Month: February 2013

  • பாதுகாப்பு!

    பாகம்பிரியாள்
    காதலில் வீழ்ந்தாலும், வெளியே தெரியாது
    கட்டிக் காக்க, ஒளிய வேண்டும் என்ற உந்துதலில்
    ஓர் அறை ஒன்றைத் தேடுகையில்
    குயுக்தியாய் தோன்றியது ஓர் எண்ணம்,
    சர்க்கரைப் பாகில் செய்ததை தேர்வு செய்யலாமென்று!
    பளிச்சென்று இருந்ததால் உள்ளேயிருந்து
    வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன்
    பாதுகாப்பாய் இருக்கிறது என்றே
    ஆனால் ஒவ்வொரு தடவையும் அருகில் வந்து
    அழகாய்  குவியும் உன் உதடுகள்  பட்டு
    உருகப்போவது  கண்ணாடி மட்டுமல்ல நான்
    என்ற என் இறுமாப்பும் என்றே தெரியாமல்!

    படத்துக்கு நன்றி

    http://www.colourbox.com/image/close-up-shot-of-a-woman-s-lips-kissing-image-1729702

    Share
  • போந்தை

                                  உ
                             நமசிவாய

                            ‘போந்தை’

                     பதினோராம்  திருமுறை வைப்புத்தலம்

                        நூ த முத்து முதலி
                             மயிலை

    தமிழகத்து சித்தாந்த சைவ நெறியின் பெருமறைகளாம் பன்னிரு திருமுறைகளிலுள்ள 18000+
    பாடல்களில் பதிகம் ஏதும் கிட்டாது குறிக்கப்படும் பேறு மட்டும் பெற்ற மிக்க பழமைவாய்ந்த திருத்
    தலங்கள் ‘வைப்புத்தலங்கள்’ என வகைப்படுத்திய மரபில் காணும் ஓர் தொண்டைநாட்டுத் தலம்

     ‘திருப்போந்தை’

    தமிழகத்து வடஎல்லையில் அமைந்த திருவள்ளூர் மாவட்டத்தில் கவரப்பேட்டை மேற்காக ஊத்துக்
    கோட்டைக்கு வடக்காக ஆந்திர சத்தியவேடுக்கு அருகமைந்த சிற்றூராகும் இத்திருப்போந்தை.
    பராமரிப்பிலிருந்து இந்நாள் தனித்து விடப்பட்ட நிலையில் காணும் நூற்றுக்கணக்கான தமிழகத்துப்
    பழங்கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

    பதினோராம் திருமுறையில் தொகுக்கப்பெற்ற பட்டினத்தாரின் 5 நூல்களுள் நான்காவதான திரு
    ஏகம்பமுடையார் திருவந்தாதியில் (65)

     “ஆலையங்கார் கருகாவை கச்சூர் திருக்காரிக்கரை
         வேலையங்கேறு திருவான்மியூர் திருஊறல் மிக்க
         சோலையங்கார் திருப்’போந்தை’ முக்கோணம் தொடர் கடுக்கை
         மாலையன் வாழ் திருஆலங்காடு ஏகம்பம் வாழ்த்துமினே” 11.990

    எனவரும் பாடலில்,
    கச்சூர், திருவான்மியூர், ஊறல், ஆலங்காடு காரிக்கரை எனும் தொண்டைநாட்டுத் தலங்களுடனேயே
    இப் போந்தையையும் பட்டினத்தார் பாடியுள்ளார்.

     

    போந்தை எனும் சொல் அடிமரத்தில் குடம்போல் பருத்துக்காணும் உள்ளினமாகிய பனைவகையைக்
    குறிக்கும் (புறம் 85) நன்கு வளர்ந்து விளங்கும் தொடர்பால் ஆகுபெயர்வழி ஓர் இடப்பொயரும் ஆனது

       “நாளிகேரம் செருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்
                 கோளி சாலந்தம் ஆலம் குளிர்மலர்க் குரவம் எங்கும்
                 தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்
                 நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும்”
                        78 திருத்தொண்டர் புராணம்

    என சேக்கிழார் பல்வகை பயிரினங்களைக் காட்டுமிடத்து நம் ‘போந்தை’யையும் குறித்துள்ளார். சங்க
    நூல்களிலும் போந்தை பெரிதும் பயின்றுள்ளமை இக்கருத்துரைக் கடைக்கண் இணைப்பில்  காண்க.

    நம் ‘போந்தை’த் தலத்தின் (‘போந்தை’வாக்கம்) அமைவிடம் (இணைத்துள்ள வரை படங்கள் காண்க)
    ஆந்திர எல்லை மிகமிக அருகு சென்னை மாநகருக்கு ஏறக்குறைய 55 கிமீ வடமேற்காகவும், டில்லி
    கல்கத்தா என வடக்காகச் செல்லும் பெருவழிக்கு (கவரப்பேட்டை) 15 கிமீ மேற்காகவும் காணலாம்.

    தன்னார்வத் தொண்டர்கள் வைத்துள்ள சிதலம் அடைந்த பிசாலீசுவரர் கோவிலின் தோற்றம் காண்க.

    தாய்நாட்டுப் பண்பாட்டை போற்றுவதில் தமிழ் மக்களை அவ்வப்போது விழித்தெழச்செய்யும் தூண்டுகோல்
    ஏந்துவோர் மக்கட்தொகைக்கு ஏற்ப வளர்தலும் வேண்டும்.

    திருச்சிற்றம்பலம்

    – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

    புள்இரியும் புகர்ப்போந்தை            பட்டினப்பாலை 74

    இரும்பனம் போந்தைத் தோடும்        பொருநர் ஆற்றுப்படை 141

    போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள்        16 அகம் 238

    முழாஅரைப் போந்தை பொருந்தி நின்று        7 புறம் 85

    வட்கர் போகிய வளரிளம் போந்தை        3 புறம் 100

    போந்தையம் தோட்டின் புனைந்தநர் தொடுத்து3 புறம் 265

    மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே    10 புறம் 297

    நெடுவேள் ஆதன் போந்தை அன்ன
    பெருஞ்சீர் அருங்கொண் டியளே  கருஞ்சினை
    வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்        6 புறம் 338
    (ஈங்கு போந்தை பனைதான் என்பது தெளிவு
    மேலும்    இப்புப்பாடலின் தலைப்புக் கொளுவில்
    “நெடுவேள் ஆதனுக்கு உரிய போந்தைப் பட்டினம்
    பற்றிய குறிப்பு” என உள்ளமை வரியின் பொருளுக்கு
    இயைய போந்தை இடப்பெயருக்கு இரட்டைச்சான்று)

    முழா அரைப் போந்தை அரவாய் மாமடல்        4 புறம் 375

    கொம்மைப் போந்தைக் குடுமி வெண்தோட்டு    2 குறுந். 281

    தூஇரும் போந்தைப் பொழில்அணி பொலிதந்து10 பதிற்று. 51

    மறம்கெழு போந்தை வெண்தோடு புனைந்து    31 பதிற்று. 51

    வண்டிசை கடாவாத் தண்பனம் போந்தை        6 பதிற்று. 70

    புரைதீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன்    46 சிலம்பு 26 கால்கோள்

    வாகை தும்பை மணித்தோட்டுப் போந்தை        70 சிலம்பு 26 கால்கோள்

    போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை        219 சிலம்பு 26 கால்கோள்

    தோடார் போந்தை தும்பையொடு முடித்து        45 சிலம்பு 27 நீர்ப்படை

    தோடார் போந்தை தும்பையொடு முடித்த        112 சிலம்பு 27 நீர்ப்படை

    போந்தைக் கண்ணிப் பொறைய கேட்டருள்    126 சிலம்பு 27 நீர்ப்படை

    தோடார் போந்தை வேலோன் தன்னிறை         175 சிலம்பு 27 நீர்ப்படை

    அரியிற் போந்தை அருந்தமி ழாற்றல்        189 சிலம்பு 27 நீர்ப்படை

    தோள்நலம் உணீஇய தும்பை போந்தையொடு    248 சிலம்பு 27 நீர்ப்படை

    போந்தைக் கண்ணிப் பொலம்பூந் தெரியல்    9 சிலம்பு 28 நடுகல்

    போந்தைக் கண்ணிநின் ஊங்கண்ஓர் மருங்    134 சிலம்பு 28 நடுகல்

    ஆரும் அணிஇளம் போந்தையும் வேம்பும்        262 பாண்டிக்கோவை

    தொடுத்த வேம்பின்மிசை துதைந்த போந்தை     நச்சி. உரை மேற்கோள்

    போர்எதிரில் போந்தையாம் பூ            பு வெ.மா.240

    போந்தை வேம்பே ஆர்என வரூஉம்        5 தொல்.புறத்திணையியல்

    Share
  • கண்டதும் கொண்டதும்

    -வருணன்


    மாளிகையின் மையத்தில்
    ஆடத் துவங்குகிறாள் தாசி
    வளைந்து நெளியுமவள் வளைகரங்களில்
    பொங்கிப் பெருக்கெடுக்கிறது கடலலை
    சிலும்புமவள் கேசத்தினின்று
    சப்தித்து வீழ்கிறதோர் கருப்பு அருவி
    தளைத்த இளமையுடன் திளைத்தாடுபவளின்
    அங்கம் தின்னும் விழிகளோடு
    மதுக்கோப்பை ஏந்திய கரங்கள்
    ஆயிரமாயிரம் பூட்டுகளைத் திறந்திடும்
    விழிச் சாவிகளிரண்டும்
    அவள் வசம் பத்திரம்
    தொலைத்தது அவளிதயப் பூட்டினை
    மாத்திரம்.
    படத்துக்கு நன்றி: http://www.miradha.com/historia-del-bharatanatyam/?lang=en

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 1

     

    -சு. கோதண்டராமன்-

    பாரதி ஒரு பன்முகக் கவிஞர். நாட்டுப் பற்று, மொழி்ப் பற்று, சமயப் பற்று இவற்றிற்கு விரோதமி்ல்லாத வகையில் அனைத்து உலக மக்களையும் அனைத்து மொழிகளையும், அனைத்துச் சமயங்களையும் நேசிக்கும் பண்பு, சொல் புதிது பொருள் புதிதாய் கவிதை இசைத்த புலமை, பெண் விடுதலை, சமூக நீதிக்குப் போராட்டம் இப்படிப் பல முகங்கள் உண்டு அவருக்கு.

          நாடகத்தில் ராவணனாகவோ முருகனாகவோ வேடம் போடுபவர் பல அட்டைத் தலைகளைத் தாங்கி வருவதைப் பார்க்கிறோம். எல்லா முகங்களும் ஒன்று போல இருந்தாலும் உண்மை முகம் ஒன்று தான், அதன் வடிவத்தை ஒட்டியே மற்ற முகங்கள் அமைக்கப் பட்டுள்ளன, அந்தத் தலை தான் மற்ற தலைகளையும் தாங்குகிறது என்பதையும் நாம் அறிவோம்.

          பல முகம் கொண்ட பாரதியின் உண்மை முகம் எது? எந்த முகத்தின் அடிப்படையில் மற்ற முகங்கள் அமைந்துள்ளன?

          வேதங்களின் மீது அவர் கொண்டிருந்த மரியாதை தான் அவரது உண்மை முகமாகத் தோன்றுகிறது. தான் பிறந்த குலத்துக்கு உரிய ஆசாரங்களைக் கைவிட்டதோடு அல்லாமல், தன் சாதியினரையும் எள்ளி நகையாடியவர் பாரதி. அப்படிப்பட்ட புரட்சிக்காரர், பழைமையான தனது குல வித்தையாகிய வேதத்தினிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்பது வியப்புக்குரிய உண்மை.

          தனது பாடல்களிலும், கட்டுரைகளிலும், கதைகளிலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அவர் வேதத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார். அவரது இந்த வேதப் பற்று தெய்வ பக்திப் பாடல்களில் மட்டுமல்லாது சமூக விடுதலைப் பாடல்களிலும், தேச பக்திப் பாடல்களிலும் கூட வெளிப்படுவதைக் காணலாம்.

          வேதம் பாரத நாட்டின் கலாசாரத்தின் ஆணி வேராக இருந்து வந்துள்ளது. ஆனால் இடைக்காலத்தில் சில தவறான கருத்துகளும் தவறான விளக்கங்களும் வேத இலக்கியத்தில் புகுந்துவிட்டன. இவற்றையும் அக்கால வேதியர்கள் வேதம் என்ற பெயரிட்டே அழைத்தனர். இந்தப் போலி வேதங்களை நீக்கி விட்டு வேதத்தை அதன் தொன்மையான தூய நிலையில் கொண்டு வைக்க வேண்டும் என்பது அவரது பேரவா. இந்தக் கருத்து அவரது ஒவ்வொரு பாடலின், கதையின், கட்டுரையின் அடிநாதமாக ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. அவற்றில் சிலவற்றை அடுத்து வரும் வாரங்களில் காண்போம்.

    ஒன்று: பரம் பொருள்

                    பாரதி இந்து மதத்தின் மீதும் வேதங்களிடத்தும் பெரு மதிப்புக் கொண்டிருந்த போதிலும் பிற மதங்களைச் சமமாகவே போற்றினார். அவரது இந்தச் சமயப் பொதுமைக்கு அடிப்படை ரிக் வேதமும் பகவத்கீதையும் தாம். ரிக் வேதத்தில் வரும் ஒரு புகழ் பெற்ற வசனம், “ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி” என்பது. “ஒன்றே மெய்ப் பொருள், அதனை ரிஷிகள் பலவிதமாய்ச் சொல்லினர்,” என்று பாரதி அதை மொழி பெயர்க்கிறார். கீதையில் கண்ணன் கூறுகிறான், “யார் யார் என்னை எந்தெந்த வடிவில் வழிபடுகிறார்களோ அவரவரை அந்தந்த நம்பிக்கையில் நான் நிலைக்கச் செய்கிறேன்.” இவற்றை நன்கு உள்வாங்கிக் கொண்ட பாரதி தன் எழுத்துகளில் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இக் கருத்தை வலியுறுத்தத் தவறவில்லை.

                எல்லாச் சமயங்களும் கடவுள் ஒன்றே என்று தான் கூறுகின்றன. ஆயினும் ஏன் தகராறு? தன் சமயத்தையே நன்கு அறியாத அரை குறை மனிதர்கள், “நான் வணங்குவது மட்டுமே கடவுள், மற்ற சமயத்தவர் வணங்குவது பேய்களை, பேய் வழிபாடு செய்வோரைத் திருத்துவது அல்லது அழிப்பது என் கடவுளுக்கு உகப்பானது,” என்ற வகையில் பேசுகிறார்கள். அத்தகையோருக்குப் பாரதி அறிவுறுத்துகிறார் –

    வேடம்பல் கோடியோ ருண்மைக்குள வென்று

                வேதம் புகன்றிடுமே ஆங்கோர்

                வேடத்தை நீருண்மையென்று கொள்வீரென்றவ்

                வேதமறியாதே

                நாமம் பல்கோடி ஓர் உண்மைக்கு உள என்று

                நான்மறை கூறிடுமே ஆங்கோர்

                நாமத்தை நீருண்மை என்று கொள்வீரென்று அந்

                நான்மறை கண்டிலதே.

    வெவ்வேறு பெயர்களில் வழிபடப்படுபவை வெவ்வேறு தெய்வங்கள் அல்ல. அவை அனைத்தும் ஒரு தெய்வத்தின் வெவ்வேறு வேடங்களே. இந்த வேடங்களைத் தெய்வத்தின் மீது மனிதர் தாம் சுமத்துகின்றனர். அதன் உண்மையான சொரூபம் சுத்த அறிவு ஆகும். வள்ளுவர் இறைவனை வாலறிவன் என்று போற்றுகிறார். இறைவன் எல்லாம் அறிந்தவன் என்று தான் எல்லாச் சமயங்களும் கூறுகின்றன. இதை உணர்த்தும் வேத வசனம், “ப்ரக்ஞானம் ப்ரம்ம” (அறிவே கடவுள்) என்பதைப் பாரதி மிக எளிமையாக வெளிப்படுத்துகிறார்.

    ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி

                அலையும் அறிவிலிகாள் பல்

                லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்

          டாமெனல் கேளீரோ என்று பாரதி கேட்கிறார்.

                நாம் என்ன செய்கிறோம்? மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறுங் கதைகள் சேர்த்துப் பல கள்ள மதங்கள் பரப்பிக் கொண்டிருக்கிறோம். இது முறையா? அச்சமும் அறியாமையுமே வன்முறையின் அடிப்படை. எனது சமயம் அழிந்து விடுமோ என்ற அச்சமும், எல்லா மதங்களுக்கும் உட்புகுந்த கருத்து ஒன்றே என்பதை அறியாமையுமே மாற்றுச் சமயத்தாரை அழித்தால் நம் சமயம் வாழும் என்ற மூட நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது. வீரமில்லாமல் இந்த அச்சங்களுக்கு இடமளிப்பவர் எந்தச் சமயத்தவரானாலும் இறைவனை அடைய முடியாது என்கிறார் பாரதி.

    வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்

                எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்

                பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்

                பேணுமவர் பதமலரும் பூணல் வேண்டும்

      “ஒவ்வொரு மனிதனும் தனித் தனி இயல்பினன். அவனவன் மதம் அவனது தனித் தன்மையைப் பொறுத்தது. எனவே இன்னும் இரண்டு கோடி மதங்கள் பெருகட்டும். எத்தனை பேர் எத்தனை விதமாக வழிபட்டாலும் உண்மை ஒன்றே” என்கிறார் விவேகானந்தர். பாரதி அதனை வழிமொழிகிறார்-

    பூமியிலே கண்டமைந்து மதங்கள் கோடி

                புத்தமதம் சமணமதம் பார்ஸி மார்க்கம்

                சாமிஎன ஏசுபதம் போற்றும் மார்க்கம்

                ஸநாதனமாம் இந்துமதம் இஸ்லாம் யூதம்

                நாமமுயர் சீனத்துத் தாவு மார்க்கம்

                நல்ல கண்பூசி மத முதலாப் பார்மேல்

                யாமறிந்த மதங்கள்பல உளவாமன்றே

                யாவினுக்கும் உட்புகுந்த கருத்திங்கொன்றே      

     

                தெய்வம் பல பல சொல்லிப் பகைத்

                தீயை வளர்ப்பவர் மூடர்

                உய்வதனைத்திலும் ஒன்றாய் எங்கும்

                ஓர் பொருளானது தெய்வம்

    என்கிறார் பாரதி. அல்லாவைப் போற்றி அவர் பாடுவதைக் கேட்போம்-

    பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள்

                எல்லாத் திசையிலுமோர் எல்லையில்லா வெளிவானில்

                நில்லாது சுழன்றோட நியமம் செய்தருள் நாயகன்

                சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெருஞ்சோதி

                அல்லா அல்லா அல்லா

    இதே கருத்தைக் காளி மீது ஏற்றிப் பாடுகிறார்.

    விண்டுரைக்க அறிய அரியதாய்

                விரிந்த வான வெளியென நின்றனை

                அண்டம் கோடி வானில் அமைத்தனை

                அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை

      பாரதி விநாயகருக்குச் செய்யும் அர்ச்சனையைக் கவனியுங்கள். தொல் பழம் தெய்வங்கள் உள்பட, வெவ்வேறு பெயர்களில் வணங்கப்படும் இந்துக் கடவுள்கள் மட்டுமல்லாது இஸ்லாமிய கிருத்துவப் பெயர்களும் ஒரே பரம்பொருளைக் குறிப்பதை விளக்குகிறது அது.

    விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்

    பிறநாட்டிருப்போர் பெயர்பலகூறி

    அல்லா யெஹோவா எனத் தொழுது இன்புறும்

    தேவரும் தானாய் திருமகள் பாரதி

    உமை எனும் தேவியர் உகந்த வான்பொருளாய்

    உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்

     

          இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகித்

          தாயாய்த் தந்தையாய்ச் சக்தியும் சிவனுமாய்

          உள்ளொளியாகி உலகெலாம் திகழும்

          பரம்பொருளேயோ, பரம்பொருளேயோ

          ஆதிமூலமே அனைத்தையும் காக்கும்

          தேவதேவா சிவனே கண்ணா

          வேலா சாத்தா விநாயகா மாடா

          இருளா சூரியா இந்துவே சக்தியே

          வாணீ காளீ மாமகளேயோ

          ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ள

          யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே

          வேதச்சுடரே மெய்யாங் கடவுளே

        சமயங்கள், சாத்திரங்கள், சடங்குகள் எல்லாம் உண்மையை அடைவதற்கான படிகளே அன்றி அவையே இறுதி நிலை அல்ல. மனதைச் செம்மைப்படுத்திப் பரம்பொருளை உள்ளத்தால் தொட முடிந்தால் இவை தேவையற்றதாகி விடும்.

    காவித் துணி வேண்டா கற்றைச் சடை வேண்டா

                பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே

                சாத்திரங்கள் வேண்டா சதுர்மறைகள் ஏதுமில்லை

                தோத்திரங்கள் இல்லை உளம் தொட்டு நின்றால் போதுமடா

                தவமொன்றும் இல்லை ஒரு சாதனையுமில்லையடா

                சிவமொன்றே உள்ளதெனச் சிந்தை செய்தாற் போதுமடா

     

                அறிவு விளக்கம் பெறாத குழந்தை நிலையில் உள்ளோர் தாம் விரும்பிய வெவ்வேறு வடிவங்களில் பரம்பொருளை வழிபடட்டும். ஆனால் அதே நிலையில் நின்று விடாமல் படிப்படியாக மேலே உயர்ந்து வடிவங்கள், வழிபாட்டு முறைகள்,  வேதங்கள், தவங்கள் இவற்றைக் கடந்து பரம்பொருளை உள்ளத்தால் உணரும் நிலைக்கு வரட்டும். இவை எல்லாமே உண்மை தான். இதை உலகுக்கு உணர்த்தவல்ல ஒரே நாடு நமது நாடு தான் என்பதில் பெருமை கொள்கிறார் பாரதி.

    ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்

                உலகின்பக் கேணிஎன்றே

                நன்று பல்வேதம் வரைந்தகை பாரத

                நாயகிதன் திருக்கை

    Share
  • நினைவுகள்

    விசாகை மனோகரன்

     

    கடந்து போன பாதையின்,
    வழி நடந்த வாழ்க்கையின்
    விபரீத விளையாட்டுகளை
    நினைத்துப் பார்க்கிறேன்.

    இளமைப் பிராயத்தின் இளரத்த வேகத்தில்
    செய்யக் கூடாது என் தெரிந்தும் செய்த தவறுகள்
    நிகழக்கூடாது என தெரிந்தும் நிகழ்ந்த நிகழ்வுகள்
    மாட்டோம் என நினைத்தும் புகைத்த பெட்டிகள்
    தொடவே கூடாது  என் நினைத்தும் திறந்த புட்டிகள்

    நண்பர்களை சந்தேகித்து, பகைவர்களை சம்பாதித்த
    விபரீதங்கள்
    கேளிக்கையை பிரதானமாக்கி செலவான நிமிடங்கள்
    நாணயங்கள்

    கேளிக்கையான வாழ்க்கையின் நடுவில் திடீர் மாற்றம்
    அனைத்தும் மாறிவிட்டன எனக்கென வந்த ஒருத்தியால்
    அன்று தாய் சொன்னதை கேட்க மனதில்லை
    இன்று இவள் சொல்வதை மறுக்க முடியவில்லை
    தாயால் முடியாதது தாரத்தால் முடியும்
    என இதைத் தான் சொன்னார்களோ?

    புகையை விட்டேன், மதுவையும் விட்டேன்
    நண்பர்கள் வந்தனர், நல்ல நட்பும் வந்தது,
    காரணம், அன்றே சொன்னானே  அந்த தெய்வக் கவிஞன்
    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று
    நினைவலைகள் நீங்க மனதிற்குள் ஒரு பாட்டு கேட்டது
    நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம்!!!

     

    படத்திற்க்கு நன்றி: கூகுள்

    Share
  • ​வால்ட் விட்மன் வசன கவிதை -11

    என்னைப் பற்றிய பாடல் – 4

    (Song of Myself)

    (1819-1892)

    (
    புல்லின் இலைகள் -1)

    மூலம் : வால்ட் விட்மன்

    தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

    +++++++++++++++++++++++++++++

    வலிமை படைத்த இசை அறிவுடன்

    உலவி வருகிறேன் நான்

    எனது மேள தாள மோடு

    இன்னிசைக் கருவிக ளோடு.

    வெற்றி வீரருக்கு மட்டும் அல்ல,

    நான் வாசிப்பது,

    தோற்றோ ருக்கும், மாண்டோ ருக்கும்

    வாசிப்பது நான் !

    தெரியுமா அது அன்றைய தினத்தின்

    ஆதாயம் என்று !

    தோற்பது கேவல மில்லை !

    போர்களில் தோற்பதும், வெல்வதும்

    ஒரே ஆன்மக் கிளிர்ச்சி யில்தான் !

    இறந்தோர்க்குப் பரிந்து

    முரசடிக்கிறேன், மனம் துடிக்கிறேன் !

    ஊது குழலில் நளினமாய்

    ஓங்கிய குரலில் பாடுகிறேன்

    தோற்றோரும் நீடு வாழட்டும் !

    கடலில் மூழ்கிப் போன

    படகுப் போர் வீர்ர்கள் நீடு வாழ்க !

    கடலில் தனியாய் மூழ்கிப் போன

    காளையர் நீடு வாழ்க !

    வேலை இழந்த போர்த் தளபதியும்

    இழப்பை மீறி முற்படும்

    வலிய வீரரும் வாழ்க !

    பேரளவில் தெரியாமல் போன

    வீர்ர்களும் நீடு வாழ்க

    பேரளவில் அறிந்தவரைப் போல் !

    எதிர்ப்பேன் எனது பன்முகப்பாடு மீறி

    மதிப்பெய்தி உள்ளன வற்றை !

    சுவாசிப்பேன் காற்றை,

    மிகுதிப் பங்கைப் பிறர்க்கு விட்டு வைத்து,

    முடங்கிக் கிடப்பதில்லை நான்

    ஏற்றவோர்

    இடத்தில் இருக்கிறேன்.

    பூச்சியும், மீன் முட்டைகளும்

    ஏற்ற இடத்தில் உள்ளன.

    ஒளிமிக்கப் பரிதிகளும், தெரியாத

    ஒளியற்ற பரிதிகளும்

    தமக்குரிய இடத்தில் தான் உள்ளன.

    உணர்வுள்ள வையும், இல்லாத வையும்

    உள்ளன தம்மிடத்தில் !

    +++++++++++++

    தகவல்:

    1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

    2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]

    3. Britannica Concise Encyclopedia [2003]

    4. Encyclopedia Britannica [1978]

    5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

    6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

    ********************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan] (February 12, 2013)

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • தேவன் நூறு (தேவன் ஒரு சகாப்தம்) – (2)

    .
    திவாகர்

    தேவன் ஒரு சகாப்தம் – பகுதி 1

    சென்னை மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் அருகில் உள்ள முருகன் லெண்டிங் லைப்ரரியை எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியாது. ஆனால் எனக்கு ஆதியில் மிகச் சிறந்த தோழர்களை (புத்தகங்களைத்தான் சொல்கிறேன்)  அறிமுகப்படுத்திய இடம் அதுதான். இர்விங் வாலஸ் இலிருந்து இதிகாசப் புத்தகங்கள் வரை வெறியாகப் படித்த நாட்கள் அவை. பள்ளி நாட்களிலிருந்து கிடைத்த அந்தக் கடைக்காரரின் நெருங்கிய சிநேகம் கைகொடுத்தது. அங்கேதான் நான் தேவன் கதைகள் மீது காதல் கொண்டேன். என் காதலுக்கு உரம் போட்டு வளர்ப்பது போல் தேவனின் பரம ரசிகரான அந்தக் கடைக்கார நண்பரும் அதிக நேரம் என்னோடு அவர் புதினங்கள் பற்றியும் கட்டுரைகள் பற்றியும் பேசுவதிலேயே செலவிடுவார். இதனால் மேலும் இரண்டு சௌகரியங்கள் எனக்கு ஏற்பட்டன. அப்போதெல்லாம் ‘பைண்ட்’ செய்யப்பட்ட ஒரிஜினல் தேவன் தொடர்கதைப் புத்தகங்கள் எல்லாமே என் பார்வையில் தினம் பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டுக்கும் ‘இலவசமாகவே’ எத்தனை நாளைக்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல அனுமதியும் உண்டு. (மற்றவர்களுக்கு எக்ஸ்ட்ரா லெண்டிங் ஸ்ட்ரிக்ட் ’நோ’ அத்துடன் ஃபைன் வேறு கட்டவேண்டும், அத்தோடு டி.வி.க்கள் இல்லாத காலம் என்பதையும் புத்தகங்கள் அதிகம் படிக்கமுடிந்த காலம் என்பதையும் கணக்கில் கொள்க)).

    தேவன் கதைகளில் மிகப் பெரிய விசேஷம் என்பதே எந்த விஷயத்தையும் மிக எளிதாக விளங்கும்படியாகவும் நகைச்சுவையாகவும் வாசகர் முன் எடுத்து வைப்பதுதான். எளிய நகைச்சுவை என்பது அவர் எழுத்தின் மூலாதாரமோ என்று வியக்க வைக்கும். அட்டகாசமாக ஆஹா ஓஹோ என்று சிரித்து விட்டு அடுத்தகணமே மறக்கடிக்கவைக்கும் நகைச்சுவைகள் அவர் எழுத்தில் கிடையாது. அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சாதாரண விஷயங்களே நகைச்சுவையாக எடுத்தாளப்படும்போது அதன் முக்கியத்துவம் தெரியும் வகையில் எழுதுவார். எதையும், எவரையும் ஆழ்ந்து நோக்கும் பார்வை அவருடையதாக இருந்திருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறேன். அந்தப் பார்வையில் பட்டவை எல்லாம் சர்வ சாதாரணமாக எழுத்தில் பிரதிபலிக்கும். சாதாரண மனிதர்கள் பார்வையில்தான் சாதாரண மனிதர்களின் கவனம்தான் அவருக்கு முக்கியம். அதிலும் அந்தக் காலத்து மத்தியதரவர்க்கத்தாரின் நாடியைப் பிடித்துப் பார்த்து எழுதும் கலையைக் கற்றவர்.  அவர் எழுதும் தமிழ் சாதாரணமாக பேசும் தமிழ் போல இருந்தாலும் நல்ல தமிழைத்தான் பயன்படுத்துவார். பின்னாட்களில் அளவுக்கு அதிகமாக தமிழ்ச் சொற்களில் ஆங்கில எழுத்துகளைக் கலந்து கொடுத்தவர் சுஜாதா அவர்கள் என்ற பெயர் உண்டு என்றாலும் அதன் மூலகர்த்தா தேவன் அவர்கள்தான். ஆங்கிலம் மட்டுமல்ல வடமொழியும் சர்வ சாதாரணமாக எழுத்தில் காணப்படும். ஆனாலும் யாருக்குமே, ஏன், ஒரு தனித்தமிழ் ஆர்வலருக்குமே கூட இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு வராத அளவில் அந்தக் கலவை இருக்கும். அதே போல கம்பன் கவிதைகளில் உவமைகள் ஏராளமாக இருக்கும். தேவன் எழுத்துக்களில் கூட உவமைகள் ஏராளமாக உண்டு. இவர் போல கதை கட்டுரைகளில் உவமைகள் இப்படி அள்ளித்தெளித்தவர் யாரேனும் உண்டா என்று தேட வேண்டும் கூட.

    உவமைகள் எதற்காக எழுதப்படுகின்றது என்றால் சொல்லப்படும் கருத்தின் வீரியத்தை மிக அதிக அளவில் வலுப்படுத்தும் என்பதற்காகவே உவமைகள் உருவாயின. பெண்ணின் முகத்தை பூரண நிலவொளிக்கு உவமையாக்குகிறோம். அவள் கண்களை ஒளிரும் நட்சத்திரங்களுக்கு ஒப்பு நோக்கிப் பேசுகிறோம். அவள் நாசியை கூர்மையான வெள்ளைப்பறவைக்கு ஈடு காட்டுகிறோம். பட்டு’ போன்ற கன்னங்கள் எனும் போதே அதன் மென்மையைக் காட்டி விடுகிறோம். அவள் சிரிக்கும்போது தெரியும் பற்களைக் கூட விடுவதில்லை. முத்து வரிசை, முல்லைச் சரங்கள், வெள்ளி மணி என்கிறோம். இப்படி உவமைகள் சொல்லப்படும்போதெல்லாம் இந்தக் கருத்துகள் பலம் பெறுகின்றன. பலம் பெறும்போது எளிதில் வாசகர்கள் மூளையில் போய் தங்கிவிடுகின்றது. ஆனால் பொருத்தமான உவமைகள் தேட எல்லா எழுத்தாளர்களுமே கஷ்டப்படுவர். தேவன் அப்படிக் கஷ்டப்பட்டதாகத் தெரியவில்லை. சர்வ சாதாரணமாக அவர் எழுத்தில் ஒவ்வொரு முறையும் வந்து விழும் உவமைகளை மட்டும் எழுதத் தொடங்கினால் ஒரு பெரிய ‘பைண்ட்’ புத்தகமே கூட போட்டுவிடலாம்.

    இப்படி உவமைகள் நிறைந்த கதை என்று சொல்லத் தொடங்கினால் தேவனின் ‘மிஸ் ஜானகி’ ஒன்றே போதும். எத்தனை எத்தனை உவமைகள் என்ற சான்றுக்குப் போகுமுன், மிஸ் ஜானகி கதையைப் பற்றிய ஒரு சுருக்கம் ஒன்றினைத் தெரிவித்து விடுகிறேன்.. ஏனெனில் இந்த உவமைகள் பற்றி எழுதும்போது அதன் சுவை கூடுமல்லவா.

    மதுரை வக்கீல் பட்டாபி ராமய்யரின் இரண்டாவது மகளான மிஸ் ஜானகி சென்னையில் கல்லூரி ஒன்றில் படிக்கும்போது தன்னுடைய மூத்த மாணவனான கதாநாயகன் நடராஜனின் சிநேகிதம் கல்லூரியின் நூலகத்தில் அகஸ்மாத்தாகக் கிடைக்க அது காதலாக மலர்கிறது. காதலென்றால் அதுவும் அந்தக் காலக் காதல் எல்லாம் திரை மறைவில்தான், யாருமறியாமல்தான் நடக்கமுடியும். இப்படி இருக்கையில் ஆண்டுமுடிவில் வரும் விடுமுறையில் திருச்செந்தூர் சுவாமி தரிசனத்துக்குச் செல்ல வேண்டுமென, மதுரையிலிருந்து இதற்காக இவள் அக்கா சென்னைக்கு வந்து மெனக்கெட்டு அழைத்துப்போக, சென்னையிலிருந்து ஜானகி ரயிலில் தன் அக்கையோடு பயணமாக, நம் கதாநாயகனும் தன் காதலியின் கண்பார்வையில் இருக்கவேண்டுமென விரும்பி அவளைத் தொடர்கிறான். அக்கையும் தங்கையும் மதுரை இறங்கி இல்லம் சென்ற பிறகு அடுத்த நாள் வண்டியில் திருச்செந்தூர் செல்வதாக ஏற்பாடு.

    இந்தக் கதையில் வில்லங்கம் செய்பவர்கள் உண்டு. செய்பவர்கள் மூவர். ஒருவர் ஜானகியின் சொந்த அக்கா மங்களம், இன்னொருவர் திருச்செந்தூரின் ரிடையர்டு தாசிலதாரும் திமிராகப் பேசிப் பழகும் நாகநாதைய்யர். மூன்றாவது நடராஜனின் கல்லூரியில் படிக்கும் சக மாணவனாகக் குப்பை கொட்டும் ’அல்ட்டல்’ சந்துரு. இவன் நாகநாதைய்யரின் உறவு என்பதோடு வக்கிரபுத்தி படைத்தவன் கூட. இவனுக்கு ஜானகியை எப்படியும் ’செட்டில்’ செய்து விட வேண்டும் என்ற முனைப்போடுதான் நாகநாதய்யரே ஜானகி குடும்பத்தாரை, அவர்கள் தெரிந்தவர்கள் என்ற முறையில், வற்புறுத்தி திருச்செந்தூர் அழைத்து வருகிறார். இந்த மங்களமோ ஊர் உலகத்தை அடக்குவதோடு, கணவனையும் அடக்கி தன் முந்தானை முடிச்சில் வைத்திருப்பவள்தான் என்றாலும் நாகநாதய்யர் எப்படியோ மங்களத்தைப் புரிந்து கொண்டு அவளைத் தன் வழியில் வரவழைக்கவும் முயற்சி செய்கிறார். வில்லங்கம் என வரும்போது நல்லவைகள் செய்பவரும் வேண்டுமே.. அப்படிப்பட்ட நல்லவர்களில் முதன்மையாக திருச்செந்தூர் கடற்கரையில் தன் காகிதங்களைக் காற்றில் பறக்கவிட்டு மண்ணில் பரபரவென தேடும் ‘தலைதடவி’ சுந்தரமும் (பாவம் சுற்றியுள்ள மனிதர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க, அந்த வேடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருவதைப் போல நம் கதாநாயகன் மட்டுமே உதவி புரிகிறான்), கல்லூரி அறை நண்பன் குடுமி மணியும் விசேஷமாக உண்டு. கூடவே சிறு சிறு உதவிகள் ஜானகியின் பயந்த சுபாவ அத்திம்பேர் ஜகதீசன் மூலமும், திருச்செந்தூர் அண்டை வீட்டுக் காரர்களாகக் குடியேறும் முன்னாள் நடிகை ஜகமும், நாட்டியமணி பங்காருவும் செய்து கொடுத்தாலும் இவர்களால் கிடைத்த உதவிகளை விட உபத்திரவமே நடராஜனுக்கு மிஞ்சுகிறது. கூடவே உபத்திரவமும் உதவியும் கொடுக்க திடீரென அவனைத் தேடி வந்த நடராஜனின் தந்தை டெல்லி ஹரனும் அதே போல கதாநாயகி ஜானகியின் தாய் தந்தையரும் அங்கு பின்னர் (திருச்செந்தூரில்) சேர்ந்து கொள்கிறார்கள  ஜானகியின் அப்பா தினம் வாயால் ஆயிரம் முறை அஸ்வமேதம் செய்துவிடுவதாக பேசுவாரென்றால், அவள் அம்மாவோ தினத்துக்கு ஒரு வியாதியைச் சொல்லிக்கொண்டு, அந்த வியாதியின் பெயரால் அன்றைக்கு என்ன கிழமை என பிறர் கண்டுகொள்ளும் அளவுக்குப் பழகும் பெண்மணி. (இதே போல ஒரு பாத்திரத்தைப் பின்னாளில் ‘அனபே வா’ எனும் படத்தில் சரோஜாதேவியின் அம்மாவாக வரும் நடிகைக்குக் கொடுத்துக் காப்பியடித்தார்கள் என்பது வேறு விஷயம்)

    இப்படிப்பட்ட சமயத்தில்தான் நடராஜன் தன் காதலி ஜானகியுடனும், இன்னமும் காதல் விஷயம் தெரியாத அவள் அக்கா மங்களத்துடனும் எதேச்சையாக சேர்ந்து கொண்ட முன்னாள் நடிகை ஜகத்துடனும், சென்னையிலிருந்து இவர்களோடு புகைவண்டியில் பயணம் செய்யும்போது, அடுத்த நாள் காலை வேளையில் திண்டுக்கல் ஸ்டேஷனில் கிடைக்கும் சுவையான சூடான இரண்டு இட்லிக்காக கூட்டத்தில் தள்ளுமுள்ளுகளுடன் போராடி வெற்றிகரமாக தனக்கொரு பொட்டலமும், ஜானகிக்கொரு பொட்டலமும் வாங்கி வெளியே வருவதற்குள் வண்டி இந்த அப்பாவிக் காதலனுக்குக் காத்திராமல் கிளம்பி விட, நடராஜனோ வண்டியைப் பறிகொடுத்ததோடு மட்டுமல்லாமல் வண்டியில் செல்லும் தன் அழகான காதலியையும் அவள் பார்வையில் பட வைத்திருக்கும் தன் பெட்டியையும் பறிகொடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறான்.

    அந்தப் பெட்டியில் சில விசேஷங்கள் உண்டு. ஜானகி தன் கைப்பட எழுதிய காதல் கடிதங்களைப் பத்திரமாக (காதலன் என்பான் அவ்வப்போது அதைப் படிக்கவேண்டும் அல்லவா) வைத்துள்ளான். (அந்தக் கால கட்டத்தில் காதல் கடிதம் எழுதுவது எல்லாம் மிகப் பெரிய கிரிமினல் குற்றமாக்கும் என்பதையும் நினைவில் கொள்க) இருந்தாலும் ஜானகியின் பார்வையில்தான் அந்தப்பெட்டி இருக்கிறது என்ற ஆறுதலும் என்னதான் மதுரையில் ஜானகி இறங்கினாலும் அடுத்த நாள் திருச்செந்தூரில் பார்த்து ரகசியமாக பெட்டியை வாங்கிவிடலாம் என்றும் தன்னை சமாதானம் செய்து கொண்ட நடராஜன் அடுத்த ரயிலுக்காகக் காத்திருக்கிறான். ஜானகி சென்ற ரயில் மதுரையை அடைந்ததும், எப்படி இந்தப் பெட்டியை தன் பெட்டிகளுடன் சேர்ப்பது என்று கவலைப்பட்ட ஜானகிக்கு, அதே வண்டியில் திருச்செந்தூர் பயணப்பட மதுரையில் ஏற வந்த நாகநாதய்யர் வந்ததால் அவளுக்கு மிகப் பெரிய நிம்மதியைத் தந்தது. ‘மாமா.. இந்தப் பெட்டி என் சிநேகிதியின் பெட்டி, ஜாக்கிரதையாக எடுத்துச் செல்லுங்கள், நாளை திருச்செந்தூரில் வாங்கிக் கொள்கிறேன்” என ஒப்படைத்துவிட்டு ஒரு நல்ல காரியத்தைத் திருப்திகரமாக முடித்தோம் என்ற சந்தோஷத்துடன் அந்த நிம்மதி முகத்தில் தெரிய தன் இல்லத்துக்குச் செல்கிறாள்.

    பாவம் அவள். ’கண்ணிய நடத்தையுடன் நாகநாதய்யர் எடுத்துச் செல்வார்.. அந்தப் பெட்டி அடுத்த நாள் வந்து சேரும், நடராஜனை எப்படியாவது பார்த்துத் திருப்பி  விடலாம்’ என்று நம்பிய ஜானகிக்கு இந்த நாகநாதய்யர் ரயிலில் பொழுதைக் கழிக்க வசதியாக இவளின் காதல் கடிதங்கள்தான் கிடைத்தன என்பதையும் அதைப் படித்துவிட்டு அந்த மாமா வயற்றெரிச்சலுடன் வாயும் எரிய அனைவரையும் திட்டிக் கொண்டே பயணம் செய்கிறார் என்கிற அரிய விஷயத்தை நிச்சயம் அறிந்திருக்க மாட்டாள் இல்லையா? அதிலும் தனக்கு எப்படியாவது அந்த பாழாய்ப்போன ராஸ்கல் சந்துருவை மணமுடிக்க ஆவலாய் இருக்கும் ஒருவர் கையில் இந்தக் கடிதங்கள் கிடைத்து பின்னாட்களில் என்னென்ன தொந்தரவுகள் வருமோ என்றெல்லாம் அவள் அந்தச் சமயத்தில் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

    இனி திருச்செந்தூரில் பிரத்யட்ச தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்கும் முருகப்பெருமானின் பெருமைகளை அவ்வப்போது சொல்லிக்கொண்டே நம் கதையும் விறு விறுப்பாக நகர்ந்து கொண்டே இருக்கிறது.

    கதை நகரட்டும்.. இனி ஓரளவுக்கு இந்தக் கதையின் தளமும், நடையும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இனி தேவன் இந்தக் கதையில் புகுத்திய இந்த உவமைப் பொருத்தங்களைப் பார்க்கலாம்.

    (தொடர்ந்து வரும்)

    Share
  • வாத்ஸல்யம்

    இன்ன்ம்பூரான்

    “நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை
    நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார் சோலைக்
    காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக்
    கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே.’

    (பெரிய திருமொழி 2-5-2)

    சென்னைக்கு அருகே ஒரு பெருமாள் கோயில். பெருமாளோ பக்தவத்ஸலன். தாயாரோ ‘என்னைப்பெற்ற தாயார்’. அகஸ்மாத்தாக, என் தங்கையும், அவளுடைய குடும்பமும், நானும் ஒரு நாள் சாயரக்ஷையில் திருநின்றவூர் போயிருந்தோம். அற்புதமாக தரிசனம் கிட்டியது. எல்லாருக்கும் தான். என் மனம் இந்த தெய்வீக திருநாமங்களையும், அவற்றில் குடி கொண்டிருக்கும் கனிவுக்கும், அன்புக்கும், பிரேமைக்கும் ஊற்றுக்கண்ணாகிய வாத்ஸல்யத்தில் லயித்தது. பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தாலும், சாவகாசமாக தரிசித்து, அர்ச்சானாதி பிரசாதங்களை பெற்று அனுபவிக்க முடிந்தது. அமைதியும், மன நிறைவும், சந்துஷ்டி என்பார்களே அந்த பூரணத்துவமும் எம்மை ஆட்கொண்டபடியால், லெளகீக சமாச்சாரங்கள் ( வண்டி ஓட்டுனர் தேநீர் அருந்தினாரா?/ காலணிகள் பத்திரமா? வீட்டுச்சாவி யாரிடம்?/ஓய்வூதியம் வங்கிக்கணக்கில் வந்திருக்குமா?/ அலமாரியை பூட்டினோமா? இத்யாதி) மனதை விட்டு விலகியிருந்தன. தரிசனம் முடிந்தபின் சற்று நேரம் அங்கே அமர்ந்து விட்டு வருவது ஒரு சம்பிரதாயம். நாங்களும் அவ்வாறே செய்தோம். என்ன தோன்றியதோ, தெரியவில்லை. என் தங்கை ஒரு கேள்வி கேட்டாள். பதில். அடுத்த கேள்வி.  பேசிக்கொண்டே, அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றால், ஒரு இனிய அனுபவம். பெருமானின் பெயர்: ஹிருதயாலீஸ்வரர்; அம்பாளோ மரகதாம்பிகை. கொஞ்சம் அசந்து தான் போய்விட்டோம். இப்படி ஒரு பொருத்தமா என்று. அந்த ஊரில் குடி புகுந்து விடலாமா என்று கூட ஒரு எண்ணம் உலா வந்தது. அங்கு சிறிது நேரம் அமர்ந்த பின், எங்கள் உரையாடல் தொடர்ந்தது.  இப்படி, நேரம் போனது தெரியாமல் ஒரு அரை மணி நேரம் கழிந்து விட்டது.  சில நிமிடங்களில் ஒரு கூட்டமே சேர்ந்து விட்டது, தாமதமாகத்தான் எங்களுக்குத் தெரிந்தது, முடிவில். அதுவும் எப்படி? முன்பின் தெரியாத மூத்த நபரொருவர், ‘நல்ல வேளை. நானும் கலந்து கொண்டேன். நீங்கள் யாரும் ஆக்ஷேபிக்கவில்லை. எல்லாம் ஆத்மார்த்தமாக நடந்து விட்டது. எல்லாம் அவனுடைய வாத்ஸல்யம்’ என்று சொல்லி மனமுருகி விடை பெற்றுக்கொண்டார். அப்போது தான் புரிந்து கொண்டோம், ஒரு கோஷ்டி பிரவசனம் நடந்து முடிந்திருக்கிறது என்று. கிட்டத்தட்ட பத்து/பதினைந்து பேர், அடக்கி வாசிக்கும் குரலில், சம்பாஷித்ததில் யார் யார் என்ன என்ன சொன்னார்கள் என்பது முக்கியம் அல்ல. கேள்வி தான் முக்கியம்; சாராம்சம் தான் முக்கியம். என் தங்கை கேட்ட கேள்வி, “ ஏன் இங்கு இன்று எதிர்பாராமல் கிடைத்த மனசமாதானத்தை நம்மால் மற்ற இடங்களில் இருக்கும்போது பெற முடியவில்லை?

    சாராம்சம்: முனைந்தால் அது நமக்குக் கிட்டும். முனிவர்களும், சாதுக்களும் பெறவில்லையா? முனைவது என்பதே ஒரு அப்பியாசம். அப்போது அப்பியாசத்தில் லயிக்கும் மனம் லெளகீகத்தில் தான் உழல்கிறது. வாசற்படி தாண்டி பக்தி மார்க்கத்தில் பயணிப்பதில்லை. அதனால் என்ன? ஆன்மீகமும் பயிற்சியினால் தானே படிப்படியாக கோபுரம் ஏறுகிறது. அதை செய்து பார்ப்போம். அம்மா! பக்திக்கு முன் ஆன்மீகம் எம்மாத்திரம்? ‘என்னைப்பெற்ற தாயாரின்’ கருணாசாகரத்திலோ, பக்தவத்ஸலனின் அன்புப்பிடியிலோ, ஹிருதயாலீஸ்வரரின் மனோபாவ கவர்ச்சியிலோ, மரகதாம்பிகையின் கனிவு பிரவாகத்திலேயோ, ஆன்மீகமா ஆட்சி புரிகிறது? லெளகீகத்திலிருந்து தற்காலிக விடுதலை பெற ஆன்மீகம் உதவலாம்.  தற்காலம் பெரிதும் பேசப்படும் ஆன்மீகம் வேறு. ஞானமார்க்கம் வேறு. நாமோ ஆன்மீகத்தையே லெளகீகத்தின் படி நிலையாக வைத்து குப்பை கொட்டுகிறோம். பக்தி மார்க்கமே உகந்தது. அதற்குதவத்தான் பெருமாளின் வாத்ஸல்யம். தாயாரோ பெற்றெடுத்த அன்னையானாள். அன்றொரு நாள் பிரம்மபுரத்தில் ‘பிள்ளையாருக்கு’ அடிசல் கொடுத்த அம்மை, இங்கே தாயார்.  நீங்கள் கொஞ்சம் தயங்கினால் கூட, உமது மனோபாவத்தைக் கொள்ளை கொள்ள மரகதாம்பிகா சமேத ஹிருதயாலீஸ்வரர் வந்து விடுவார். தெய்வ சன்னிதானம் நம் மனதில் தான். பக்குவம் வந்தால், என் அம்மா சொன்னமாதிரி, அவரே நம்மை தேடி வருவார். பக்தவத்ஸல பெருமாள் கடல்மல்லைத் தலசயனம் சென்று தானே, திருமங்கையாழ்வாரிடம் பாசுரம் பெற்று, மங்களாசாஸனம் செய்து கொண்டார்.  இப்படியாக ஒரு நல்ல நாள் கழிந்தது. நல்லெண்ணம் தொடர்ந்து ஆட்கொண்டவண்ணம் உளது.

    இப்படியாக சம்பாஷணை நடந்து கொண்டபோது, என் மருமான் கேட்டான், ஒரு உதாரணம் சொல்லு என்று. 1964ல் அக்காலத்து ஆடிட்டர் ஜெனெரல் ஏ.கே.ராய் அவர்களுடன் திருமலைக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டியது. வீ. வீ.ஐ.பி. ஏற்பாடு. தேவஸ்தானத்துத் தலைவர் எங்களை அழைத்துச் சென்றார். அந்த ‘ஜருகண்டி’ சன்னிதானத்தில், கருவறை தலைவாயிலில் இரண்டு மணி நேரம். ஸஹஸ்ரநாம அர்ச்சனை. எங்கள் இருவருக்கும், அவருடைய காரியதரிசி தேசிகனுக்கும் இந்த அரிய வாய்ப்பு. திருமலை வெங்கடேசனின் பக்தியில் மூழ்கிக்கிடந்தோம்.  அங்கு நுழையும் முன், திரு. ராய், ‘ராஜூ! என் கூட வா.’. (ராஜூ வண்டி ஓட்டுனர்.) தெய்வ சன்னிதானத்திலும் லெளகீகம் நடை போடுவது, அவருக்குத் தெரியாத சமாசாரமா? ராஜுவுக்கும் அந்த அரிய வாய்ப்பு. சென்னை வந்த பின் ராஜூ என்னிடம் சொன்னார், ‘நான் இரண்டு தெய்வங்களை தரிசித்தேன்.’

    சித்திரத்துக்கு நன்றி:

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 58

     

    மலர் சபா

     

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

     
    திணைநிலை வரி
    புணர்ச்சி நீட, இடந்தலைப்பாட்டில் புணர்தலுறுவான் ஆற்றாமையால் கூறுதல்

     
    (17)

     
    கடலில் புகுந்து உயிர்களைக் கொன்று வாழ்பவர்
    உன் மூத்தோராகிய தமையன்மார்;
    நீயோ கண்வழியே உடலினுள் புகுந்து
    என் உயிரதனைக் கொன்று வாழ்கின்றாயே!
    கச்சையினுள் இருந்தும்
    விம்முகின்ற உன் மார்புகள்
    மிகவும் சுமையானவை;
    அதனால் வருந்தித் தளர்ந்து
    ஒடிந்திடவும் கூடும் நின் இடை;
    உன் இடைதனை நீ இழந்திடாதே.

     
    (18)

     
    வளைந்த கண்கள் கொண்ட வலையால்
    உயிர்களைப் பிடித்துக் கொல்பவன் நின் தந்தை;
    நீயோ உன் நெடுங்கண் வலையால்
    என் உயிர்தனைக் கொல்கிறாயே!
    முத்துவடம் தாங்கிநிற்கும்
    நின் மார்புகளின் சுமையால்
    மழைமேகத்தின் மின்னல் போல்
    அசைந்து தளர்கின்றது நின் இடை;
    அதை நீ இழந்திடாதே!

     
    (19)

     
    ஓடுகின்ற படகினைக் கொண்டு
    கடல்வாழ் உயிர்களைக் கொன்று வாழ்வர்
    நின் தமையன்மார்;
    நீயோ உன் வளைந்த புருவம்கொண்டு
    எனைக் கொன்று நிற்கிறாயே!
    உன் பெருமையையும் நீ அறியாய்;
    உன்னால் பிறர்படும் துன்பத்தையும் நீ அறியாய்;
    உன் மார்புகளின் பாரம் சுமந்து
    தளர்கிறதே நின் இடை;
    அதை நீ இழந்திடாதே!

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    கடலைப் பற்றிப் பேசும்போது, கப்பல், வாணிகம் என்பதுதான் மிகுதியாக நினைவுக்கு வந்தாலும் அந்தக் கடலை நம்பி வாழ்பவர்களில் பெரும்பான்மை சமூகம் மீனவர்கள்தான். ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரை இந்தியாவின் ஏற்றுமதியில் முன்னணி வரிசையில் மீன் ஏற்றுமதியும் (அல்லது கடல் வாழ் பிராணிகள் என்று கொள்வோமாக) இருந்து வந்தது. இந்த கடல்வாழ் பிராணிகள் ஏற்றுமதியில் மிகுதியாக ஈடுபடுபவர்கள் தமிழர்கள் அதுவும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தோர்தான் அதிகம். ஏற்றுமதிகள் அதிகம் செல்வது ஜப்பான், கொரியா மற்றும் ஐரோப்ப நாடுகள் என்பதினால் குளிர்சாதன வசதிகள் கொண்ட கண்டெய்னர்களில் சென்னை, விசாகப்பட்டினம், தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்கள் மூலமாக கப்பல்கள் எடுத்துச் செல்கின்றன.

    ஆனால் இந்த கடல்வாழ் பிராணிகளின் ஏற்றுமதியில் ஒரு முக்கியமான விவரத்தை கடல் வாழ் பிராணிகள் பற்றி ஆய்வு செய்து வரும் நண்பர் கலிங்கா பாலு இந்த வாரம் தன் கட்டுரையில் எழுதியுள்ளார். அதாவது   கடலில் மீன் பிடித்து வாழும் மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களை கேரளாவில் விற்பதைப் பற்றி குறிப்புத் தெரிவித்திருக்கிறார்.  கொச்சியில்தான் இந்திய அரசாங்கம் கடல்வாழ் பிராணிகளின் ஏற்றுமதி உதவி மையத்தை தலைமையகமாக அமைத்திருக்கிறது. ஏறத்தாழ பத்தாயிரம் கோடிக்கு மேல் இந்திய அரசாங்கத்துக்கு இந்த ஏற்றுமதி மூலம் ஆண்டுதோறும் வருமானம் வருகிறது என்ற உபரித் தகவலுடன் பாலு என்ன சொல்லியிருக்கிறார் என்பதையும் படியுங்கள்.

    ”இந்தியாவின் இரண்டாவது நீளமான கடற்கரையை ( 1076 கி.மீ. )கொண்ட தமிழகம் , பாக் வளைகுடாவில் நமக்கு ஏற்படும் சிக்கல்கள் இலங்கையால், ஆறுகளை மணல் எடுத்து குப்பைகள் போட்டு மிகவும் அருமையான் கடலை மாநகரக் கழிவுகள அணு உலை கழிவுகள், தொற்சாலைகள் கழிவுகள் என்று குப்பை தொட்டி போல் வைத்து இருந்தாலும் மற்றும் பல் வேறு சிக்கல்கள் இருந்தாலும் எல்லா வளமும் நிறைந்த தமிழக கடலில் ,கடற்கரையில் வாழும் மீனவர்களின் நிலைமை அவர்கள் கொண்டு வரும் மீன்கள் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக கேரளா கொண்டு செல்லப்பட்டு 590 கி.மீ. நீளமே கொண்ட கேரளா இன்று இந்தியாவின் மிக முக்கியமான மீன் வளத் துறையாக விளங்குகிறது காரணம் கடற்கரை காயல்கள் ,ஆறுகள் கடலை ஒட்டி உள்ள ஏரிகள் போன்றவற்றிக்கு அவர்கள கொடுக்கும் முன் உரிமையும் தமிழகத்தின் கடற்கரைகளில் வரும் மீன்களை கேரளா மீன் ஏற்றுமதியாளர்கள் வாங்கித் தந்து மதிப்பை கூட்டுவதும் கேரளா மக்களின் வணிக மேலாண்மையைக் காட்டுகிறது
     
    கடலியல் தொன்மை மேலாண்மை தொடர்பாக தேடலில் இருக்கும் எனக்கு நமது கடலில் பிடிக்கும் மீன்களை நாமே வெளிநாட்டிற்கு மதிப்பு கூட்டி விற்க வேண்டும் ,கடல் சூழலியலுக்கு எந்த பாதிப்பும் கொடுக்காமல் அதன் மதிப்பை நம் மாநிலத்திற்கு கொண்டு வந்து நம் மீனவர்களின் வாழ்வியலை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் பல நாட்களாக உண்டு அதற்காக சில முயற்சிகள் எடுத்து வருகிறேன் கடலியல் உயிரினங்களை உலக வணிகத்திற்காக கொல்லக் கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து , அந்த அந்த கடற்கரை மக்களின் உணவுத் தேவைக்காக மீன்கள் கொல்லபட்டால் கடற்கரை வளம் வற்றாது உலகமயமாக்கலின் கொடுமை புவியில் மனிதனுக்கு இருக்கக் கூடிய அத்தனை உரிமைகளைக் கொண்ட மீன்களும் மனிதனின் தேவைக்குத் தந்து உயிர்களை இழக்கின்றது”

    பாலுவின் கருத்துகள் உயர்ந்த கருத்துகள். உலகமயமாக்கலின் கொடுமை எல்லாத் துறைகளிலும் ஊடுருவி நிற்பது அவர் கவலைகளை அதிகமாக்கி இருக்கிறது தெரிகிறது. கடல் சூழ் உலகம் இது. கடலிலிருந்துதான் உலகம் வந்தது. உலகத்தில் உள்ள அனைத்தும் கடலுக்குத்தான் சொந்தம். பஞ்ச பூதங்களும் கடலுக்குத்தான் சொந்தம். அப்படிப்பட்ட கடல் வளங்களைக் காக்க வேண்டாமா என்று கேட்கும் நண்பர் திரு கலிங்கா பாலுவை இந்த வாரத்து வல்லமையாளராக வல்லமைக்குழுவினர் தேர்ந்தெடுக்கின்றனர். பாலுவின் பணிகள் வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

    கடைசி பாராவில் இடம் பெறுவது லாஸ் ஏஞ்செல்ஸ் ஸ்வாமிநாதன் அவர்களின் மூக்குப் பொடி ஸ்லோகம்தான்.
    ( ”மூக்குப்பொடிக்கும்  ஸ்லோகம் இருக்கு, தெரியுமா?)

    ” பஸ்ம ரூபிணி பரிமள கந்தினி  மனோரஞ்சினி  ஜலதோஷ நாசினி
      நித்ய சுககாரிணி நமஸ்தே நமஸ்தே நாசிகாசூரணி “

    Share
  • வார ராசி பலன்: பிப். (2013) 11 – 17 வரை:

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம் : வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல், காசோலை வழங்குதல், ஆகியவற்றில் முறையாக செயல்பட்டு உங்கள் கௌரவம் நிலைக்குமாறு செய்து கொள்ளுங்கள். இந்த வாரம் மாணவர்கள் செய்ய மறந்த வேலைகளுக்காக அபராதம் கட்ட நேரிடலாம். எனவே விழிப்புடன் இருப்பது நல்லது. பெண்கள் அற்ப காரணங்களுக்காக, பிறரிடம் சண்டை, வாக்கு வாதத்தில் இறங்க வேண்டாம். சாமர்த்தியமாக இருந்தால் கலைஞர்கள் வருவதை சிக்கெனப் பிடித்துக் கொண்டு, வரவை அதிகரித்துக் கொள்ளலாம். பணியில் இருக்கும் பெண்கள் தக்க சமயத்தில், உங்களின் சிரமங்களை, எடுத்துச் சொல்லி, தீர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

    ரிஷபம் : உயர் அதிகாரிகளின் சினத்திற்கு ஆளாகாதவாறு பணிகளை உடனுக்குடன் முடித்து விடுங்கள். வியாபாரிகள் தோள் கொடுத்து பாடுபடும் பணியாளர்களின் தேவைகளை உடனுக்குடன் கவனிப்பது அவசியம். பெண்கள் தினசரி வேலைகளைத் தள்ளிப் போடாமல் செயல்பட்டால், பிள்ளைகளுடன் செலவிட நேரம் ஒதுக்கலாம். பொது வாழ்வில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சி மற்றும் விழாக்களில் சர்ச்சைக்குரிய கருத்து பரிமாற்றங்களில் இருந்து ஒதுங்கி இருங்கள். மன நிம்மதி பறி போகாமல் இருக்கும். மாணவர்கள் , பேச்சைக் குறைத்து, தன்னுடைய செயலில் தீவிரம் காட்டி வந்தால், கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

    மிதுனம் : மாணவர்கள் கவனம் மற்றும் கருத்துச் சிதறலின்றி பணிகளை மேற்கொள்ளுங்கள். அதிக மதிப்பெண்களை பெற்று மகிழலாம். இந்த வாரம் கலைஞர்கள் அநாவசிய செலவுகளுக்காக கடன்படும் நிலை வராதவாறு, விழிப்புடனிருப்பது அவசியம். பெண்கள் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கை கைக்கொண்டால், விரும்பிய வாழ்க்கை உங்கள் வசமாகும். தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து செயலாற்றும், சுயதொழில் புரிபவர்களுக்கு புதிய வாய்ப்பும், புகழும் தேடி வரும். உங்கள் தொழிலுக்கு முன்னுரிமை தந்தாலும், குடும்பத்தை கவனிப்பதில் குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். குடும்ப வாழ்க்கை அமைதியாகத் திகழும்.

    கடகம் : பெண்கள் உங்களால் நிறைவேற்றக்கூடிய காரியங்களுக்கு மட்டும் வாக்குறுதி கொடுப்பது நல்லது. கைவினை கலைஞர்கள் சிரமங்களுக்கு நடுவே தங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்வார்கள். பொது வாழ்வில் உள்ளவர்கள் சில எதிர்ப்புகளையும், எதிரிகளையும் சமாளிக்க பக்குவமாக நடந்து கொள்ளுதல் அவசியம். மாணவர்கள், நல்ல இதயங்களை புண்படுத்தாமல் இதமாக நடப்பது நன்மையைத் தரும். இந்த வாரம் வியாபாரிகள் கணக்கு வழக்குகளை அலசிப் பார்த்து நிறை குறைகளை உணர்ந்து செயலாற்றினால், அதிக லாபம் பெறலாம். கலைஞர்கள் பத்திரங்களில் பேரில் கடன் வாங்குவதை தள்ளிப் போடுவது நல்லது.

    சிம்மம் : வியாபாரத்தில் கடுமையான போட்டி இருந்தாலும், புத்திசாலித்தனமாக செயல்படும் வியாபாரிகளுக்கு வெற்றி உறுதி. வயதானவர்கள் உடல்நலக்குறைவிற்கு, சொந்த வைத்தியம் மேற்கொள்ளாமல், தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்தல்,நல்லது. மாணவர்கள் அதிக நேரம் கண் விழித்து பணிகளை முடிக்க வேண்டியிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் விளைவுகளை யோசித்தபின் கடினமான செயலில் இறங்குவது அவசியம். பெண்கள் சுய பச்சாதாபத்திற்கு இடமளிக்காதீர்கள். உங்கள் திறமைகள் உங்களை வழி நடத்தும்.பணியில் இருப்பவர்கள் குறுக்கு வழிகளைக் கையாளாமலிருந்தால், உங்கள் கௌரவம் பாதிப்படையாமல் இருக்கும்.

    கன்னி : பணியிடத்தில், கருத்து வேறுபாடும், தேவையற்ற மோதல்களும் தோன்றும் வாய்ப்பிருப்பதால், இயன்றவரை அமைதியாய் இருந்தால், அல்லல்கள் அருகே வராது. பெண்கள் வேலையாட்களை நம்பாமல், அத்தியாவசியமான வேலைகளை நீங்களே செய்து விடுவது நல்லது. வியாபாரிகள் முதலீடுகளில் அகலக் கால் வைப்பதைத் தவிர்த்து விடுவதோடு புதிய பணியாளர்களை அமர்த்துவதில் விழிப்புடன் இருப்பது அவசியம். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் படி நடந்தால், யாவும் சிறப்பாக நடக்கும். இந்த வாரம் கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை பெறவும், அதனைத் தக்கவைத்துக் கொள்ளவும், தீவிரமாக உழைப்பார்கள்.

    துலாம் : கூட்டுத் தொழிலில் உள்ளவர்கள் பங்குதாரர்கள் தரும் நல்ல ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டால், நஷ்டங்களைக் குறைத்துக் கொள்ளலாம். சுயதொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளில் தைரியத்தோடு துணிந்து நின்றால், பாதி வெற்றி கிடைத்துவிடும். மீதி வெற்றியை உங்கள் உழைப்பு நல்கும். கலைஞர்களுக்கு செலவுகள் சிலசமயம் கை மீறி செல்லும் வாய்ப்பிருப்பதால், எதிலும் கவனமாக இருப்பது அவசியம். இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு, உதவி செய்தவர்களே சில சமயம் உபத்திரவங்களைத் தருவார்கள். மாணவர்கள் ரசாயனம் தொடர்பான செய்முறைகளில், எச்சரிக்கையாய் இருந்தால், சிறு காயங்களைத் தவிர்க்க முடியும்.

    விருச்சிகம் : தலைசுற்றல், மயக்கம் ஆகியவை வாராதவாறு முதியவர்கள் உணவில் கட் டுப் படாய் இருப்பது நல்லது. உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்லதை சிலர் தடுக்க முயல்வார்கள். எனவே மாணவர்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும். வியாபாரிகள் பணம் சம்பந்தமான விஷயங்களை உங்களின் நேரடிப் பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்.பல தொல்லைகளைக் கட்டுக்குள் வைக்கலாம். இந்த வாரம் நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நம்பிக்கையின் அடிப்படையில் தான் நல்ல உறவு மலரும் என்பதைப் புரிந்து கொள்ளும் பெண்கள் ஈடுபடும் காரியங்களுக்கு உறவுகளும் துணையாய் நிற்கும்.

    தனுசு : பெண்கள் செலவுக் கடிவாளத்தை சற்று இறுக்கினால், பணமுடை ஏற்படாது. வியாபாரிகள் சரக்கு போக்குவரத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்தால், வீண் விரையத்தைத் தவிர்க்கலாம். புதிய இடங்களில் மாணவர்கள் காட்டும் சொல்சிக்கனம் பிரச்சனைகளை பெரிதாகாமல் தடுக்கும்.சுயதொழில் புரிபவர்கள் சுணக்கமின்றி, தீவிர முயற்சி செய்தால், நல்ல முன்னேற்றம் காணலாம். கலைஞர்கள் எல்லாம் தெரியும் என்கிற மனப்பான்மை உங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த வாரம் பணியில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடுவதால் மன அழுத்தமும் சற்றே அதிகமாகும்.

    மகரம் : கலைஞர்கள் ஒப்பனைப் பொருட்களின் மூலம் ஒவ்வாமை ஏற்படாதவாறு, தரமான பொருட்களை பயன்படுத்துதல் நல்லது. பெண்கள் அக்கம்பக்கத்தாருக்கு ஆலோசனை வழங்குமுன், ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது அவசியம். ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளாவர்கள் முறையான சிகிச்சையோடு எளிய பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல ஆரோக்கியம் பெறலாம். மாணவர்கள் நண்பர்களிடம் குதர்க்கமான பேச்சைத் தவிர்த்தால், மனக் கசப்பும், நட்பில் விரிசலும் ஏற்படாது.மனக் குழப்பம் உங்களின் திறமையை பாதிக்காதவாறு திடமாகச் செயல்படுங்கள். பல வெற்றிகளைப் பெறலாம்.

    கும்பம் : இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலனிருக்கும். பெற்றோர்கள் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக் கொண்டால், அவர்களின் ஆரோக்கியம் பற்றிய கவலைப்பட வேண்டாம். புத்தி வேண்டாத விஷயங்களில் ஈடு படுவதைத் தடுக்க, மாணவர்கள் தியானம் மூச்சுப் பயிற்சி ஆகிவற்றில் ஈடுபாடு காட்டுவது அவசியம். கலைஞர்கள் போட்டிகளில் ஜெயிக்கும் வாய்ப்பு பல கிட்டும். பெண்கள் உறவினரிடம் சண்டை சச்சரவின்றி பழகி வந்தால், இல்லத்தில் அமைதி நிலவும். வேலை செய்யும் இடங்களில் எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடக்கலாம். எனவே வேலையில் மட்டும் உங்கள் கவனத்தை செலுத்தி வாருங்கள்.

    மீனம் : சரளமான பணவரவு பெண்கள் மனத்தில் மகிழ்ச்சியையும், உதட்டில் புன்னகையையும் பூக்கச் செய்யும். பிறர் உங்களை தூண்டிவிட்டாலும், நேர்மையான வழியிலேயே செல்லும் வியாபாரிகளுக்கு நற்பெயர் என்றும் நிலைத்திருக்கும். முதியவர்கள் ஆரோக்கிய நலிவுக்குரிய மருந்துகளை முறையாக உட்கொண்டால், மருத்துவச் செலவுகளை கட்டுக்குள் வைத்து விடலாம். மாணவர்கள் வாகனம் ஓட்டுகையில், உரிய விதிகளை கடைப்பிடிப்பது அவசியம். இந்த வாரம் கலைஞர்களுக்கு வாகனங்கள் திடீர் செலவு வைக்கும். மனை வாங்குகையில் நம்பிக்கையான நபர்களை அணுகுங்கள். நல்ல தேர்வாக அமையும்.

    Share
  • மின்தடை

    சு. கோதண்டராமன்
    இரவு மணி எட்டு

    விசிறிகள் சுழல, விளக்குகள் ஒளிர,

    வீடு தோறும் தொக்கா முழக்கம்.

    போட்டிப் பெருங்குரல் மாணவர் படிப்பு.

    உலகமே சுறுசுறு, ஓய்விலா இயக்கம்.

     

    திடீரென மின்சாரம் நின்றது.

     

    விளக்குகள் அணைந்தன,

    தொக்கா ப்ரிட்ஜுடன் க்ரைண்டரும் வாய் மூட,

    வீட்டுக்குள் கொசுக்கடி, வெளியே வந்தோம்.

    வானம் மட்டும் பளிச்செனத் தெரிந்தது.

    இத்தனை விண்மீனா! ஈதென்ன விந்தை!

    முத்துகள் வயிரங்கள் பதித்த பட்டுடையோ!

    வெள்ளி முலாம் பெற்ற தென்னையோ பேரழகு!

    கண்களைக் கூசாத கவினுறு நிலவொளி!

    இயற்கைத் தென்றலின் இதமான தழுவல்!

     

    ஐந்து நிமிடம் கழித்து-

     

    மின்சாரம் வந்தது.

    உறைந்த உலகு உயிர்பெற்று எழுந்தது.

    விட்ட சீரியல் தொடர வேண்டும்,

    விடிந்தால் தேர்வு படிக்க வேண்டும்,

    எல்லோரும் பறவை போல் தத்தம் கூட்டில்.

    மீண்டும் இயந்திரமாயினர் மக்கள்.

    படத்துக்கு நன்றி

    http://kashmirobserver.net/news/power-cut-dismays-consumers

    Share
  • பூமிக்கு அருகே 17,000 மைல் தூரத்தில் நிலவுக்கும் இடையே முதன்முறைக் குறுக்கிட்டுக் கடக்கப் போகும் முரண்கோள் [Asteroid]

    http://www.space.com/19518-asteroid-will-fly-within-18-000-miles-of-earth-video.html

    http://www.space.com/19637-asteroid-s-alarmingly-close-flight-path-depicted-in-animation.html

    [Asteroid 2012 DA14 is about half the width of a football field (150 feet, or 45 meters), and will fly within 17,200 miles (27,700 kilometers) of our planet on Friday, Feb. 15, 2013, zooming closer to the planet than the ring of satellites in geosynchronous orbit.]

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    Path of Asteroid

    வக்கிரக் கோள்கள் வழிதவறி
    வையத்தில் மோதிச்
    சுக்கு நூறாக்க அடிக்கடிச்
    சுற்றி வருகின்றன !
    வால்மீன் வயிற்றில் அடித்து
    தூசிகளை ஆராய்ந்தார்
    நாசா விஞ்ஞானிகள் !
    விண்வெளியில் வால்மீன் ஒன்றை
    விரட்டி வாலின்
    தூசியைப் பிடித்துக்
    காசினிக்குக் கொண்டு வந்தார் !
    வக்கிரக் கோள் மாதிரியை
    வையத்தில் இறக்கி விட்டது
    ஜப்பான் ‘கழுகு’ !
    முரண்கோள் வெஸ்டாவை
    முற்றுகை இட்டது
    நாசாவின்
    “புலர்ச்சி” விண்ணுளவி
    சூரிய மண்டலத் தோற்றம்
    ஆராய் வதற்கு !
    இரு விண்வெளி விமானிகள்
    2025 ஆண்டுக்குள்
    முரண்கோள் ஒன்றில்
    தடம் வைப்பார்
    தளவுளவி இறக்கி
    உளவு செய்யப் பயிற்சி
    அளிக்கிறது நாசா,
    வையத்தைத் தாக்க வரும்
    வக்கிரக் கோளைத்
    திக்கு மாற்றித்
    திசை திருப்பப் போகிறோம் !
    +++++++++++++++++

    தற்போது நம் கைவசம் இருந்து விருத்தியாகும் விண்வெளிப் பொறியியல் நுணுக்கத்தில், ஓராண்டு விண்வெளியில் பயணம் செய்து முரண் கோள் ஒன்றில் மனிதர் இறங்கும் ஒரு குறிப்பணி நிச்சயம் சாதிக்கக் கூடியது.

    மேஜர் டிமதி பீக் (பிரிட்டிஷ் விண்வெளி விமானி) (Major Tim Peake, ESA, European Space Agency)

    முரண் கோள்கள் எப்போதும் நமது பூமிக்கருகில் தாக்க வருகின்றன. ஆனால் நாம் அவற்றைப் பற்றி அபூர்வமாய்த் தெரிந்து கொள்கிறோம். சென்ற ஆண்டு முரண்கோள் ஒன்று பூமியின் புவிச்சுற்று நிலைத்துவ வீதிக்குள்ளே (Earth’s Geostationary Orbit) சில துணைக் கோள்களுக்கும் கீழே வந்து விட்டது.

    போதிய எச்சரிக்கைக் காலத்துக்குள், நாமோர் சுயத்தாக்கு விண்ணுளவியை (Robotic Impact Spacecraft) அனுப்பி பூமியை நெருங்கும் முரண் கோளை மோதித் திசையைத் திருப்பி, ஏற்படப் போகும் எதிர்பாராத பிரளயத் தீங்குகளைத் தடுக்க முடியும்.

    முரண் கோளுக்குப் போகும் அவ்விதக் குறிப்பணி செய்ய நான் விரும்புகிறேன். இந்த முயற்சி சீராக முன்னேறினால் 2025 ஆண்டுக்குள்ளே என்னாலோ அல்லது வேறு ஈசா (ESA) விண்வெளி விமானி களாலோ அந்தக் குறிப்பணி நிறைவேறும்.

    மேஜர் டிமதி பீக் (ESA விண்வெளி விமானி)

    பூமிக்கருகில் நேரப் போகும் ஓர் அற்புதப் பயங்கர விண்வெளி நிகழ்ச்சி

    2013 பிப்ரவரி 15 இல் சிறிய வக்கிரக் கோள் [Asteroid : 2012 DA14] முதன் முறையாக பூமிக்கு அருகில் 17,000 மைல் தூரத்தில் குறுக்கிட்டுக் கடந்தது செல்லப் போவதாய் நாசா முரண் கோள் விஞ்ஞானிகள் பிப்ரவரி 6 ஆம் தேதி அறிவித்துள்ளார்கள். இந்த வக்கிரக் கோள் நகர்ச்சியை நாசாவின் துணைக்கோள் [WISE (Wide-field Infrared Survey Explorer) Spacecraft] தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. 2011 ஆண்டில் நாசாவின் புவிச்சுற்றி [NASA Orbiter] பூமிக்கு அருகே சுற்றும் 100 மீடர் (300 அடி) பரிமாணத்துக்கு மேற்பட்ட சுமார் 20,500 முரண் கோள்களின் போக்கைக் கூர்ந்து நோக்கி வருகிறது. அவற்றில் குறிப்பாக 100 முரண் கோள்களே பூமிக்கு மிக்க அருகில் நெருங்கி வருவதாகத் தெரிகின்றன.

    சிறிய வக்கிரக் கோள் [2012 DA14] பூமிக்கும் நிலவுக்கும் இடையே 17,000 மைல் தூரத்தில் கடக்கப் போவதாக அதன் சுற்றுப் பாதை கணிக்கப் பட்டுள்ளது. நிலவு சுமார் 239,000 மைல் தூரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. உலக நாடுகளின் பல்வேறு தொடர்புத் துறை, கால நிலை அறிவிப்புத் துணைக் கோள்கள் 22,200 மைல் [35,800 கி.மீ.] உயரத்தில் பூமியைச் சுழலிணைப்புச் சுற்று வீதியில் [Geosychronous Orbit] வலம் வருகின்றன. ஆனால் 17,000 மைல் உயரத்தில் குறுக்கிடப் போகும் சிறிய முரண்கோள் நிலவையோ, பூமியையோ, துணைக் கோள்களையோ மோதப் போவதில்லை என்று நாசா விஞ்ஞானிகள் உறுதியாக அறிவிக்கிறார். இது ஓர் அற்புதப் பயங்கர நிகழ்ச்சி. இதுவரை நேராத ஓர் ஆபத்து நிகழ்ச்சி.

    WISE Spacecraft

    சிறிய முரண்கோள் [2012 DA14] பூமிக்கருகில் குறுக்கிடும் விந்தை விபரங்கள்

    முரண்கோள் [2012 DA14] 2.7 மில்லியன் மைல் தூரத்தில் உள்ள போது, 2012 பிப்ரவரி 23 இல் ஸ்பெயின் தேசத்து மல்லோர்கா விண்ணோக்கி ஆய்வுக்கூட விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப் பட்டது. சிறிய முரண்கோள் 150 அடி அகலமும், 130,000 மெட்டிரிக் டன் எடையும் கொண்டது. அது பூமிக்கு மிக நெருங்கி வரும் நாள் 2013 பிப்ரவரி 15 ஆம் தேதி. பூமிக்கு ஒப்பாக அதன் வேகம் : வினாடிக்கு சுமார் 5 மைல் [வினாடிக்கு 8 கி.மீ.] அது கடந்து செல்லும் போது, கிழக்கு இந்து மாக்கடலில் சுமாத்ரா தீவுக்கு அப்பால் தென்படும் என்பது தெரிகிறது. அப்போது அது பூமிக்குச் சுமார் 17,200 மைல் [27,700 கி.மீ.] உயரத்தில் சுற்றிச் செல்லும். துல்லியமாகச் சொல்லப் போனால் முரண்கோள் 17,180 மைலுக்குக் [27,650 கி.மீ.] கீழே நெருங்கி வரப் போவதில்லை என்று அதன் வேகத்தை வைத்து நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளார். பூமிக்கும் நிலவுக்கும் இடையே அந்தச் சிறிய முரண் கோளின் குறுக்கீடு 33 மணி நேரங்கள்தான் நீடிக்கும் என்று அறியப் படுகிறது. பிப்ரவரி 16 ஆம் தேதி சிறிய முரண் கோள் பூமிய விட்டு அப்பால் சென்றுவிடும். அந்தக் குறுக்கீட்டின் போது, பூமியிலோ, நிலவிலோ எந்த விதக் “ஒளி மறைப்போ” அல்லது “நிழலடிப்போ” [Eclipse] இருக்காது என்று நாசா முரண்கோள் கண்காணிப்பு விஞ்ஞானிகள் அறிவிக்கிறார்.

    Asteriods -1

    பூமிக்கு அருகில் சுற்றி வரும் [Asteroid 2012 DA14] போல் பயங்கரச் சிறிய முரண்கோள்களின் எண்ணிக்கை சுமார் 500,000 என்று நம்பப் படுகிறது. அவற்றில் 1% கீழ் எண்ணிக்கை முரண் கோள்கள்தான் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்று தெரிகிறது. நாசாவின் புவி அண்டக்கோள் திட்ட விஞ்ஞானிகள் சராசரி 40 ஆண்டுக்கு ஒருமுறை இதுபோல் சிறிய முரண் கோள்கள் பூமிக்கு அருகில் நெருங்குவதாய் மதிப்பீடு செய்துள்ளார். அந்தச் சராசரி மதிப்பீட்டின்படி 1200 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு சிறிய முரண்கோள் பூமியில் மோதலாம் என்றும் ஊகிக்கப் படுகிறது.

    அமெரிக்க, ரஷ்ய, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளின் அகில நாட்டு விண்வெளி நிலையம் பூமிக்கு மேல் 240 மைல் உயரத்தில் சுற்றி வருகிறது. சிறிய முரண்கோள் பூமியைக் குறுக்கிடும் 17,000 மைல் உயரத்தில் எந்த துணைக்கோளும் இப்போது பூமியைச் சுற்றி வருவதில்லை. இது போன்ற சிறிய முரண்கோள் ஒன்று பூமியின் மீது மோத நேரிட்டால், ஏற்படும் பூமி அதிர்ச்சி சுமார் 2.5 மெகா டன் சக்திக்கு ஒப்பாகும். 1908 இல் சைபீரியாவின் துங்கஸ்கா நதிக் காடுகளில் நேர்ந்த சிறிய முரண்கோள் [சுமார் 100- 130 அடி நீளம்] தாக்கம் 750 சதுர மைல் தகர்ப்பை உண்டாக்கி மட்ட மாக்கி உள்ளது. அது முரண்கோள் குழுவினரால் “துங்கஸ்கா நிகழ்ச்சி” [Tunguska Event] என்று குறிப்பிடப் படுகிறது. நாசாவின் நியோ திட்ட விஞ்ஞானிகள் [NEOO – NASA Near Earth Object Observation Program] பூமிக்கருகே வரும் முரண்கோள்களைத் தொடர்ந்து கண்காணித்து எச்சரிக்கை செய்து வருகிறார்.

    ஒளிமந்தையில் (Galaxy) வாழும் அறிவுசார்ந்த உயிரினத்துக்கு பேரிடர் தரும் பயமுறுத்தல் முரண் கோள்கள் மோதுவதால் நேரப் போவதே !

    ஸ்டீஃபன் ஹாக்கிங்.

    “(முரண்கோள்களில் பனிநீர் உள்ளது) என்னும் கண்டுபிடிப்பால் நமது சூரிய மண்டலத்தின் முரண்கோள் வளைய (Asteroid Belt) அரங்கத்திலே பேரளவு நீர்ப்பனி இருந்திருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது. அக்கருத்து முரண் கோள்கள் பூமியைப் பன்முறைத் தாக்கிப் பேரளவு நீர் வெள்ளத்தைக் கடலில் நிரப்பியது என்னும் கோட்பாடுக்கு ஆதாரம் அளிக்கிறது. புவியில் உயிரினம் தோன்றவும் விருத்தி அடையவும் முரண்கோள்களின் உள்ளமைப்புப் பொருட்கள் மூலச் செங்கற்களாய் இருந்துள்ளன.”

    ஹம்பர்டோ காம்பின்ஸ், மத்திய பிளாரிடா பல்கலைக் கழகம்

    “முரண்கோள்களில் காணப்படும் உலோகப் பொருட்கள் பரிதிக் கோள்கள் தோன்ற கட்டுமானப் பொருட்களாய் உதவியவை. முரண்கோள் #2 பல்லாஸ் (Asteroid #2 Pallas), முரண்கோள் #10 ஹைஜியா (Asteroid #10) (Hygiea) ஆகிய இரண்டிலும் விஞ்ஞானிகள் நீர்ப்பனியும், கார்பன் அடிப்படை ஆர்கானிக் கூட்டுகளும் இருப்பதாக நம்புகிறார்.”

    கரோல் ரேமண்டு (Dy Principal Investigator, NASA Dawn Mission)

    “2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகளை ஒரு வக்கிரக் கோளுக்கு (Asteroid) அனுப்பி வைக்க நாசாவுக்கு நான் ஆணை இடுகிறேன். அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் “புலர்ச்சி” விண்ணுளவி (Dawn Space Probe) தேவையான விபரங்களை இப்போது சேமிக்கும்.”

    ஓபாமா அமெரிக்க ஜனாதிபதி

    “பூமியை நெருங்கும் முரண்கோள் ஒன்றில் மனிதர் இறங்கிப் பாதையைத் திருப்பி விடும் நுணுக்க வெடி முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும். அது விண்வெளி வரலாற்றில் ஒரு புதுச் சாதனை மைல் கல்லை நாட்டி வைக்கும்.”

    ஜான் கிரௌன்ஸ்ஃபெல்டு (American Astro-physicist John Grunsfeld)

    “முதன்முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) முக்கிய வக்கிரக் கோள் ஒன்றை நாசாவின் விண்ணுளவி சுற்ற ஆரம்பித்து விண்வெளித் தேடலில் ஓர் உன்னத மைல்கல் நட்ட இன்றைய தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம். வெஸ்டா முரண்கோளை விண்ணுளவி ஆராய்வது மாபெரும் விஞ்ஞானச் சாதனையாகக் குறிக்கப்படுகிறது. அது எதிர்காலப் பரிதி மண்டலக் கோள்களுக்கு மனிதர் பயணம் செய்யப் பாதை விரிக்கிறது.”

    சார்லஸ் போல்டன் (NASA Administrator)

    “வக்கிரக் கோள் வெஸ்டாவில் ஓர் உலோகக் கரு (Metal Core) மையத்திலும் சிலிகேட் பாறை அதைச் சுற்றிலும் இருப்பதாக நாங்கள் ஊகிக்கிறோம். பரதி மண்டல வரலாற்றில் எப்போதோ அதன் தென் துருவ முனை உடைந்து பெரும்பான்மைப் பகுதி சப்பையாகப் போனது. அப்பகுதியின் சிதறிய சில துணுக்குகள் பூமியிலும் விழுந்திருக்கலாம். பூமியில் விழுந்த 20 விண்கற்களில் ஒன்று வெஸ்டாவிலிருந்து விழுந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

    “வெஸ்டா, கிரிஸ் வக்கிரக் கோள்:களை ஆராயும் போது விண்கோள்களின் முரணான தோற்றப் பண்பாடுகளை அறிய முடியும். முன்னது பரிதி மண்டல அகக் கோள்கள் போல் (Inner Planets) பாறைக் கட்டமைப்பில் வார்க்கப் பட்டது. பின்னது புறக்கோள்கள் போல் (Outer Planets) பனித்தள வடிவத்தில் உருவானது.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

    2025 ஆண்டுக்குள் முரண்கோள் ஒன்றில் இறங்க நாசா விண்வெளி விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது.

    பூமிக்கு அப்பால் போகும் முரண் கோள் ஒன்றில் நாசாவின் தளவுளவி தடம் வைக்கப் போகிறது. 1969 இல் சந்திர மண்டலத்துக்குப் பயணம் செய்து பல அமெரிக்க விண்வெளி விமானிகள் தடம் வைத்து ஆய்வு செய்து மீண்டார்கள். இது பெரிய விண்வெளித் தேடல் பயணம். 2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகள் முரண் கோளில் முதமுதல் இறங்குவார் என்று அமெரிக்க அதிபர் ஓபாமா சமீபத்தில் அறிவித்துள்ளார். நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்யத் திட்டமிடும் முரண்கோள் மணிக்கு 50,000 மைல் வேகத்தில் (மணிக்கு 80,000 கி.மீ.) பூதக்கோள் வியாழனைச் சுற்றி வரும் முரண்கோளில் ஒன்று. அதன் தூரம் சுமார் 3 மில்லியன் மைல். விண்வெளி விமானிகள் பயணம் செய்து முரண்கோளில் தடம் வைத்து ஆராய்ந்து வர ஓராண்டு காலம் எடுக்கும். 1969 இல் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் 240,000 மைல் தூரத்தில் பூமியைச் சுற்றும் நிலவில் கால் வைத்து மீள எட்டு நாட்கள் எடுத்தன. முரண்கோள் மனித மீள் பயணத்தின் விபரங்களை ஈசாவைச் சேர்ந்த மேஜர் டிமதி பீக், மே மாதம் 16, 2012 இல் அறிவிப்பு செய்தார். அந்தப் பயிற்சியில் டிமதி பீக், மற்றும் அவரது ஐந்து சகாக்களும் முரண்கோளின் மெலிந்த ஈர்ப்பாற்றலில் அனுபவம் பெற அட்லாண்டிக் கடலடியில் 65 அடிக்குக் கீழ் 12 நாட்கள் உண்டு, உலவி, உறங்கி வரவேண்டும். அதற்கு அவர்கள் வசிக்க 43 அடி நீளம், 20 அடி அகல நெருக்கடிச் சிமிழ் (Capsule) ஒன்றில் பொழுதைக் கடக்க வேண்டும்.

    பயிற்சியின் முக்கிய அம்சங்கள் :-

    1. முரண்கோளின் தளவுளவியில் இறங்கித் தடம் வைத்து ஆய்வுகள் செய்யும் விண்வெளி விமானங்கள் இருவர்.

    2. முரண்கோள் மனித விண்கப்பல் பயணத்தில் பங்கு கொள்வோர் இருவரா அல்லது மூவரா என்பது இப்போது தெரிய வில்லை.

    3. முரண்கோளைச் சுற்றித் தளவுளவியைக் கண்காணிக்கும் தாய்க் கப்பலை இயக்குபவர் விண்வெளி விமானி ஒருவர். தாய்க் கப்பலே தளவுளவியின் தகவலைப் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வரும். (இது மாறலாம்)

    4. புவியிலிருந்து சுயத் தாக்கு விண்கப்பலை அனுப்பி எப்படி முரண்கோளைத் திசை திருப்புவது என்பதே முக்கிய குறிப்பணியாக இருக்கும்.

    5. முரண்கோளின் தளவுளவுகள் ஆய்வு செய்வதின் முக்கிய குறிக்கோள். பாதை தவறிப் பூமிய நெருங்கித் தாக்கப் போகும் வாய்ப்பு இருக்குமாயின் அதை எப்படித் திசை திருப்புவது என்பது அறியப்படும். அதாவது பூமியிலிருந்து நெருங்கும் முரண்கோள்களின் போக்குகள் தொடர்ந்து பதிவு செய்யப்படும். பாதை தவறிப் பூமியை நெருங்கும் முரண்கோளின் வேகம், திசை, ஈர்ப்பாற்றல் கணிக்கப் படும். அதன் பின் மனிதரற்ற ஒரு சுயநகர்ச்சி விண்கப்பல் முரண்கோளை நோக்கி அனுப்பப்படும். முரண்கோளை அது குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட வேகத்தில் மோதி திசை திருப்பும்.

    பூமியின் மூலாதார நீர்வளத்தைத் தெளித்தவை முரண் கோள்களா ?

    முன் யூகிப்பிலிருந்து விலகி இப்போது பூமியின் கடல் வெள்ளமும், சூழ்வெளி வாயு மண்டலமும் தீவிர எரிமலை எழுச்சிகளால் கிளம்பிய புகை மூட்டத்தில் உண்டானவை என்னும் பழைய கோட்பாடு மாறி யுள்ளது. பிரென்ச் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானி பிரான்சிஸ் ஆல்பாரடே (Francis Albarede), “பரிதிக் கோள்கள் தோன்றி 100 மில்லியன் ஆண்டுகள் கடந்து புவி பிள்ளைக் கோளாய் வளரும் பருவத்தில் அதன் ஆரம்ப உட்பொருளாய் நீர் உருவக்கப் படவில்லை,” என்று ஆலோசனை கூறுகிறார். ஆப்பம் சுடுவது போல் வட்டத் தட்டாய் முதலில் உருவாகிய பூமியிலே மூன்றில் இருபங்கு நீர் மயமாய் இருக்கும் வெள்ளம் புறவெளிக் கோள்கள் மூலமாகத்தான் (Extraterrestrial) தாமதமாக வந்திருக்க வேண்டும் என்றோர் புதுக் கருத்து மாறுபாடு உறுதியாகி உள்ளது. பூமியில் உயிரினம் தோன்றும் முன்பே நீர் வெள்ளம் நிரம்பி அடித்தட்டு நகர்ச்சி இயக்கங்கள் (Plate Tectonics Movements) நிகழக் காரணமாக இருந்திருக்கிறது என்றும் பிரான்சிஸ் ஆல்பாரடே கூறுகிறார்.

    நீரிருக்கும் இடத்தில் உயிரினம் இருந்திருக்கும் என்பதை உலக விண்வெளி ஆய்வுக் குழுக்கள் ஏற்றுக் கொள்ளும். 4.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்னே புவிக் கடலில் போதிய நீர் நிரம்பி உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான சூழ்நிலைக் கடலிலும், கண்டங்களிலும் இருந்து அடித்தட்டு நகர்ச்சிக்கும் (Plate Tectonics) வழி வகுத்தது. அகக் கோள்களை ஒப்பு நோக்கினால் புதன் கோளும், நிலவும் புவியைப் போலின்றி படு வரட்சி ஆயின. செவ்வாய்க் கோளும் வாயுக் குடையின்றி சூரியக் கனலில் நீர் ஆவியாகிப் பாலை வனமாய் வரண்டு போனது. வெள்ளிக் கோள் சுட்டுப் பொசுக்கும் அமிலத்தில் அக்கினிக் கோள் ஆனது.

    முரண் கோள்களில் பனிநீர் இருப்பு கண்டுபிடிக்கப் பட்டது.

    2010 ஆண்டில் இரண்டு ஆய்வுக் குழுவினர் தனித்தனியாக முரண்கோள்களில் நீர்ப்பனியும், ஆர்கானிக் மூலக்கூறுகளும் இருப்பதற்கு ஆதாரங்களைக் கண்டறிந்தனர். 2010 ஏப்ரலில் முதற்குழு முரண்கோள் தெமிஸில் (Asteroid # 24 Themis) பனிநீர் இருப்பதையும், 2010 அக்டோபரில் இரண்டாம் குழுவினர் முரண்கோள் சைபெலியில் (Asteroid # 65 Cybele) பனிநீர் உள்ளதையும் கண்டுபிடித்தனர்.

    இவ்விரு புதிய கண்டுபிடிப்புகளும் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பரிதி மண்டலக் கோள்கள் தோன்றிய பிறகு பனிநீர் கொண்ட முரண்கோள்கள் பூமியைத் தாக்கி நீர் வெள்ளத்தை நிரப்பி உயிரினப் பிறப்புக்கும் வளர்ச்சிக்கும் வசதி அளித்திருக்கலாம் என்னும் புதிய கோட்பாடுக்கு வழி வகுத்திருக்கிறது.

    விஞ்ஞானிகள் 180 மைல் (290 கி.மீ.) விட்டமுள்ள முரண்கோள் #65 சைபிலியின் பரிதி ஒளிப் பிரதிபலிப்பை ஆராய்ந்தனர். சைபிலி முரண்கோள் செந்நிறக் கோள் செவ்வாயிக்கும் பூதக்கோள் வியாழனுக்கும் இடையில் பரிதியைச் சுற்றி வருகிறது. விஞ்ஞானக் குழுவினர் இருவித ஆய்வுக் கருவிகளைப் பயன் படுத்தினார். 1. நாசாவின் ஹவாயி மௌனா கியா உட்சிவப்பு தொலைநோக்கி (NASA’s Infrared Telescope in Hawaii) 2.. ஸ்பிட்ஸர் விண்வெளித் தொலைநோக்கி (Spitzer Telescope). இரண்டு கருவிகளும் முரண்கோள் சைபிலியின் மேற்தள நீர்ப்பனி இருப்பின் முத்திரை அடிப்பைப் பதிவு செய்தன. அத்தோடு சிக்கலான ஆர்கானிக் திடப் பொருட் களையும் (Complex Organic Solids) கண்டன. அவை பெரிதான நீர்ப்பனிப் பாறைகளாக இல்லாமல் மிக மெல்லிய (Less than 1 micron thick) பனித்தட்டு களாகவும், நிலையற்றதாகவும் இருந்தன.. பனிநீர்ப் படிவுகள் ஒருசில ஆயிர ஆண்டுகளுக்குள்தான் படிந்திருக்க வேண்டும்.

    விஞ்ஞானிகள் முரண்கோள்களை ஆராய்வதற்கு ஐந்து காரணங்கள்

    1. பரிதி மண்டல மூலத் தோற்ற விபரங்களை முரண்கோள்கள் கூறுகின்றன.

    பூதக்கோள் வியாழனுக்கும், செந்நிறக் கோள் செவ்வாயிக்கும் இடையே பரிதியைச் சுற்றிவரும் முரண்கோள்கள் அகத்தே சுற்றும் விண்பாறை வெப்பக் கோள்களுக்கும், புறத்தே சுற்றும் குளிர்ச்சியான வாயுக் கோள்களுக்கும் நடுவே வலம் வருவதால் பல்வேறு வடிவங்களில் கோள்கள் உருவான தெப்படி என்பதற்கு ஆதாரங்கள் அளிக்கலாம். நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி ஆராயப் போகும் முரண்கோள்கள் வெஸ்டா, செரிஸ் இரண்டும் வெவ்வேறானவை. வெஸ்டாவில் விண்கற்கள் / முரண்கோள்கள் தாக்குதல் மிகுந்திருந்ததால் தேய்வு வெப்பம் சூடாக்கும் அதிக அளவு கதிரியக்க அலுமினியம் (Radioactive Aluminium) காணப் படுகிறது. முரண் கோள்களைப் பற்றி ஆராயும் விஞ்ஞானிகள் இதுபோன்ற பல புதிர்களை விடுவிக்க முடியும்.

    2. பரிதிக் கோள்கள் சிலவற்றில் உயிரினத் தோற்ற மூலத்தை அறிய முடியும்

    பூமியில் உயிரற்ற ஆர்கானிக் பிண்டத்திலிருந்து உயிரனங்கள் எப்படி உதித்தன என்பது விஞ்ஞானிகளுக்கு இன்னும் ஒரு புதிராகவே உள்ளது ! அந்த மர்மத்தைத் தீர்க்க முரண் கோள்கள் உதவலாம். செரிஸ் போன்ற பேரளவு நீர்ப்பனி மண்டலம் கொண்ட சில முரண் கோள்கள் உயிரின மூலத் தோற்றங்களை அறிய உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    முரண்கோள்களில் காணப்படும் உலோகப் பொருட்கள் பரிதிக் கோள்கள் தோன்ற கட்டுமானச் செங்கற்களாய் உதவியவை. முரண்கோள் #2 பல்லாஸ் (Asteroid #2 Pallas), முரண்கோள் #10 ஹைஜியா (Asteroid #10 Hygiea) ஆகிய இரண்டிலும் உயிரினம் தோன்ற மூலக் காரணமான நீர்ப்பனியும், கார்பன் அடிப்படை ஆர்கானிக் கூட்டுகளும் இருப்பதாக நம்பப்படுகிறது.”

    3. பூமிக்கு அருகில் சுற்றும் முரண்கோள்களில் உலோகங்கள் தோண்டி எடுக்கலாம்.

    பூமிக்கு அருகில் உள்ள வளையத்தில் சுற்றும் முரண்கோள்களில் (Asteroids in Near-Earth Belt) விலை மதிப்பில்லா உலோகங்கள் இருப்பதால், அங்கு எதிர்கால விண்வெளி விமானிகள் பயணம் செய்து ஆராய வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆதலால் முரண்கோள்கள் சிலவற்றின் மூலக் கலவைகளை முற்றிலும் அறிவது தேவையாகிறது.

    4. முரண்கோள் எப்போதாவது பூமியைத் தாக்கப் போவதாய்ப் பயமுறுத்தலாம்.

    பரிதியைச் சுற்றிவரும் சில முரண்கோள்கள் நீள்வட்டத்தில் வலம் வருவதால் சில சமயம் அவை பூமிக்கு அருகில் வர வாய்ப்புள்ளது. அவை சில வேளை மிகவும் பூமிக்கருகில் வந்து விடும். 2010 ஜனவரியில் முரண்கோள் 2010- AL30 பூமியை 80,000 மைலுக்குள் (130,000 கி.மீ.) நெருங்கி அபாய நிலையை அறிவித்தது. நல்ல வேளையாக சிறிய முரண்கோள் 2010- AL30 இன் அகலம் 36 அடி (11 மீடர்) மட்டுமே. நாசாவின் அடுத்த எச்சரிக்கை இது ! ஏப்ரல் 13, 2036 இல் இரண்டு கால் பந்துத் திடல் நீளமுள்ள முரண்கோள் அபோ·பிஸ் (Asteroid Apophis) பூமிக்கருகில் 18,300 மைல் தூரத்தில் வரப் போகிறது என்று உலகுக்கு அபாய மணி அடித்துள்ளது ! அது பூமியில் விழுந்தால் பேரளவு சேதம் உண்டாகும் என்று அஞ்சப் படுகிறது !

    5. விண்வெளி விமானிகள் 2025 ஆண்டுக்குள் முரண்கோள் ஒன்றில் இறங்கி ஆராயலாம்

    அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா 2010 ஏப்ரலில் 2025 ஆண்டுக்குள் அமெரிக்க விண்வெளி விமானிகள் ஒரு முரண்கோளுக்குப் பயணம் செய்து மீளுவார் என்று அறிவித்திருக்கிறார். அப்போது விமானிகள் முதன்முறையாக முரண்கோளை வெடிவைத்து அதன் சுற்றுப் பாதையை மாற்ற முயல வேண்டும் என்று அமெரிக்க விண்வெளிப் பௌதிக விஞ்ஞானி ஜான் கிரௌன்ஸ்ஃபெல்டு (Astro-physicist John Grunsfeld) ஆலோசனை கூறி இருக்கிறார். அப்பயிற்சி பூமியைத் தாக்க வரும் எதிர்கால முரண்கோளைத் திருப்பி விடப் பிற்காலத் தேவைக்கு உதவும் என்று சுட்டிக் காட்டி இருக்கிறார்.

    2015 இல் நீர்ப்பனி நிரம்பிய முரண்கோள் செரிஸை நோக்கி நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி

    2011 ஜூலை 17 ஆம் தேதி நாசா 2007 செப்டம்பரில் ஏவிய புலர்ச்சி விண்ணுளவி புவியைத் தாண்டிப் பரிதி மண்டலத்தில் நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து முதன் முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) பெரிய வடிவில் ஒன்றான வெஸ்டா வக்கிரக் கோளை (Asteroid Vesta) நெருங்கிச் சுற்ற ஆரம்பித்துள்ளது. பரிதி மண்டல முரண் கோள் வளையத்தில் கோடான கோடி வக்கிரக் கோள்கள் செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடையே வியாழனைச் சுற்றிக் கொண்டு வருகின்றன. நகரும் இந்த அடர்த்தி மந்தையில் வெஸ்டாவைக் கண்டுபிடித்துப் பிற வக்கிரக் கோள்கள் மோதிச் சிதையாமல் சுற்றி வருவது ஒரு மாபெரும் விண்வெளிச் சாதனையாகவும் வரலாற்று மைல் கல்லாகவும் கருதப்படுகிறது. விண்ணுளவி அன்றைய தினத்தில் வெஸ்டாவை 530 கி.மீ. (300 மைல்) உயரத்தில் வலம் வந்தது. வெஸ்டாவை நெருங்கவே நான்கு வருடங்கள் கடந்து விட்டன. ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி மேலும் நான்கு ஆண்டுகள் பயணம் செய்து அடுத்துள்ள எல்லாவற்றுக்கும் பெரிய முரண்கோள் செரிஸை (Asteroid Ceres) 2015 இல் சுற்றத் துவங்கும். 2015 இல் செரிஸை ஐந்து மாதங்கள் ஆய்வு செய்து புலர்ச்சியின் குறிப்பணி முடியும் போது அது சுமார் 3 பில்லியன் மைல்கள் பயணம் செய்திருக்கும்.

    முரண்கோள் வளையத்தில் எல்லாவற்றுக்கும் பெரிய வக்கிரக் கோள் செரிஸ். அதன் பூதளத் தன்மைகளைக் கண்டறிய முதலில் உதவியது ஹப்பிள் தொலைநோக்கி. செரிஸின் குறுக்கு நீளம் 580 மைல் (930 கி.மீ). ஏறக்குறைய உருண்டையான கிரிஸ் புளுடோ போல் பரிதி மண்டலத்தின் குட்டிக் கோள் (Dwarf Planet) என்ற வகுப்பணியில் வைக்கப் படுவது. செரிஸ் முரண்கோளில் 40 – 80 மைல் (60 – 120 கி.மீ) ஆழப் பனித்தளம் உள்ளதாகவும் பூமியை விட இனிப்பு நீர்ச் சேமிப்பு (Sweet Water Storage) ஆறு மடங்கு மிக்கதாகவும் அறியப் படுகிறது. 2015 இல் சுற்றப் போகும் நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி செரிஸில் பேரளவு உறைந்து கிடக்கும் நீர்ப்பனியின் முழு விபரங்களை நேரடியாக அறிந்து நமக்கு அறிவிக்கும்.

    (தொடரும்)

    ************************
    தகவல்:

    Picture Credits: NASA, JPL, ESA, JAXA

    1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
    2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
    3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
    4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
    5 http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]
    5 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=41006061&format=html (Plasma Rocket Engines)
    6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
    7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
    8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
    9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
    10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)
    11. Space Probe Enthralls Japan, as it Heads Home By : Sagamihara (AFP) June 8, 2010
    12 Scientific American Hayabusa Spacecraft Headed Back Toward Earth, Perhaps with Asteroid Dust in Hand By : John Matson (June 11, 2010)
    13 Space Flight Now – Japan Spacecraft will Plunge Back to Earth Sunday By : Stephen Clark (June 12, 2010)
    14 Wikipedia : Missio Type Asteroid Sample Returned to Earth (June 13, 2010)
    15 Space Flight Now : Hayabusa Completes Fiery Return to Earth (June 13, 2010)
    16 Aviation Week – Japan Hayabusu Spacecraft Capsule Successful Landing (June 13, 2010)
    17. Space Daily : Asteroid SampleReturn Capsule Recovered in Outback Australia (June 14, 2010)
    18 Japan Seeks Guiness Record Listing for Space Probe. (June 15, 2010)
    19. BBC News : Successful Launch for NASA Probe (Dawn) (Sep 27, 2007)
    20 Wikipedea : http://en.wikipedia.org/wiki/Asteroid_belt (July 19, 2011)
    21 BBC News : Dawn Probe Orbits Asteroid Vesta By : Jonathan Amos (July 17, 2011)
    22 Space Flight Now : Dawn Asteroid Explorer Moves into Orbit ar Versa By Stephen Clark (July 17, 2011)
    23 BBC News : Asteroid Vesta Reveals its Scars By : Jonathan Amos (July 19, 2011)
    24 Daily Galaxy : Was Earth’s Original Water Delivered by Ice-covered Asteroids ? (July 19, 2011)
    25. Wikipedia – http://en.wikipedia.org/wiki/Ceres_(dwarf_planet) (July 20, 2011)
    26. Wikipedia – http://en.wikipedia.org/wiki/Dawn_(spacecraft) ((July 25, 2011)
    27. Wikipedia – http://en.wikipedia.org/wiki/Colonization_of_Ceres (July 29, 2011)
    28. Space Daily – http://www.spacedaily.com/reports/Dawn_Views_Dark_Side_of_Vesta_999.html
    (July 29, 2011)

    29. NASA Trains Astronauts to Land on an Asteroid before 2025 (May 16, 2012)

    30. http://www.smh.com.au/technology/sci-tech/asteroids-earth-flyby-will-enter-satellite-zone-20130208-2e28j.html [Asteroid’s Earth fly-by will enter satellite zone] (Februrary 8, 2013)

    31. http://www.space.com/19518-asteroid-will-fly-within-18-000-miles-of-earth-video.html [NASA Discusses Asteroid 2012 DA14 Earth Flyby Today: How to Watch Live] (February 7, 2013)

    32. http://www.space.com/19653-asteroid-2012-da14-earth-impact-threat.html [Next Week’s Asteroid Flyby Shows Earth is in ‘Cosmic Shooting Gallery’ ] (February 5, 2013)

    33. http://www.upi.com/blog/2013/02/05/Asteroid-DA14-February-15th-flyby-Fear-vs-Fact-VIDEO/4191360083623/ (Asteroid DA14 February 15th flyby Fear vs. Fact [VIDEO])

    34. http://en.wikipedia.org/wiki/Wide-field_Infrared_Survey_Explorer WISE Spacecraft [February 1, 2013]

    ++++++++++++++++++

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) (February 10, 2013)

    Share
  • நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – தொடர்-26

     பெருவை பார்த்தசாரதி

    சமுதாயத்தின் இன்றய சூழ்நிலை மாற்றங்களைப் பற்றிச் சிந்திக்கும்போது, பல நூற்றாண்டுகளுக்குப் முன் வாழ்ந்த மகரிஷிகளும், முனிவர்களும், மஹான்களும் நமக்கு விட்டுச்சென்ற அறநெறிகள் என்கிற பொக்கிஷங்களை எவ்வாறு படைத்திருப்பார்கள். சற்று ஆராந்து பார்த்தோமானல், இவர்கள் எந்தக் கல்லூரியில் படித்தார்கள்?…யாரிடம் கல்வி பயின்று பட்டம் பெற்றார்கள்?….,எப்படி அறிவிற்சிறந்து விளங்கினார்கள்?…என்ற சந்தேகங்கள் எழும்.  அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை எண்ணிப் பார்த்தால் கூட வியப்பு மிகும். இயற்கையோடு ஒன்றி, விலங்கினங்களோடும், தாவரங்களோடும், சுற்றுப் புற சூழ்நிலைகளோடும் ஒட்டி உறவாடி வாழ்ந்தார்கள். இயற்கையே தெய்வமாக வணங்கினார்கள். இயற்கையோடு நல்லுறவாடும்போது, போற்றி வணங்கும்போது, விண்ணிலும் மண்ணிலும் அமைதி நிலவுவதை உணர்ந்தார்கள். இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதினார்கள். அவர்களால் படைக்கப்பட்ட இதிகாசங்கள், புராணங்கள், உபநிஷத்துக்கள், காப்பியங்கள் போன்றவற்றில் நல்வாழ்க்கைக்கு வேண்டிய அறநெறிகள் நிறைந்து காணப்படுகின்றன. இது போன்ற போற்றுதற்கரிய காப்பியங்களைப் படைத்தவர்கள், எந்தச் சூழ்நிலையை அடிப்படையாக வைத்து, இதைப் படைத்திருப்பார்கள்?… விஞ்ஞான வளர்ச்சியடையாத பண்டைக் காலத்தில் ‘வாழ்வதற்கே சிரமப்பட்ட சூழ்நிலையில்’ இன்றைக்கு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சகல செளகர்யங்களில் ஒன்று கூடத் தோன்றாத கற்காலத்தில், இப்படிப்பட்ட அரிய சிந்தனைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்வாழ்ந்தவர்கள் மனதில் தோன்றியது வியப்புக்குறியது. ஆனால் 21 ஆம் நூற்றாண்டில், இன்று ‘தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ற படி மாறிக்கொள்ளும் மாட மாளிகைகளும், அதிநவீன கம்ப்யூட்டர் யுகத்தில், விஞ்ஞான வளர்ச்சியோடு சுகபோகத்தை அனுபவித்துவாழும் அறிஞர்களுக்குக் கூட காட்டில் வாழ்ந்த ஞானிகளின் வழிகாட்டுதல் அவசியமாகிறது.

     மனித வாழ்க்கையே ஒரு போராட்டம், இந்த நிலையில் சிந்தனை தோன்றுவது அபூர்வம் அதிலேயும், துன்பங்கள் என்னும் அலைகளில் சிக்கித் தவிக்கின்றபோது நற்சிந்தனைக்கும், சாதனைக்கும் இடமில்லை. பணிசெய்யும் இடத்தில் பிரச்சினை, குடும்பத்தில் சிக்கல், உறவினர்களால் வரும் துன்பம், நாமே தேடி வரவழைத்துக் கொள்ளுகின்ற கவலைகள் இப்படி துன்பங்கள் ஏதும் இல்லாமல் இருப்பவர் இவ்வுலகில் உண்டா?.. என்ற கேள்விக்கு விடை காண்பதரிது…எல்லா வசதிகள் இருந்தும், ஏதாவதொரு துன்பத்தை அனுபவிக்கிறவர்கள் இருக்கிறார்கள்.

     நல்வாழ்க்கை வாழ அனைவருமே ஏதாவதொரு வேலையில், பணியில் ஈடுபட்டு வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். கடவுளின் அருளினால், சுபிட்சமான வாழ்க்கை கிட்டினாலும் அதை அனுபவிக்கத் தெரியாமல் சிக்கித் தவிப்போரும் உண்டு.  ஒரு சிறிய துன்பத்தைக் கூட ஏற்றுக் கொள்ள மனம் ஒப்புவது இல்லை. சாதாரணமாக நம்மிடம் பழகுபவர்கள் சிலரிடத்தில் ‘நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டுப் பாருங்கள். உடனே அதை ஏன் கேட்கிறீகள், அலுவலகத்தில் ஒரே வேலை, இங்கும் அங்கும் ஓட வேண்டியிருக்கிறது, இடையே டிரெய்னிங் ப்ரோக்ராம் வேறு, ஒரு வாரம் சரியாகச் சாப்பிடவில்லை, உடம்பு சரியில்லை, தூங்கவில்லை, வீட்டைக் கவனிக்க முடியவில்லை, என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொள்வார்கள், முடிவில் பெரிதாக ஒன்றும் சாதித்திருக்கவும் மாட்டார்கள். இதில் உடற்குறையைச் சொல்லி, கடமையைத் தட்டிக் கழிப்பவர்களும் உண்டு.ஆக நேரத்தை சரியான முறையில் திட்டமிட்டு செயல்பட்டால் இத்தகய சலிப்புக்கு அங்கே இடமிருக்காது. எதையுமே இன்முகத்தோடு வரவேற்பவருக்கு எல்லாமே இன்பம்தான். வாழ்க்கை எவ்விதம் அமைந்தாலும், அதை ஏற்று வாழும் மனப்பக்குவம் உள்ளவர்களுக்கு முதுமையும், உடல் உபாதைகளும் பெரிதாகத் தோன்றாது, வயதானாலும் இளைமையாகத் தோன்றுவதற்கு இதுவே காரணம் என்பது மனநல ஆராய்ச்சியாளர்கள் கருத்து. இவை அனைத்துக்கும் காரணமாக அமைவது மனது. மனம் தெளிவாக இருந்தால் சிந்தனை பிறக்கும். சிந்தனை தெளிவானால் மனதிலே சக்தி பிறக்கும், மனசக்தி தடைகளை உடைத்தெறியும், சாதனை படைக்கும்.

    ஒரு வயதானவர் கூறுகிறார், என்னுடைய கடமைகளை நான் நிறைவேற்றிவிட்டேன்.  பிள்ளைகள் எல்லோரையும் படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்தாகி விட்டது, ஆனால் அவர்கள் இன்னும் செட்டில் ஆக வில்லை என்கிறார். பிள்ளைகள் அனுபவிக்கின்ற துன்பங்களையும் பெற்றோர் பங்கெடுத்துக் கொள்வதால், இந்தக் கடமை என்பதற்கு எல்லை இல்லைபோலும். சிலர் வசதியாக வாழ்ந்து பிறகு முதியவராகும்போது, ஏதாவதொரு வகையில் மற்றவர்களைச் சார்ந்து வாழவேண்டிய நிலைக்கு (dependent) ஆகிவிடுகிறார்கள்.  உடல்நலக் குறைபாடுகள் ஒன்றா, இரண்டா,  மருத்துவரிடம் விவரிக்கும்போது, அவரே குழப்பத்துக்குள்ளான மாதிரி, உடலில் ஏகப்பட்ட சிக்கல்கள், முடிவில் ஒரு பெரிய மருத்துவசோதனைப்பட்டியல், மருந்துச்சீட்டு, இயன்முறை பயிற்சிமையத்துக்கு (psysiotheraphy centre) ஒரு வாரகாலம் பரிந்துரைத்தல் போன்றவற்றோடு மருத்துவமனையிலிருந்து விடுதலை. இம்மாதிரி இக்கட்டான சந்தர்ப்பந்தங்களில் வருங்காலத்தைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி விடுவது சகஜம். துன்பம் வரும்போது துணைக்கு வருபவரது அறிவுரை, உறவினர், நண்பர்களது பரிந்துரை, நல்ல மருத்துவர் மற்றும் மருத்துவமனையைத் தேடுதல் போன்றவைகளும் பின் தொடரும், இதனால் மனம் மேலும் குழப்பமடையும், நாம் பூஜை, பிரார்த்தனை, பரிகாரம் முதலியவற்றைச் சரிவர செய்துகொண்டிருக்கின்ற போதிலும், பரிகார ஸ்தலங்கள், குளங்கள், மஹான்கள், சாதுக்கள் முக்கியமாக துறவறம், காவிவேட்டி போன்றவைகள் அடிக்கடி ஞாபத்துக்கு வந்து மேலும் நம்மை அலைக்கழிக்கும். நலம் விசாரிப்பவர்களோடும்,  நண்பர்களோடும் உரையாடும்போது தத்துவங்கள் பேசத்தோன்றும். மருத்துவமனையில் தனிமையை விரட்டி, மருத்துவருக்காகவும், மருத்துவ சோதனைக்காகவும் காத்திருக்கும் நேரத்தில், மற்றவரின் அறிவுரையைவிட, நமக்கெல்லாம் உதவக்கூடியது, கைகொடுக்கக்கூடியது என்று சொன்னால், நம்மைப் போல வேறு பலரும் துன்பங்களை அனுபவிப்பவர்களைப் பார்க்கும் போது சற்று ஆறுதல் கிடைக்கும். உடலில் ஒரு சிறிய காயம் பட்டால்கூட, சாதாரண மருத்துவரிடம் செல்லாமல் நிபுணரிடமல்லவா செல்கிறோம். இந்நேரத்தில் ஜனனம் எடுக்கும்போதே குறைகளோடு பிறப்போரைப் பற்றிச் சிந்திக்கிறோமா?…பிறக்கும் போதே ஊனத்தோடு பிறந்தவர்கள், உலக சாதனை புரிவதைப் பற்றி எண்ணிப் பார்க்கிறோமா?…என்றால் ‘இல்லை’ என்பதே பெரும்பாலானவரிடமிருந்து வரும் பதிலாக இருக்கும். மருத்துவரிடம் போகும் போது மட்டும் இத்தகய சிந்தனைகள் நமக்கு எழுவது இயல்பு என்றாலும், மற்ற நேரங்களில் மகிழ்ச்சியாக இருக்கும் போதாவது, இவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுவதில்லை. கஷ்டத்தை வெல்ல மந்திர உச்சாடனை செய்வதைவிட, குறைகளைக் களைந்து சாதனை வாழ்க்கை வாழ்ந்த பலரில், ஒரு சிலரை மட்டும் நினைத்தாலே துன்பங்கள் ஓடோடிவிடும். தினமும் காலையில் மகிழ்ச்சியாக படுக்கையைவிட்டு எழுந்தவுடன் காபி அருந்திவிட்டு, மின்விசிறியை ஆன் செய்து, தினசரிகளைப் புரட்டுகிறோம் அல்லது பாட்டுக் கேட்கிறோம். இந்த ஒரு சாதாரண செயலுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் உண்மைகளை என்றாவது ஒரு நாள் சிந்தித்தித்திருக்கிறோமா!..

    தனது 46 வது வயதில், இடது கையிலும், காலிலும் சில இடங்களில் நிரந்தரமாக செயலிழந்த போது இவை எதையுமே கருத்தில் கொள்ளாமல், ஒருவித ஆராய்ச்சித் துறையில் முழுவதுமாக தன்னை இணைத்துக் கொண்டார். பதப்படுத்துதல், நுண்ணுயிர்கள் பற்றிய இவரது தொடர் ஆராய்ச்சிகள் முடிவில் இவருக்கு உலகப் புகழைத் தேடித்தந்தன. அனுதினமும் பால், பியர், ஒயின், மதுவகைகள் போன்றவற்றைப் பயன்படுத்துபவர்கள் இவரை நினைத்து நன்றி செலுத்த வேண்டும். தினமும் அதிகாலையில், பாக்கட் பால் வாங்குபவர்கள் காபி குடிப்பதற்கு முன் தவறாமல் நினைத்துப் பார்க்க வேண்டியவர்தான் லூயிஸ் பாஸ்ச்சர்

    இன்று நாம் மகிழ்ச்சியோடு பாட்டு மற்றும் பலரது பேச்சுக்களையும் கேட்கிறோம். வெளிச்சம் இல்லையேல் வாழ்க்கை இல்லை என்பதுபோல மின்சார வெளிச்சத்தில் வாழ்க்கை முழுவதும் பலன்களை அனுபவத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு ஐந்து நிமிடம் கரெண்ட் இல்லையென்றால், ஒருவேலையும் செய்ய இயலவில்லை. ‘சம்சாரம் இல்லாமல் வாழ்ந்தாலும், மின்சாரம் இல்லாமல் வாழமுடியாது’ என்பதை உணருகிறோம். ஆனால் தனது இளம் வயதிலேயே ஒருவருக்கு மூளைக்காய்ச்சல் நோய் தாக்கி, நாளடைவில் காது கேட்கும் திறனையும் வெகுவாக இழந்து விட்டார் ஒருவர். அதனால் படிப்பிலும் அதிக நாட்டம் இல்லை. அங்கக் குறையைத் தாங்கி, அயறாத ஆராய்ச்சியில் ஈடுபட்டு உலகத்துக்கே ஒளி ஏற்றினார். இவரது கண்டுப்பால் இரவு பகலானது. நமது வீட்டில் மின்சாரத்தால் இயங்கும் எந்தவொரு பொருளைத் தொடும் போதும், தவறாமல் நம் நினைவில் கொள்ள வேண்டியது இவரைத்தான். இவர் இறந்தபோது உலகமே ஒரு நிமிடம் கண்ணைமூடி (மின்சார விளக்குகளை அணைத்து) நன்றி செலுத்தியது, அவர்தான் தாமஸ் ஆல்வா எடிசன்.

    மிகச்சிறந்த இசைப் படைப்பாளர் என்ற பெயருக்கு உரியவர். உலகத்தை தன் இசையால் கட்டிப்போட்டவர் என்றுகூடச் சொல்லுவார்கள். இவர் ஒரு கால கட்டத்தில் முழுவதும் காது கேளாதவராக இருந்தார் என்பதும் அந்தக் கால கட்டத்தில்தான் தனது 9 வது சிம்பனியை உருவாக்கி சாதனை நிகழ்த்தினார். இனிமையான இசையைக் காதால் கேட்டுத்தானே ரசிக்க முடியும். காதால் கேட்டு இசையை ரசிக்கக்கூடிய பாக்கியத்தைத் தான் பெறவில்லை என்றாலும், பிறருக்கு அந்த இன்பத்தைத் தரமுடிந்த அந்தக் கலைஞனின் மனம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும்?……நிச்சயமாக எல்லோரும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். தனது சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட சோகங்களை எதிர்கொண்டு, உலகையே இனிமையான இசையால் மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர்தான் இசைச் சக்கரவர்த்தி பீத்தோவான்.

    இவர்களைப் போல் இன்னும் எத்துணையோ சாதனையாளர்கள், பிறவித் துன்பத்தைத் துச்சமாகக் கருதி, சுயநலம் இன்றி சிந்தித்ததால்தான், இன்றய வாழ்க்கையில் மேம்பட்ட நிலையை நாம் எட்டமுடிகிறது.  

    மகாகவி பாரதி எப்போதுமே, உலகவியலைப் பற்றிக் கனவு கண்டவர். வாழ்க்கையில் நிகழும் துன்பங்களைக் கண்டு ஒரு போதும் உழல மாட்டேன் என்று உறுதிபட எடுத்துரைத்தவர். அவரது படைப்புகளில் ‘என்னுடைய வாழ்நாளில் நான் சாகாமல் இருக்கும் கலையைக் கற்றவன்’ என்று சொல்வது போல ஒரு பாடலை அமைத்திருப்பதைக் காணமுடியும். உலகநியதி என்று சொல்லக்கூடியவைகளை வென்று காட்டுவேன் என்று சொன்ன அவர், பிறப்பும், இறப்பும் மாற்றமுடியாத உலக நியதி, அதிலே கூட மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டு ரசிக்கும் பாரதி, துன்பங்களைக் கண்டு ஒருபோதும் நான் சாக மாட்டேன் என்று உறுதி கூறுகின்றான் போலும். கவலையையும், அச்சத்தையும் போக்கி, துன்பத்திலிருந்து விடுபட்டு மரணத்தை வெல்ல மாகாளியிடம் வரம் வேண்டுவதைப் பாருங்கள்!…

    முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்

    முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார்.

    பொந்திலே யுள்ளாராம், வனத்தில் எங்கோ

    புதர்களிலே யிருப்பாராம், பொதிகை மீதே

    சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே

    சற்றெ யங்கங்கேதென் படுகின் றாராம்,

    நொந்தபுண்ணைக் குத்துவதில் பயனொன் றில்லை;

    நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!

    அந்தணனாம் சங்கராச்சார்யன் மாண்டான்;

    அதற்கடுத்த இராமாநுஜனும் போனான்!

    சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,

    தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,

    பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;

    பார்மீது நான்சாகா திருப்பேன், காண்பீர்!

    மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,

    மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,

    நலிவுமில்லை, சாவுமில்லை! கேளீர்,கேளீர்!

    நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை

    சுருங்கச் சொல்லின், வருகின்ற துன்பத்தை இன்பத்தோடு வரவேற்று, அதையும் இன்பமாகவே கருதினால், பகைவரும் கூட பாராட்டுவர் என்பதைத்தான் ‘துன்பத்தை இன்பமெனக் கொண்டு அமைதி வாழ்க்கை வாழ்தலே சாலச்சிறந்தது’ என்கிறது வள்ளுவனின் வாழ்வியல் பாடம்.

     இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்

    ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள்-630)

    தொடரும்………

    Share
  • கல்லூரி கட்டணம்

    மாதவன் இளங்கோ

    “ஏண்டா சீனி, காத்தால சீக்கரமா போவணும்னு நேத்து ராவே சொல்லமாட்டே? சாப்பாடே உன்னும் ஆகல!” என்று திட்டிக்கொண்டே சமையற்கட்டிலிருந்து வெளியே வந்தாள் என் தாய்.

    “பரவால மா. இன்னிக்கி எங்க கம்பெனி கஸ்டமர்ஸ் ரெண்டு பேரு     அமெரிக்காலர்ந்து வராங்களாம். ஏர்போர்டுக்கு போயி கூட்டினு போணும். கம்பெனி காரு சாவிய வேற நைட் ட்யூடி பாத்த இன்னோரு டிரைவர் மறந்து வீட்டுக்கு எடுத்துனு போயிட்டானாம். அவன் வீட்டுக்கு வேற போணும். நான் மத்தியானம் ஹோடல்லயே சாப்டுக்கறேன்.” என்று கூறிவிட்டு எனது ஷூவை துடைத்து மாட்டிக்கொண்டு கிளம்ப ஆயத்தமானேன்.

    “பால் சுத்தமா இல்ல. முருகன் கடைல டீயாச்சும் குடிச்சிட்டு போடா. வெறும் வயித்துல போகாத.”

    “சரிம்மா. ஆமா, செல்விக்கு இன்னக்கி காலேஜ் இல்லையா? இன்னும் தூங்கினே இருக்குது.”

    ” அட போடா! ஒன்னும் தெரியாத மாரி கேக்கற. ஏந்தான் அவள நீ அந்த காலேஜில சேத்துவுட்டியோ? அப்பப்போ காசு கேட்டு ராவடி பண்றானுங்க. காலேஜி பீசு கட்டணும்னு அவ மூஞ்ச உம்முன்னு வெச்சிணு கிறா. நீயும் கம்முனு கீற. கொஞ்சம் எதனா பண்ணமுடியுமா பாரு. கட்டற தேதி முடிஞ்சி ஒன்ற மாசம் ஆகுது.”

    “நான் என்னா மா பண்றது? எங்க போறது? நான் என்னா யார்கிட்டயும் கேக்காமையா இருக்கேன்?”

    “இல்லாட்டி பேசாம அவள நிறுத்திட்றா நீ. கல்யாணம் பண்ணி அனுப்பில்லாம். படிப்பும் வேணா! ஒரு எழவும் வேணா!” என்று கத்தினாள்.

    “மா, காலாங்காத்தால உன் கச்சேரிய ஆரம்பிக்காத. என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும். சாயங்காலம் பேசிக்கலாம்.” என்று கடிந்து விட்டு அய்யப்பந்தாங்கல் பேருந்து நிலையத்தை நோக்கி விரைந்தேன்.

    நல்லவேளையாக தாம்பரம் செல்லும் பேருந்து ஒன்று கிளம்பத் தயார் நிலையில் இருந்தது. இன்னும் கொஞ்சம் வேகமாக ஓடிச்சென்று பேருந்தில் ஏறி அமர்ந்தேன். உட்கார இடம் கிடைத்ததில் சிறிது மகிழ்ச்சியடைந்தாலும், சற்று நேரத்திற்கு முன்பு என் தாயுடன் பேசியது நினைவுக்கு வரவே, மீண்டும் விசனம் வந்து என்னைத் தொற்றிக்கொண்டது.

    நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே என் தந்தை காலமாகிவிட்டார். தந்தையின் மரணத்திற்குப் பிறகு உறவுகள் தானாய் விலகிக்கொண்டன. எங்கே நாங்கள் அவர்களுக்கு பாரமாகி விடப் போகிறோமோ என்கிற (அ)நியாயமான பயம் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

    என் தாய் வீட்டுவேலை செய்ததில் கிடைத்த பணம் எங்கள் உணவிற்கே போதவில்லை என்பதால், என் படிப்பை நிறுத்திவிட்டு, என் தந்தையின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் லாரி கிளீனராக என் வேலையைத் தொடங்கி, படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று ஓட்டுநராகி விட்டேன்.

    கல்வி கற்க வேண்டும் என்கிற ஆவல் நிறைய இருந்தாலும், போதாமையால் இளம் வயதிலேயே இந்த வேலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன். ஆனால், என் தங்கையை மட்டும் எப்பாடுபட்டேனும் நன்றாகப் படிக்கவைக்க வேண்டும் என்கிற வெறி அந்த வயதிலிருந்தே எனக்கு இருந்தது.

    அவளுடைய பள்ளிக்கல்வி வரை அதிக சிரமமில்லாமல் எங்களால் சமாளிக்க முடிந்தது. ஆனால், என்றைக்குக் கல்லூரிக்குப் போக ஆரம்பித்தாளோ அன்றைய நாளிலிருந்தே நிலைமை தலைகீழ் ஆகிப்போனது.

    இந்த இரண்டு வருடங்களில் நிறைய கடன்கள் வாங்கிவிட்டேன். மேலும் யாரிடம் கடன் கேட்கலாம் என்று எனக்குத் ரொம்பத் தெரிந்தவர்கள், சுமாராகத் தெரிந்தவர்கள், எங்களை விட்டு என்றோ விலகிப் போன உறவுகள் என்று இப்படி எல்லோரையும் பட்டியலிட்டு, ஒவ்வொருவரிடமும் சென்று கடன் கேட்டேன். சொல்லி வைத்தார் போல அனைவரிடமிருந்தும் ஒரேமாதிரியான பதில் வரும். இதற்கு மேல் கடன் கேட்க எனக்கு யாருமேயில்லை என்கிற நிலை.

    வீட்டிலும் இதற்கு மேல் விற்பதற்கு என்று எதுவுமே இல்லை. என்னுடைய ஓரே ஒரு சொத்தான பைக்கையும் விற்றுவிட்டேன். நான் பள்ளிக்குத்தான் செல்லவில்லையே தவிர வாசிக்கும் பழக்கம் அதிகமாய் இருந்ததால், தெருவோரக் கடைகளில் வாங்கிய புத்தகங்கள் மட்டும் வீட்டில் ஒரு மூலையில் இரண்டு மூட்டைகள் முழுக்க நிரம்பிக் கிடந்தது. அடுத்ததாக அவைகளைத்தான் விற்கவேண்டும். ஆனால் இப்போதெல்லாம் யார் புத்தகங்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள்? தமது கதாநாயகர்களின் திரைப்படங்களின் ஆரம்ப நாள் அமர்க்களங்களுக்கு வேண்டுமானால் ஆயிரம், இரண்டாயிரம் இறைப்பார்கள்; குடம் குடமாக பால் வாங்கி அபிஷேகம் செய்வார்கள். புத்தகமாவது? வாங்குவதாவது?

    சரி, வீட்டையாவது விற்கலாமென்றால், புறம்போக்கு நிலத்தில் கட்டிய குடிசையை யார் வாங்குவார்கள்? இன்னும் சொல்லப்போனால் அரசாங்கம் என்றைக்கு அந்த இடத்தை எங்களிடமிருந்து பறித்து, வீட்டை இடித்துத்தள்ளுமோ என்கிற எண்ணம் அவ்வப்போது எனக்குத் தோன்றி மிரட்டிப் பார்க்கிறது.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு சிறிய ‘கால் டாக்ஸி’ நிறுவனத்தில் ஆம்னி ஓட்டிக்கொண்டிருந்தேன். என் தங்கை பொறியியல் கல்லூரி சேர்ந்த சமயத்தில் கிட்டத்தட்ட எல்லா வங்கிகளுக்கும் சென்று கடன் கேட்டேன். எனது தற்காலிகப் பணியை காரணங்காட்டி எல்லா வங்கிகளுமே கடன் தர மறுத்து விட்டன.

    இதற்காகவே அரசாங்கத்திலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு நல்ல நிறுவனத்திலோ ஓட்டுநராக வேலைக்குச் சேர வேண்டும் என்கிற வெறியோடு வேலை தேடியலைந்தேன்.

    கடன் வாங்குவதற்கானத் தகுதியை அடைவதற்காகவே ஒரு நல்ல வேலையை த் தேடிய முதல் ஆள் நானாகத் தானிருப்பேன்.

    எங்கள் கம்பெனி டாக்ஸியில் அடிக்கடி பயணித்த வாடிக்கையாளர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் எனக்கு ஓட்டுநராக வேலை கிடைத்தது. மாத ஊதியம் கொஞ்சம் குறைவாயிருந்தாலும், சேமநல நிதி, மருத்துவக் காப்பீடு, நன்றாக வேலை செய்வோருக்கு கூடுதல் ஊதியம் என்று நிறையச் சலுகைகள் இருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு இந்த வேலை மிகவும் பிடித்திருந்தது.

    என் மேலதிகாரி வேணுகோபால் மிகவும் கண்டிப்பானவர். மற்ற ஓட்டுநர்களை விட என் மீது அவருக்கு ஒரு தனி அக்கறை உண்டு. எனக்கு இருக்கும் புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தையும், எனது தமிழ் உச்சரிப்பையும் பாராட்டினாலும், ஆங்கிலம் நன்றாக பேசக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று அடிக்கடி அறிவுரை வழங்குவார். என் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கையினால் என்னை வங்கிக்குச் செல்வது, பொருட்கள் வாங்கி வருவது போன்ற மற்ற சில அலுவலகப் பணிகளையும் செய்யச் சொல்லுவார். நல்ல உடைகளை அணிந்து வரச்சொல்வார். அதனால் தான் இப்போதெல்லாம் நான் சட்டையை மடித்து விட்டுக் கொண்டு, ஷூவெல்லாம் அணிந்து கொண்டு, கிட்டத்தட்ட ஒரு மென்பொருள் வல்லுநரைப் போல அலுவலகத்திற்குச் செல்கிறேன். என்னையே எனக்கு இப்போதுதான் மிகவும் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

    வார நாட்களில் இரவு பகல் பாராமல் உழைத்துவிட்டு, வார ஈறுகளில், சொந்தமாகக் கார் வைத்திருக்கும் எனக்குத் தெரிந்த பழைய வாடிக்கையாளர்கள் சிலருக்கு கார் ஓட்டினேன். அதன்மூலம் சிறிது கூடுதல் வருமானம் கிடைத்தாலும், என் தங்கையின் கல்லூரிச் செலவுகளுக்கு அது போதுமானதாக இல்லை.

    போதிப்பது என்ன அவ்வளவு சிரமமான விஷயமா? பிறகு ஏன் இந்தக் கல்லூரிகள் இப்படி வசூல் வேட்டை நடத்துகின்றன? தரமான கல்வி ஏன் எங்களைப் போன்ற ஏழைகளுக்கு ஒரு எட்டாக்கனியாகவே இருக்கிறது? என் தங்கையின் இந்த வருடக் கல்லூரி கட்டணத்தை எப்படிக் கட்டுவது? வேணுகோபால் சாரிடம் கேட்கலாமா? தருவாரா? நல்லவர்தான்! ஆனால் கண்டிப்பானவர் ஆயிற்றே? எப்போது திருப்பிக் கொடுப்பாய் என்று கேட்டால் என்ன சொல்வது? திருப்பிக் கொடுக்காவிட்டால் வேலைக்கே உலை வைத்துவிடுவார்களே?” என்று இப்படி ஏதேதோ கேள்விகளைத் தனக்குள்ளே கேட்டுக்கொண்டு சிந்தனையில் தொலைந்து போயிருந்த என்னை, தாம்பரம் பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து சேர்த்தது எம்.டி.சி பேருந்து எஸ் 166.

    மேற்கு தாம்பரத்திலிருந்த மற்றொரு ஓட்டுநரின் வீட்டிற்கு ஓட்டமாய் ஓடி, சாவியை வாங்கிக்கொண்டு, அங்கிருந்து நேராக அலுவலகத்திற்குச் சென்று காரை எடுத்துக்கொண்டு நான் விமான நிலையத்திற்குள் நுழையவும், எங்களுடைய அமெரிக்க கஸ்டமர்கள் வந்த விமானம் தரையிறங்கவும் சரியாக இருந்தது.

    அவர்களுடைய பெயர்கள் எழுதியிருந்த போர்டை கையில் வைத்துக்கொண்டு வருகைக்கூடத்தில் அவர்களுக்காகக் காத்திருந்தேன்.

    இரண்டு மேல்நாட்டவர்கள் புன்னகைத்துக் கொண்டே என்னை நோக்கி வந்தார்கள். அவர்களாகத்தானிருக்கும் என்று யூகித்த சமயம், அவர்களில் ஒருவர், “ஆ யூ சி..ரி..நி.. வசன்?” என்று கேட்டார்.

    பெயரைச் சிறிது குழப்பி உச்சரித்தாலும், அவர்கள் எனது பெயரை  தெரிந்து வைத்திருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

    “எஸ் சார். ஐயாம் சீனிவாசன்!” என்று கூறிவிட்டு அவர்களிடமிருந்த கைவண்டியைப் பெற்றுக் கொண்டு,  கார் நிறுத்தத்திற்கு அழைத்துச் சென்றேன்.

    சரியாக இருபது நிடங்களில், எங்கள் வாடிக்கையாளர்கள் வழக்கமாகத் தங்கும் ராடிசன் ஹோட்டலுக்கு அவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்தேன். சற்று நேரம் இளைப்பாறிவிட்டு, காலையுணவை முடித்துக் கொண்டு வந்த அவர்களுடன் அலுவலகத்திற்குக் கிளம்பினேன்.

    அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே காரை ஓட்டிச் சென்றேன். அது ஆங்கிலம் போலவே இருந்தாலும், பெரும்பாலான வார்த்தைகளும், விஷயங்களும் எனக்குப் புரியவே இல்லை. போக்குவரத்து நெரிசலைப் பற்றியும், ஒழுங்கீனமாக வண்டிகள் சென்று கொண்டிருப்பதைப் பற்றியும் பேசிச் சிரித்துக்கொண்டிருப்பது போலத் தெரிந்தது. ஒருவேளை என் தங்கைக்கு இவர்கள் பேசுவது நன்றாகப் புரியும் என்று நினைத்துக் கொண்டபோது, அவளின் கல்லூரி கட்டணமும் சேர்ந்து நினைவுக்கு வந்து வருத்தியது.

    முப்பது நிமிட ஓட்டத்திற்குப் பிறகு ஐ.டி நெடுஞ்சாலையில் இருந்த எங்கள் அலுவலகத்திற்கு சென்றடைந்தோம். காரிலிருந்து இறங்கிய அவர்கள், “யுவர் டிரைவிங் இஸ் ஆசம்! வெரி டிசிப்ளின்ட் டிரைவர்! ப்ரிசியேட் இட்!” என்று கூறிவிட்டு என்னிடம் கைகுலுக்கி வாழ்த்தினர்.

    “தாங்க்யூ சார்!” என்று கூறிய எனக்கு அவர்கள் பயன்படுத்திய சில வார்த்தைகளும், உச்சரிப்புகளும் புரியவில்லை என்றாலுங்கூட, அவற்றிலிருந்த உணர்வுகள் நன்றாகவே புரிந்தது.

    மாலை ஐந்து மணிக்கு வேணுகோபால் சாரிடமிருந்து எனது கைபேசிக்கு அழைப்பு வந்தது.

    “ஸ்ரீனி, ரிசெப்ஷனுக்கு கொஞ்சம் உடனே வா.”

    “இதோ வர்றேன் சார்” என்று கூறிவிட்டு உள்ளே ஓடினேன்.

    வரவேற்பு கூடத்தில் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தது அந்த ஆறடி உயரம்.

    “ஸ்ரீனி, இன்னிக்கி ஒரு ஆறுமணிக்கு திரும்பவும் கஸ்டமர்ச ஹோட்டலுக்கு கூட்டிட்டு போகணும். நம்ம பாபு சாரும் கூட வருவார். அவர் டீம்லர்ந்து இருபது இருபத்தைஞ்சி பேர் கஸ்டமர்சோட டீம் ப ஃபே டின்னருக்குப் போறாங்க. டின்னர் முடியற வரைக்கும் நீ அங்க வெயிட் பண்ணிட்டு, அவங்க டீம்ல மூணு கேர்ல்ஸ மட்டும் அவங்க வீட்ல டிராப் பண்ணிட்டு போய்டு. ஒகே வா?”

    “ஒகே சார்.” என்று தலையாட்டிவிட்டு, சிறிது தயக்கத்துடன் அவரை அழைத்தேன், “சார்…”

    “என்னப்பா?”

    “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் சார்..”

    “இப்போ கொஞ்சம் வேலை டைட்டா இருக்கு ஸ்ரீனி, நாளைக்கு மார்னிங் கண்டிப்பா பேசலாம்.” என்று கூறிவிட்டு சென்றவர் மீண்டும் திரும்பி வந்து, “ப்யூ மோர் திங்க்ஸ், ஸ்ரீனி. பாபு சார்கிட்ட டின்னர் முடிஞ்சப்புறம் ரெசீட் வாங்கிட்டு வந்து சைலஜா கிட்ட கொடுத்துடு. அப்புறம், நாளைக்கு மார்னிங் கஸ்டமர்ச கூட்டிட்டு நம்ம சிறுசேரி ஆபீஸ் வந்துடு! அவங்க ரொம்ப இம்பார்டன்ட் கஸ்டமர்ஸ். டிரைவ் பண்ணும்போது சும்மா போனெல்லாம் எடுத்து பேசிட்டு இருக்காதே! ஒகே?”

    “ஒகே சார். ஆனா, நான் டிரைவ் பண்ணும்போது எப்போவுமே போன சுட்ச் ஆப் பண்ணிடுவேன் சார்.” என்றேன்.

    “ஐ நோ யூ ஸ்ரீனி. பட் இட்ஸ் மை ட்யூட்டி டு வார்ன் யூ.” என்று கூறி என் தோள் மீது  தட்டிக்கொடுத்து விட்டுச் சென்றார்.

    சுமார் ஆறேகால் மணியளவில் பாபு அவர்களையும், அமெரிக்கர்களையும் அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்குச் சென்று சேர்ந்த போது மணி ஏழு. அவர்கள் இறங்கிய பிறகு கதவுகளை மூடிவிட்டு மீண்டும் காருக்குள் அமரச் சென்றபோது, அவர்களில் ஒருவர், “ஹே, சி..ரி..நி, ஆ யூ நாட் ஜாய்னிங் அஸ்?” என்று கேட்டார்.

    இந்தக் கேள்வியே எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. வழக்கமாக விருந்து முடியும் வரை நான் வெளியேதான் காத்திருப்பேன்.

    “நோ சார். ஐயாம் ஈட் ஹோம்.” என்று எதோ எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் உளறினேன்.

    “நோ நோ! ப்ளீஸ் கம்! பேபு, ப்ளீஸ் ஆஸ்க் ஹிம் டு ஜாயின் அஸ்!”

    “ஸ்ரீனி, வாங்க. ப்ளீஸ். கஸ்டமர்ஸ் தப்பா நினைப்பாங்க!” என்று பாபு சார் வற்புறுத்தியதின் பேரில் அவர்களோடு விருந்திற்குச் சென்றேன்.

    என் வாழ்க்கையிலேயே அத்தனை உணவு வகைகளை நான் பார்த்ததே இல்லை. எங்களுடைய நீண்ட மேசையில், கிட்டத்தட்ட ஒரு இருபத்தைந்து பேர் அமர்ந்து இருந்தனர். எல்லோருமே குதூகலத்துடன் உணவுவகைகளின் பெயர்களைச் சொல்லிக்கொண்டும், அலுவலகத்தில் அன்றாடம் நடக்கும் விஷயங்களைப் பற்றி உரையாடிக்கொண்டும், ஒருவரையொருவர் கிண்டலடித்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும் உணவருந்திக் கொண்டிருந்தனர். அந்த அணியில் நிறைய பேரை எனக்கு ஏற்கனவே தெரியும். இருந்தாலும், அந்தச் சூழல் எனக்கு புதியது என்பதால் அங்கு அமர்வதற்கே சிறிது வெட்கமாக இருந்தது.

    அதிலும் இந்த மேசைக்கரண்டியையும், முள்கரண்டியையும் வைத்துக் கொண்டு எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ? முதலில் தட்டிலிருக்கும் உணவுக்கும் கரண்டிகளுக்கும் இடையே ஒரு பலத்த போராட்டம்; பிறகு, அதை வாயில் திணிப்பதற்கு ஒரு பகீரதப் பிரயத்தனம் என்று எனக்கு  எப்போதுதான் விருந்து முடியுமோ என்றாகி விட்டது.

    அத்தனை பெயர் தெரியா உணவு வகைகள் விதம் விதமாய் இருந்தாலும், எதையுமே திருப்தியாக ரசித்து ருசித்து உண்ண முடியவில்லை. எந்த வகையான உணவிற்கு எந்தக் கரண்டி, எதை வலது கையில் பிடிப்பது, எதை இடது கையில் பிடிப்பது என்று அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே சாப்பிடுவதற்குள் போதுமென்றாகி விட்டது. வெளியே எழுந்து சென்றால் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்கிற பயம் வேறு இருந்ததால் தட்டையே குனிந்து பார்த்துக்கொண்டு, மெதுவாக உணவருந்திக் கொண்டிருந்தேன். இத்தனை போராட்டங்களுக்கு இடையிலும், கண்டிப்பாக வாழ்வில் ஒருமுறையாவது எனது தாயையும் தங்கையையும் அழைத்து வந்து இத்தனை உணவு வகைகளையும் காண்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் உதித்தது.

    ஒரு வழியாக விருந்து முடிந்தது. அனைவரது தட்டிலும் உணவு வகைகள் தொட்டும் தொடாமலும் இன்னும் நிறைய மீதமிருந்தது. பஃபே முறையில் அளவில்லா உணவு என்பதால் வீணடிப்பதில் தவறில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டே வெளியே செல்ல நினைத்த போது, என்னுடைய புதிய வெள்ளைக்கார நண்பர்கள் சிரித்துக்கொண்டே என்னிடம் வந்து மீண்டும் கைகுலுக்கினார்கள்.

    இதெல்லாம் எனக்கு பிரமிப்பாக இருந்தது. என் அலுவலகத்தில் பணிபுரிபவர்களே இதுநாள் வரை  என்னிடம் கைகுலுக்கியெல்லாம் நட்பாகப் பேசியதில்லை. அவர்களிடம் மறுநாள் காலை எட்டு மணிக்கு வருவதாய் சொல்லி விடை பெற்றுக்கொண்டு வெளியே சென்றேன்.

    பாபு சார் என்னிடம் வந்து, “ஸ்ரீனி, இந்தாங்க ரெசிட். தென், அந்த கேர்ல்ஸ பத்திரமா வீட்ல ட்ராப் பண்ணிடுங்க!” என்று கூறிவிட்டு ஒரு கவரைத் தந்தார்.

    அதை வாங்கி காரில் வைத்துவிட்டு, அந்த மூன்று பெண்களையும் சென்னை நகரின் ஒவ்வொரு மூலையில் இருந்த அவர்களின் வீடுகளில் பாதுகாப்பாய் விட்டு விட்டு அலுவலகத்தில் நுழைந்த போது மணி பதினொன்று.

    காரிலிருந்து கீழே இறங்கும் போது அந்த வெள்ளைக் கவர் தென்பட்டது. நான் அலுவலகக் கவர்களை என்றுமே பிரித்துப் பார்த்ததேயில்லை. ஆனால், என் தாயையும் தங்கையையும் அது போன்ற விருந்திற்கு ஒருநாள் அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற ஆதங்கம் மேலெழுந்ததால் பிரித்துப்  பார்த்தேன்.

    அதிர்ந்தே போனேன்.

    மொத்தச் செலவு 41000 ரூபாய் என்று இருந்தது. இருபத்தைந்து பேரின் இரவு உணவிற்கு நாற்பத்தியோராயிரமா??? நமக்கெதற்கு இதெல்லாம்? என்னுடைய குடும்பத்தை அங்கு அழைத்துச் செல்லவேண்டும் என்கிற கனவை அந்தக்கணமே தகர்த்து எறிந்துவிட்டேன்.

    அந்நேரத்திற்கு பேருந்து எதுவும் கிடைக்காததால், நடந்தே கிட்டத்தட்ட கிண்டிவரைச் சென்று விட்டேன். அங்கே எதிர்பட்ட ஷேர் ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி போரூர் வரைக்கும் அதில் சென்று, மீண்டும் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இது ஒன்றும் எனக்குப் புதிதில்லை. நள்ளிரவில் போரூர் ஏரியை பார்த்துக் கொண்டே நடப்பதில் எனக்கு ஒரு அலாதி இன்பம்.

    சில நிமிட நடையில் என் வீட்டுத் தெருமுனையைச் சென்றடைந்த போது, அங்கு வழக்கமான நாய் குரைப்புகளோடு சேர்ந்து ஒருவித சலசலப்பு இருப்பதை உணர முடிந்தது.

    அந்த இருட்டில் என் வீடு மங்கலாகத் தெரிந்தது.

    ஆனால்….

    அங்கு ஏன் அவ்வளவு கூட்டம்?

    நெஞ்சம் படபடத்தது. எனக்கு என்னவோ தவறாகப் பட்டது. இன்னும் அருகே சென்றபோது அங்கே ஒலித்துக்கொண்டிருந்த அழுகுரல்கள் மெள்ள மெள்ள என் காதுகளை வந்து நிரப்ப, என் இதயத்தில் கனம் ஏறிக்கொண்டிருப்பதை உணர முடிந்தது. என் கால்கள் உதறல் எடுக்க ஆரம்பித்து, எனது நடைச் சிறிது சிறிதாய் தளர்ந்தது.

    “அதோ சீனி வந்துட்டான்…..” என்று என்னைக் கண்டவுடன் என் நண்பன் துரை உரக்கக் கத்தினான்.

    அடுத்த நிமிடமே, உள்ளேயிருந்த என் தாய் தலைவிரிக் கோலத்தோடு, தலையிலும், மார்பிலும் அடித்துக்கொண்டும், “டேய்ய்ய்ய்ய் சீனி……..,” என்று கதறிக்கொண்டும் என்னருகே ஓடிவந்து என் சட்டையைப் பிடித்து இரு கன்னங்களிலும் அறைந்துவிட்டு, “எங்கடா போய்த் தொலைஞ்சே? எங்க போயி தொலைஞ்சே? செல்வி நம்மள விட்டுட்டு போய்ட்டா டா சீனீ….! அய்யோ! நான் இப்போ என்னடா பண்ணுவேன்?” என்று அவள் கதறி ஓலமிட்ட அந்த நொடி, என் இதயம் தடதடதடவென்று அதிர்ந்து கொண்டிருந்தது.

    எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன நடந்தது என்று கேட்கவும் வாயெழவில்லை. வீட்டிற்குச் சென்று என் தங்கையைப் பார்க்கக் கூடத் தோன்றவில்லை. என் மனம் உறைந்து போயிருந்தது. அப்படியே பிரமைப் பிடித்தவன் போல துரைமீது சாய்ந்து கிடந்தேன்.

    “எம் பொண்ண நானே கொன்னுட்டேன். நானே கொன்னுட்டேன்.” என்ற என் தாயின் கதறல்கள் என் நெஞ்சைத் தைத்துக்கொண்டே இருக்க, துரை சொல்லிக்கொண்டிருந்த எல்லா விஷயங்களும் மெல்லியதாக என் செவிகளுக்குள் சென்று கொண்டிருந்தது.

    “பீஸ் கட்டாட்டி காலேஜுக்கு வராதேனு சொல்லிட்டாங்களாம் டா பாவிப்பசங்க. வகுப்பறைல இவ பேர மட்டும் படிச்சாங்களாம். சாயங்காலம் ரொம்ப அழுதிருக்கா. அம்மா சும்மா இல்லாம, கன்னா பின்னானு திட்டிட்டு, வேலை பாக்கற எடத்துல பணம் கேக்க போனாளாம். வர்றதுக்கு கொஞ்சம் நேரம் ஆயிடிச்சி போல. அதுக்குள்ற மருந்து நெறைய குடிச்சிட்டா டா. இவள என்ன பண்ண? உனக்கு போன் பண்ணோம். சுட்ச் ஆபுல இருந்துச்சி. வேற யாரு நம்பரும் தெரில. ராமச்சந்திரா ஆஸ்பிடலுக்குப் போறதுக்குள்றயே போய்ட்டா டா.” என்று மெதுவாகக் கூறிவிட்டு, “இந்தா அவ எழுதன லெட்டர்.”

    நடுநடுங்கிக்கொண்டிருந்த என் கைகளில் அந்தக் கடிதத்தைத் திணித்தான் துரை. மெதுவாக அந்தக் கடிதத்தை திறந்து பார்த்தேன்.

    “அன்புள்ள அண்ணா, தன்னலமில்லாமல் இதுவரை நீ செய்த…….” – வாசிக்க ஆரம்பித்த போதே மூச்சு த் திணறியது. அதற்கு மேல் படிக்கத் தோன்றவில்லை. கடிதத்தோடு வேறொரு தாளும் இருந்தது. அதில் அவளுடைய அந்த வருட கல்லூரி கல்வி கட்டண விவரங்கள் இருந்தன.

    அந்த வருட மொத்த கல்லூரி கட்டணம் –

    41000 ரூபாய்.

    Share