது.

    என் பெற்றோரைப் பார்க்க மலேசியாவிலிருந்து இந்தியா சென்றபோது, முதலிலேயே நிச்சயித்துக்கொண்டேன், மீண்டும் நாட்டியம் பயிலவேண்டும் என்று.

    சிறு வயதிலேயே மூன்று ஆண்டுகள் முறையாகக் கற்றிருந்தாலும், வெளியில் ஆட என் தந்தை அனுமதிக்கவில்லை. (அந்தக் காலத்தில், ஆடத் தெரிந்தவர்களை சினிமாவில் நடிக்க அழைப்பார்கள். குடும்ப கௌரவம் என்ன ஆவது?).

    சாயந்திர வேளைகளில், என் பெற்றோர் காய்கறி வாங்க வெளியில் போவது வழக்கம். அப்போது, திருட்டுத்தனமாக ஆடி மகிழ்வேன்.

    மூச்சிறைக்க வந்து, நான் கதவைத் திறக்கும்போது, அம்மா சந்தேகத்துடன் பார்ப்பாள். “ஆடிண்டு இருந்தியா?”

    சிறு குழந்தைபோல், “இல்லியே!” என்று பொய் சொல்ல வேண்டியிருக்கும். ஆனாலும், என் முகமலர்ச்சி காட்டிக்கொடுத்துவிடும்.

    பள்ளியில் ஆண்டுவிழாவில் ஆட என்னைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்பாவுக்குத் தெரியாமல் ஒத்திகைக்குப் போனால், பிரச்னை வராது என்று நினைத்தோம்.

    விழா முடிந்து, வீடு திரும்பியபோது, “இன்னிக்கு என்ன, லிப் ஸ்டிக்?” என்று அப்பா கேட்டபோது, “சொல்லமாட்டேன், போ!” என்று சிரித்தேன். அப்பாவும் சிரித்தார். அவருக்கும் தெரிந்திருக்கிறது!

    ஆனால், 41 வயதில், `மீண்டும் ஆடக் கற்கப்போகிறேன்,’ என்று நான் அறிவித்தபோது, யாரும் தடை சொல்லவில்லை.

    பிடித்த காரியத்தில் மீண்டும் ஈடுபட்டதால், இழந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் திரும்பின.

    மணவாழ்க்கையால் கட்டுப்பாடு

    திருமணமானபின் கணவனும் புக்ககத்தினரும் எப்படி நடத்துவார்களோ, மகளின் மகிழ்ச்சி பறிபோய்விடுமோ என்று அஞ்சியே பல பெற்றோர் பெண்களைச் செல்லமாக வளர்ப்பார்கள்.

    கதை

    என்னுடன் கல்லூரியில் படித்த ரோகிணியின் திருமணத்திற்குப் போயிருந்தேன்.

    “ரோகிணியின் சிநேகிதி,” என்று அவள் தாய் மாமியாரிடம் அறிமுகப்படுத்தினாள்.

    அந்த அம்மாளோ, உதட்டைச் சுழித்தபடி, முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

    வீடு திரும்பியதும், “ஏம்மா அப்படிப் பண்ணினா?” என்று என் தாயிடம் கேட்டேன்.

    மருமகள் தன் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும், `சிநேகிதி’ என்று யாராவது அவளுடன் சேர்ந்துவிட்டால், அவள் பலம் பெற்றுவிடுவாளோ என்ற பயமாம்!

    அப்படிப்பட்ட சூழ்நிலையில், ரோகிணி பிறர் சொற்படிதான் நடக்கவேண்டியிருக்கும்.

    ஆக்ககரமான எண்ணங்கள் புத்துணர்ச்சி ஊட்டவல்லவை. ஆனால், அவைகளை நனவாக்க தகுந்த சூழ்நிலையும் அவசியம் அல்லவா?

    புத்திசாலியான ரோகிணியின் கண்களில் ஒளி மங்கிப்போக, `வாழ்க்கை ஏதோ நடக்கிறது,’ என்று சலித்தபடி இனி நாட்களை ஓட்ட வேண்டியிருக்குமோ என்ற பரிதாபம் எழுந்தது.

    பிறருடைய அறிவுரையை எப்போதும் பின்பற்றி நடக்க வேண்டும் என்றால், ஒவ்வொருவருக்கும் தனியாக மூளை எதற்கு?

    நன்மை பிறருக்கு, மகிழ்ச்சி நமக்கு

    நாம் மகிழ்ச்சியாக இருந்தால், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. அதற்காக நம்மால் இயன்றதைச் செய்ய முயல்வோம். அதனால் நம் மகிழ்ச்சி இன்னும் கூடுகிறது.

    இறந்தபின், எனது உடலின் ஆறு பாகங்களைத் தானம் செய்வதாக எழுதிக் கொடுத்ததும், `இவை பிறருக்குச் சேர வேண்டியவை,’ என்ற பிரக்ஞை எழுந்தது. `இந்த உடலைக் கவனமாகப் பராமரிக்க வேண்டும்,’ என்ற உறுதியும் ஏற்பட்டது.

    வாழ்க்கையில் இன்பத்தை மட்டுமே எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். துயரத்திலிருந்தும் கற்கலாமே!

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 22

    கதை வடிவில் பழமொழி நானூறு – 22

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 45

    மறாஅ தவனும் பலரொன் றிரந்தால்
    பெறாஅஅன் பேதுறுதல் எண்ணிப் – பொறாஅன்
    கரந்துள்ள தூஉம் மறைக்கும் அதனால்
    ‘இரந்தூட்குப் பன்மையோ தீது’.

    பழமொழி 45 –. ‘இரந்து ஊட்குப் பன்மையோ தீது‘

    இந்தக் கோயில் வாசல்ல உக்காந்து பிச்சையெடுப்பேன்னு என்னிக்காவது கனவாது கண்டிருப்பேனா. அம்மா இருந்த வரை நல்லா பாத்துக்கிட்டாங்க. நானும் படிச்சவதான். அதனால அஞ்சு ரூபாசேத்து போடுங்க தட்டுலன்னா பிச்ச எடுக்கமுடியும். பசி காதை அடைக்குது. கண்ணை மூடி யோசிக்க ஆரம்பித்தாள் கோமு. கல்லூரியில இளங்கலை வேதியியல் படித்திட்டிருந்த காலம். அரசு கல்லூரிங்கறதால இலவச விடுதியில தங்க அனுமதி. ரெண்டு வாரத்துக்கு ஒருதடவை அம்மா வருவாங்க. எண்ணை சீயக்காய் எல்லாம் வாங்கித்தந்து குளிச்சிட்டு சாப்பிடும்போது தொட்டுக்க வச்சிக்கோன்னு மிக்சர் வாங்கித் தருவாங்க. இது மாசத்துக்குரெண்டு தடவ கண்டிப்பா நடக்கற ஒரு விசயமா இருந்திச்சு. நான் ஏதோ படிச்சு பெரிய கவுரவப் பதவியில உக்காந்து அவங்களக் காப்பத்தப் போறதா கனவு கண்டாங்களோ என்னவோ. அப்படித்தான் இருக்கணும். அவங்க பெத்த ரெண்டு பசங்களும் ஊருக்கு நோயா தண்ணியடிச்சுட்டு தொந்தரவு குடுத்துட்டு அலைஞ்சாங்களே.

    படிக்கிற காலம் நல்லாத்தான் இருந்திச்சு. அப்பறம் படிப்பு முடிஞ்சு வீட்டுக்கு வந்தவொடனே தான் உலகம் தெரிய ஆரம்பிச்சுச்சு. எங்க அண்ணன்களால பாதிக்கப்பட்ட எல்லாரும் என்னய எதிரியாப் பாக்க ஆரம்பிச்சாங்க. அது புரியாம எனக்கு படிச்ச கொழுப்புனு சொல்லி அண்ணனும் என் சர்டிபிகேட்ட எரிச்சுட்டான். அண்ணன் ரெண்டுபேருக்கும் பாதிநாள் ஜெயில்வாசந்தான். போலீஸ் வரதும் போரதுமா இருந்தாங்க வீட்டுக்கு.

    அம்மா வருத்தத்திலயே சீக்கிரம் செத்துட்டாங்க. தனியா அந்த வீட்ல நான் பட்டபாடு. என் சுயநம்பிக்கையே செத்துப்போச்சு. மானத்தோட வாழ முடியுமாங்கற கேள்விக்குறியோட கட்டின துணியோட வீட்டவிட்டு ஓடி வந்தேன். இதோ திருச்செந்தூர் கோவில் வாசல் பிச்சக்காரினு பட்டமும் கிடைச்சிருச்சி.

    கோவில் அய்யர் பாவம் பாத்து தினமும் பிரசாதம் கொஞ்சம் குடுப்பாரு. அவங்க வீட்டம்மாவும் உடுத்தறதுக்கு  துணி குடுக்குது. வாசப்பக்கம் பெருக்கி சுத்தப்படுத்தி வைப்பேன். அவ்வளவுதான்.

    இப்ப ஒருவாரத்துக்கு முன்னதான் இந்த ஆறு பசங்களும் வந்தாங்க. அதுல செம்பட்டனு ஒரு பையன் என்னயப் பாத்தவொடனேயே அக்கா அக்கானு ஒட்டிக்கிட்டான். எங்கேந்தோ தப்பிச்சு ஓடி வந்தாங்களாம். அவங்க முதலாளி சாப்பாடு ஒண்ணும் போடாம அடிச்சு அடிச்சு வேல வாங்கியிருக்கார் போல. ரெண்டு நாள் இங்க படுத்துக்கிடந்தாங்க. அப்பறம் இவன்மட்டும் என்கூட இருக்கப்போறேன்னு சொன்னதால உட்டுட்டுப் போயிட்டாங்க. பாவம் செம்பட்ட கை ரெண்டும் காச்சிக்கெடக்கு. இப்ப அவன அய்யர்கிட்ட ஏதாவது சாப்பிட வாங்கிட்டுவான்னு அனுப்பிச்சிருக்கேன். அவரு பிரசாதம் குடுக்கற நேரந்தான்.

    செம்பட்டையின் குரலால் யோசனை கலைந்தது.

    அக்கா இன்னிக்கு அய்யர் ஒண்ணுமே குடுக்கல. போ போன்னு விரட்டி உட்டுட்டார். ரொம்ப பசிக்குதுக்கா. வேற ஏதாவது யோசனை சொல்லேன். ஆமாங்கா. மத்த அஞ்சுபேரும் திரும்ப வந்துட்டீங்களா.

    நான் எங்கடா போவேன். அஞ்சு ரூபா இருக்கு. இதுக்கு ஏதும் கழிச்சுப்போட்ட பழம் கெடைக்குமானு கோவில் வாசல் கடைக்காரர்கிட்ட கேட்டுட்டு வாங்க. அனுப்பினேன்.

    ஏ கோமு. நோக்கு புத்தியிருக்கா. இவ்ளோ பேர அனுப்பி உடறியே பிரசாதம் வாங்க. பாவம் பாத்து உனக்குசாதம் குடுத்துண்டிருந்தேன். சரி போனா போறது ஒரு பிள்ளையாண்டான் தானேனு புதுசா சேந்தவனுக்கும் சேத்துக் குடுக்கறேன். இப்ப என்னடான்னா ஒரு படையையே அனுப்பறியே.

    நாங்களும் எங்காத்துல சாப்பட வேண்டாமா. முருகன் எனக்கு அந்த அளவு வசதியக் குடுக்கலம்மா. யாசகம் கேக்கப் போறச்சே கூட்டமா போகக் கூடாது. அப்டிப்போனா குடுக்கணும்னு மனசு இருக்கறவாக் கூட எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாதுனு பயந்து ஒளிச்சு வச்சுண்டு இல்லன்னு சொல்லிருவாளாம். ‘இரந்து ஊட்குப் பன்மையோ தீது‘  னு பழமொழியே இருக்கு. இதையெல்லாம் படிக்காத உங்கிட்ட சொல்லிண்டிருக்கேனே உனக்கெப்படி புரியும். சொல்லிக்கொண்டே இருக்கும் தயிர்சாதத்தை என் பாத்திரத்தில் போட்டுவிட்டுப் போகிறார் அய்யர். அவருக்கு எப்படித்தெரியும் நான் படித்தவள் எனக்கும் இந்தப் பழமொழி தெரியும்னு.

    பாடல் 46

    இல்வாழ்க்கை யானும் இலதானும் மேற்கொள்ளார்
    நல்வாழ்க்கை போக நடுவுனின்(று) – எல்லாம்
    ஒருதலையாச் சென்று துணியா தவரே
    ‘இருதலையும் காக்கழித் தார்’.

    பழமொழி 46 – ‘இருதலையும் காக் கழித்தார்‘

    இவ்வளவு வருசம் கழிச்சு என் அப்பானு சொல்லிக்கிட்டு உள்ள நுழைஞ்சிருக்கிற மனுசன மனசு ஒத்துக்க மாட்டேங்குது. அம்மா என்னடான்னா

    அப்பாக்கு தண்ணிகொண்டு குடு, காப்பி குடுனு என்னய உபசரிக்கச் சொல்லறாங்க. கல்லூரி மாணவியான எனக்கு மனதுக்குள் பல கேள்விகள்.

    எனக்கு விவரம் தெரிஞ்ச வயசிலேந்து இந்த ஆள் நம்ம கூட இருந்ததேயில்ல. உங்கப்பா எங்கனு எவ்ளோ பேர் கேட்டிருப்பாங்க. அப்பயெல்லாம் எனக்கு அவமானமா இருக்கும் தெரியுமா. எவ்ளோ அழுதிருப்பேன். என் ப்ரெண்ட்ஸ் என்ன உங்கப்பா வேற யார்கூடவாவது ஓடிப்போயிட்டாரான்னெல்லாம் கேட்டு அவமானப்படுத்தி இருக்காங்க.   அப்பயெல்லாம் அந்த மனுசன் இருக்காருனு சொல்லி என்ன பிரயோசனம். நீ வேணும்னா உங்கப்பா செத்துட்டாருனு சொல்லிடுனு சொல்லியிருக்க.

    திடீர்னு காவி வேட்டி கட்டிக்கிட்டு பண்டாரம் மாரி ஒரு ஆளு வராரு. நீ இவர்தான் உங்கப்பாங்கற. அவரும் என்னமோ பாசமா இருக்கற மாதிரி உருகிக்கிட்டிருக்காரு.

    என்ன கேட்டாலும் அம்மாவிடம் பதில் இல்லை.

    எல்லா விசயத்தையும் செல்லம் மாமாகிட்டதான் புலம்புவேன். அவர் நான்சின்னதா இருக்கும்போதுலேந்து பக்கத்துவீட்ல இருந்தவரு. அவரும் அவரோட மனைவியையும் தான் நான் மாமா அத்தைனு கூப்பிடறது. எனக்கும் நிறைய சொந்தக்காரங்க இருக்காங்களாம்.

    அப்பா அம்மா லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டதால யாரும் பேசமாட்டாங்களாம். அப்பா எங்கள விட்டுட்டுப்போனவொடனே எங்க தங்களுக்கு பொறுப்பு வந்துடுமோனு இன்னும் தூரமா விலகிட்டாங்க.  எனக்கு ஆறுவயசிருக்கும் போதுலேந்து அம்மாதான் கஷ்டப்பட்டு வளத்தாங்க.

    மொதல்ல லட்சுமி அக்கா கடையில கூடமாட உதவிக்கு நின்னாங்க. அப்பறம் இப்ப நாங்களே தனியா சிப்ஸ், முறுக்கு எல்லாம் போட்டு விக்கறோம். வியாபாரம் நல்லா போயிட்டிருக்கு. மனஓட்டத்துடன் காலும் நடந்ததால் செல்லம் மாமா வீட்டுக்குள் வந்துவிட்டேன்.

    அத்தை ஆரம்பிக்கிறாங்க. இங்க பாரும்மா நீ ஒண்ணும் சின்னக் குழந்தை இல்ல. உங்கம்மா என்னடான்னா எம் புருசன் பதினைந்து வருசத்துக்கு முன்ன இந்த ஊர உட்டுட்டுப் போனவுடனே திருவண்ணாமலையில போய் துறவி ஆயிட்டாரு. இவ்ளோ வருசத்துக்குப் பின்ன அவருக்கே மனசுல தோணிச்சாம் ஊருக்குப் போயி நல்லபடியா மனைவி குழந்தையோட வாழ்க்கை நடத்துனு. அதனால வந்துட்டாராம். அப்டிங்கறாங்க.

    இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு. இந்தமாதிரி குடும்பத்தையும் காப்பாத்தாம துறவறத்துக்குப் போறென்னு அதையும் ஒழுங்கா செய்யாம பாதியில திரும்பி வரவங்க காவடி எடுக்கறேன்னு சொல்லிட்டு அதோட ரெண்டுபக்கத்துப் பொருட்களையும் நீக்கிட்டு வெறும் தண்ட மட்டும் தூக்கிட்டுப் போறது மாதிரிதான். ஊர் சிரிப்பாச் சிரிக்கும். அதத்தான் ‘இருதலையும் காக் கழித்தார்’ னு பழமொழியாச் சொல்லுவாங்க.  ஆனா எனக்கென்னமோ இந்த மனுசனப் பாத்தா பொறுப்பில்லாம ஊதாரியா கெட்ட பழக்கங்களோட சுத்திட்டிருந்துட்டு இப்போ வயசானப்புறம் போக்கிடம் இல்லாம நூறு ரூபாய்க்கு காவித்துணி கட்டிக்கிட்டு பட்டையப் போட்டுக்கிட்டு வந்து கதை சொல்ற மாதிரிதான் தோணுது. இன்னும் கெட்ட பழக்கங்கள் இருக்கா இல்லையானு தெரிஞ்சுக்காம வீட்டுக்குள்ள சேக்காத. அவ்வளவுதான் சொல்லுவேன். என்னை உசுப்பேற்றிவிட்டாள் அத்தை. யோசனையுடன் எழுகின்றேன் வீட்டுக்குச் செல்ல.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-42

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-42

    தி. இரா. மீனா

    நிக்களங்க சென்னசோமேஸ்வரா

    “வெட்ட வெளியெலாம் திடமானால் வானம் மண்
    பாதாளத்துக்கு இடம் எங்குள்ளதோ?
    இடரைச் செய்ய முடியாத மனிதரெல்லாம்
    சம்சாரத்தை விட்டோமென மொட்டையடித்துக் கொண்டால்
    அறிஞன் விரக்தனாக முடியுமா? இதனால்
    அஞ்ஞானம் விட்டு அறிவைக் காட்டுபவன்
    நிக்களங்க சென்னசோமேஸ்வரன் தானே? “

    நிஜமுக்தி இராமேஸ்வரா

    “மாற்றத்தால் உடல் தேய்ந்து தேய்ந்து
    நொந்து வெந்தவர் அனைவரும் வெறுமையாகி
    இளமை நாளும் தேய்ந்து தேய்ந்து
    கதி கெட்டோர் அனைவரும் வெறுமையாகி
    தலைமுடியை மழித்து வெறுமையான பின்னர்
    பொன் பெண் மண்ணுக்கு வசமாகாமலிருப்பதே வாழ்க்கை
    புலன்களின் தாக்குதலுக்குட்படாமல் இருப்பதே வாழ்க்கை
    கதிகெட்டு சக்தியிழந்து வீணே
    வெறுமையான வாழ்க்கையது உலகில்
    சங்கடமன்றோ சொல்வாய் நிஜமுக்தி இராமேஸ்வரனே“

    நிர்தனப்பிரிய இராமேஸ்வரா 

    “பிச்சைக்காரனெனும் நிலைக்கு என்னை நடத்திடுவாய்
    சென்றங்கு பிச்சை பிச்சையெனில்
    யாரும் தராதபடி செய்திடுவாய்
    தவறியே கொடுத்தாலும்
    கொடுக்கின்ற பாத்திரம் விழுந்து உடையுமாறு
    செய்திடுவாய் நிர்தனப்பிரிய இராமேஸ்வரனே “

    மர்க்கடேஸ்வரா

    “இகபரத்தினுள்ளே பொன் பெண் மண் காற்று
    இடையூறுகள் என்பன அடிப்படையாம்
    காமத்தை விட்டொழித்தால் துறவியாம்
    காணாய் மர்க்கடேஸ்வரனே “

    மகாலிங்க வீரராமேஸ்வரா

    “சூன்யத்துள் அடங்கின மின்னல் போலானதென்
    குருவின் நல்லுரைகள்
    மின்னலின் ஒளிக்கீற்று போலானதென்
    குருவின் நல்லுரைகள்
    படிகக் குடத்திலிட்ட சுடர் போலானதென்
    குருவின் நல்லுரைகள்
    மகாலிங்க வீரராமேஸ்வரன் போலானதே
    குருவின் நல்லுரைகள் எனக்கு“

    இந்தத் தலைப்பின் கீழ் 129 சரணர்கள் 30 பெண் வசனக்காரர்கள், 13 பெயர் தெரியாத சரணர்கள் என்ற நிலையில் மொத்தம் 172 எழுபத்திரண்டு வசனக்கார்களின் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

     – முற்றும்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 98 (மங்கலம்)

    சேக்கிழார் பாடல் நயம் – 98 (மங்கலம்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    மங்கலம்   பெருக  மற்றென்  வாழ்வுவந்  தணைந்த  தென்ன
    இங்கெழுந்   தருளப்   பெற்றது   என்கொலோ?  என்று  கூற
    ‘’உங்கள்   நாயகனார்   முன்னம்  உரைத்த  ஆகமநூல்  மண்மேல்
    எங்கும்  இல்லாத  தொன்று  கொடுவந்தே   னியம்ப ‘’ என்றான்.

    பொருள்

    “மங்கலம்பெருக மற்றும் எனது வாழ்வேவந்து அணைந்தது என்னும்படி இங்குத் தேவரீர் எழுந்தருளும் பேறு வாய்க்கப்பெற்ற தென்கொல்?“ என்று சொல்ல, “உங்கள் நாயகராகிய இறைவனார் முன் சொல்லிய ஆகமநூல் இம்மண்ணுலகத்தின் மேலே எங்கும் இல்லாததாகிய ஒன்று உமக்கு இயம்புதற்காகக் கொண்டு வந்திருக்கிறேன்“ என்று (முத்தநாதன்) சொன்னான்.

    விளக்கம்

    மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது – மங்கலம் பெருக – இஃது மங்கல வழக்காகப் பின்நிகழ்ச்சிக் குறிப்பாய்ப் பிறிதொரு அமங்கலப் பொருள் தொனிப்பது காண்க. வாழ்வு வந்து – வாழ்வே ஓர் உருப்பெற்று என் முயற்சியின்றித் தானே வந்தது, வாழ்வுக்கு இறுதி எல்லையாகவந்து என்ற குறிப்புமாம்.

    அருளப் பெற்றதென் கொலோ? – தேவரீர் இதுபோழ்திலே இங்கு வந்த காரியம் யாது? என்ற சொன்னயமும், அடியார்பால் வணங்கி வினாவும் மரபும் காண்க.

    உங்கள் நாயகனார் – இங்கு உங்கள் என்பது மிக்க உரிமைப்பாடு குறிப்பதோர் வழக்கு. “இசையாழ் உங்க ளிறைவருக்கிங் கியற்றும்“ (திருஞான – புரா – 134); “அப்பர்! உங்கள் தம்பிரானாரைநீர் பாடீரென்ன“ (திருநா – புரா – 186)

    என்றஇடங்களில் தமக்கு உரிமையுள்ள தோணியப்பரை, ஆளுடைய பிள்ளையார், திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும், திருநாவுக்கரசு நாயனா ருக்கும்  தம்மிலும் உரிமையுடையராக்கி உரைத்த சொல்லாட்சிகள் காண்க. உலக வழக்கிலேயும் பெண்கள் தமக்குரிய நாயகனைப்பற்றிப் பேசும்போது முன்னிற்பாருக்கு அவனது மிக்க உரிமை புலப்படுமாறு உங்கள் அண்ணன்; மைத்துனர்; என்று குறிக்கும் வழக்கும் காண்க. ஆயின் இங்கு முத்தநாதன் அந்நாயகனார்க்குத் தொடர்பில்லாமற் புறம்பாயினவன் என்று குறிப்புத் தருதலுங் காண்க.

    முன்னம் – சிருட்டியாரம்பத்திலே, ஆகம நூல் – ஆகமம். (1)உயிர்களின் பாசம் போக்கி வீடு தருவது, (2) பதிபசுபாச இயல் தெரித்து உண்மை உணர்த்துவது என இருவகையிலும் இதற்குப் பொருள் கூறுவர்.

    மண்மேல் எங்குமில்லாதது – இவன் ஏந்திய படையாகிய நூல் உண்மையில் மண்மேலன்றி, விண், பாதலங்களிலும் எங்கும் இல்லாததொன்றேயாம். அப்படையினை ஆக்கிய இரும்பு  என்னும் உலோகமும்  மண்ணினுள் இருப்பதன்றி மண்மேல் உள்ள தன்று என்பதுமாம். மண்மேல் ஒருவரும் இதுவரை அறியாதது என்றலுமாம்.

    இயம்பக் கொடுவந்தேன் – என்று மாற்றுக. இவ்வாறன்றிச் சொன்மாறிக் கூறுதல் அவனது உள்ளக்கரவினால் உளதாகிய தடுமாற்றங் குறித்தது. இதனால் உறுதி பயக்கும் ஞானங்கள் காலமிடம் கருதாது எக்காலத்தும் எவ்விடத்தும் கேட்கத்தக்கன என்ற விதியினை அவன் குறித்து உரைத்தான் என்பர்.

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 10

    பரிமேலழகர் உரைத்திறன் – 10

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘சொல்’ வரவும் பொருள் நிறைவும்

    முன்னுரை

    ‘நல்வரவு’ என்பது சடங்குகளிலும் விழாக்களிலும் பெருவழக்கு. ‘சொல்வரவு’ உரையாசிரியர்களுக்கு உரியது. சொல்வரவு என்றால் என்ன? நூலாசிரியரின் உள்ளக் கருத்தினை முற்றுணர்ந்து உரையெழுதுங்கால் அக்கருத்தினை முழுமையாக வெளிப்படுத்தும் சொற்கள் அல்லது சீர்கள் அப்பாட்டில் காண இயலாதபோது உரையாசிரியர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களை வருவித்துக் கொள்வதற்கே சொல்வரவு என்று பெயர்.   சொல்லை வரவு வைப்பது. சொல்வரவாகும். செல்வமாகிய பொருளை வரவு வைப்பது உலகியல்பு. ஆனால் பாட்டில் இல்லாத சொற்களைப் பெய்து பாட்டுக்கான முழுப்பொருளையும் வரவு வைப்பது உரையாசிரியர் சிந்தனைத் திறனாகக் கொள்ளப்படும். திருக்குறளின் குறுகிய வெண்பா யாப்பு என்னும் வடிவத்தைப் பரிமேலழகர் எப்போதும் நினைவிற்கொண்டே உரையெழுதுகிறார். அதனால்தான் ஆழமான பொருள் அடங்கிய யாப்புக்குள் அமைகிறபோது ‘உய்த்துணர்தல்’ என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடுகிறது. உய்த்துணர்வும்  உரை சிறப்பும் நேர்விகிதத்தில் அமைவதே சிறப்பு.

    ‘சொல்வரவு’ ஓர் விளக்கம்

    கட்டுரையின் தோரண வாயிலாகச் சொல்வரவு என்பதைப் புரிந்து கொள்வது அதன் உள்ளடக்கத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள ஏதுவாகலாம்.

    “சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
    ஏமப்புணையைச் சுடும்” (306)

    என்னும் குறட்பாவில் “சினமென்னும் நெருப்பு தனக்கு இடமானவரையே யன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புணையைச் சுடும்’ என்று உரையெழுதினார் பரிமேலழகர். ‘இனத்தை ஏமப்புணையாக’ உருவகம் செய்த திருவள்ளுவர் அப்புணையால் கடக்கும் பிறவியைக் கடலாக உருவகம் செய்யவில்லை என்பதைப் பரிமேலழகர் அறிந்து கொள்கிறார். கொண்டு,

    “இன மென்னும் ஏமப்புணை என்னும் ஏகதேச உருவகத்தால் பிறவிக்கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற என வருவித்து உரைக்க”

    என்று புணைக்கேற்ற எதிர்நிலை உருவகத்தைத் தம் சிந்தனையாற்றலால் சில சொற்களை வருவித்து உரையெழுதுவதன் மூலம் கண்டறிந்து கூறுவதைக் காணலாம். மேற்கண்ட சில சொற்களை வருவித்து உரைக்காமல் குறட்பாவின் ஏழு சீர்களுக்கு மட்டும் உரைசொன்னால் ‘இனமென்னும் ஏமப்புணை’ என்னும் உருவகம் விளக்கம் பெறாத நிலையில் வெகுளாமையினால் வரும் நன்மையும் வெகுளியினால் வரும் இழப்பும் முற்றும் புலப்படாது.

    புகழ்வதற்கும் தகுதி வேண்டும்!

    இன்றைய நடப்பியல் உலகில் சில பொருத்தமற்ற செயல்பாடுகளை அனைவரும் காண முடியும். குறிப்பாக அரசியற்களத்தில் இது அதிகம். ஒரு நிகழ்வு. தகுதி வாய்ந்த ஒருவரைத் தகுதியே இல்லாதவர் பாராட்டுவது. அதுபோலவே பெருந்தகுதி வாய்ந்த ஒருவரைத் தகுதியே இல்லாதவர் விமர்சிப்பது. ‘உரிமை’ என்ற பெயரால் நடக்கும் இந்தக் கூத்து பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால் அச்சான்றோர்கள் உயிரோடிருக்கும் நிலையில் அவ்விரண்டனையும் ஒன்றாகவே பாவித்துப் புன்னகையோடு அமைதியடைவர். இந்தப் பின்புலத்தை நன்கு உள்வாங்கிக் கொண்டால்தான் பின்வரும் குறட்பாவிற்குப் பரிமேலழகர் எழுதிய உரை நுட்பம் புரியக்கூடும்.

    “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்
    சான்றோன் எனக் கேட்ட தாய்” (69)

    என்ற குறட்பாவிற்குத் (தான் தாயான அத்தருணத்தில்)

    “தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும்; தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தானென்று (அறிவுடையோர்) சொல்லக் கேட்ட தாய்”

    என்று உரையெழுதிய பரிமேலழகர் குறட்பாவில் இல்லாத ஒரு எழுவாயைப் பற்றிச் சிந்திக்கிறார். ‘தன் மகன் சான்றேன்’ எனக் கேட்ட தாயைக் காட்டிய வள்ளுவர், ‘சான்றோன் எனப் புகழ்ந்தவரைச்’ சுட்டவில்லை. ‘பாம்பறியும் பாம்பின் கால்’ என்பதும் ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பதும் வழக்கு. இவற்றை முற்றும் அறிந்த பரிமேலழகர், ‘தந்தை அவையத்து முந்தியிருப்பச் செய்த மகனை அறிவுடையார் சான்றோன் எனப் புகழக்கேட்டால்தான் தாய் மகிழ்வாள்’ என்று சிந்தித்து உரையெழுதினார். ஆனால் ‘அறிவுடையார்’ என்னும் சொல் குறட்பாவில் இல்லை. பரிமேலழகர் அதனை வருவித்து எழுதி அதற்கான காரணத்தையும் பதிவு செய்கிறார்.

    “அறிவுடையார் என்பது வருவிக்கப்பட்டது சான்றோன் என்றற்கு உரியவர் அவராகலின்”

    பரிமேலழகர் இதனை வருவித்து உரைக்காவிட்டால் புகழுதற்குரியார் யார் என்பது புலப்படாததோடு, தகுதியுள்ள ஒருவனைத் தகுதியற்றவர்களும் புகழும் நிலை வரலாம் என்னும் பிறழ உணரும் நிலை வந்துவிடும். திருவள்ளுவரின் கருத்து அதுவல்லவாதலின் ‘புகழ்வதற்கும் தகுதி வேண்டும்’ என்னும் நுட்பத்தை உணர்ந்துரைக்கிறார் பரிமேலழகர்!.

    எதுவரை இருக்கும் ‘இசை’?

    உலக வழக்கில் ஒரு தொடரைப் பலரும் செவிமடுத்திருக்கலாம். ‘அவர் மறைந்தாலும் அவர் புகழ் இருக்கும்’ சரி!. எதுவரை இருக்கும்? அவர்தான் மறைந்துவிட்டாரே? அவரை யார் புகழ்வர்? அவரைத் தவிர மற்றவர்கள் அவரைப் புகழ்ந்து கொண்டிருப்பார்கள். அது எதுவரை நீளும்? இந்த உலகத்தின் இறுதி மனிதன் இருக்கிறவரை நீளும். அப்படியானால் புகழ் என்பது இந்த உலகம் உள்ளவரை அழியாது நிற்கும். இதுபற்றிய திருக்குறள் ஒன்று இப்படி அமைந்திருக்கிறது.

    “ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்குப்
    பொன்றும் துணையும் புகழ்” (156)

    “தமக்குத் தீங்கு செய்தாரை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொருநாளைய இன்பமே. அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்“ என்று உரையெழுதுகிறார் பரிமேலழகர். புகழுக்குரிய காரணங்கள் ‘கல்வி, ஆண்மை’ (231) எனப் பல. அக்காரணங்களைச் செய்கிறவன் மறைகிறான். அவன் தேடிய புகழ் இறவாமல் நிற்கிறது. ‘இறவாது நிற்கும் கீர்த்தி’ (புகழ் அதிகார முன்னுரை)  ‘செய்தவர் இறந்து போக தான் இறவாது நிற்கும்’ (238) என்றெல்லாம் பரிமேலழகர் சொற்பொருள் விரிப்பார். அது இவ்வுலகம் உள்ளளவும் அழியாது நிற்கும். உலகம் அழிகிறபோது புகழும் அழியும். ‘பொன்றுந் துணையும் புகழ்’ என்றாரேயன்றி ‘எது பொன்றும்? என்பதற்கான எழுவாய் பாட்டில் இல்லை. வாழையடி வாழையாகத் தோன்றும் உலகத்துச் சான்றோர் புகழைச் செய்வதனைத் தொடர்ந்து புகழ்ந்து கொண்டேயிருப்பர். இத்தகைய பொருள் விரிப்பதற்கு ஏதுவான ‘உலகம்’ என்னும் சொல் குறட்பாவில் இல்லையென்பதை உணர்ந்து கொண்ட பரிமேலழகர்,

    “ஆதாரம் ஆகிய உலகம் பொன்ற புகழும் பொன்றுமாகலின் ஏற்புடைய உலகு என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது”

    என்று விளக்கவுரை எழுதுகிறார். புகழ் அழியாது நிற்பது. புகழைச் செய்தவர் மறைந்தாலும் அவரைப் புகழ்வார் தோன்றிக் கொண்டே இருப்பர். இச்சான்றோர்களையே ‘உலகம்’ என்னும் சொல் சுட்டும். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்பது சேந்தன் திவாகரம். சான்றோர்களைக் குறிக்கும் இச்சொல் இத்திருக்குறளில் இல்லையாதலின் அதனை வருவித்து உரைக்கிறார் பரிமேலழகர். இவ்வாறு ‘உலகம்’ என்னும் இச்சொல்லை வருவித்து உரைக்காவிட்டால் ‘எது பொன்றும் அளவும்?’ என்னும் வினாவுக்கு விடையின்றிக் குறட்பா ‘குன்றக்கூறல்’ என்னும் குறைபடுதற்கு வாய்ப்பு உண்டு. ஒரே ஒரு சொல்லை வருவித்து உரைத்ததன் மூலம் “பிறருடைய தீமையைப் பொறுத்துக் கொண்டவர்கள் உலகம் உள்ளவரை (அதாவது உலகம் அழியும் வரை) புகழப்படுவார்கள் என்னும் முழுமையான குறட்பாவின் கருத்து புலப்படுகிறது!.

    சொன்னால்தான் சிக்கல்

    சொல்லுக்கு இரண்டு பண்புகள் இன்றியமையாதன. ஒன்று அது சொல்வானுக்கும் கேட்பானுக்கும் நன்மை தர வேண்டும். இரண்டு பண்போடு கூடிய சொற்களாக அமைதல் வேண்டும். இவ்விரண்டு தன்மைகளும் இல்லாத சொற்களைப் பல்லார் நிறைந்த அவைக்கண் பேசுவது அவர்மாட்டு நீதியோடு படாததாய்ச் சொல்பவனை நற்குணங்களின் நீக்கும். இந்தக் கருத்தமைந்த திருக்குறள் பொறையுடைமை அதிகாரத்தின் நான்காவது குறட்பாவாக அமைந்திருக்கிறது.

    “நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன்சாரா
    பண்பிற் சொல் பல்லாரகத்து” (194)

    “பயனோடு படாத பண்பில் சொற்களை ஒருவன் பலரிடைச் சொல்லுமாயின் அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும் எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “பண்பு – இனிமையும் மெய்ம்மையும் முதலாய சொற்குணங்கள். சொல்லுமாயின் என்பதும் அவர் மாட்டு என்பதும் எச்சமாக வருவிக்கப்படடன”

    என்று விளக்கமளிக்கிறார். இந்த விளக்கத்தில் குறட்பாவில் இல்லாத ‘சொல்லுமாயின்’, ‘அவர்மாட்டு’ என்னும் இரண்டு சொற்களை வருவித்துக் கொண்டு உரையெழுதுவதாகக் கூறுகிறார். சொல்லப்படும்போதுதான் சொற்களுக்கான விளைவுகள் உண்டு. மனத்துக்குள்ளேயே இருந்தால் அது சொல் அல்ல. பின் விளைவும் கிடையாது. அதிகாரமும் பயனில  சொல்லாமையேயன்றிப் ‘பயனில எண்ணாமை’ என்பதன்று. பாட்டில் இனிமையும் பயனும் இல்லாத சொற்களை ஒருவன் சொன்னால்தான் அந்த அவையினின்றும் நீக்கப்படுவான். அமைதியாக இருந்துவிடின் நீக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. பாட்டில் ‘சொல்லுமாயின்’ என்பதற்கான குறிப்பு இல்லை. குறிப்பு இல்லாதபோது பாட்டின் கருத்து தெளிவாகாது. எனவே பரிமேலழகர் ‘இனிமையும் பயனுமற்ற சொற்களைச் சொல்லுமாயின்’ என உரைகண்டு ‘சொல்லுமாயின்’ என்னும் சொல்லை வருவித்துக் கொண்டதாக எழுதுகிறார். இனி அவனை யார் நீக்குவது என்பதற்கும் குறட்பாவில் பொருத்தமான சொல்லாட்சி இல்லை. ‘பல்லார் அகத்து’ என்னும் தொடர்கொண்டு ‘அவர்மாட்டு அச்சொற்கள் நீதியோடு படாவாய்’ என எழுதுகிறார். எனவே ‘அவர்மாட்டு’ என்னும் சொல்லை வருவித்துக் கொள்வதாகக் கூறி உரைநிறைவு காண்கிறார். இவ்வாறு இவ்விரண்டு சொற்களையும் வருவித்து உரை கண்டிருக்காவிட்டால் என்ன நேர்ந்துவிடும் எனச் சிலர் நினைக்கக்கூடும். பயனும் இனிமையும் அற்ற சொற்களை நினைத்தாலும் கேடுவருமா என்னும் ஐயத்தைக் குறட்பா களைந்திருக்க முடியாது. ‘பயன்சாராப் பண்பில் சொல் பல்லாரகத்து நயன் நீக்கும்’ என்றுதான் இருக்கிறதே தவிர, ‘பல்லாரகத்துச் சொன்னால்தான் நீக்கும்’ என்பதாகவோ யார் அவனை நீக்குவார்கள் என்பதற்கான விடையோ குறட்பாவில் இல்லை. இவ்விரு ஐயங்களையும் களையுமாறு பரிமேலழகர் உரை அமைந்திருப்பதைக் காணலாம்.

    மேகம் மழையாகலாம்! மழை மேகமாகாது!

    இயற்கையை மனிதன் பயன்படுத்திக் கொள்ளலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் அதன் கோரத்தாண்டவத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.  ஆனால் அதனை மறுதலிக்கவோ மாற்றவோ எதிர்த்து நிற்கவோ இயலாது. காரணம் அது இயற்கை. இறைவனின் மறுவடிவம். இதனை முற்றும் உணர்ந்தவர் திருவள்ளுவர். மழையின் சிறப்பை முற்றச் சொல்லும் ‘வான்சிறப்பு’ என்னும் அதிகாரத்தில் விடுபட்ட கருத்தொன்றினை நினைவோடு ஒப்புரவறிதல் என்னும் அதிகாரத்தில் உவம அளவையால் பதிவு செய்து நிறைவு செய்கிறார். ஒப்புரவை யாரும் செய்யலாம். ஆனால் மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளுக்கு எதிர்வினை ஆற்ற இயலாது. இந்தக் கருத்தினைச் சொல்லவரும் திருவள்ளுவர் அவருக்கு மேகத்தை உவமமாகக் கொள்கிறார்.

    “கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு
    என்னாற்றும் கொல்லோ உலகு?” (211)

    என்னும் குறட்பாவிற்குத்,

    “தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யா நின்றன? அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல”.

    எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “என் ஆற்றும்? என்ற வினா யாதும் ஆற்றா என்பது தோன்ற நிற்றலின் அது வருவித்து உரைக்கப்படும்”

    என்று விளக்கவுரை தருகிறார். இந்த விளக்கவுரையில் ‘யாதும் ஆற்றா’ என்னும் குறட்பாவில் இல்லாததொரு சொல்லை வருவித்துப் பயன்படுத்துகிறார். அதற்கான காரணத்தையும் அவரே பதிவு செய்கிறார். ‘உன்னால் முடியுமோ எனின் முடியாது’ என்பது போல ‘என் ஆற்றும்?’ என்ற வினா ஆற்றாது என்பது தோன்ற நிற்கிறதாம். அதனாலேயே ‘யாதும் ஆற்றா’ என்பதை வருவித்து உரைத்ததாகக் கூறுகிறார்.

    • யாதும் ஆற்றா என்னும் இரண்டு சொற்களை வருவித்து உரைத்திருக்காவிட்டால் ஏதேனும் ஆற்றக் கூடுமோ? என்னும் ஐயம் களையும் ஆறில்லையாம் என்க.

    இந்த உவமத்தில் சிறப்பு என்னவென்றால் மேகம் மழையாகுமேயன்றி அம்மழை மேகமாகாது. மேகத்தையொப்பார் செய்யும் ஒப்புரவு அத்தகையது. அதாவது திரும்பச் செய்ய இயலாது என்பதாம். குறட்பாவின் நுட்பம் என்னவெனின் மழையான மேகம் கலைந்துவிடுமாம்!. பரிமேலழகர் உரை நுட்பம் என்னவெனின் மாரிக்கு மழையென்னும் பொருளிருக்க ‘மேகம்’ என்று பொருள் உரைத்ததுதான்!

    உளர் சிலராகிய காரணம்

    இவ்வுலகில் செல்வர் சிலராகவும் வறியவர் பலராகவும் இருப்பதற்கு ஒவ்வொரு துறை சார்ந்தவரும் ஒவ்வொரு கருத்தினைச் சொல்வர். அது இயற்கையே. அறம் உரைக்க வந்த திருவள்ளுவர் இதற்கு அறவழிக் காரணம் காண்கிறார். இல்லாதவர் பலராக இருப்பதற்கு நோலாதவர் அதாவது தவம் செய்யாதவர் பலராக இருப்பதுதான் காரணம். இருப்பவர் சிலராக இருப்பதற்குக் காரணம் நோற்பார் அதாவது தவம் செய்பவர் சிலராக இருப்பதுதான் காரணம் எனத் தெளிவாக்குகிறார். இந்தக் கருத்திலும் காரண, காரிய விளக்கத்திலும் நாம் செல்லவில்லை. இந்தக் கருத்தினைத் திருவள்ளுவர் பதிவு செய்திருக்கிற முறை கற்பாருக்கு எளிதாக இருக்கிறது எனக் கருதுமாறு இல்லை. பாடல் எப்படியிருக்கிறது?

    “இலர் பலராகிய காரணம் நோற்பார்
    சிலர் பலர் நோலா தவர்” (270)

    ‘இலர் பலராகிய காரணம் நோற்பார் சிலர்’ என்று இருக்கிறது!. எவ்வளவு பெரிய முரண்? நோலாதவர் பலராக இருப்பதால்தான் இலர் பலராகின்றனர். ஆனால் திருவள்ளுவர் யாப்புக்கட்டமைப்பைக் கருதிக் குறுகத் தறித்த காரணத்தால் நோற்பார் சிலர் என்பதற்கான காரியத்தைச் சொல்லாமல் விடுகிறார் என்பதை உய்த்துணரலாம். ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர்’ என்பது போன்ற உடன்பாட்டைப் பலவிடங்களில் முன்னெடுத்த திருவள்ளுவர் இங்கே இல்லாதவராகிய எதிர்மறையை முன்னெடுக்கிறார். எடுத்தவர் அதனை இன்னும் குழப்பமாக ‘நோற்பார் சிலர்’ என்று காரணத்தைக் கூறுகிறார். இந்தத் தொடர் எப்படி இருந்திருக்க வேண்டும்? இலர் பலராகிய காரணம் நோலாதவர் பலர் என்றல்லவா இருந்திருக்க வேண்டும்? அப்படியில்லையே? எனவே  உரையாசிரியர் பரிமேலழகர் தனது கடமையை உணர்ந்து ‘நோற்பார் சிலர்’ என்னும் காரணத்திற்கான காரியத்தை வருவித்து உரைக்கிறார், எப்படி? இப்படி!

    “நோற்பார் சிலர் எனக் காரணம் கூறினமையின் காரியம் வருவித்து உரைக்கப்பட்டது”

    இலர் பலராகிய காரணம் – உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின் நோற்பார் சிலர் நோலாதவர் பலர் – தவம் செய்வார் சிலராக அது செய்யார் பலராதல்.

    • இலர் பலராகிய காரணம் என்றே பாட்டில் அமைந்திருக்க, பரிமேலழகர் உளர் சிலராகிய காரணத்தையும் குறட்பாவிலிருந்து எடுத்து மொழிகிறார்.
    • நோற்பார் சிலர் என்னும் காரணத்திற்கான காரியத்தைக் கண்டறிந்து உளர் சிலர் என்பதையும் எடுத்து மொழிகிறார்.

    இவ்வாறு ‘நோற்பார் சிலர்’ என்பதற்கான காரியத்தைக் கண்டறிந்து அதனை வருவித்துக் கூறியிருக்காவிட்டால் ‘நோற்பார் சிலராக இருப்பதனால் இலர் பலரானார்’ என்னும் பொருள் மயக்கம் நிலவும். மேலும் நோற்பார் சிலர் என்பதற்கான காரியம் இறுதிவரைக் கண்டறிய இயலாமற் போயிருக்கும்.

    இளமையில் துறப்பதே இன்பம்

    அறத்துப்பால் துறவறவியலில் அமைந்திருக்கிற அதிகாரங்களில் துறவு என்பதும் ஒன்று. அதனுள் இரண்டாவது பாடலாக அமைந்திருப்பது,

    “வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின்
    ஈண்டு இயற்பால பல” (342)

    என்னும் குறட்பாவாகும். இக்குறட்பாவுிற்குத்,

    • துறந்தபின் – எல்லாப் பொருள்களையும் துறந்தால்
    • ஈண்டு இயற்பால – ஒருவர்க்கு இம்மைக்கண்ணே உளவாம் முறைமையையுடைய இன்பங்கள் பல
    • வேண்டின் – அவ்வின்பங்களை வேண்டின்
    • உண்டாகத் துறக்க – அவற்றைக் காலம் பெறத் துறக்க

    எனப் பொழிப்புரை எழுதுகிறார். ‘துறக்க’ என முதலில் ஏவிய திருவள்ளுவர் அவ்வாறு (துறந்தால்) ‘அதன் பயனாக இம்மையில் கிட்டுகின்ற இன்பங்கள் பல’ எனத் தொடர்ந்துரைக்க, பரிமேலழகர் இன்பங்களை முதலில் காட்டி அவ்வின்பங்கள் வேண்டுமானால் நீ துறக்க என மாற்றி உரையெழுதுகிறார்.  அவ்வாறு எழுதியவர்,

    “இன்பங்கள் என்பதும் காலம் என்பதும் வருவிக்கப்பட்டன”

    என்றும் எழுதுகிறார்.

    • பாட்டில் வேண்டின் என்றிருக்கிறதேயன்றி “எவை வேண்டின்?” என்னும் செயப்படுபொருள் இல்லை.
    • அதுபோலவே பாட்டில் துறக்க என்றிருக்கிறதேயன்றி எப்போது என்னும் பொழுது இல்லை.

    பரிமேலழகர் வருவித்தவையும் அவற்றிற்கான காரணங்களும்

    மேற்கண்ட குறட்பாவின் விளக்கவுரையில் இன்பங்கள் என்பதையும் காலம் என்பதையும் பரிமேலழகர் வருவித்து உரைத்தமைக்குச் சில காரணங்கள் உண்டு. துறவு பொதுவாயினும் இளமையில் துறத்தலே சிறப்பு. ஏனெனில் அவ்வாறு இளமையிலேயே துறந்துவிடின் துறக்கப்பட்ட நாளிலிருந்து பெறக்கூடிய இன்பங்களின் கால அளவு கூடும். இதனை அந்தக் குறட்பாவின் விளக்கவுரையில்,

    “மனமொழி மெய்கள் அலையாது நிற்றலானும், அவை நன்னெறிக்கண் சேறலானும் வருவன”

    என்று எழுதிக்காட்டுகிறார். எனவே துறவு பொதுவாயினும் இளமையில் துறத்தல் பற்றிய சிந்தனையும் அதன் பயன்களையும் பரிமேலழகர் தெள்ளிதின் உணர்ந்தவர்.

    • “நரைவரும் என்றெண்ணி நல்லறிவாளர் குழவியிடத்தே துறந்தார்” (நாலடியார்1.)
    • “மற்று, ‘அறிவாம் நல்வினை’ ‘யாம் இளையம்” நாலடியர்9)

    என்றெல்லாம் விரவி நிற்கும் சிந்தனைகளை நன்கு உள்வாங்கிய காரணத்தால் ‘உண்டாகத் துறக்க’ என்பதற்குக் ‘காலத்தால் துறக்க’ என்னும் சிறப்புரை கண்டார் பரிமேலழகர். ஒன்றினைத் துறக்க வேண்டின் அதற்கு மாற்றாக மற்றொன்றினைக் காட்ட வேண்டுமாதலின் ‘வேண்டின்’ என்பதற்கான செயப்படுபொருளாகிய ‘இன்பங்கள்’ என்பதை வருவித்து உரைக்கிறார். இவ்வாறு வருவித்து உரைக்காவிடின் எவை வேண்டின் என்னும் தெளிவும் எப்போது துறப்பது என்னும் காலமும் புலப்படாதாம்!.

    நிறைவுரை

    எழு சீர்களுக்குள் எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய கடப்பாடு திருவள்ளுவருக்கு இருந்திருக்கிறது என்பதை நன்கு உணர்ந்தவர் பரிமேலழகர். எழுவாய் இல்லாமல் குறள் அமைகிறது. செயப்படுபொருள் இல்லாமல் அமைகிறது. உவம விளக்கம் இருந்து பொருள் விளக்கம் குன்றி அமைகிறது.  பொருள் விளக்கம் இருந்து உவமம் தனித்து நிற்கிறது. உவமமும் பொருளும் தனித்தனியே நிற்கின்றன. காரணம் இருக்க காரியம் புலப்படுவதில்லை. காரியம் தெளிவாகக் காரணம் அறியுமாறு இல்லை. இவ்வாறு திருவள்ளுவரின் உள்ளத்தின் முழுப்பரப்பையும் சொற்களால் காட்ட இயலாதபோது அதனைத் தம் நுண்மாண் நுழைபுலத்தால் கண்டறிந்து ஆங்காங்கே சில சொற்களை  வருவித்து உரைகாண்பதன் வழித் தமது உரைப்பணியை நிறைபணியாகச் செய்து முடித்திருக்கிறார் பரிமேலழகர் என்பதே மேற்கண்ட சில சான்றுகளின் வழிப் பெறப்படும் அவருடைய உரைத்திறனாகும்.

    (தொடரும்…)

    Share