Category: மரபுக் கவிதைகள்

  • ரயிலு வண்டி

    மீ.விசுவநாதன்

     
    ரயிலுவண்டி வருகிறது – அது
    ராவில் ஊருள் நுழைகிறது
    குயிலுகுரல் கொடுக்கிறது – படு
    குஷியாய்ப் பக்கம் வருகிறது !

    வெளிச்சமுடன் அருகினிலே – ஒரு
    விஷயம் சொல்லத் துடிக்கிறது !
    முளிச்சபுள்ள கதவருகில் – என்
    முகத்தப் பாத்துச் சிரிக்கிறது !

    சிறுவசில தெருவுனிலே – அவள்
    சிலுப்பி நடந்த நினைவிருக்கு
    வறுகடலை எடுத்துவந்து – என்
    வாயில் தந்த உணர்விருக்கு !

    அவளையிங்கு இறக்கிவிட்டு – ரயிலு
    அடுத்த ஊரு நகர்கிறது
    இவளையிங்கு இணைவதற்கு – இந்த
    ரயிலு தானே உதவியது !
    (03.07.2016)

    Share
  • மதயானை

    மீ.விசுவநாதன்

     

    நல்லவன் போலே தெரிகின்ற

    நடிப்புக் கலைஞன் நானேதான் !

    வில்லனை உள்ளே தெரியாமல்

    வெளியே சிரிப்பவன் நானேதான் !

    சொல்கிற வார்த்தை கனிபோலே

    சுகமாய்த் தருபவன் நானேதான் !

    சல்லடை யிட்டே சலித்தாலும்

    சாந்தி இலாதவன் நானேதான் !

     

    வல்லினப் பேச்சால் வகையின்றி

    வசைகள் பொழிபவன் நானேதான் !

    மெல்லின மாதர் மதிமயக்க

    மெய்யை மறைப்பவன் நானேதான் !

    கல்லிலும் பாலைக் கறக்கின்ற

    காசுக் கலைபவன் நானேதான் !

    துல்லிய மாக எடைபோடும்

    தூய இறையுளம் நானேதான் !

     

    பள்ளியில் தூங்கிப் படிக்காத

    பச்சைத் துரோகியும் நானேதான் !

    சுள்ளியில் கூடக் கவிதையினைச்

    சுண்டும் கவிஞனும் நானேதான் !

    கள்ளிலே தேனின் சுவைதேடும்

    கடைந்த அசடனும் நானேதான் !

    உள்ளிலே உள்ள மதயானை

    உருவாய் இருப்பவன் நானேதான் !

    Share
  • அந்தக் கரும்பு

    மீ.விசுவநாதன்

     

    அந்தத் துறவி அணுகித்தான்
    அறத்தி(ன்) அருகே அமர்ந்தேன்நான் !
    கந்தல் துணியை அணிந்தாலும்
    கவலை மறக்கத் தெரிந்தேன்நான் !
    பொந்தாய் இருக்கும் மனத்திற்குள்
    புதுமை வழிய இருந்தேன்நான் !
    வந்த வழியை மறக்காமல்
    வருமெ(ன்) உறவை அணைத்தேன்நான் !

    அணுவைப் பிளக்கு(ம்) அவசரத்தில்
    அகத்தி(ல்) அழுக்கை அடைத்தேன்நான் !
    அணுவில் அணுவாய் இருப்பவனை
    அறிய அவரைப் பணிந்தேன்நான் !
    கணுவே கரும்பிற் கழகென்று
    கையில் சுமந்து திரிந்தோனை
    கணுவைப் பிளந்து சுவைகண்டு
    கணத்தில் மனத்தை எரியென்றார் !
    (26.06.2016)

    Share
  • பகவத்கீதை பதினெட்டு!

     

    புலவர் இரா, இராமமூர்த்தி
    ***********************************

    12

    பகவத்கீ தையின் பதினெட்டுப் பாகமும்
    மிகவிரைந் தென்னுள் விளங்க – முகத்தில்
    இருகோடு கொண்ட எழிலானை உள்ளம்
    உருகித் துதித்தேன் உவந்து! 1.

    நீநினைப்ப தெல்லாம் நிகழுமா? நின்னினைப்பில்
    வீண்கருத்தே மேவி வெளித்தோன்றி – காணும்
    பிரச்சினை உன்னையே பின்னிப் பிணங்கும்
    சிரைத்திட்டால் போமோ சிகை! 2.
    சரியான நல்லறிவு சாத்திய மானால்
    அரிக்கும் கவலை அகலும்! – புரிந்த
    பொழுதில் புரியாமை முற்றும் புரியப்
    பழுது விலகும் பயன்! 3.

    பயன்பல நல்கிப் பழவினை போக்கி
    நயமாம் வளர்ச்சியை நல்கும்! – சுயநலம்
    இல்லா நிலையை எளிதாய் அடையும்
    நல்வாழ்வே மீளும் நலம்! 4.

    நடவடிக்கை யாவுமே நாதன் அருளை
    உடனளிக்கும் வண்ணம் ஒழுங்கின் – தடத்தில்
    நிகழின் பெருவாழ்வு நிச்சயம் நேரும்!
    புகழ்வீர் இறைதாள் புணர்ந்து! 5.

    நானென்னும் ஆணவம் நையும் படிநடந்தால்
    வானத்துச் சொர்க்கமே மண்ணிலே – தானாக
    வந்தடைந்த தேபோல் மகிழ்வில் திளைத்திடுவாய்!
    அந்தமில் லின்பம் மது! 6.

    வானகம் பற்றும் வழிதனைக் கற்றும் ,
    ஊனகம் நீக்கிய யோகந்தான் – ஈனும்
    முறையை அறிந்தே தியானம் முயல்தல்
    இறையை இணைவித் திடும்! 7.

    எவ்வெவ் வழியில் இறையுடன் ஒன்றும்
    அவ்வவ் வழியில் அலைவோர்க்கே, – செவ்வி
    தருபவன் கண்ணன்! இதுவே சரியாக
    வரும்மெய் அறிவாம் வழி! 8.

    ஆக்கம் அறிவோ டுரமும் அவனையே
    நோக்கும் பயிற்சியின் நுட்பமாய்த் – தேக்கி
    வெளிவிட் டடக்கும் பிராணாயா மத்தால்
    ஒளிவிட் டவனுள் ஒடுங்கு! 9.
    பழையோனை நுண்ணிய பண்பனை என்றும்
    அழியானைத் தேடும் அறிவால் – – விழைகின்ற
    ஆத்ம தரிசனம் கண்டாரே அப்பர
    மாத்மா அடிசாரு வார்! 10.

    கேட்டல் தெளிந்திடுதல் சிந்தித்தல் சேர்தலிவை
    தேட்டம் மிகுத்தாரின் தேவையாம் – நாட்டம்
    உடையாரின் செய்கைகள் எல்லாம் எனையே
    அடையும்! இதுவே அறிவு! 11.

    கடவுள் அருளின் கனபரி மாணத்தை
    அடவு பிடித்தறிய லாமோ? – படவரவின்
    மேலாடும் பாதச் சிறப்பினைப் பாம்பறிந்தால்
    சாலப் பணிவே தரும்! 12

    முப்பரி மாணமும் தாண்டிய மூலமே!
    எப்படி நின்னை அறிவேன்நான்?- தப்பிலா
    வித்தாய் இடையாய் கடையாம்எல் லாமேநான்!
    அத்தனைக் குள்ளும் அ(றி)ரி! 13.

    முப்பத்து முக்கோடி தேவரும் தானாகி
    தப்பில்லா மல்எல்லாம் தானாகி – எப்போதும்
    எங்கும் நிறைகாட்சி ஈசனே காட்டினான்;
    அங்கே விஜயற் கவன்! 14
    நம்பிக்கை யோடே மனத்திருத்தி நாடோறும்
    பம்பும் சகுணத்தை நிர்குணத்தைக் – கும்பிட்டே
    பரவி தியானம் பழகுவோர் காண்பார்,
    கரவில் இறைவன் கழல்! 15.
    எல்லாம் இறையருளே என்றறிந்து கொண்டிட்டால்
    எல்லாம் நலமாய் இயங்கிவிடும் – வெல்லும்
    இறைவனே அங்கும் இருப்பதால் எங்கும்
    நிறைவேறும் நந்தம் நினைப்பு! 16.

    மானுடக் கடமைகள் தம்மை மிகமதித்தே
    தானே தகுந்த கடன்களை – ஆன
    வரைசெய்த லாலே வரும்பரி சாக
    விரையுமே, நீசெய் வினை! 17.
    நற்செயல் செய்யும் உரிமையை நாமே
    பெற்றிடின் பேராற்றல் பின்வரும் – முற்றும்
    இறைவன் அருளே அதற்கடை யாளம்!
    குறைவின்றி நீயதைக் கூடு! 18.
    உடன்விரைந் திடுவாய்! உனக்கெது மூலம்?
    அடைந்திடல் எப்படி எளிதாம் ? – இடைவிடா
    துன்னுள் முயன்றே உயர்பிர மத்தினைத்
    துன்னுக! அ.:.தே துணை! 19.
    முயற்சி பெரிதெனின் முற்றுவித் தின்பம்
    அயற்சியில் லார்க்கே அருளும் – இயற்கைப்
    பரம்பொருள் தன்னைப் பதினெட்டுப் பாட்டால்
    வரம்பெறச் செய்தேன் மகிழ்ந்து! 20.

    Share
  • படித்தல் சுகம்

    மீ.விசுவநாதன்

     
    படிக்கப் படிக்க இனிக்கிறது
    பலவாய்க் கருத்தும் விரிகிறது
    முடிக்க முடியாக் கதைகளுமே
    மூச்சில் முடிக்க முடிகிறது !
    கடித்துக் குதறும் படியாவும்
    காதல் பெருகும் மொழியாலும்
    துடிக்கத் துடிக்க மனம்பதற
    துன்பம் மறைய எழுதுகிறார் !

     

    சிரிக்கச் சிரிக்கச் சிலகதையும்
    சிந்தை மகிழப் பலகதையும்
    செரிக்க முடியாக் கருத்துகளைச்
    சேர்த்து வைத்த சிறுகதையும்
    உரித்தே அளிக்கும் பழம்போல
    உள்ளம் கவரும் கவிதைகளும்
    தரித்த அறிவுச் சுரங்கத்துள்
    தனித்தே அலைதல் சுகமன்றோ !

    (22.06.2016)

    Share
  • “குரு ரமணா”

    மீ.விசுவநாதன்

    மனத்தை அழிக்கப் பழகென்றாய் – ரமணா
    மனத்தில் நீயும் இருக்கின்றாய் !
    சினத்தை அழிக்கப் பழகென்றாய் – என்
    சிரமம் அறிந்து சிரிக்கின்றாய் !

    ஆசை அடக்கப் பழகென்றாய் – என்
    ஆசை உனதாய் அறிகின்றாய் !
    காசைத் துறக்கப் பழகென்றாய் -பொற்
    காசாய்ப் பொலிந்தே அழைகின்றாய் !

    அண்ணா மலையை நினையென்றாய் – நீ
    அண்ணா மலையாய்த் தெரிகின்றாய் !
    எண்ணா திருந்து களியென்றாய் – அந்த
    எண்ணா மருந்தின் சுவையானாய் !

    “யார்நீ?” எனநீ துளையென்றாய் – விடை
    யார்நீ அறிந்த அருளானாய் !
    ஊர்பேர் மறக்கப் பழகென்றாய் – நீ
    ஊர்பேர் வணங்கும் பொருளானாய் !

    (18.06.2016)

    Share
  • “மதச்சிறைக்குள்”

    மீ.விசுவநாதன்

    பச்சைக் கிளியில் பலவகை வண்ணமும்,
    கொச்சை மொழிசொலும் குஞ்சுக் குருவியில்

    மஞ்சள். கருஞ்சாம்பல். மாநிறம் என்றுபல
    நெஞ்சங் கவர்ந்த நிறைய வண்ணமும்.

    சேவலின் கொண்டையில் செந்நிறச் சேர்க்கையும்,
    தாவிடும் வானரத் தாடையில் சந்தனம்

    நீவிய நேர்த்தியும், நீந்திடும் மீனுக்கு
    ஓவியக் காந்த ஒளிமிகும் வைரமணிக்

    கண்களும், ஊறுகிற கட்டெறும்பின் நாசியில்
    மண்ணளக்கும் ஞானமும், வாலிலே நாய்க்குநல்

    நன்றி சொலும் நரம்புகளும், குட்டையான
    பன்றிக்கு வாயால் பகைவிரட்டு(ம்) ஆற்றலும்,

    பாம்பிற்கு ரெண்டு பகுதியென நாக்குகளும்,
    கூம்பி இருக்கும் குலைவாழைப் பூவுக்குள்

    கொத்தாகக் கொண்டு குவித்த பழக்கூட்ட
    சத்தான சந்ததியும், சங்கீதம் பாடுகிற

    ஆற்றுநீர் மூச்சுக்கு ஆதார வான்மழையும்,
    கூற்றுவன் வந்தாலும் கொஞ்சமும் அஞ்சா

    திருப்பூர் குமரன், இளைய பகத்சிங்,
    கருப்பை முதலே கடுமையாம் போராளி

    வீரத்திலகர், வ.உ.சி, வீரவாஞ்சி போன்றோரின்
    காரமிகு தேசபக்தி கல்யாண நற்குணமும்,

    நாயன்மார் ஆழ்வார்கள் ஞானியர் சொல்லமுதம்,
    தூயன்நா மாவதற்குத் தொண்டுசெய்த சான்றோர்கள்,

    வால்மீகி, கம்பன், மகத்தான காளிதாசன்,
    ஆல்போலே வேர்விழுதாய் ஆடாமல் நிற்கும்

    பரம்பரையைப் பெற்றுள்ள பாரதியார் தேன்கவியும்,
    வரம்வாங்கி வந்ததுபோல் வற்றாத் தமிழ்க்கவிதை

    கண்ணதாசன் சொன்னதுவும், கல்யாண சுந்தரத்தின்
    மண்வாசப் பாடலும் , வாலி, தமிழழகன்,

    ஞானக் கவிரவி, நா.சீ. வரதராஜன்,
    கானக் கவிதேவ நாரா யணனும் ,

    இலந்தை இராமசாமி, வேதமெனக் கூடிக்
    கலந்துற வாடுகின்ற சந்தவ சந்தமும்,

    தமிழர் உ.வே.சா. தவப்பயனும், இன்னும்
    அவிழாத பற்பல ஆன்றோர்கள் சாதனையும்,

    நாத்திகமும் ஆத்திகமும் நாகிழியப் பேசுகிற
    பாத்திரமாய்த் தோன்றிப் படக்கெனப் போவதுவும்,

    எத்தனையோ இப்படி எளிதாக எல்லாமே
    சத்தமின்றிச் செய்யும் சரித்திர நாயகனை

    மொத்தமாய்க் கட்டி முகத்தில் அன்பாலே
    முத்த மிடநான் முடிவெடுத்த வேளை

    மதச்சிறைக்குள் மாட்டியவன் வாடும்
    விதத்தினைப் பார்த்தே விரக்தியில் வாடுறேனே !
    (16.06.2016)

    Share
  • அவன்

     
    மீ.விசுவநாதன்

     
    அடடா அடடா ஆண்டவனே – என்
    அகத்தில் அன்பு பூண்டவனே !
    விடடா விட்டா என்றாலும் – ஒரு
    விளக்காய் உள்ளே ஒளிர்பவனே !

    எதற்கோ வந்து என்னுள்ளே – தன்
    இருப்பைக் காட்டிச் சிரிப்பவனே !
    பதற்கும் பசுமை காட்டுகிற – தன்
    பரந்த குணத்தால் நிறைந்தவனே !

    எவரோ துன்பம் அடைந்தாலும் – என்
    இதயம் வலிக்கச் செய்பவனே !
    சுவராய் இருக்கும் என்மூலம் – நல்ல
    சோதிக் கவிதை வரைபவனே !

    கவலை வந்த அணுநொடியில் – உள்
    கடவு(ள்) உணர்வு தருபவனே !
    திவலை நானாய் உணர்வதற்கு – பெரு
    வெள்ள வெளியாய் இருப்பவனே !

    இன்னும் உன்னை உணராமல் – இவன்
    இருக்கும் நிலையை வைத்தவனே !
    தன்னுள் என்னை வைத்ததனால் – அதில்
    தவறைக் காணா நல்லவனே !

    (14.06.2016)

    Share
  • “இறைவாசல்”

     

    மீ.விசுவநாதன்

    வெள்ளையாய் ஒருநேரம் -கரு

    நீலமாய் ஒருநேரம் – மேக

    வெள்ளமாய் ஒருநேரம் -செந்

    தீயென ஒருநேரம் -இடி

    மின்னலாய் ஒருநேரம் – சுடும்

    வெய்யிலாய் ஒருநேரம் -ஒளிப்

    பின்னலாய் ஒருநேரம் – வான்

    பெற்றதே அவதாரம்.

    கறுப்பென ஒருநேரம் – நிலாக்

    கடலென ஒருநேரம் – புள்

    பறக்கிற ஒருநேரம் – தூள்

    பறக்கிற ஒருநேரம் – விண்

    மீன்களால் ஒருநேரம் – வண்ண

    வில்லென ஒருநேரம் – பால்

    வான்வெளி அலங்காரம் -இறை

    வாசலின் புதுக்கோலம்.

    (10.06.2016)

    Share
  • எச்சரிக்கை மணி

    மீ.விசுவநாதன்

    குதிரையின் வேகம் இருக்கிறது – பணக்
    குறியாய் மனமும் அலைகிறது !
    கதிரையும் காற்று விசையினையும் – தன்
    கைக்குள் அடக்கத் துடிக்கிறது !

    பொய்தனைப் பூசித் திரிகிறது – தினம்
    போலி அன்பால் நடிக்கிறது !
    கைதனில் பொன்னை வைத்தபடி -மனக்
    கவலை நோயில் அழுகிறது !

    பெற்றவர் நோயில் கிடந்தாலும் – காசுப்
    பித்தால் கடிந்தே நடக்கிறது !
    மற்றவர் மதிக்க வேண்டுமென – கள்ள
    மனத்து முகத்தால் சிரிக்கிறது !

    ஆடிய ஆட்டம் அடங்குகையில் – உறவை
    அழுது புலம்பி அழைக்கிறது !
    தேடிய தீமை அணைக்கையிலே – தன்
    சித்தம் கலங்கி நிற்கிறது !

    (09.06.2016)

    Share
  • தர்மம்

     
    மீ.விசுவநாதன்

    தர்மம் செய்யும் கைகள்
    தர்மம் பெறுவ தில்லை !
    மர்மம் இதிலே என்ன ?
    மனத்தில் வறுமை இல்லை !
    இருக்கும் மட்டும் அள்ளி
    எடுத்துக் கொடுக்கும் எண்ணம்
    இருக்கும் வரையில் தர்மம்
    இளமை கொண்டே வாழும் !

    (05.06.2016)

    Share
  • அசரீரி!

    –மீ.விசுவநாதன்

    இதோஇதோ உன்மனசு – அதை
    இறுக்கிப் பிடிக்கப் பழகு
    அதோஅதோ என்றலையும் – அதை
    அமைதி யாக்கப் பழகு!

    எதாவது எண்ணியெண்ணி – கவலை
    இருட்டில் கிடக்கும் மனது
    சதாவது தவிக்கிறது – அதைத்
    தவத்தில் நிறுத்தப் பழகு!

    அழுக்கிலே ஊறியூறி – அது
    அகந்தை யோடு கிடக்கு!
    அழுக்கினை அன்பினாலே – ஒளி
    அடித்து வெளியில் விரட்டு!

    நடப்பிலே இன்பதுன்பம் – வெறும்
    நடிப்பு மாய உறவு
    கிடப்பிலே போட்டுநட -உள்
    கிடைக்கும் ஞானத் தெளிவு!

     

     

    Share
  • ஆச்சர்யம்

     
    மீ.விசுவநாதன்

    நேரம் போவது தெரிகிறது – அது
    நிற்பதில்லை ஏனெனத் தெரியவில்லை?
    பாரம் உடலெனத் தெரிகிறது – தினம்
    பசிக்கிறது ஏனெனத் தெரியவில்லை?

    மானம் பெரிதெனத் தெரிகிறது – மனம்
    மாசுதேடி அலைவதேன் தெரியவில்லை?
    கானம் சுகமெனத் தெரிகிறது – அதில்
    கரைகின்ற முறையேன் தெரியவில்லை ?

    தாழ்வும் உயர்வுமே தெரிகிறது – எனில்
    தரமில்லா பழக்கமேன் தெரிவதில்லை?
    வாழ்வும் பண்புமே தெரிகிறது – அதை
    வகையின்றிச் செய்வதேன் தெரியவில்லை?

    பேரும் புகழுமே தெரிகிறது – அதைப்
    பிடித்திடநற் சேவையேன் தெரியவில்லை?
    நீரும் நெருப்புமாய்த் தெரிகிறது -அந்த
    நிலைதான்”நான்” என்பதேன் தெரியவில்லை?

    (வாய்பாடு: மா, விளம், காய், காய், விளம், காய்)
    (23.05.2016)

    Share
  • ஓட்டுப் பெட்டி சொல்கிறது

    மீ.விசுவநாதன்

    evm

    வாக்களிக்க வாருங்கள் மக்களே – உங்கள்
    மனச்சாட்சி சொல்கேட்டால் நன்மையே !
    ஆக்கமுள பணிநானும் செய்கிறேன் – இந்த
    அழகான நாடுவாழ மையினால் !

    நல்லபாம்பு மான்குட்டி குணத்திலே – இங்கு
    நமதூரில் வேட்பாளர் நிற்கிறார் !
    வெல்வதற்குக் குறிவைப்பார் பணத்திலே -நீங்கள்
    விழவேண்டாம் அவர்விரிக்கும் குழியிலே !

    ஆட்காட்டி விரலில்மை தீட்டிடும் – அந்த
    அரைநொடியில் தலையெழுத்தே மாறிடும் !
    ஓட்டின்று உங்களது கையிலே – தேச
    உயர்வுக்கே தந்தாலே வெற்றியே !

    (12.05.2016)

    Share
  • ஸ்ரீ ஆதிசங்கரர்

    மீ.விசுவநாதன்

    816f9e7b-db00-4f76-8371-538cdd34eefe

    சிவகுரு ஆர்யாம்பாள் சீர்மிகுச் செல்வன்
    சிவனுரு வென்றே இருந்தார் – உவமை
    எதுவு மிலாத எளியதோர் ஞானி
    இதுவரை இல்லை இயம்பு. (1)

    இயம்பிய எல்லாமும் என்று மிருக்கும்
    சுயம்புவாம் தெய்வத்தைப் பற்றும் – பயம்வேண்டாம்
    பக்தியினால் உன்மனத்தைப் பக்குவம் செய்தாலே
    இத்தரையில் முக்தி எளிது. (2)

    எளிதல்ல அத்வைத ஏற்பென்று சொன்ன
    ஒளியற்ற வாதங்கள் ஓயப் பளிச்சென
    சங்கரர் வைத்த சபைவாதம் வென்றது !
    எங்குண் டவற்கே இணை. (3)

    இணையிலா கீதை பிரும்மசூத்ரம் மற்றும்
    அணையா உபநிடத பாஷ்யம் அனைத்துமே
    கற்றோர்கள் மெச்சிடக் கச்சிதமாய்ச் செய்தவரின்
    பொற்பாத மென்றும் புகழ். (4)

    புகழுக்காய் இல்லாமல் பூமியில் வாழ்வோர்
    அகழுக்கைப் போக்கியே ஆன்ம முகவொளியைக்
    காட்டிடவே வந்தவர்தான் காலடி சங்கரர் !
    சூட்டிடுவோம் நம்நன்றிப் பூ. (5)

    பூவைக்கும் போதிலே பொன்மழை கொட்டியே
    பூவைக்கு பேரனாக்கிப் போனவர்தான் – தேவை
    எதுவும் தனக்கிலா இன்பத் துறவால்
    பொதுவாகி நின்றார் பொலிந்து. (6)

    பொலிகின்ற ஞானத்தால் பொல்லா மதத்தை
    பலிசெய்த சன்யாசி ; பாபக் கலிதீர
    பாரத தேசத்தில் பக்திப் பயிறோங்கக்
    காரண சங்கரர் கார். (7)

    கார்மேகங் கூடக் கலைந்துடன் போகலாம் !
    சேர்நட்பும் பாய்ந்துநமைச் சீறலாம் – யார்செய்த
    புண்ணியமோ சங்கரர் பூமியிலே வந்திட்டார் !
    திண்ணிய முண்டு திரு. (8)

    திருவும் அறிவில் திடமாய் பலமும்
    அருவாம் அகத்திலே ஆன்மப் பெருக்கும்
    உருவாய் அமைந்த ஒளிசங் கரரை
    குருவாய்ப் பணியும் குலம். (9)

    குலம்பார்க்க வேண்டாம் ; குருபக்தி வைத்தால்
    நலம்கோடி சேருமாம் நம்பு – நிலம்வாழ்
    மலம்நீங்கிப் போகும் ; வருந்தாதே உள்ளே
    சிலம்ப லடங்க சிவம். (10)

    (ஸ்ரீ ஆதிசங்கர ஜயந்தி தினம் – 11.05.2016)

    Share