Tag: றியாஸ் முஹமட்

  • வெள்ள நிவாரணம்

    -றியாஸ் முஹமட்

    எங்கக் களிமண் வீடு
    மழையினால் கரைந்தோடுகிறது
    எங்க மூத்த ராத்தாவின்
    கண்ணீர் போல…

    சூடு கண்ட பூனையொன்று
    எழுந்தோட வழியில்லாது
    எங்க வீட்டு அடுப்பங்கரையிலே
    படுத்துக் கிடக்கிறது

    திண்ணையில் சுருண்டு
    படுத்துக் கிடக்கும்
    என் தம்பியின் முகத்தில்
    தின்ன ஏதாவது கிடைக்குமா என்ற
    ஏக்கப் பார்வை எனக்கு புரிகிறது…

    தேநீராவது
    வைத்துக் கொடுக்கலாம் என்று
    எனக்குள் எழுந்த தெம்பு
    அங்கே நனைந்து போன
    கொள்ளிக் கம்பு கண்டு
    கலைந்து போகிறது…

    பலத்த காற்றில்
    முற்றத்திலிருக்கும்
    முருங்கை மரம்
    முறிந்து கிடக்கிறது

    முரட்டுக் காற்றில்
    முறுக்கேறி நின்று போராட
    அதுயென்ன முதுரை மரமா?

    அடித்து இழுத்துச் செல்லும் வெள்ளத்திற்கு எங்கே தெரியப் போகிறது…
    எங்கள் மூன்று நேர உணவும்
    இந்த முருங்கை இலைக்கறிதான் என்று!

    காண் நீர் வழிந்தோட
    வாசற்படி நின்ற வெள்ளம்
    எங்கள் குடிசைக்குள்
    குடிகொண்டு விட்டது

    நோய்வாய்ப்பட்டுப்
    படுத்த படுக்கையாக் கிடக்கும்
    உம்மாவுக்கு
    இனி பாய் விரிக்க இடமில்லை

    வெள்ள நிவாரண அறிவிப்பு
    எங்கள் ஊர்
    பள்ளியில் முழங்க…
    சோர்ந்து போன
    எங்க  ராத்தாவின் முகத்தில் எத்தனை மின்வெட்டுக்கள்!

    விறைத்துப்போன
    உம்மாவின் கை
    நிவாரண அறிவிப்புக் கேட்டு
    சற்று உசும்பியது என்னவோ உண்மைதான்…

    பசி மயக்கத்தில்
    உறங்கிப் போன தம்பி
    பீக்கர் சத்தம் கேட்டு
    எழும்பிக் குந்தி விட்டான்
    ரொட்டி  தின்னப் போகும்
    மகிழ்ச்சி அவன் முகத்தில்

    சாய்மனைக் கட்டிலில் இருந்து
    ஒரு வேகத்தில் எழும்பிய வாப்பா
    என்ன நினைத்தாரோ தெரியவில்லை
    இனி அவருக்குப் பொறுமையில்லை

    மழை என்றும் பாராத வாப்பா
    பள்ளியை நோக்கி  நடையைக் கட்ட
    மழையோ ஊரை வெளுத்துக் கட்ட

    ஊரெல்லாம் வெள்ள ஓட்டம்
    பள்ளிக்குள்ளே மக்கள் கூட்டம்

    அங்கே மாவுக்காக
    மக்களோடு மக்களாக
    மல்லுக் கட்டிக்கிடக்குது
    பள்ளி நிர்வாகக் கூட்டம்

    சுருட்டுவோர் சுருட்டிக் கொண்டு போனதுபோக
    மிகுதி மாவாவது கையில் கிடைக்குமா என்ற பெரும்  ஏக்கத்துடன்

    கையிலே உரப் பையை
    இறுக்கிப் பிடித்தவாறே
    பள்ளிச் சுவரில் சாய்ந்து
    கிடக்கிறார் எங்கள் வாப்பா!

     

    Share
  • கூறு கெட்ட உலகம்

    -றியாஸ் முஹமட்

    கூறு கெட்ட உலகம்
    குனியக் குனியக் குட்டும்
    துணிந்து நீ எழுந்து நின்றா
    உன்னையே அது சுற்றும்

    பாடுபட்ட உள்ளம்
    விழுந்து கிடப்பதோ பள்ளம்
    சும்மாப் பார்த்துக் கொண்டே
    நின்றிருந்தா….
    அடித்தொதுக்கும் வெள்ளம்

    கேடு கெட்ட மனிதம்
    பகுத்தறிவு இல்லா மிருகம்
    பசி என்று வந்துவிட்டால்
    வேலியே பயிரை மேயும்!

    Share
  • பங்கீடு

    -றியாஸ் முஹமட்

    ஆல  மரம் ஒன்று
    சாய்ந்து கிடக்கிறது
    அது ஆண்ட அரண்மனை
    வெறிச்சோடிக் கிடக்கிறது!                   asset

    சொந்த பந்தம் எல்லாம்
    கூடி நிற்கிறது
    செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச்
    சேர்ந்து நிற்கிறது!

    பாடாய்ப்படுத்திய
    உள்ளமெல்லாம் பரிதவிக்கிறது
    பார் போற்ற வாழ்ந்தார் என்று 
    ‘சும்மா’ பறைசாற்றுகிறது!

    மரணித்த ஆத்மாவும் அழுகிறது
    அதைச் செவியேற்ற
    மரண வீடும் அதிர்கிறது!

    நன்றி உள்ள
    அந்த அரண்மனை நாயோ வாலாட்டுகிறது
    அங்கே பாடை ஏற்ற வந்த உறவுகளோ பெருமூச்சு விடுகிறது!

    இனி அடுத்த நிகழ்வு
    என்னவாகப் போகிறது…?
    சொத்துப் பங்கீட்டுக்காக
    முட்டி மோதப்போகிறது!

     

    Share
  • கல்லறை தேடும் வரிகள்!

    -றியாஸ் முஹமட்

    தீப்பந்தங்கள் எல்லாம் என்னை நோக்கியே குறி வைக்கப்படுகிறது
    கருகிப் போன என் தோல்களுக்கு
    வலி உணர்வு தெரிவதேயில்லை
    பாழாய்ப்போன என் மனதிற்குப்                       riyaz
    பாதகர்களின் கொடும் செயல் புரிவதேயில்லை!

    கருகிப்போன என்னுடம்பின்
    தழும்புகளையும், நரம்புகளையும்
    எலும்புகளையும்
    எப்படித்தான்
    அடையாளம் கண்டு சித்திரவதை செய்கிறார்களோ…?

    உணர்வுகளற்று
    உயிரும், கருகிப் போன
    உடல்தானே !

    இனி,
    கருநாகம் தீண்டினாலென்ன?
    கழுகுகள் கொத்தினாலென்ன?
    கண்டம் துண்டமா
    நீ வெட்டினாலென்ன?

    இறைவன் வகுத்த
    போதனையில்தானே வாழ்ந்தேன்
    ஏன் இந்தச் சித்திரவதையால்  சாகிறேன் !

    காலாவதியாகிப் போன
    என் ஆத்மா சாந்தியடைய…

    இறைவா!

    நீ தந்து விட வேண்டும் 
    எனக்கொரு கல்லறை
    என் தாய் நாட்டில்
    எனக்கொரு மண்ணறை!

     

    Share
  • சரித்திரம் படைக்கத் துடிப்பவன்டா!

    -றியாஸ் முஹமட்

    அந்த முள்ளி வாய்க்கால்தான்
    என் பெற்றோர்களுக்குக் கொள்ளி
    வைத்தது!

    அன்று ஈழத்து அகதிமுகாம்கள் கூட
    எங்களைத் தள்ளி வைத்தது
    என் பள்ளி படிப்புக்கு அன்றுதான்
    முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது!

    உறவுகள் இல்லாது ஒதுக்கப்பட்டவன்
    தேர்வு இல்லாமலே தெருவுக்கு வந்தவன்
    தேர் இழுக்கும் மாந்தர்கள் மத்தியில்
    பொதி சுமக்கும் கழுதையானேன்!

    ஒரு கூலிக்குப் பிறந்தவன்தான்
    அதற்காகக் கூனிக் குறுகி
    கேள்விக் குறியாக வாழ முடியுமா?

    அநியாயத்தைத் தட்டிக் கேட்பேன்
    தனித்து நின்றாலும் எதிர்த்து நிற்பேன்
    சமூகத்தைக் கூறு போட நினைத்தால்
    அவனைச் சந்தியில் வைத்து
    சந்து கிழிப்பேன்டா!

    அழுக்கன்தான்டா நான்
    அநீதிகளைக் கண்டால்
    வெடி குண்டா வெடிப்பேன்டா!

    என்னைச் சுட்டிப் பையன் என்று சொல்லாதே…
    சுட்டுப் போடுவேன்!
    கிட்ட வந்து நெருங்காதே
    வகுந்து போடுவேன்!
    ஊரில் உள்ள
    நாதாரி, காவாலிகளுக்கெல்லாம்
    இனி நான்தான்டா கோடாரி!

    சாக்கடையில்தான் நான் சங்கமித்தாலும்
    சமுத்திரத்தில் நான் குளித்தவன்டா
    சரித்திரம் படைக்கத் துடிப்பவன்டா
    பேய் பிடித்து ஆடுதடா உலகம்
    ஒரு புரட்சியில்லாது அடங்குமா
    கலகம்?

     

    Share
  • கரைந்த கற்பு!

    -றியாஸ் முஹமட்

    கடல் கடந்த கல்யாணி
    கட்டிய கணவனையும்
    கட்டியணைத்த குழந்தையையும்
    கலாசார மோகத்தால்
    களைந்திடுவாள்!

    கண் கூசும் ஆடை
    கண்றாவியாகிவிட…
    கவலைப்பட மாட்டாள்!

    கனவு காண்பாள்
    கடுகளவேனும்
    கணவனையோ, குழந்தையையோ
    கண்டிட மாட்டாள்!

    கண்ணுக்கு மையிட்டு
    ’கலர்புல்’ ஆடையணிந்து
    கால்குதி உயர்ந்து
    கதி மறந்துபோவாள்!

    காட்டரபி கூட
    கலங்கிடுவான்
    கண் கெட்டு நின்று விடுவான்
    கண நேரம்…!

    களைத்து வியர்த்து உழைத்துக்
    கண்ட காசு கரைந்திடும்
    கானலாகிவிடும்!

    கடிதம் காணாமல்
    கதி கலங்கிடும் குடும்பம்

    காலமோ கரைய
    களங்கமில்லாத கற்பையும்
    கள்வர்களிடம் கரைத்து,
    கட்டுநாயக்க விமானத்தளத்தில்
    கால்வைத்து விடுகிறாள்!

    கண்வைத்த தூரம்
    கட்டிய கணவனுமில்லை
    கருணைக் குடும்பமுமில்லை!

    கண நேரமாகியும் காத்திடுவாள்
    காக்கைகூட கவனிக்காது…

    கார் பிடித்து,
    காரைக்குடிக்குச் செல்வாள்
    கட்டிய வீட்டில்
    கட்டிய கணவன்
    கலக்கலாக வாழ்கின்றான் – பல
    கன்னிகளுடன்!

    கடி நாகம்
    கடித்தது போல
    கலங்கிடுவாள்,
    கரைந்து போன
    கற்போடு!

    Share
  • வல்லமைக்கு வயது ஆறு!

     -றியாஸ் முஹமட்

    வண்ணத்தமிழ் கொண்டு
    வற்றாது தினந்தோறும்
    வானத்துச் சூரியனாய்
    வாசலிலே படியேறி
    வந்திகள் பாடிச்செல்லும்
    வாசகத்திற்கு இடந்தந்து
    வாசகர் நெஞ்சிலே
    வருடலாய்ப் பலசொல்லி
    வல்லவன் என்றொரு
    வழுவாத பெயர் தந்து
    வழிமுறை பலதையும்
    வன்மனதில் பதியவைத்து
    வள்ளுவன் மொழிந்த
    வாசகம் தான்உணர்த்தி
    வாஞ்சை காட்டி பிறர்
    வாதை மனதில் போக்கி
    வாமதேவனவன் கருணைதனை
    வாடாமலராய் மணக்கவைத்து
    வாய்மை ஒன்றையே வேத
    வரிகளாய் தன்னுள் கொண்ட
    வல்லமையே…
    உன்னை
    வாழ்த்துகின்றேன் இன்னும்
    வாழ்க வாழ்கவென்று…
    வாழ்க நின் புகழ்
    வாழிய வாழியவே…!!!

    Share
  • கவிதை

    உயிர் நண்பன்

    ………………………

    பள்ளியிலே சேர்ந்து படித்ததுமில்லை

    பனங்காட்டிலே சேர்ந்து மேய்ததுமில்லை

    பாலைவனம் மேய்கையிலே

    பால் நிலவு ஒளியினிலே

    பார்வையில் பட்ட மின்னலடா

    பாரதிதாசனின் கவிதைப் புத்தகமடா

    பக்கத்தில் நீ இல்லையென்றால்

    படபடக்கும் என் இதயமடா

    பரதேசிபோல வாழ்ந்தேனடா

    பரிதாபப்பட்ட அந்த இறைவனோ

    பரிசாக உன்னைத் தந்தானடா

     

    #றியாஸ் முஹமட்

    Share
  • சிட்டுக்குருவி

    -றியாஸ்முஹமட்

    நான் சின்னஞ்சிறிய
    சிட்டுக்குருவி
    உன் வாள் உருவி
    என்னை வெட்டிப் போடு!

    உன் துப்பாக்கிச் சொண்டால் 
    என்னைச் சுட்டுப்போடு!
    கைகட்டி வாழ்வேனோ?
    உன் கால்பட்டு மகிழ்வேனா?             Moineau friquet Passer montanus Eurasian Tree Sparrow

    சிறுபான்மைதானே
    சிறுமை என்கிறாய்!
    சிறகு விரித்து நான் பறக்கச்
    சிறகு முறித்துச்
    சிறையில்  அடைக்கிறாய்!

    நான் கூண்டுக்குள் இருந்தால்
    உமக்குக் குதூகலம்
    வெளியே பறந்தால்
    வேடத்தனம்!

    நாடகத்தனம் ஆடும் மனிதா!
    உமக்கு மட்டும் ஏனடா
    இத்தனை வெறித்தனம்?

    இறைவன் வகுத்த
    பாதையிலேதானே பறந்தேன்
    உன் வீட்டு சோற்றுப்
    பானையிலா விழுந்தேன்?

    அன்று…
    மக்களோடு மக்களாகக்
    கொஞ்சித்திரிந்தோம்
    கொஞ்சித் திரிந்த எங்களை
    அஞ்சித் திரியவைத்தாய்!

    அஞ்சித்திரிந்த
    எங்களை இன்று
    பூண்டோடு அழித்துக்
    கதை முடித்தாய்!

    மலடியாக எங்கள் குலத்துப்
    பெண்களை வாழ வைத்தாய்
    மனம் நொந்து அவர்களையும்
    சாபமிடவைத்தாய்!

    மரத்தை வெட்டி
    எங்கள் கூடுகளைத்
    தூக்கி எறிந்தாய்!

    எங்கள் தோப்புக்களை மனையிடங்களாக்கினாய்
    மனமில்லாது எங்கள் குஞ்சுகளை
    எட்டி உதைத்தாய்!

    கேட்டுப்பார்
    உங்கள் மூதாதையர்களை…
    நாங்கள் ஒரே வீட்டில்
    ஒன்றாக நடத்திய
    கூட்டுக் குடும்ப
    வாழ்க்கையைச்
    சொல்வார்கள்!

    கேட்டுப்பார்
    அந்த வயல்வெளிகளையும்
    வரப்பு மேடுகளையும்…
    குதூகலமாய்ப் பேசி
    கும்மாளம் அடித்த
    கதை சொல்லும்!

    எங்கள் இனத்தையே
    கொன்று குவித்து விட்டு
    இன்று சிட்டுக் குருவி தினம்
    கொண்டாடுகிறாயோ….?

    கொண்டாடு !
    கொண்டாடுவதும்
    பந்தாடுவதும்தானே
    உங்கள் இனத்தின் பண்பாடு!!

     

    Share
  • எங்கே ஒளிந்தாய்?

    -றியாஸ் முஹமட்

    புல்லோடும் பேசுகிறேன்
    புழுதியோடும் விளையாடுகிறேன்
    பூவே நீ அருகில் இருந்தால்
    பூமியிலே நான் பறக்கிறேன்
    புதுமையாக நீ வந்தாய்
    புன்னகையால் என்னைக் கொன்றாய்
    பூகம்பம் ஒன்றை நடத்திவிட்டுப்
    பூமியில் எங்கே ஒளிந்தாய்..?

    Share
  • பிரிந்து இருப்பதில் பிரியமுமில்லை!

    -றியாஸ் முஹமட்

    பிரிந்து இருப்பதில் பிரியமுமில்லை
    காத்திருப்பதில் அர்த்தமுமில்லை
    உன்னை மறக்கத் தெரியவுமில்லை
    நீயின்றி வேற உறவுமில்லை…..

    உன்னைப் போல ஒரு துணையுமில்லை
    உனக்கு நான் தகுதியுமில்லை
    நீயின்றி மனம் நிம்மதியுமில்லை
    இதை நான் எடுத்துச் சொல்லியும்
    என் மனம் கேட்பதுமில்லை…

    Share
  • இளைஞனே…!

    -றியாஸ் முஹமட்

    வாழ்க்கையை வாழடா,
    வாழ்ந்து நீ பாருடா…!!

    தடைகள் ஏதடா,
    தள்ளிப் போகாதடா…!!

    தேடல்கள் சுகமடா,
    தேடித்தான் பாரடா…!

    ஓடும் நதியடா,
    ஓடிப் பாயும் வேங்கையடா…!!                      man with lion

    பாயும் வெள்ளமடா,
    பாய்மரக் கப்பலடா…!!

    இளமையோ நெருப்படா,
    இரத்தமோ துடிப்படா…!!

    காதலோ கானலடா,
    கலைபயில முடியாதடா…!

    காலமோ பொன்னடா,
    கரைந்து விடுமடா…!!

    கல்வியே காலமடா,
    கருத்தினில் வையடா…!!

    உமக்கு ஏன் வெட்கமடா,
    உள்ளத்தில் ஏன் அச்சமடா..!!

    வறுமையை விரட்டடா,
    வரம்பு மீறாதடா…!!

    கைத்தொழில் பயிலடா,
    கை வரிசை காட்டுடா..!!

    களத்தில் இறங்கடா,
    களையைப் பிடுங்கடா…!!

    உறக்கமே போதுமடா
    உலகத்தை வெல்லுடா…!!

    உறவை மதியடா,
    உயர்ந்து செல்லடா…!!

    இறைவன் ஒருவனடா,
    இறையச்சம் வேணுமடா…!!

    வணக்கமே வாசலடா,
    வழிமறக்கக் கூடாதடா…!!

    தந்தவன் இறைவனடா,
    தலைக்கனம் ஏனடா…!!

    நாளே நமதடா,
    நம்பி நடவேடா..!!

    வாழ்கையை வாழடா,
    வாழ்ந்து நீ உயரடா…!!

     

    Share
  • சீதனம்!

    -றியாஸ் முஹமட்

    கன்னிக்கு ஏன் வேதனை…?
    கருமச் சீதனத்தின் சோதனை!

    கன்னிக்கோ                                                                                                                  lady
    கலியாணம்
    கடந்த வயது…

    கலியாணச் சந்தையில்
    கனவுகளோடு
    காலூன்றி நிற்கும்
    கற்புக் கன்னி!

    கல்யாணராமர்களோ
    கன பேர்,
    கருமச் சீதனக்
    கனவுகளோடு…

    கல்யாணராமனுக்குக்
    காணிக்கையில்லை,
    காணிக்கை கேட்பவன்
    கடவுளுமில்லை!

    கரும்பு தின்னக் கூலியோ… ?
    கணவனாகக் காசோலையோ…?

    கண் கெட்ட,
    கல்யாணக் காளையர்
    காசு கொடுத்தும்

    கடை, நகை, வாகனமாம்
    கணக்குப் பார்க்கின்றான்
    கச்சிதமாய்…!

    கணக்குப் பிழையானது
    கல்யாணம் விலையானது
    கன்னியின் இன்பக்
    கனவுகளோ கானல் நீராய்க்
    கரைகிறது…….!

    கலியாணச் சந்தையிலோ
    காசுகளோ குவிகின்றது!
    காலங்களோ கடந்தாலும்
    கல்யாணராமர்களோ
    கலக்குகின்றார்கள் – புதுக்
    கட்டழகோடு….!

    கன்னிக்கு என்ன வேதனை…
    கருமச் சீதனத்தின் சோதனை!

     

    Share
  • யூத்!

    -றியாஸ்முஹமட்

    இன்டர்நெட்டில்
    இடறி விழுந்தான்
    கைபேசியில்
    கைதியானான்

    விதைக்கும் காலத்தை
    விரயம் செய்கிறான்
    ’தல’ என்கிறான்
    ’தளபதி’ என்கிறான்

    பார்த்துப் பார்த்துச் சிரிக்கிறான்
    பார்க்காத போதும் சிரிக்கிறான்
    போதையில் மிதக்கிறான்
    போற இடம் மறக்கிறான்

    பேராண்மை என்கிறான்
    பேரின்பம் என்கிறான்
    தறிகெட்டு ஆடுகிறான்
    தகிட தாளம் போடுகிறான்

    சிகரெட்டில் தீ வைத்துச்
    சிந்தனைகளை எரிக்கிறான்
    எதைப் புரிந்து கொண்டான்?
    எதைத் தெரிந்து கொண்டான்?

    கேள்வி கேட்டால்
    கேள்விக்குப் பதில்
    யூத்
    யூத்தாமாம்!!

     

    Share
  • பள்ளி நினைவு!

    -றியாஸ் முஹமட்

    பாதி ராத்திரியில்
    பாதிக் கனவுகளோடு,
    எழுந்து விடுகிறேன்
    ஒரு
    பரதேசியாக….

    உடலில் ஒரு
    இறுக்கம்.
    மனதில் ஒரு
    ஏக்கம்…

    கண்டது
    கனவுதானே என்றதும்
    கண் கலங்கிப்
    போனேன்.

    கண்ட கனவு,
    பள்ளிக் கனவு.
    பனிக் கட்டியாக
    உறைந்து விடுகிறது
    என்னிதயம்.

    கலையாத கனவுடன்
    கனத்த இதயத்தோடு
    பள்ளி வளாகத்தில்
    நுழைந்து விடுகிறேன்.

    அதுதான்
    என் பள்ளி,
    ஓட்டமாவடி தேசியப்
    பள்ளி…

    புதிய கட்டிடங்களின்
    குறுகுறுப் பார்வை
    என்னை உரசி விளையாட,
    அடையாளம் கண்டு
    ஆரவாரத்தோடு,
    அணைத்துக் கொண்டது
    ஹிஜ்றா அரங்கும்,
    அஷ்ரப் மண்டபமும்.

    நுழைந்து விடுகிறேன்
    பள்ளி வளாகத்தில்.
    பள்ளி மண்ணை
    அள்ளித் தின்றேன்,
    பள்ளி அறையில்

    படுத்துப் புரண்டேன்,
    பள்ளித் தண்ணீரை
    வயிறு முட்டக்
    குடித்தேன்.

    தீர வில்லை
    அந்தத் தாகம்,
    தாங்க முடியவில்லை
    இந்தச் சோகம்.

    சிறிய மாணவர்கள்
    செய்யும் சிறு
    குறும்புகளை
    நான் செய்து
    பழைய மாணவன்
    என்பதை மறந்தே
    போனேன்…

    அன்றைய
    வகுப்பறைகள்தான்
    இன்றும்…
    கலர் மாறியதே
    தவிர
    உருவம் மாறவில்லை.

    நாங்கள் அடித்த
    பந்துகளின் தடமும்
    விட்ட ராக்கெட்டும்
    எழுதிய எழுத்தும்
    வரைந்த ஓவியங்களும்
    காதல் கதைகளும்
    அன்று போல்

    இன்றும்
    பேசிக் கொண்டுதான்
    இருக்கின்றன
    மெளனமாக
    அஜந்தா ஓவியங்களாக….

    கலங்கிப் போன
    என் கண்கள்.
    வகுப்பறையை
    மேய்ந்தது…
    என் மேசையைத்
    தேடுகின்றது…
    என் பெயர்
    அடையாளம்
    இடப்பட்ட மேசை
    இன்றும் இருக்கலாமோ
    என்று!

    அடங்காத
    ஆசையை
    அடக்க முடியாது
    தேட முற்படுகையில்
    அந்தப் பிஞ்சு
    மாணவ முகங்கள்
    சொல்லாமலே சொன்னது
    இது உங்கள்
    நேரமல்ல
    எங்கள் நேரம்
    என்று….

    கனத்த இதயத்தோடு
    வெளியே வர
    நாட்டிய மரங்கள்
    நடனமாட
    அதே வேப்பையும்
    பனையும்
    அங்கேயே இருக்க

    எங்கே
    போனார்கள் என்
    பள்ளி தோழர்கள்
    மட்டும்…?

    கலங்கிப் போன
    கண்கள் தேட
    நிஜத்தை நினைக்க
    இரத்த நாளங்கள்
    இறுக்கமாக
    அமர்ந்து விடுகின்றேன்
    புதிய வகுப்பறையில்
    பழைய மாணவனாக!

    சிணுங்கி நிற்கும்
    சின்ன  மாணவனுக்கு
    எங்கே போய் – நான்
    வாங்கிக் கொடுப்பேன்
    சீனி மாமாவின்
    சீனி முட்டாசியும்
    சீவல், வடையும்!

    தாங்க முடியவில்லை
    இந்த வேதனை
    ஏன் இந்தச்
    சோதனை?

    நான் பிறக்க
    வேண்டும்
    என் தாயின்
    வயிற்றுக் கூடத்தில்
    அவள் (மீண்டும்)

    சேர்க்க வேண்டும்
    இதே என்
    பள்ளிக்கூடத்தில்!

     

    Share