Month: October 2017

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . .(251)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். மடலோடு உங்களுடன் கலந்துரையாட விரைந்து வரும் வேளையிது. இருந்தால் இருப்போம், மடிந்தால் மடிவோம் இதுதான் உலக வாழ்க்கையின் நியதி. காலங்கள் எத்தனையோ மாறினாலும், விஞ்ஞானம் கரைபுரண்டோடினாலும் அன்றும், இன்றும் இவ்வகிலத்தில் நாமறிந்த மாற முடியாத, எம் ஒருவராலும் மாற்ற இயலாத உண்மை இதுவேயாகும். இவ்வுண்மை தினமும் எமக்குள் உறைந்திருந்தாலும் சமயங்களில் அனைத்தையும்விட நாம் தேடும் விடயங்கள் எமக்கு வாழ்வினில் முக்கியமானவைகளாக மாறிவிடுகின்றன. நிலையற்ற வாழ்வில் நாம் தேடும் பொருள்கள் மட்டும் ஏனோ நிலையானவை போலத் தென்படுகிறது. இதுதான் மனத்தின் மாயை என்று கூறப்பட்டதோ எனும் எண்ணம் மனதில் எழாமலில்லை..

    எங்கெங்கோ பிறந்தவர்கள் இன்று எங்கெங்கோ இடம் பெயர்ந்து வேறெங்கோ தம் வாழ்வினை அமைத்து வாழும் நிலை காண்கிறோம். காலக் காற்றில் அகப்பட்ட சருகினைப் போல வாழ்வின் தேவைகள் எனும் திசையில் நாம் அடித்துச் செல்லப்படுகிறோம். ஆனால் அப்படியான பிரயாணம் கூட சில கட்டுப்பாடுகள், சில கட்டுக்கோப்புகள், சில நியதிகளுக்குள் தான் நடந்தேற வேண்டுமென்ற நியதி இவ்வுலகில் விதிக்கப்பட்டிருக்கிறது. இவ்விதிகளை, இந்நியதிகளை வெவ்வேறு நாடுகளில் அந்த நாடுகளின் கலாசாரத்துக்கு ஏற்ற வகையில் முன்னோர்கள் வகுத்து வைத்திருந்தார்கள். மன்னராட்சி என்று தொடங்கி இன்று மக்களாட்சி எனும் வகை ஜனநாயகம் எனும் பெயரில் பல நாடுகளில் காட்சிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வேறு சில நாடுகளிலோ தனிமனித அதிகாரங்கள் சர்வாதிகாரமாக மக்களின் மீது திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்விருவகையிலான அமைப்புக்களின் தாக்கங்கள் அந்த நாடுகளில் வாழும் சாதாரண பிரஜைகளின் மீதே தெறிக்கின்றன. தமது முறையில் நியாங்களை முன்வைப்பதையே ஊடகப் பிரசாரங்கள் மூலம் அந்த நாடுகளின் அதிகார வர்க்கங்கள் இயம்பிக் கொண்டிருக்கின்றன.

    உண்மைக்குப் புறம்பான விடயங்கள், உண்மையே அல்லாத விடயங்கள் ஊடகங்களின் மூலம் நியாயப்படுத்தப்படும்போது அங்கே உண்மையின் சாட்சியங்கள் வாயடைத்துப்போய் மெளனிகளாகி விடுகின்றன.

    என்ன எதை நோக்கி எனது இவ்வார மடல் பயணிக்கிறது? எனும் கேள்வி எழுகிறதா ? சற்றுப்பொறுங்கள்… விளக்கத்துக்கு வருகிறேன்.

    இன்றைய இங்கிலாந்தின் சரித்திரம் இன்று ஒரு முக்கியமான சந்தியில் நிற்கின்றது . இது முச்சந்தியோ அன்றி நாற்சந்தியோ அல்ல; வெறும் இரண்டே இரண்டு தெருக்களைக் கொண்ட ஒரு சந்தியே. இச்சந்தியில் எந்தப் பாதையில் போவது என்பதை மக்களே நீங்களே தீர்மானியுங்கள் என்று எமது முன்னால் பிரதமர் டேவிட் கமரன் மக்களின் முடிவுக்கு 2016ஆம் ஆண்டு விட்டார். ஆனால் எந்தப் பாதையில் போகக்கூடாது என்று தான் நம்புகிறேன் என்பதையும் கூறினார். விளைவு மக்கள் தேர்ந்தெடுத்த பாதை அவர் சிபாரிசு செய்த பாதைக்கு முற்றிலும் முரணானது. இன்று அவர் பிரதம மந்திரியாகக் கூட அல்ல அரசியலை விட்டே ஒதுங்கி விட்டார். இன்றைய இங்கிலாந்து மக்களின் முன்னால் இருக்கும் கேள்வி அவரைப் பற்றியதல்ல. அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையை தேர்ந்தெடுக்கும்படி செய்யப்பட்ட பிரசார கர்த்தாக்கள் உண்மைகளை உண்மையாக அவர்களுக்கு புடம் போட்டுக் காட்டினார்களா? அன்றி உண்மைகளின் தோற்றத்துக்கு மெருகேற்றி அவைகளை மிகைப்படுத்தப்பட்ட உண்மைகளாகக் காட்டினார்களா ?என்பதுவே ! ஒருவர் அரசியலுக்குள் நுழைவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு.

    1. ஒரு கொள்கை மீது கொண்ட தீவிரமான பிடிப்பு
    2. மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் எனும் உன்னத நோக்கம்
    3. தம் தேசத்தின் மீது கொண்ட பற்று

    இங்கு எது முக்கியத்துவம் பெறுகிறது என்பதைப் பொறுத்தே அவர்களின் அரசியல் பிரவேசத்தின் உண்மையான பரிணாமம் விளங்கப் பெறுகிறது. நாடும், மக்களும் எக்கேடு கெட்டுப் போனாலும் நான் கொண்ட கொள்கை வெற்றி பெற்றால் அதுவே என் வெற்றி என்று நினைப்பவர் ஒரு புறம், மக்களின் நன்மைக்காக, எனது தேசத்தின் சுபிட்சத்துக்காக எனது கொள்கை குறுக்கே வரும்போது அதைக் கொஞ்சம் மாறுதலுக்குள்ளாக்கி ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை கொண்டவர்கள் மறுபக்கம் நின்று மக்களுக்காக, மக்களையே குழப்பும் ஒரு நிலைக்கு இன்றைய இங்கிலாந்து மக்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றொரு உணர்வு எழுகிறது.

    ஒரு தொண்டனுக்குக் கொள்கையும், கட்சியும் முக்கியம் என்பது மறுக்கப்பட முடியாதது. ஆனால் நாடு சீரழியப் போகிறது எனும் ஒரு நிலை வரும்போது தமது கட்சி பேதங்களை ஒருபுறம் தள்ளி ஒருமைப்பட்ட குரலில் , தமது வலுவினைக் காட்டி தமது நாட்டிற்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் மன தைரியம் இன்றைய இங்கிலாந்து முக்கியக் கட்சிகளின் தலைவர்களுக்கு உண்டா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

    “ப்ரெக்ஸிட்” எனும் பாதையில் இங்கிலாந்தின் எதிர்காலப் பயணம் அமையப்போகிறது என்பதை மக்கள் தீர்மானித்த பின்னர் இப்பாதையில் பயணிப்பதற்கு அதன் கரடு முரடான பாதையின் குலுக்கல்களைச் சந்திப்பதற்கு பயணப்படும் வாகனம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு நடத்தப்படும் பேச்சுக்களில் இங்கிலாந்து ஒரு வலுவற்ற நிலையில் கலந்து கொள்ளுமேயாகில் அப்பேச்சுக்களினால் விளையப் போகும் முடிவுகள் பயணத்தை இலகுவாக்க உதவாது. இன்று இங்கிலாந்துப் பிரதமர் தெரேசா மே அவர்களைக் கவிழ்க்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் இறங்குவது எதிர்பார்க்கக்கூடிய விடயமென்றாலும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே தமது சுயலாபங்களுக்காக அவரது முதுகில் குத்தும் முயற்சியில் இறங்குவது நடுத்தரமான நிலையில் நாட்டின் பொருளாதார நிலையை நோக்கி கவலைப்படுவோரை கலங்க வைக்கிறது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. எமது படையை வழிநடத்தும் தளபதியை நாமே காயப்படுத்தி விட்டு எதிரணியில் இருப்பவர்களுடன் வலுவான நிலையில் எதிர்ப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது மூடத்தனமான செயல்.

    இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகித் தனியான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய காலக்கெடுவின் இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. எமது எதிர்காலச் சந்ததியின் வாழ்க்கை ஒரு நிலையான அடித்தளத்தில் உருவாக்கப்பட வேண்டுமென்றால் இன்று எம்முன்னே இருக்கும் கடமை தெளிவானது. கட்சி பேதங்களை மறந்து எமது பிரதமருடன் ஆரோக்கியமான வாதங்களை முன்வைத்து அவருடைய ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சு வார்த்தைகளின் வெற்றிக்கு எமது பக்கபலத்தை அளிப்பது முக்கியமானது. எமது பிரதமர் முதலில் எமது ஆதரவுடன் எம்மால் எதிர்பார்க்கப்பட்ட வகையில் இப்பேச்சுகளை வெற்றியாக முடித்து எம்மை சரியான பாதையில் பயணிக்க வைக்கட்டும். அதன் பின்னால் நாம் எமது உள்நாட்டு அரசியல் சகோதரச் சண்டைகளை வாக்குப் பெட்டிகளின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.

    “நாடென்ன செய்தது நமக்கு எனக் கேள்விகள் கேட்பது எதற்கு?
    நாமென்ன செய்தோம் அதற்கு என நினைத்தால் நன்மை எமக்கு!
     

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • அவன், அது , ஆத்மா” (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை 51)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 51

    கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம்

    கொங்குத் தமிழால் கொஞ்சும் கவிதைகளை எழுதி அதை அப்படியே கேட்போர் மனத்துள் அப்பிவிடும் ஆற்றல் படைத்த பெருமகனார் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் அவர்கள். சிறந்த மரபுக் கவிஞர். அவனுக்கு அவரது இசைகலந்த குரலில் அவரது கவிதையைக் கேட்க ஒரு தனி விருப்பம் உண்டு. பொதுவுடைமைக் கொள்கையையும், மனித நேயத்தையும் உட்கருத்தாகக் கொண்டிருக்கும் கவிதைகளைப் படைப்பவர் அவர். தும்பைப் பூப்போல வெள்ளை வெளேர் என்ற கதர் வேட்டியும், ஜிப்பாவும் போலவே அவரது மனமும் சுத்தமானது என்பது அவருடன் பழகியோர்களுக்கு நிச்சயம் புரியும். அவனுக்கு அந்தக் கவிஞருடன் பழகும் வாய்ப்பு அமைந்திருந்தது. “பாதை தெரியுது பார்” என்ற திரைப்படத்தில் அவர் எழுதி, எம்.பி. ஸ்ரீநிவாசன் இசையமைத்து மிகவும் பிரபலமடைந்த பாடல்தான்,

    சின்னச் சின்ன மூக்குத்தியாம்
    சிகப்புக் கல்லு மூக்குத்தியாம்
    கன்னிப் பெண்ணே உன் ஒய்யாரம் கண்டு
    கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்”

    இந்தப் பாடலை அவன் இப்பொழுதும் விரும்பிக் கேட்டுக் கொண்டிருப்பான்.

    கவிதை என் கைவாள் என்று சொன்னவரின் கவிதைத் தொகுப்பு “பாட்டு வராத குயில்”. நமது சமுதாயம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்ற அவரது நியாயமான எண்ணத்தை வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு அது. உதாரணத்திற்கு ஒரு கவிதையை இங்கு தருகிறேன்.

    “சாதிவேறு பாடுகள்கூறி

    சண்டை நடக்கிறது – உங்கள்

    மண்டை உடைகிறது.

    சமய ஞானிகள் பேரைச் சொல்லி

    தலைகள் உருள்கிறது – நூறு

    கொலைகள் விழுகிறது”

    “நமக்குண்ணே ஒரு

    பொழுது விடியணும் – அது

    நம்மாலேதான் நடந்து முடியணும்

    சூரியன் கழுத்தில் துண்டைப் போட்டு

    சுண்டி யிழுக் கோணும்

    சும்மா நின்னா புண்ணியம் இல்லை இதை

    கண்டு நடக்கோணும்”

    1990ம் வருடம் செப்டம்பர் மாதத்தில், சென்னை தேனாம்பேட்டைப் பகுதியில் இருக்கும் ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் ஒரு கவியரங்கம். கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம்தான் தலைமை. சுமார் ஒரு பதினைந்து கவிஞர்கள் கலந்து கொண்டார்கள். அவன் உட்பட கவிமாமணி வ.வே.சு., கவிதாயினி நிர்மலா சுரேஷ் ஆகியோர்களும் இருந்தனர்.

    “கிணறு தோண்டுவோம் வா –தரையில்
    கீரல் வெடிப்பினில் ஒருநாள் தண்ணீர்
    பீறிட் டெழுவது திண்ணம் நம்பு
    கிணறு தோண்டுவோம் வா “

    என்ற கவிதையை வ.வே.சு. படித்தது இன்றும் அவரது குரலிலேயே அவனது செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அன்று அந்தக் கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது.

    1982ம் ஆண்டு கன்யாகுமரி மாவட்டத்தில் இருக்கும் மண்டைக்காடு என்ற பகுதியில் இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் பகவதி அம்மன் கோவில் வழிபாட்டு விழாவின் போது நடந்த சண்டையில் ஏராளமானவர்கள் கொல்லப் பட்டனர். அந்தச் செய்தியை மறுநாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் முதல் பக்கத்தில் படங்களுடன் வெளியிட்டிருந்தது. அதைப் பார்த்து அவன் உறைந்து போனான். அப்பொழுது அவனுள் எழுந்த உணர்வின் வெளிப்பாடுதான் “மனித நேயம்” என்ற கவிதை. அதைத்தான் அவன் அன்றும் படித்தான்.

    “ஏசு நாதரும் விசுவ நாதரும்
    நேசம் வைத்தநம் நெஞ்சின் சிலைகள்தான்
    கன்னி மேரியோ கன்யா குமரியோ
    தன்னை உணர்ந்தவர் கண்ணில் ஒன்றுதான்
    பொய்யை மட்டுமே போற்றும் வாழ்க்கையில்
    தெய்வ உண்மைகள் தெரிவ தில்லைதான்
    மண்டைக் காட்டிலே மனித சக்திகள்
    சண்டை போடவா சமயம் வந்தது ?
    பெண்டு பிள்ளைகள் துண்டம் துண்டமாய்க்
    கொண்டு போகவா கோவில் வைத்தது?
    மதவ ளர்ச்சியா மனித நேயமா
    எதுஉ யர்ச்சியாய் இவர்க்குப் பட்டது?”

    இதை அவன் “மதவெறி ஏன்?” என்ற தலைப்பிட்டு 1982ம் ஆண்டே பாரதி கலைக்கழகக் கவியரங்கில் படித்தான். அவன் கவிதையைப் படித்து முடித்து அமர்ந்ததும் கவிமாமணி நா.சீ.வரதராஜன் அவர்கள் அவன் முதுகில் தட்டிக் கொடுத்து,” ரொம்ப நல்ல கவிதை விசு…” என்று பாராட்டி, இதன் தலைப்பை “மனித நேயம்” என்று மாற்றிக் கொள்” என்றார். அந்தக் கவிதையின் கருப்பொருள் இன்னும் மாறாது இருக்கும் வலியில்தான் எட்டு வருடங்கள் சென்ற பின்பும் அதை மீண்டும் அந்த அரங்கில் அவனைப் படிக்கத் தூண்டியது

    சிறுகதை எழுதத் தூண்டிய கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம்

    அந்தக் கவியரங்கம் முடிந்தவுடன்,” தம்பி…உங்களது கவிதை என்னை உலுக்கி விட்டது. இதற்குள் ஒரு சமூகக் கதையே இருக்கிறது. நீங்கள் கவிதையும் எழுதுங்கள். அத்துடன் சிறுகதைகளும் எழுதுங்கள்” என்றார் கே.சி.எஸ். “எனக்கு சிறுகதை எழுதிப் பழக்க மில்லையே” என்றான். ” இல்லை தம்பி…உங்களால் நல்ல கதைகள் எழுத முடியும். நீங்கள் நாளையே ஒரு சிறுகதை எழுதி “தாமரை”க்குத் தாருங்கள்” என்று ஊக்கப் படுத்தினார். வீட்டிற்கு வரும் வழியில் அது பற்றியே அவன் சிந்தனை செய்து வந்தான். ஒரு பொறிதட்டியது. இரவில் பத்து மணிக்குமேல் அதை ஒரு சிறுகதையாக எழுதினான். “சிலேட்டு” என்று அதற்குத் தலைப்புத் தந்தான். மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்து சில திருத்தங்கள் செய்து அந்தக் கதையை பிரதி எடுத்தான். இதைச் செய்து முடிக்கும் பொழுது இரவு இரண்டு மணியானது. தூக்கம் வராமல் படுத்தபடியே விடியலுக்காகக் காத்திருந்தான். காலையில் ஆறுமணிக்கு அந்தச் சிறுகதையை அவனுக்கு அப்பாவிடம் காட்டி,’ அப்பா இந்தக் கதையை இரவில் எழுதினேன். நீங்கள் படித்துப் பாருங்கள்” என்றான். அவருக்கு நல்ல வாசிப்புப் பழக்கம் இருந்தது. அப்பாவின் அருகிலேயே அவன் உட்கார்ந்து கொண்டான். கதையைப் படித்து முடித்தார். “நன்னா இருக்கு. இத “சீதா”விடமும் காட்டு” என்றார். அவன் அவனுக்கு மனைவியிடம் அந்தக் கதையைப் படிக்கக் கொடுத்தான். ” கதையின் கருவும், நடையும் நல்லாருக்கு” என்று அவனுக்கு மனைவி சீதாலக்ஷ்மியும் சொன்னாள். ஒரு இனம் புரியாத இன்பத்தில் அவன் திளைத்தான். அலுவலகம் சென்று அங்குள்ள தன் நண்பர்களுக்கு அதைப் படிக்கக் கொடுத்து அவர்களது கருத்தையும் கேட்டறிந்தான். அவர்கள் பாராட்டினார்கள் அவனது சிறுகதை முயற்சியை. அவன் அந்தக் கதையை எடுத்துக் கொண்டு தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் (இப்பொழுது அதன் பெயர் செவாலியே சிவாஜி கணேசன் சாலை) இருக்கும் “வலது கம்யூனிஸ்ட் கட்சியின்” அலுவலகமான “பாலன்” இல்லத்திற்கு அன்று மதியம் இரண்டு மணிக்குச் சென்றான். அங்குதான் “தாமரை” மாத இதழின் அலுவலகமும் இருந்தது.

    தோழர் ஆர். நல்லகண்ணு

    தாமரை இதழ் அலுவலகத்தில் இருந்த ஒரு ஊழியரிடம் அவன் ஆசிரியர் கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் இருக்கிறாரா ? என்று விசாரித்தான். அந்த ஊழியர் ஒரு கதர் வேட்டியும், சட்டை அணியாத திறந்த மார்புடன் தோளில் ஒரு துண்டையும் மடித்துப் போட்டிருந்தார். அவரைப் பார்க்க அவனது கிராமத்து ஒரு எளிய விவசாயியைப் போல இருந்தார். அவர் அவனிடம்,” என்ன விஷயமா அவரைப் பார்க்க வந்தீங்க?” என்றார். ” தாமரை இதழுக்காக ஒரு சிறுகதை கேட்டிருந்தார். அதை அவரிடம் கொடுக்க வேண்டும்” என்றான். ” என்னிடம் கொடுங்கள். இந்தக் கதையை தோழர் கே.சி.எஸ். வந்தவுடன் கொடுக்கிறேன்” என்றார். அவன் கொஞ்சம் தயங்கிய படியே நின்றான். “தம்பி..கவலைப் படடாதீர்கள். நான் அவரிடம் சேர்த்து விடுவேன். கதையை என்னிடம் தாருங்கள்” என்று வாங்கிக் கொண்டு, அங்கிருக்கும் ஒரு மரபெஞ்சைக் காட்டி ,” கொஞ்ச நேரம் இங்கேயே அமர்ந்திருங்கள். நான் வந்துவிடுகிறேன்” என்று உள்ளே சென்று விட்டார் அந்த எளிய மனிதர். இவர் யார் என்று தெரியாமலேயே கதையைக் கொடுத்து விட்டோமே என்ற நினைப்பில் அவன் அங்கே அமர்ந்திருந்தான். ஒரு பதினைந்து நிமிடங்கள் சென்ற பிறகு அந்த மனிதர் தன் கையில் அந்தச் சிறுகதையை வைத்துக் கொண்டு வெளியில் வந்து ,” தம்பி…இந்தக் கதை மிக நன்றாக இருக்கிறது. தொடர்ந்து நீங்கள் தாமரைக்கு உங்கள் படைப்புகளைத் தாருங்கள். ஆசிரியரிடம் இதைச் சேர்த்து விடுகிறேன்” என்று சொன்னார். அவன் மகிழ்ந்து போனான். அவரைப் பார்த்து,”ஐயா…நீங்கள் யார்?” என்று கேட்க, அவர் ,” தம்பி என்பெயர் ஆர்.நல்லகண்ணு” என்றார் ஒரு மெல்லிய புன்னகையோடு. அப்படிதான் அந்த எளிய மனிதர் அவனுக்கு அறிமுக மானார். அவனது முதல் சிறுகதை 1990ம் ஆண்டு அக்டோபர் மாத “தாமரை” இதழில் வெளியாகி அதன் ஒரு பிரதி அவனது வீட்டு முகவரிக்கே வந்து சேர்ந்தது.

    இதழைப் பிரித்து அவன் எழுதிய கதையைப் படிக்கும் பொழுதே ஒரு பரவசம் அவனுக்குள் பரவியிருந்தது. தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தரவேண்டும் என்ற உந்துதல் அவனுக்குள் பிரகாசமாகத் தெரிந்தது.

    13.10.2017

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • காந்திக்கு ஒரு கடிதம்..!

    பெருவை பார்த்தசாரதி

    காந்தி

     

     

     

     

     

     

     

     

    தந்தையாய் ஆசானாய் ஈடில்லாத் தலைவனாயிருந்து

    வந்தனை செய்யும்படி வையமுழுதும் அறிந்தோனே.!

     

    நிந்தனை செய்தவர்கூட நிழல்போலுமைத் தொடர்ந்து

    சிந்தனையில் தெளிவுற்றடிமை வாழ்வினைத் துறந்தார்.!

     

    வாள்பிடித்து வெற்றிகண்ட மன்னர் பலருக்கிடையே

    தாள்பணிந்து அகிம்சையை தரணிக் குணர்த்தியவனே.!

     

    எழுபது ஆண்டுகள்பல ஆனபின்னும் இன்னுமேனோ

    எழவில்லை எம்நாட்டுப் பற்றெனுமரிய சுயசிந்தனை.!

     

    அகத்தினில் தீயவஞ்சகம் கொண்டோர் நாளும்பெருகி

    ஜகத்தினில் பெற்றசுதந்திரத்தைத் தாழ்வுறச் செய்கிறார்.!

     

    இப்பாரிலெவரும் எவர்க்கும் அடிமையிலை என்பதை

    தப்பாக விடுதலையைப் தவறாகப் புரிந்துகொண்டார்.!

     

    சுகங்கள் பலவாம் சுதந்திரத்தைப் பெற்றுவிட்டாலென

    அகத்தில் தெளிவுற்றன்றே அறப்போரில் ஈடுபட்டோம்.!

     

    மண்ணில்பல வளமுண்டிதை அயலார் அபகரிக்காமல்

    திண்ணிய எண்ணமுடன் ஒன்றாகத்தான் போரிட்டோம்.!

     

    வானிலெழும் ஏவுகணைபோல் அன்றாடப் பொருட்கள்

    நானிலத்தில் விலையெகிறி விண்ணிலுயரப் பறக்குது.!

     

    பெருகிவிட்ட பெருமக்களால் பாரிலின்று பேதமுண்டு

    பருகும்நீர் விளையும்நிலம் எல்லைபேரமென ஏராளம்.!

     

    இயலாத ஒன்றுக்கும்…எளிதேகிட்டாத பலவற்றுக்கும்

    எழுந்த ஆசையினால் அடிமையின்னும் அகலவில்லை.!

     

    நல்லோரும் நாட்டுப் பற்றுடையோரும் நலிவுற்றதாலே

    நயவஞ்சகமெனும் கொடியநஞ்சு மீண்டும் உருவாகிறது.!

     

    உள்நாட்டில் கூடிவாழ்வோரிடம் குழப்பம் செய்வதை

    உள்ளத்தில் விஷமிடும் தொழிலாய் கொண்டோர்பலர்.!

     

    விண்ணிலிலுலவும் அண்ணலெனும் காந்தி அடிகளே

    விடுதலைக்காக விருதுவென்ற வியன்மிகு தலைவனே.!

     

    அவனியிலின்று நடந்தேறிக் கொண்டிருக்கும் அனைத்து

    அவலங்களையும் எழுதிவிட்டேன்.!ஏற்பீர்.!அண்ணலே.!

     

    நொந்திடும் இந்நிலைகள் முற்றிலுமடியோடு மாற..நீயும்

    வந்திங்கே பிறக்கவேணும்..மீண்டுமதே மஹாத்மாவாக.!

    =============

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::08-10-17

    நன்றி படம்:: கூகிள் இமேஜ்

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 6

    -மேகலா இராமமூர்த்தி

    காதலுக்காகத் தலைவன் சந்திக்கும் சங்கடங்களையெல்லாம் சங்க இலக்கியம் வாயிலாய் அறியும்போது, போர்க்களத்தில் செய்யும் வீரசாகசங்களைவிடக் காதற்களத்தில்தான் நம் ஆடவர் அதிகமாய்ச் சாகசங்களைச் செய்திருக்கின்றனரோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

    பகற்குறிக்கண் காதலர் பொதுமக்கள் கண்ணிற்படும் அபாயத்தை யறிந்து பயந்தே தோழி இரவுக்குறி நயந்தாள். ஆனால் இரவுக்குறியோ மக்களால் நேரும் ஆபத்துக்களேயன்றி விலங்குகளாலும் அச்சந்தரு அடர்காட்டு வழிகளாலும் பகற்குறியினும் பலவாய ஆபத்துக்களைத் தருவதாயிற்று. இவைகுறித்துத் தலைவன் அஞ்சவில்லை என்றபோதும் தோழியும் தலைவியும் பெரிதும் அஞ்சத் தொடங்கினர்.

    இரவில் தன்னைச் சந்திக்கவரும் தலைவனுக்கு ஏதேனும் ஏதம் நேர்ந்துவிடுமோ என்று ஒவ்வொரு நாளும் அஞ்சிய தலைவி தோழியை நோக்கி,

    ”குன்றத்துக் கூகை (ஆந்தை) தன் பேடையைக் கூவியழைப்பினும், பலாமரத்தின் பெருங்கொம்பில் முசுக்கலை பாய்ந்து விளையாடினும் முன்பு அஞ்சுவதை வழக்கமாய்க் கொண்டிருந்தது என்னுள்ளம்; அது கழிந்தது! இப்போதோ நள்ளிரவில் நமை நாடிவரும் தலைவனின் நீண்ட வழிச்செலவு குறித்தும் அதிலுள்ள இன்னல்கள் குறித்துமே என் நெஞ்சு பெரிதும் அஞ்சி நிற்கின்றது” என்று ஆற்றாமையோடு புலம்பினாள்.

    குன்றக்  கூகை  குழறினும்  முன்றிற்
    பலவின்  இருஞ்சினைக்  கலைபாய்ந்  துகளினும்
    அஞ்சுமன்  அளித்தென்  நெஞ்சம்  இனியே
    ஆரிருட்  கங்குல்  அவர்வயிற்
    சாரல்  நீளிடைச்  செலவா  னாதே. (153 – கபிலர்)

    எப்படியேனும் தலைவனின் இரவுக்குறிக்கு(ம்) முற்றுப்புள்ளி வைத்துவிடுவதே நல்லது எனும் தலைவியின் உளவியலை இப்பாடல் மறைமுகமாய் உறைத்து நிற்கின்றது. தோழியின் எண்ணமும் அதுவேயாதலால், அடுத்தமுறை தலைவன் தலைவியைச் சந்திக்க இரவில் வரும்போது இதுகுறித்து அவனிடம் தீர்மானமாகப் பேசிவிடுவது எனும் முடிவுக்கு வந்தாள்.

    அவ்வாறே இரவில் தலைவியைக் காணவந்த தலைவனிடம் ஒருநாள்,  ”கரிய கண்களும், தாவுதலில் Monkeyதிறனுமுடைய ஆண்குரங்கு (கலை) இறந்துபட்டதென்று அறிந்த பெண்குரங்கானது (மந்தி), கணவனையிழந்து கைம்மையுற்று வாழவிரும்பாது, மரமேறுதல், தாவுதல் முதலிய தம்மினத்துக்குரிய தொழில்களை இன்னும் பழகாத பறழை (குரங்குக்குட்டி) தம் சுற்றத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு ஓங்குமலையிற் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் மலைச்சாரலையுடைய நாட்டுக்குத் தலைவ! நீர் வரும்வழியில் உமக்கு நேரும் ஏதங்களை எண்ணியெண்ணித் தலைவியும் நானும் பெரிதும் வருந்துகின்றோம். ஆதலால் தலைவியைச் சந்திக்க இனி நள்ளிரவில் வாரற்க!” என்றாள்.

    இப்பாடலில் பயின்றுவரும் ’கருங்கண் தாக்கலை’ எனும் தொடருக்குக் கருங்கண்களையுடைய தாவிய கலை என்று உரையாசிரியர் சிலரும், கரிய இருளின்கண் தாவிய கலை என்றும் வேறுசிலரும் பொருளுரைக்கின்றனர். தாவிய கலை இறந்துபோனதை நோக்குகையில் இருளில் தாவிய கலை என்பதே சாலப் பொருத்தமாய்ப் படுகின்றது.

    கருங்கண்  தாக்கலை  பெரும்பிறிது  உற்றேனக்
    கைம்மை
     உய்யாக்  காமர்  மந்தி
    கல்லா
     வன்பறழ்  கிளைமுதற்  சேர்த்தி
    ஓங்குவரை
     அடுக்கத்துப்  பாய்ந்துயிர்  செகுக்கும்
    சாரல்
     நாட  நடுநாள்
    வாரல்
     வாழியோ  வருந்துதும்  யாமே.  (குறுந்: 69 – கடுந்தோட் கரவீரனார்)

    தலைவன் உயிருக்கு ஊறு நேருமாயின் தலைவியும் உயிர்தரித்திருக்க மாட்டாள் என்பதனை விலங்குகளின் செயல் வாயிலாகத் தோழி விளக்குந் திறன் அவளின் நுண்மாண் நுழைபுலத்துக்குக் கட்டியம் கூறுகின்றது. நேரடியாகக் கூறவியலாத அமங்கலச் செய்திகளை இன்னொரு நிகழ்வின்மூலம் உள்ளுறையாகவும், இறைச்சியாகவும் ஏற்றிக்கூறுவதில் நம் சங்கப் புலவோர் சமர்த்தர்களாகவே இருந்திருக்கின்றனர் என்பதை இப்பாடலும் மெய்ப்பிக்கின்றது.

    அத்தோடு அன்றைய சமூகத்தில் கணவனை இழந்த மகளிர் பலர் இறந்த கணவனோடு தாமும் உடன்கட்டை ஏறுதலையே சிறந்த கற்பாக எண்ணியிருந்தமையும் இதன்வாயிலாய்ப் புலனாகின்றது. பாண்டிய மன்னன் பூதப்பாண்டியன் இறந்தபோது அவனுடைய மனைவியும் அறிவிற்சிறந்த அரசியுமான பெருங்கோப்பெண்டு, கணவனை இழந்து கைம்மை நோன்பு மேற்கொண்டு வாழவிரும்பாது, “என் தலைவன் போனபின்னே வள்ளிதழ் விரிந்த தாமரையையுடைய நள்ளிரும் பொய்கையும், தீயும் தனக்கு ஒத்த தன்மையனவே” என்றுகூறித் தீப்பாய்ந்தமை ஈண்டு நினைவுகூரத்தக்கது.

    இச்சங்க மகளிரை இருபத்தோராம் நூற்றாண்டின் ’பகுத்தறிவு’ப் பார்வையோடு நாம் அணுகுதலும், விமரிசித்தலும் பொருத்தப்பாடுடையதன்று. அற்றை நாளைய வழக்கத்தை அவர்கள் கடைப்பிடித்தனர்; அவ்வளவே! இன்று அக்கொடிய வழக்கம் நடைமுறையில் இல்லை என்பதையறிந்து மகிழ்வோம்.

    மீண்டும் நம் பார்வையை நல்ல குறுந்தொகையில் பதிப்போம்…

    இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைவன், “அப்படியாயின் இனி நான் தலைவியைச் சந்திக்கவே வழியில்லையா? என்றான் ஏக்கத்தோடு.

    அவனை நோக்கி வருத்தப் புன்னகை புரிந்த தோழி, ”ஐய!
    இதுகுறித்து நீர் படும் வேதனையைவிடத் தலைவியின் மனவேதனை நனிபெரிது. மூங்கிலை வேலியாக உடைய, Jackfruit1வேரில் பலாக்குலைகளையுடைய மலை நாட! நின் சாரற்கண்ணே பலாவின் சிறுகொம்பில் பெரிய கனி பற்றுக்கோடு ஏதுமின்றிப் பரு(ழு)த்துத் தொங்குவதுபோல், எம் தலைவியின் உயிராகிய சிறிய கொம்பில் காமம் எனும் பெரிய கனி தொங்கிக்கொண்டிருக்கின்றது. இக்கனியை இன்னும் முதிரவிட்டால் அது கீழேவீழ்ந்து சிதைந்தழியும். அவ்வாறு நிகழாமுன்னர் அதன் செவ்வியறிந்து சுவைப்பதுதானே அறிவுடைமை! ஆகவே, தலைவியை விரைந்து வரைந்து கொள்க!” (வரைவு – திருமணம்) என்று கூறி நிறுத்தினாள்.

    பலாவில் வேர்ப்பலா, கிளைப் பலா என இருவகைகள் இருப்பதை இப்பாடல்வழி அறிகிறோம். ஒரேபாடலில் எத்தனைச் செய்திகளைப் பலாச்சுளைபோல் பக்குவமாய்ப் பொதிந்து வைத்துள்ளார் கபிலர்!

    வேரல்  வேலி  வேர்க்கோட்  பலவின்
    சாரல்  நாட  செவ்வியை  ஆகுமதி
    யாரஃ  தறிந்திசி  னோரே  சாரல்
    சிறுகோட்டுப்  பெரும்பழந்  தூங்கி  யாங்கிவள்
    உயிர்தவச்  சிறிது  காமமோ  பெரிதே.    (குறுந்: 18 – கபிலர்)
     

    ’பெரிதே காமம் உயிர்தவச் சிறிதே’ எனும் கலித்தொகை வரிகள்  (கலி – 137) இதனோடு ஒப்புநோக்கத்தக்கவை. 

    செவ்வியறிந்து காமத்தைத் துய்க்கவேண்டும் என்று (தோழி கூற்றாய்) கபிலர் இப்பாடலில் உரைப்பதுபோலவே நம் குறளாசானும்,

    மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
    செவ்வி தலைப்படு வார்
    (1289) என்று கூறிக் கபிலரின் கருத்துக்கு அரண் சேர்க்கிறார்.

    தலைவியை விரைவாய் மணந்துகொள்வது ஒன்றே அவளைப் பிரியாதிருப்பதற்கான நிரந்தர வழி என்ற தோழியின் மொழிகேட்ட தலைவன் அதுகுறித்துத் தீவிரமாய்ச் சிந்திக்கலானான்.

    அவன் எண்ணத்தை அறிந்துகொள்ளும் ஆவலில் தலைவியும் தோழியும் காத்திருந்தனர்; அவன்முகம் பார்த்திருந்தனர்!

    [தொடரும்]

     

     

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (30)

    க. பாலசுப்பிரமணியன்

    தான் மறையும் நேரம் …

    திருமூலர்-1-3

    ஒரு முறை ஒரு நாட்டின் அரசன் தவத்தில் சிறந்த ஒரு முனிவரிடம் தீட்சை பெற வேண்டும் என்று விரும்பி தன் விருப்பத்தைத் தெரிவித்தான். முனிவரும் அதற்கிணங்கி அவனைத் தன்னுடைய ஆசிரமத்திற்கு வருமாறு சொல்லி அனுப்பினார். அரசன் தன் படை சூழ பல பரிசுகளை எடுத்துக்கொண்டு அவரைச் சந்திக்கச் சென்றான். அந்தக் குடிலின் வாயிலில் இருந்த ஒரு சீடனிடம் “முனிவரிடம் நான் வந்திருக்கிறேன் என்று சொல்” என்று சொல்லி அனுப்பினான். உள்ளிருந்த முனிவரோ “அவர் இன்னும் வரவில்லை. திரும்பிப் போகலாம் என்று சொல்” எனச் சொல்லி திருப்பி அனுப்பி விட்டார். சினமடைந்த அரசனும் திரும்பிச் சென்றுவிட்டு மீண்டும் சில நாட்கள் கழித்து வந்து அதே போல் “முனிவரிடம் நான் வந்திருக்கிறேன் என்று சொல்” எனச் சொன்னான். இந்த சமயத்திலும் முனிவர் :”அவர் இன்னும் வரவில்லை என்று சொல்” எனச் சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார். மீண்டும் மீண்டும் அரசன் முயற்சித்தும் அவரைச் சந்திக்க முடியாத நிலையில் தன்னுடைய மந்திரியை அழைத்து ஆலோசனை செய்தான். மந்திரி அரசனிடம் “அரசே, நீங்கள் முனிவருக்கு என்ன செய்தி அனுப்பினீர்கள்?” எனக் கேட்டார். அரசனும் “நான் வந்திருக்கிறேன் முனிவரிடம் சொல்” என்று தான் சொன்னேன், என்கிறார். மந்திரி சிரித்துக்கொண்டே “அரசே, நீங்கள் அவரைப் பார்க்கச் செல்லும் பொழுது “நான்” வந்திருக்கின்றேன் என்று உங்கள் ‘அகந்தை’யை முன் வைத்தீர்கள் அதனால்தான் முனிவரும் உங்கள் அகந்தைக்கு பதில் கொடுக்கும் வகையில் உங்களைத் திருப்பி அனுப்பித்துள்ளார். நீங்கள் இன்னும் சற்று பணிவுடன் சென்றால் எப்படி இருக்கும்? :” என்று சொல்ல, அடுத்த முறை அரசன் முனிவருடைய குடில் வாசலில் இருந்த சீடனிடம் “முனிவரிடம் தீட்சை பெற்றுக்கொள்ளுவதற்காக ஒரு சீடன் வந்திருக்கின்றேன் என்று சொல்” எனச் சொல்லியனுப்பினார். முனிவர் உள்ளிருந்து “எனது புதிய சீடனை மரியாதையுடன் அழைத்து வா” என்று சொன்னார்.

    இறைவனிடம் அருள்நாடிச் செல்லுகின்ற நம்மில் பலரும் இதே நிலையில் தான் இருக்கின்றோம். ஏதோ நம்மால் தான் இதைச் செய்ய முடிந்தது. இதை என்னையன்றி வேறு யாரால் செய்திருக்க முடியும்?  என் திறமைக்கு அறிவுக்கும் நான் செய்த செயலெல்லாம் மிகச் சாதாரணமானது தான் என்றெல்லாம் எண்ணிச்  செல்லுகின்றோம். இறைவனிடமும் ஏதோ விருப்பமிருந்தால் கொடுங்கள் என்றோ அல்லது இதை இறைவன் நமக்குக் கொடுத்தால் இறைவனுக்கே பெருமை என்பதுபோல் நாம் எண்ணுகின்றோம். “நான்” என்ற அகந்தை உள்ளவரை இறைவனை நம்மால் அணுக முடியாது. இதை விளக்கும் வகையில் கபீர் தனது ஒரு பாடலில் கூறுகின்றார். “நான் இருக்கும் வரை அவன் இல்லை, அவன் வந்த பின்பு அங்கே நான் இல்லை”

    இந்தக் கருத்தை இன்னும் அழகாக திருமந்திரத்தில் நாம் பார்க்கின்றோம் :

    தானும் அழிந்து தனமும் அழிந்துநீ

    டூனும் அழிந்து உயிரும் அழிந்துடன்

    வானும் அழிந்து மனமும் அழிந்தபின்

    நானும் அழிந்தமை நானறி யேன்றே

    ஆகவே நான். எனது, எனக்கு என்ற எண்ணங்களையெல்லாம் ஒழித்துவிட்டு இந்த உலகத்தில் உள்ள பொருள் எல்லாம் நிலையற்றவை என்பதை உணர்ந்து அவன் பாதங்களை நாடினால் அவன் தானாகவே வந்து நம்மை ஏற்றுக்கொள்வான். இந்த அறிவு நமக்கு எப்போது கிட்டும்? மறைகளும் மற்ற சாத்திரங்களையும் வேதங்களையும் நன்றாகப் படித்து விட்டால் கிட்டுமா? அல்ல, எப்போது நாம் இந்த உலகைச் சார்ந்த வேட்கைகளையெல்லாம் விட்டு விடுகின்றோமோ அப்போது தான் நமக்கு அந்த அறிவு கிட்டும். திருமூலர்

    இந்தக் கருத்தை விளக்கும் வண்ணம் கூறுகின்றார்:

    வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்

    வேதாந்தங் கேட்டும்தம் வேட்கை ஒழிந்திலர்

    வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்

    வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டார்

    வேட்கையை விட்டவர்க்கு வேத அறிவுகளில் மேலாண்மை தேவையில்லை. இறைவனே தம்மை ஆட்கொண்டவன் என்ற எண்ணம் மனதில் தோன்றிய நிலையில் அவன் தானே வந்து நம்மை ஆட்கொள்வான்.

    திருமூலரின் அனுபவம் என்ன சொல்லுகின்றது ?

    நானென்றும் தானென்றும் நாடினேன் நாடலும்

    நானென்றும் தானென்றும் இரண்டில்லை யென்பது

    நானென்ற ஞான முதல்வனே நல்கினான்

    நானென்று நானும் நினைப்பொழிந் தேனே

    நான் என்ற ஆணவ மாயையில் சிக்கி அன்பே வடிவமாய் உள்ளே அமர்ந்திருக்கும் ஆண்டவனின் அருளை அறியாமல் தவிக்கின்ற மனங்கள் தான் எத்தனை! எத்தனை! அதில் பத்திரகிரியாரும் ஒருவர். எனவே தான் அவர் வேண்டுகின்றார் :

    அஞ்ஞானம் விட்டே யருள்ஞானத் தெல்லைத்தொட்டு

    மெய்ஞ்ஞான வீடுபெற்று வெளிப்படுவ தெக்காலம் ?

    எண்ணாத தூரமெல்லா ,மெண்ணியெண்ணிப் பாராமல்

    கண்ணாடிக் குள்லொளிபோற் கண்டறிவ  தெக்காலம்?

    நான், தான், எனது என்ற அகந்தை நிலை எப்பொழுது நீங்கும்? உண்மையில் தான் யார் என்ற உண்மை அறிவு ஏற்படும்பொழுது ‘தான்” விலகி தன்னைப் பற்றிய உண்மை அறிவு வெளிப்படும். இதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது திருமூலரின் இந்தக் கருத்துள்ள பாடல்”

    தான் அறிவார் அண்ணல்தாள் பணிவார் அவர்

    தாம் அறிவார் அறந்தாங்கி நின்றார் அவர்

    தாம் அறிவார் சில தத்துவராவார்கள்

    தாம் அறிவார்க்குத் தமர்ப்பர னாமே”

    நம்மை அறிந்துகொள்ள நாமும் முயற்சி செய்வோமா ?

    தொடருவோம்..

    Share
  • மாசுற்ற தாமரைக் குளத்தின் வாசனை

    ஒரு பெண்ணின் அழகை வைத்துத்தான் காலம் காலமாக உலகெங்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு பெண்ணினது அக உணர்வுகளை விடவும் அழகுதான் அவளது இருப்பையும், நடைமுறை வாழ்க்கையையும், வாழ்வு மீதான புறத் தாக்கங்களையும் தீர்மானிக்கின்றன. அவளது புறச்சூழலில் அவளைத் தாண்டிய எல்லைகளுக்குள் அடங்கும் சமூகத்தின் கோட்பாடுகள் மிகவும் வலிய கரங்களைக் கொண்டு அவள் மீதான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன. அழகுடன் கூடிய பெண்ணினது மன உணர்வுகள், அவளது எண்ண வெளிப்பாடுகள், சமூகம் அவளுக்கிட்டிருக்கும் வேலிகள் எனப் பல்வேறான காரணிகள் அவளது வாழ்வைத் தீர்மானிக்கும் கூறுகளாக அமைகின்றன.

    18108_1556627777960174_3715045860138984916_n

    இவ்வாறாகப் பழக்கப்பட்டிருக்கும் சமூகத்தில் ஒரு பெண் அழகற்றவளாகப் பிறந்துவிட்டால் என்ன செய்வாள்? அதிலும் குறிப்பாக அவள் வறிய நிலைமையில் உள்ளவளாக இருப்பின் அவளது வாழ்வின் மீதான தாக்கங்கள் எவை? அவள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சிக்கல்களும் அவளை என்னென்ன நிலைமைகளுக்குள் செலுத்திப் பார்க்கின்றன என்பதைக் குறித்துத்தான் இலங்கையின் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான சத்யஜித் மாஇடிபேயின் முதல் திரைப்படமான ‘பொர திய பொகுன (மாசுற்ற நீர்த் தடாகம்)’ திரைப்படம் பேசுகிறது.

    சர்வதேச ரீதியில் கறுப்பாக உள்ளவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகள் அனைத்தும் அவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்பதற்காகவல்லாது, அவர்களது நிறத்தினைக் குறித்தே பிரயோகிக்கப்படுகின்றன என்பது நிதர்சனம். அவர்கள் நிரபராதிகளாக உள்ளபோதிலும், அவர்களது நிறமும் அவலட்சணமான தோற்றமும் அவர்கள் மேல் சந்தேகங்களைக் கிளப்பிவிடப் போதுமாக உள்ளன.

    21984_1563934943896124_3421116455876624922_n

    கௌதமி ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு யுவதி. அவள் தனது சக தோழிகள் இருவருடனும் ஒரு வீட்டின் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறாள். சக தோழிகளில் ஒருத்தி மிகவும் அழகானவள் என்பதோடு அவளுக்கு ஒரு காதலனும் இருக்கிறான். கௌதமியின் அவலட்சணமான தோற்றம் அவளை, இலங்கை கடற்படையில் பணிபுரியும் அழகி மங்களாவின் காதலனுக்கு தூது கொண்டு செல்லுமொருத்தியாக மாற்றி விட்டிருக்கிறது. பொதுவாக படையினர் தங்கியிருக்கும் இராணுவ முகாம்களுக்கு இளம்பெண்கள் தனியே செல்ல அச்சப்படும் நிலையில் கௌதமி எவ்வித அச்சமுமின்றி எந் நேரத்திலும் சென்று வரக் கூடியவளாக இருக்கிறாள். மங்களாவின் காதலன் உயரமாகவும் கட்டுமஸ்தானவனாகவும் அழகி மீது பேரன்பு கொண்டவனாகவும் இருப்பதனால் அவன் மீது கௌதமிக்கு ஒருதலையாக காதல் ஏற்படுகிறது.

    தனது சக தோழிக்கும் அவளது காதலுக்கும் துரோகமிழைக்கும் கௌதமி, அவளது காதலனுடன் பலவந்தமாக இணைவதன் மூலமாக ஒரு குழந்தைக்குத் தாயாகிறாள். மிகுந்த குற்றவுணர்ச்சிக்குள்ளாகும் அழகியின் காதலன் தற்கொலைக்கு முயல்கிறான். அவனது கவலையுணர்ந்த சக படையினர் கௌதமியைக் கடத்திச் சென்று கருவைக் கலைத்துவிடும்படி மிரட்டுகிறார்கள். மீண்டு வரும் கௌதமி, இலங்கையில் வறள் பிரதேசக் காடொன்றுக்குள் வசிக்கும் தனது தூரத்து உறவினரைத் தேடிச் சென்று, மாதக் கணக்கில் அவர்களுடன் தங்கி சேனை விவசாயம் செய்து குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அங்கிருந்து தனது ஊருக்கு வரும் வழியில் குழந்தையை புகையிரத நிலையத்தில் விட்டு வருகிறாள். தனது ஊருக்கு வந்தவள் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்கிறாள். ஆறு வருடங்களின் பின்னர் இலங்கை வரும் அவள் இன்னுமொருவரைத் திருமணம் செய்து வாழ்கிறாள். இவர்களது வாழ்வில் திரும்பவும் மங்களாவும் அவளது காதலனும் நுழைகிறார்கள். காதலன் தனது குழந்தையைக் கேட்டு கௌதமியிடம் வந்து நிற்கிறான். இதன் பிறகு என்னவாயிற்று என்பதைத்தான் திரைப்படம் சொல்கிறது.

    15355803_1831488703807412_8690262300183438553_n

    சாதாரணமாக தெருவில் செல்லும் எந்த இளைஞர்களுமே திரும்பிக் கூடப் பார்க்காத கௌதமிக்குள்ளும் உள்ள காதல் உணர்வுகள் மிகவும் நுட்பமாக திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக திரைப்படங்களில் கதாநாயகி எனப்படுபவள் மிகவும் தூய்மையானவளாகவும், தீய எண்ணங்கள் எதுவுமற்றவளாகவும், மிக மிக நல்லவளாகவும், வானத்திலிருந்து குதித்த தேவதை போலவும் சித்தரிக்கப்படுகையில் அவை எல்லாவற்றுக்கும் நேர்மாறான ஒரு கதாநாயகியை இயக்குனர் சத்யஜித் மாஇடிபே தனது முதல் படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். தனது அவலட்சணமான தோற்றத்தின் காரணமாக எழும் சக சமூகத்தின் நடைமுறைகளால் தாழ்வு மனப்பான்மைக்கும், உள்மனக் குமைச்சலுக்கும் ஆளாகும் கௌதமி மிக இரகசியமாகச் செய்யும் குற்றங்கள் எளிதில் மன்னிக்க முடியாதவையாக இருப்பினும், பார்வையாளர்களிடத்தில் அவை ஒரு நியாயத்தையும் சொல்பவையாக அமைந்திருக்கின்றன என்பதுதான் சிறப்பு.

    இலங்கையில் பெரும்பான்மையான சமூகத்தினால் பின்பற்றப்படும் பௌத்த மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை மூன்று பெண்களைக் கொண்டு கேள்விக்குட்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சத்யஜித் மாஇடிபே. பாசம், காமம், வன்மம் ஆகிய மூன்று உணர்வுகளும் பெண்களிடத்திலும் ஆண்களிடத்திலும் வேறுபடும் புள்ளி எதுவென திரைப்படத்தின் மூலமாகக் காண முயற்சித்திருக்கிறார்.

    இதனாலேயே 2003 ஆம் ஆண்டு திரையிடலுக்கான அனைத்து வேலைகளும் முடிந்த நிலையிலும், ஒரு தசாப்தம் கடந்த நிலையில் 2015 வரையும் இத் திரைப்படத்தினை இலங்கையில் திரையிட அரசு அனுமதிக்கவில்லை. பன்னிரண்டு வருடங்களாக தனது படைப்பினை வெளிப்படுத்த இயலாது பிரசவ வேதனையை ஒத்த வலியை சுமந்தலையும் இயக்குனரின் வலி மிகவும் வலியது. அது ஏனைய திரைப்படங்களை இயக்க இன்றுவரையும் அவருக்கு தடையாக அமைந்திருக்கிறது.

    திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரமான கௌதமியின் கதாபாத்திரத்தை எந்தப் பிரதான நடிகையுமே ஏற்று நடிக்கத் தயங்குவர் என்பதில் சந்தேகமில்லை. எனினும் கதையினைக் கேட்ட மாத்திரத்திலேயே அக் கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு, திரைக்கதை எழுதுவதில் பங்குகொண்டு அதனைச் செம்மைப்படுத்தி, மிகவும் நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார் பல விருதுகளை வென்ற நடிகை கௌசல்யா பெர்ணாண்டோ. இந்தத் திரைப்படத்தில் நடித்தமைக்காக இலங்கையின் ‘சிறந்த நடிகைக்கான விருது’ இவருக்குக் கிடைத்தது. அவ்வாறே 2016 ஆம் ஆண்டுக்கான ’SAARC’ சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்தத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக ‘சிறந்த நடிகை விருது’ இவருக்குக் கிடைத்தது. தற்பொழுது பல்கலைப்பழக பேராசிரியராகக் கடமையாற்றி வரும் இவர் சர்வதேச ரீதியில் விருதுகள் பல வென்ற திரைப்படங்களிலும், மேடை நாடகங்களிலும் தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

    மங்களா எனும் அழகியின் கதாபாத்திரத்தை பிரபல நடிகை டிலானி அபேவர்தனவும் அவளது காதலன் கதாபாத்திரத்தை இலங்கை ரக்பி அணியின் விளையாட்டு வீரர் துமிந்த டி சில்வாவும் ஏற்று நடித்திருக்கின்றனர். அத்தோடு திரைப்படத்தின் சிறிய கதாபாத்திரங்களிலும் கூட சிங்களத் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர், நடிகையர்களான தர்மசிறி பண்டாரநாயக்க, ஐராங்கனி சேரசிங்க, வீணா ஜயகொடி, சாந்தனி செனவிரத்ன, ப்ரியங்கா சமரவீர, சந்திரா களுஆரச்சி, லியோனி கொத்தலாவல போன்றோர் ஏற்று நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இலங்கையில் பௌத்த சமூகத்திலுள்ள இளைய சமுதாயத்தினரின் அக, புறச் சிக்கல்களைப் பேசும் இத் திரைப்படமானது 2003 ஆம் ஆண்டு ஜனவரி 21 முதல் பெப்ரவரி 02 ஆம் திகதி வரை நடைபெற்ற 33 ஆவது ரொட்டர்டம் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, அது அங்கிருந்த பல்வேறு தேசங்களையும் சேர்ந்த திரையுலக முக்கியஸ்தர்களது கவனத்தை ஈர்த்திருக்கிறது. அத்தோடு விழாவின் கௌரவ விருதான டைகர் விருதிற்கும் இத் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

    திரைப்படத்தின் பின்னணியானது இலங்கையின் கிராமப்புறங்களிலிருந்து வந்து சுதந்திர வர்த்தக வலயங்களில் பணிபுரியும் பெண்களது காதல், காமம், திருமணம் ஆகிய நிகழ்வுகளை பல சந்தர்ப்ப சூழ்நிலைச் சிக்கல்களோடு பொருத்தி, அரசியல், சமூகக் கோட்பாடுகளின் உண்மையான முகத்தைக் காட்டியிருக்கிறது. சமூகம், அரசியல் என இரு மட்டங்களிலும் வகைப்படுத்தக் கூடுமான இத் திரைப்படத்தின் அத்திவாரம் பௌத்தவியலாக அமைந்திருக்கிறது.

    பௌத்த நீதிக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, அவற்றைக் கேள்விக்குட்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இத் திரைப்படமானது 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘HONOLULU’ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த புனைவுத் திரைப்படத்துக்கான விருதினை வென்றது. இலங்கை அரசை ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக அச்சுருத்திக் கொண்டிருக்கும்படியாக, பல இன்னல்களுக்கு மத்தியில் ஒரு திரைப்படத்தையெடுத்து, அதனைத் தான் பிறந்த மண்ணில் திரையிட்டுக் காட்டமுடியாத மனவேதனையை அகத்தில் புதைத்தபடி பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசியராகக் கடமை புரியும் இயக்குனர் சத்யஜித் மாஇடிபே தனது திரைப்படம் குறித்து இவ்வாறு கூறுகிறார்.

    ‘தமது காதல் வாழ்க்கை நொறுங்கிப் போனதன் காரணமாக தீய வழியில் செல்லும் இளைஞர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களது கனவுலகம் சிதைந்த பின்னர் நிஜ வாழ்க்கையைச் சந்திக்கும் தைரியம் அவர்களிடமில்லை. ஒருவகையில் இத் திரைப்படம் அவர்களது நடைமுறை வாழ்க்கையையே பிரதிபலிக்கிறது. வாழ்க்கையானது எவ்வளவுதான் இன்னல்களுக்குள் உள்ளபோதிலும், எல்லாவற்றையும் விட மிகவும் பெறுமதியானது வாழ்வதுதான் என நான் இத் திரைப்படத்தின் மூலம் கூற விரும்புகிறேன்’.

    – எம்.ரிஷான் ஷெரீப்
    mrishanshareef@gmail.com

    Share
  • விருந்து – அன்றும் இன்றும்

    -பேராசிரியர் முனைவர் க.துரையரசன்

    “விருந்தோம்பலில்
    தன்னினத்தைக்
    கூவியழைக்கும்
    காகம் போலிரு

    எள்ளென்றாலும்
    எட்டாகப் பகிர்ந்து உண்
    சந்ததி தழைக்கும்” என்பது இக்காலக் கவிஞரின் உள்ள வெளிப்பாடு. ‘விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு’ என்பது முன்னோர் மொழி.

    தொல்காப்பியம்:

    ‘விருந்தேதானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே’ என்பது தொல்காப்பியம் (செய்யுளியல் 231). புதிய யாப்பில் பாப் புனைதல் விருந்து என்பது இதன் பொருளாகும். எனவே, விருந்து என்பது புதுமை என்ற பொருளில் தொல்காப்பியத்தில் பதிவாகியுள்ளது என்பது அறிஞர்களின் கருத்தாகும். அவ்வடிப்படையில் நம் வீட்டுக்கு வரும் முன்பின் தெரியாத ஒருவர் – இதுவரை வராத ஒருவர் விருந்தினர் எனப் பொருள்கொள்ள வேண்டும். நம் வீட்டுக்கு ஏற்கனவே வந்தவர்கள் அல்லது உறவினர்கள் விருந்தினராகக் கருதப்பட மாட்டார்கள்.

    இதனடிப்படையில் தொல்காப்பியர் காலத்தில் விருந்தினர் என்பது நம் வீட்டுக்கு முதன்முதலில் வருவோர்; இன்று உறவினர்கள், நண்பர்கள் விருந்தினராகக் கருதப்படுகிறார்கள்.

    திருக்குறள்:

    இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற் பொருட்டு.  (81)

    என்பது திருக்குறள். இல்வாழ்க்கை என்பது தம் வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்று விருந்துண்பித்து வாழ்வதே ஆகும் என்று வள்ளுவர் ஆணித்தரமாக உரைக்கிறார்.

    விருந்தினர் வந்திருக்கும் பொழுது கிடைத்தற்கரிய அரிய பொருளாயினும் – பண்டமாயினும் – இந்திர உலகத்து அமிழ்தமாயினும் – சாவா மருந்தாயினும் அதனைத் தனித்து உண்ணார் தமிழர். இதனை,

    விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
    மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.   (82) என்று திருக்குறளும்,

    ‘உண்டாலம்ம இவ்வுலகம்
    இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும்
    இனிதெனத் தமியர் உண்டலும் இலரே’ (புறம். 182) என்று சங்கப் பாடலும் பகர்கின்றன.

    மேலும் வருகின்ற விருந்தினரை நன்கு உபசரித்து வேண்டுவன அருகிருந்து செய்து, அவர் செல்ல விரும்பும்பொழுது அவரை மகிழ்வுடன் அனுப்பி வைக்கும் இல்வாழ்வான் ஒருவன் ஆர்வத்துடன் அடுத்த  விருந்தினரை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டும் என்பதனை,

    செல்விருந்தி ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்விருந்து வானத் தவர்க்கு.     (86)

    என்ற திருக்குறள் அழகுற எடுத்துரைக்கிறது. ஒருவேளை விருந்தினரை அகமும் முகமும் மலர வரவேற்று உபசரிக்கவில்லையாயின் விருந்தினர் மிகவும் மனம் வருந்துவர் என்பதை,

    மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து.      (90)

    என்ற குறள் எச்சரிக்கை செய்கிறது. மேற்கண்ட எடுத்துக்காட்டுகளால் வள்ளுவர் காலத்து விருந்து நிலை தெற்றெனப் புலப்படுகிறது.

    சிலம்பும் ராமாயணமும்:

    சிலப்பதிகரத் தலைவி கண்ணகி,

    ”அறவோர்க்களித்தலும் அந்தணரோம்பலும்
    துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
    விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை…”  (கொலைக்களம்: 71-73)

    என்று வருத்தமுற்று நிற்பதைக் காணமுடிகிறது. அதுபோலச் சீதையும்கூட அசோகவனத்தில் இருந்தபொழுது வீட்டுக்கு விருந்தினர் வந்தால் தனியோர் ஆடவனாக இருந்து இராமன் என்ன செய்வானோ என்று வருந்தினாள்.

    இங்ஙனம் இருபெரும் காப்பியத்தலைவிகள் கணவனைப் பிரிந்து வருத்தமுற்றதைக் காட்டிலும் விருந்தோம்பல் மேற்கொள்ள முடியாமல் போயிற்றே என்று வருந்தியமையைக் காணமுடிகிறது. கணவனும் மனைவியும் கூடிநின்றுதான் விருந்து படைக்க இயலும் என்பது தமிழர் நியதி. இந்நியதியைப் பெரியபுராணம் தெற்றென காட்டுகிறது.

    பெரியபுராணம்:

    சிறுத்தொண்டர் புராணம், இளையான்குடி மாறநாயனார் புராணம், அப்பூதியடிகள் புராணம் என இன்னும் பல அடியவர்களின் புராணங்களும் கூட கணவனும் மனைவியுமாய் சேர்ந்து திருவமுது படைத்த பாங்கைப் பகர்கின்றன. குறிப்பாகச் சிறுத்தொண்டர் இல்லம் சென்ற பைரவ வேடந்தாங்கிய சிவபெருமான் இல்லின்கண் சிறுத்தொண்டர் இல்லை என்பதை அறிந்து வீட்டைவிட்டுப் புறப்பட முயலும் வேளையில், சிறுத்தொண்டரின் மனைவி அடியாரை இல்லிலிருக்குமாறு வேண்ட ஆடவர் இல்லாத இல்லில் தானிருத்தல் முறையாகாது என்றுகூறிச் சென்று விடுகிறார். அதன்பின் வீடு வந்தடைந்த சிறுத்தொண்டர் நடந்ததைக் கேட்டறிந்து அடியவரை இல்லிற்கு அழைத்து வந்து விருந்து படைத்தார் என்பது புராணம்.

    விருந்தோம்பும் முறைகள்:

    வீட்டிற்கு வந்த விருந்தினரைத் தக்க முறையில் ஓம்பும் ஒன்பது முறைகளை ஒரு தனிப்பாடல் வற்புறுத்திக் கூறியுள்ளது. அப்பாடல்:

    விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
    வியத்த, நன்மொழி இனிது உரைத்தல்,
    திருந்துற நோக்கல், வருக என உரைத்தல்,
    எழுதல், முன் மகிழ்வன செப்பல்,
    பொருந்துமற்று அவன்தன் அருகுற இருத்தல்,
    போம் எனில் பின் செல்வதாதல்,
    பரிந்து நன்முகன் வழங்கல், இவ்வொன்பான்
    ஒழுக்கமும் வழிபடும் பண்பே.

    (1) வீட்டிற்கு வரும் விருந்தினரை எதிர்கொண்டு அழைத்தல், (2) இனிய சொற்கள் கூறுதல், (3) அன்புடன் நோக்கல், (4) வருக என்று வரவேற்றல், (5) எழுந்து நிற்றல், (6) மகிழுமாறு சில செய்திகள் கூறுதல், (7) பொருந்தும் வகையில் அவர் அருகில் அமர்தல், (8) அவரைப் பின்தொடர்ந்து சென்று வழியனுப்பி வைத்தல், (9) பல்வகை உணவு, பழம், வெற்றிலை, பாக்கு முதலியன அளித்தல் ஆகிய ஒன்பது முறைகளை மேற்காட்டிய பாடல் வற்புறுத்துகிறது.

    இன்றைய நிலை:

    இதுகாறும் கூறிய செய்திகளின் வழி விருந்தோம்பல் என்பது பழந்தமிழரின் பண்பாட்டு முறை என்பதும் அது தொன்றுதொட்டுப் பாதுகாக்கப்பட்டு வந்ததையும் அண்மைக்காலம் வரைகூடக் கண்ணாரக் காணமுடிந்தது. ஆனால் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையிலிருந்து தனிக்குடித்தன வாழ்க்கை முறைக்கு இத்தலைமுறையினர் என்று மாறத்தொடங்கினார்களோ அன்றே விருந்தோம்பும் தமிழ்ப்பண்பும் அருகிப் போய்விட்டதை வருத்தத்துடன் கூற வேண்டியுள்ளது.

    விடாக்கண்டனும் கொடாக்கண்டனும்:

    ஒருவர் வீட்டிற்கு விருந்தினர் வந்தார். அவர் வரும்பொழுது பகல் 2.30 மணி. அப்பொழுது கணவன், மனைவி, விருந்தினர் ஆகிய மூவரும் பின்வருமாறு பேசிக்கொண்டனர்.

    கணவன்: வாங்க, மதியம் சாப்பாட்டு வேளை முடிஞ்சு வந்திருக்கீங்க. அநேகமாக கடையில் சாப்பிட்டு வந்திருப்பீங்க. இருந்தாலும் எங்க வீட்டில கொஞ்சம் சாப்பிடுங்க.

    மனைவி: ஏங்க, உங்களுக்கு எப்ப என்ன பேசுறதுன்னு தெரியாதுங்க. மணி என்ன ஆவுது. அவுங்களே சக்கரை வியாதிக்காரங்க. இவ்வளவு நேரம் சாப்பிடாமலா வந்திருப்பாங்க. இருந்தாலும் நம்ம வீட்டில கொஞ்சமா சாப்பிடுங்க.

    விருந்தினர்: நான் சாப்பிட்டுவிட்டு வந்தாலும், சாப்பிடாம நீங்க விடமாட்டிங்கன்னு எனக்குத் தெரியாதா? அதனால நான் சாப்பிடாமத்தான் வந்திருக்கேன்.

    இன்னொரு சம்பவம். ஒரு வீட்டிற்கு விருந்தினர் வருகிறார். அவரைக் கணவனும் மனைவியும் ஒப்புக்காக (முக தாட்சண்யத்திற்காக) வரவேற்கின்றனர். சற்று நேரத்தில் விருந்தினர் முன்பாக கணவனும் மனைவியும் கடும் சண்டையில் ஈடுபடுகிறார்கள். இதனைப் பார்த்த விருந்தினர் வீட்டைவிட்டுச் சென்று விட்டார். அப்பொழுது கணவன் மனைவியிடம், ஏண்டி, நான் எப்படிப் பண்ணுனேன் பார்த்தியா? என்று கேட்க, மனைவியும் அதற்குப் பதிலாக நான் எப்படி உங்களுக்கேற்றாற்போல நடிச்சேன் பார்த்தீர்களா என்று மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது வீட்டை விட்டுச்சென்ற விருந்தினர் உள்ளே புகுந்து நானும் போனதுபோல போக்குக் காட்டிவிட்டு வந்து விட்டேன் பார்த்தீர்களா?  உங்களுக்கேற்றாற்போல் நானும் நடித்தேன் பார்த்தீர்களா? என்றாராம்.

    இந்நிகழ்வுகளை விளையாட்டாகக் கூறுவர். இது விளையாட்டல்ல, விபரீதம். பல வீடுகளுக்குச் செல்லும் விருந்தினர்களின் பரிதாப நிலை இப்படித்தான் இருக்கிறது.

    ஔவையார்:

    விருந்தோம்பல் பற்றிய ஔவையாரின் பாடல் ஒன்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதாக உள்ளது. விருந்தினர் வருகை பற்றிக் கணவன் மனைவியிடம் தெரிவிக்கக் கருதுகிறான். அதனால் அவன் மனைவியிடம் அன்பாகப் பேசுகிறான்; முகத்தைத் தடவிக் கொடுக்கிறான்; அவள் தலையில் பேன் பார்த்துக்கொண்டே விருந்தினர் வந்திருக்கிறார் என்ற செய்தியை மனைவியிடம் தெரிவிக்கிறான். மனைவி கேட்டதுதான் தாமதம். அவள் ஆடிய ஆட்டம், பாடிய பாட்டு, கணவனுக்குக் கொடுத்த வசைகள், இவை போதாதென்று கணவனைப் பிய்ந்துபோன பழைய முறத்தால் ஓடி ஓடி அடித்து விரட்டினாள். புலியை முறத்தால் அடித்து விரட்டிய வீரமங்கை வாழ்ந்த தமிழ்நாட்டில் விருந்தினர் வந்திருக்கிறார் என்று சொன்னதற்காகக் கணவனை முறத்தால் அடித்து விரட்டினாள் மனைவி. இதனை வெளிப்படுத்தும் பாடல்:

    இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன் வாங்கி
    விருந்து வந்தது என்று விளம்ப – வருந்தி
    ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
    சாடினாள் ஓடோடித்தான்.         (தனிப்பாடல்)

    விருந்து உண்ணலாமா:

    இத்தகைய இல்லாள் இட்ட உணவை உண்ணலாமா? இத்தகைய இடர்ப்பாடு ஒரு விருந்தினனுக்கு ஏற்பட்டுள்ளது. அவனது பரிதாப நிலையைப் பாருங்கள்:

    காணக் கண் கூசுதே
    கை எடுக்க நாணுதே – மாண் ஒக்க
    வாய் திறக்க மாட்டாதே – வீணுக்கென்
    என்பெல்லாம் பற்றி எரிகின்றது – ஐயையோ
    அன்பிலாள் இட்ட அமுது.              (தனிப்பாடல்)

    அன்பில்லாத இல்லாள் (மனைவியாக இருந்தாலுங்கூட) படைத்த உணவைக் காணக் கண்ணோ கூசுகின்றது; உணவை எடுக்கக் கையோ வெட்கப்படுகிறது; வாயோ திறக்க மறுக்கிறது; எலும்பெல்லாம் பற்றி எரிகிறது என்று பரிதவிக்கிறான் ஒரு விருந்தினன் என்பதை ஔவையார் மேற்கண்ட பாடலில் படம்பிடித்துக் காட்டி உள்ளார்.

    எனவே தமிழரின் தலையாயப் பண்பாடான விருந்தோம்பல் என்பது அக்காலத்தில் சிறப்புடன் பின்பற்றப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய அவசர காலத்தில் – தனிக்குடித்தன வாழ்க்கையில் – பணம் சேர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்ட வாழ்க்கையில் விருந்து மருந்தாகி விட்டது; அதுவும் கசப்பு மருந்தாகி விட்டது. இளைய தலைமுறையினருக்கு இத்தலையாயப் பண்பாடு தெரியாமலே போய்விடும் அவலநிலையை நோக்கித் தமிழகம் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதை வருத்தத்துடன் இங்கே பதிவு செய்கிறேன்.

     

     

     

    Share
  • புலமையிலக்கணம்  கூறும்  தவறியல்பு

    -முனைவர் சு.சத்தியா

    sathiyaதமிழ் இலக்கணம்   மிகத்   தொன்மையானது. காலந்தோறும் இலக்கியங்கள் வளர்ச்சி அடைந்தது போலவே இலக்கணங்களும்  வளர்ச்சி அடைந்தன. தொல்காப்பியர்  காலத்தில் எழுத்து, சொல், பொருள் என்று  தொடங்கி இன்று பல்வேறு நிலையில் வளர்ச்சி அடைந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, புலமை என வளர்ந்து தற்பொழுது அறுவகை இலக்கணம் என்ற நிலையில் தமிழ் இலக்கணத்தின் வளர்ச்சி நிலையைக் காணமுடிகிறது. அவ்வகையில் ஆறாவது இலக்கணமான புலமையிலக்கணம் கூறும் தவறியல்பினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    புலமையிலக்கணம்

    தமிழ் இலக்கண வரலாற்றில் புதியதொரு சகாப்தத்தை ஏற்படுத்தியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். இவர் இயற்றிய அறுவகை இலக்கணம் எனும் நூலில் இலக்கணம் ஆறு வகைப்படும் அவை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, புலமையிலக்கணம் எனக் கூறியுள்ளார். இப்புலமையிலக்கணமாவது மேற்கூறிய ஐந்து இலக்கணங்களையும் கற்பவர் எவ்வகைப் புலமையோடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இயற்றப்பட்டுள்ளது. போற்றுதற்குரியதாகும். புலமை என்பதற்கு,

    ”அறியும் தன்மையைப் புலமை ஆம்எனப்
    பற்பல பெரியோர் பகர்ந்தனர் அன்றே” என்று ஐம்புலனாலும் ஒரு பொருளை அறிதலே புலமையெனச் சுட்டியுள்ளார். இப்புலமையிலக்கணம் தேற்றவியல்பு, தவறியல்பு, மரபியல்பு, செயல்வகை இயல்பு என்னும் நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் தவறியல்பின் சிறப்பினை இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.

    தவறியல்பு

    இந்நூலாசிரியர் தமிழ் மாணவர்களிடமும் புலவர்களிடமும் இருக்கக் கூடாத பண்புகளையே தவறியல்பாகச் சுட்டுவதோடு அப்பண்பினை உடையவர் முழுவதும் மனமாற்றம் பெறவேண்டும் என்கிறார்.  இதனைப் பின்வரும் பண்புகள்  வழி அறியலாம்.

    புலமைக்காய்ச்சல்

    நன்கு கற்றறிந்த புலவர்களிடம் தற்பெருமை, புலமைக்காய்ச்சல் எனும் பொறாமை போன்ற தீயபண்புகள் இயல்பாகவே இருக்கும். இவை அறவே இருக்கக் கூடாது என்பதைத் தவறியல்பின் முதல் நூற்பா கீழ்வருமாறு உரைக்கிறது.

    சாராது ஒழிப்பரன் தவறுஇயல்பு உரைக்குதும்
    பேரா நலம்எனப்   பிணங்கவொண் ணாதே.                                                         (அறுவகை.புலமையி.34)

    புலமைச்செருக்கு

    நமது வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் நான் எனும் செருக்குக் கொண்ட எண்ணம் எவருக்கும் ஏற்படக்கூடாது. குறிப்பாகக் கல்வி அறிவினைப் பெற விரும்புபவருக்கு எள்ளளவும் கூடாது என்பதை,

    எள்ளிடைப் புலமை இசையும் முன்னம்
    நெல்லிடை யாண்மை நிலவல்ஓர் தவறே. (அறுவகை.புலமையி.37 )

    எள்ளளவும் கல்வியறிவு பெறுவதற்கு முன் நெல்லளவும் செருக்கடைவது தவிர்க்கப்பட வேண்டுமெனக் கூறுகிறது. இதனையே ‘கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு’ என நம் தமிழ் மூதாட்டி கூறியுள்ளது இங்கு ஒப்புநோக்குவதாகும். இதனை மாணவர்கள் நன்கு உணரவேண்டும். தானெனும் செருக்கு இருப்பவருக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படாததோடு எவ்வித அறிவு வளர்ச்சியுமிராது. கல்வியில் உண்மையான ஈடுபாடு கொண்டவர் துளியும் செருக்கின்றி வாழ்வர்.

    புலவரைப் புலவர் மதியாத நிலை

    மனிதனை மனிதன் மதித்து வாழ்வதே மனிதநேயமாகும். இருந்தும் புலவர் ஒருவர் மற்ற புலவர்களை மதிப்பதில்லை. இது மிகவும் தவறாகும் என்பதை,

    காகப் புள்என இனத்தொடு கவ்வாது
    ஞாளிபோற் பகைக்கும் நாவலர் பலரே. (அறுவகை.புலமையி.38)

    என்று காகத்தின் ஒற்றுமையுணர்வினைச் சுட்டி, இதுபோல் வாழாது நாயினது வேற்றுமை குணத்தையே தனது குணமாக்கி வாழும் புலவர் பலராவர். இப்பண்பு அவர்கள் கற்ற கல்வியினால் வந்த மமதையாகும் என்பதோடு அவ்வாறு இருப்பது தவறு என்றும் ‘உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதலே புலவர் தொழிலாக’ வேண்டுமெனவும் கூறுகிறது.

    நிலையற்ற நட்பு

    தமிழின் சிறப்பை உணர்ந்த புலவர்களின் நிலையான நட்பைப் பார்க்கிலும் பொருட்செல்வத்தை மட்டுமே பெற்றிருக்கும் அரசர், அமைச்சர், பெருஞ்செல்வந்தரின் நிலையற்ற நட்பே சிறப்புடையதெனக் கருதுபவர் சிறந்த நூலாசிரியராகத் திகழ்ந்தாலும் அவர் புலவரிலும் இழிந்தவராவார் என்பதை,

    தமிழ்அறி புலவோர் தங்கள் உறவினும்
    பொருளுடை மன்னர் ஆதியர் பொய்உறவு
    உயர்வுஎனக் காண்பான் ஒள்ளிய பனுவற்
    காரன் எனினும் கடைப்படும் அன்றே. (அறுவகை.புலமையி.39)

    இன்றைய உலகில் அறிவுடன் கூடிய நட்பினைப் பார்க்கிலும் செல்வத்துடன் கூடிய நட்பையே எங்கும் காணமுடிகிறது. இத்தகைய நட்பினை இழிவென உரைக்கிறது இந்நூல்.

    பெரும்புலவர் இளம்புலவரைச் சோர்வடையச் செய்தல்:

    அறிவில் முதிர்ந்த பெரும்புலவர்கள் வளர்ந்து வரும் இளம் புலவர்களை இழிவுபடுத்தும் நிலையினை நாம் இன்றும் காணமுடிகிறது. இதனைத்தான்,

    தேறாப் புலவனைச் சிந்தை நோவப்
    படுத்தும் பாவலர் பதர்அனை யாரே. (அறுவகை.புலமையி.40)

    என்று பகர்வதோடு அத்தகையவர் உள்ளீடற்ற வெற்றுத்தானியம் போன்று பயனில்லாதவராவர் என்பதோடு குறிப்பாக அறிவில் தம்மைவிடக் கீழ்நிலையில் உள்ளவர்களைத் துன்புறுத்தவே கூடாது என்றும் வலியுறுத்துகிறது.

    சொல் திருடல்

    சிறந்த புலவர்களின் சொற்றொடர்களை அவர்கள் எழுதியவாறே எழுதித் தான் எழுதியது எனக் கூறும் புலவர்களின் செயல் பெருந்தவறாகும். இதனையே,

    சீரிய புலவர்தம் செஞ்சொல் திருடிப்
    பாழ்த்த புன்கவி பகர்வோர் பலரே. (அறுவகை.புலமையி.41)

    என்றுரைக்கிறது. பிறருடைய சொல்லையும் கருத்தையும் தன்னுடையதெனப் பொய்யாக மொழியும் இலக்கியத் திருட்டு கூடாதென்பதையே முன்வைக்கிறது.

    அகந்தை

    இன்று மட்டும் அல்ல காலந்தோறும் ஆற்றல் பெற்ற பெரும்புலவர்களில் சிலர் தானெனும் அகந்தையுடன் தனக்குப் பின்வரும் இளம்புலவர்களிடம் நடந்துகொள்வதைக் காணமுடிகிறது.அப்படிப்பட்டவர்களின் ஆணவத்தைத் தக்க முறையில் சான்றுடன் நிரூபித்து மூளியாக்க வேண்டும் என்பதை,

    “முறைப்படி வென்று மூளி ஆக்கான்” (அறுவகை.புலமையி.42)

    என்கிறது. சான்றாக, பாண்டியமன்னன் உக்கிரப் பெருவழுதி மதுரையில் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த காலம். சங்கத்துப் புலவர்களெல்லாம் மதுரையில் கூடியிருந்தனர். தமிழ்ப் புலமையில், தங்களைவிட எவருமிலர் என்று அகந்தையுடனிருக்கையில் ஔவையார் அச்சங்கப்புலவர்களின் செருக்கினை அடக்க முனைந்து புலவர்கள் சூழ்ந்த அவையில், சைகையால் குறிப்புணர்த்தித் தம்முடைய ஐந்து விரல்களையும் மடக்கி மூடி சைகை காட்டினார். பின்னர் கையைக் கொஞ்சம் திறந்துக் காட்டினார். அதன்பிறகு சுட்டுவிரலை மாத்திரம் நீட்டிக் காட்டினார். பின் அதற்கு விளக்கம் கேட்டார். பதிலுக்குப் புலவரிலொருவர்,

    இவ்வளவு கண்ணுடையாள்
    இவ்வளவு சிற்றிடையாள்
    இவ்வளவு போன்ற
    இளமுலையாள்? இவ்வளவா
    நைந்த உடலாள்
    நலமேவு மன்மதன் தன்
    ஐந்து கணையால் வாடினாள்!
    என்று பாடினார். அதனைக் கேட்டு மனம் புழுங்கிய ஔவையார் அப்புலவர்களின் ஆணவத்தை அடக்கத் தமது குறிப்பினை உணர்த்தும் கீழ்வரும் பாடலைப் பாடலானார்.

    ஐயம் இடுமின்!
    அறநெறியைக் கைப்பிடிமின்!
    இவ்வளவேனும் அன்னம்
    இட்டு உண்மின்! தெய்வம்
    ஒருவனே என்று
    உணர வல்லீரேல்
    அருவினைகள் ஐந்தும் அறும்! (தனிப்பாடல்-2)

    எனப்பாடி புலவர்களின் செருக்கினை அடக்கினார்.  இது இங்கு ஒப்புநோக்கத்தக்கதாகும். ஒருவருக்கு கல்வியினால் பெரும்பயன் கருணையே அதுவே நாவலர்க்கு இறையாகும் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.

    பொறுமை

    ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’, பொறுமை கடலினும் பெரிது’ என்பது ஆன்றோர் முதுமொழி. இதனை,

    முற்றும் பொறுத்தலும் மூக்கிற் கோபம்
    வைத்துத் திரிதலும் வண்டமிழ்ப் புலவர்க்கு
    ஆய தன்மைஎன்று அறையஒண் ணாதே.

    இவ்வாறு புலவர்கள் தனது கோபத்தை இடம், பொருள், ஏவல் அறிந்து காட்ட வேண்டும்.அதுவே சான்றாண்மையுமாகும் என்றுரைக்கிறது. அதற்காக அனைத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது இல்லை. சூழ்நிலைக்கேற்றவாறு ஒழுகுதல் நன்று என்றே கூறுகிறது.

    காமச்சுவை

    காமக் கடலே கதிஎனக் கருதிப்
    போவார் புலமையிற் புண்ணியம் இன்றே. (அறுவகை.புலமையி.45)

    தமிழ்ப் புலமையை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காக ஆபாசமான நாகரிகமற்ற பண்பாட்டைச் சீர்க்குலைக்கும் சொற்றொடர்களைக் கூறுவதால் எவ்விதப் பயனுமில்லை. இதனை உணர்ந்து புலவர்கள்  தமிழின் சிறப்பினை உயர்த்தும் வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும். தமிழின் பெருமையை சீர்கெடச்செய்யும் விதமாகத் தமிழரின் அகவாழ்க்கையைக் கொச்சைப்படுத்தக் கூடாது என்பதையே வலியுறுத்துகிறது. மகாகவி பாரதியாரும் தன் சின்னச் சங்கரன் கதையில் இவ்வவல நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

    புரிந்துகொள்ளாத நாவலர்கள்

    கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பர். குறிப்பாகத் தமிழ்க்கல்வி அறம், பொருள், இன்பம், வீடுபேறு எனும் நான்கு உறுதிப்பொருள்களை அளிக்கும் சாதனமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நம் தாய்மொழிக்கல்வியால் பொருளீட்டவும் அதனால் இன்பம் அடைவதை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டவர் புல்லியர் ஆவார். இதனை,

    தெய்வம் புகழும் சிறப்பும் செந்தமிழ்
    பொருந்தும்என்று உணராப் புலவர்புல் லியரே. (அறுவகை.புலமையி.46)

    என்று கூறுகிறது.பொருளுக்காகவும் அதனால் பெறும் இன்பத்துக்காகவும் தமிழ்க் கல்வியைப் பெறுதல் கூடாது என்பது தெள்ளிதின் புலனாகிறது.

    இரக்கம் இல்லாத புலவர்கள்

    அனைத்து உயிர்களிடமும் அன்புகாட்ட வேண்டும். எவ்விடத்தில் உண்மையான அன்பு மேலோங்கி நிற்கிறதோ அங்கே தெய்வ அருளினைக் காணலாம். இரக்கம் என்பது ஐந்தறிவு உயிரினங்களிடமும் அன்பு காட்டுவதாகும். உயிர்களைக் கொன்று உணவு சமைப்பவர்களின் இழிந்த செயல்களைப் போற்றிப் பாடுகின்ற இரக்கம் இல்லாத புலவர்களை மேலோர் பேய்க்குணம் வாய்த்தவரெனப் பழிப்பர் என்று கூறுவதோடு நூல் படைப்பதன் தலையாய நோக்கம் மக்களுக்கு நன்னெறி காட்டுவதற்கே என்றும் கூறுகிறது. அதைவிடுத்து உயிர்களைக் கொலைசெய்தல் கூடாதென்பதற்கு,

    கொல்லல்ஊன் சமைத்தல் ஆகிய விரித்துக்
    கழறுந் துணிவுடைக் கவிப்புல வோரைப்
    பேயர்என்று உலகம் பெரிதுஇகழ்ந் திடுமே. (அறுவகை.புலமையி.48) என்றுரைக்கிறது.

    புலமையை விலை பேசுதல்

    அரியநூலை இயற்றி அதனைப் பணத்திற்கு விலைபேசுதல் சிறப்பாகாது எனவே ஒருவரது புலமைத்திறன் விலைமதிப்பற்றது என்பதறிந்து அதனால் அதை விலைபேசுதல் தவறாகும் என்பதை உணர்ந்து தமிழ்த் தொண்டாற்ற வேண்டுமென்பதை,

    புகலரும் பனுவல் பொற்பணம் கருதி
    விற்கத் துணிவது மேம்பாடு அன்றே. (அறுவகை.புலமையி.49) எனவும் கூறுகிறது.

    கல்வியின் சிறப்பறியாதார்

    கல்வியின் சிறப்பையும் அதனைக் கசடறக் கற்றவரின் புலமைத்திறனையும் அறியாத ஒரு செல்வர் முன்சென்று தம் பெருமைகளைக் கூறி அவரை பாராட்டிப் பரிசில் வழங்குவார் என எதிர்ப்பார்ப்பது தவறாகும் என்பதை,

    அருமை அறியான் அவையிடைப் புகுந்து
    பெருமை பாராட்டலும் ஏனையும் பிழையே. (அறுவகை.புலமையி.50)

    என்பதோடு அவர்களிடம் கைநீட்டிப் பரிசில் பெறுவதை இழிவெனவும் கூறுகிறது.

    காரணம் காரியம் காணாப் புலமை

    எந்தவொரு நிகழ்வுக்கும் காரண காரியம் உண்டென்பதை உணர்ந்து கற்பவரே கற்றலில் முழுமை நிலையைப் பெறுவர். அவ்வாறு இல்லாதவரின் கல்வியாற்றலை முழுமைப் பெற்றதாகக் கூறமுடியாது என்பதோடு இவ்வுலக நிலையாமையை உணர்ந்து வாழ்பவரின் புலமையே நிலையானதாகும். இதனை உணர்ந்தவராய் வாழவேண்டும் என்றும் கூறுகிறது.

    தவறில்லாது தெளிவுற உரைத்தல்

    ”தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று” எனும் வள்ளுவரின் குறளுக்கேற்ப தாம் பாடத்தொடங்கிய துறையில் தவறாகப் பாடுவாராகில் இவ்வுலகில் எவரும் அவரை மதிக்கமாட்டார். இப்படிப்பட்டவரை,

    கொண்ட துறையினைக் கோதுபடக் கூறின்
    மண்டலத் தாரும் மதியார் அன்றே. (அறுவகை.புலமையி.53) என உரைக்கிறது.

    அறிவு மயக்கத்தின் செருக்கு

    ‘அருட்பே ராளருக்கு அஞ்சாப் புலமை’
    இறை அருளின் மேன்மையைப் பெற்ற பெரியவர்களிடம் புலமைச் செருக்குடன் இருத்தல் கூடாது. அவர்களிடம் பணிவுடன் நடத்தல் வேண்டும். அதாவது பயப்பக்தியுடன் கூடிய மரியாதையுணர்வுடன் பேசவேண்டும் என்பதையே கூறுகிறது.

    புலவர்களின் அடிமைநிலை

    ஒரு புலவர் ஒரு செல்வந்தருக்கோ அல்லது தலைவருக்கோ அடிமையாய் இருத்தலைவிட வணிகனாக இருக்கலாம் என்கிறது. மேலும் ஒருவரது புலமையை அடிமையாக்குவது அல்லது விற்பது பெரும் தவறாகுமெனவும் சாடுகிறது.

    அறிவுடைமைக்குப் பொருந்தாதவை

    எவரேனும் ஒருவர் இயற்றிய நூலில் அல்லது பாடலில் ஏதாவதோரிடத்தில் தவறு இருப்பது தெரிந்து அந்நூல் முழுமையும் அல்லது அப்பாடல் முழுமையும் தவறெனக் கூறுவது அறிவுடையாருக்கு ஏற்ற செயலாகாது. இதனை,

    பலவகை நயங்களும் பாராது ஒருவிதக்
    குற்றம் கருதிக் குதிப்பதும் புலமைக்கு
    இழிந்த பான்மைஎன்று இயம்பிடல் இசைவே. (அறுவகை.புலமையி.62)

    என்பதோடு இழிவான செயலெனவும் கூறுகிறது.

    நற்புலமைக்கு ஆகாதன

    அரசியல், ஆதாயம், பொருள் வருவாய், எளிய வழியில் செல்வாக்கடைதல் போன்றவற்றைப் பெறவேண்டி தமிழ்ப்பற்றை மிகைப்படுத்திக் காட்டிக்கொள்ளும் காரியவாதியாக இருத்தல் தவறாகும். புலமைபெற்றவர்கள் தனது புலமைக்கு ஆகாதன எவையெவை என்பதை அறிந்து நற்புலமையையே கைக்கொள்ளவேண்டும். இவ்வாறு புலமையில் களைய வேண்டிய தவறுகளை 34 நூற்பாக்கள் வழியாக அறுவகையிலக்கணம் தவறியல்பாக எடுத்துரைக்கிறது.

    *****

    பார்வை நூல்கள்

    1.அறுவகை இலக்கணம், புலவர்.ப.வெ.நாகராசன்
    2.தனிப்பாடல் திரட்டு (ஔவையார்)

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171010-The Archer-DWA -lr

    ”எங்கிருந்(து) ஆரம்பம், எங்கெதில் சங்கமம்,
    இங்கணம் இவ்வுயிரை நன்குணர்ந்தோர் -இங்கிலர்:
    ஆதலால் பாண்டவா, வேதனை வேண்டாம்வல்,
    சூதினைக் கொல்லல் சிறப்பு”….கிரேசி மோகன்….!

    ”ARCHER அருச்சுனா TORTUREநீ பண்ணாதே,
    PREACHERஎன் சொற்படி(கீதை)போப் பாண்டவா, -ஓர்ச்சரம்(ஒற்றை அம்பினால்)
    கொண்டந்த நூறைக் குலைநடுங்கச் செய்திடுவாய்,
    உண்டந்த சொர்கம் உனக்கு’’….கிரேசி மோகன்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171009 - Dialogue with Arjuna -lr

    ”வில்லவர், அம்பினை வீசுபவர், நூறினைக்
    கொல்பவர், சொல்லியவர் கீதையை , -தொல்லவர்(பழமையானவர்)
    ஆதிசேடன் விட்டு அசுவரதம் ஓட்டியவர்
    பாதிவிஷ்ணு மீதியவர் பாண்டு’’….கிரேசி மோகன்….!

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (243)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளாராக சவுமியா சாமிநாதன் அவர்களை மகிழ்ச்சியுடன் தேர்ந்தெடுக்கிறோம். இப்பரிந்துரையை அளித்தவர் வல்லமை நிறுவனர் திரு அண்ணா கண்ணன் அவர்கள் ஆவார்கள்.

    சவும்யா ஒரு குழந்தைகள் நல மருத்துவர். இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தை என அறியப்படும் எம்.எஸ் சாமிநாதனின் மகள். 30 ஆண்டுகள் மருத்துவத்துறையில் பணியாற்றி இந்திய மெடிக்கல் கவுன்சிலின் தலைவராக பணீயாற்றுகிறார். சுகாதாரதுறையின் ஆய்வுத்துறை செக்ரட்டரியாகவும் பணியாற்றுகிறார்.

    இதன்மூலம் உலக சுகாதார மையத்தின் பல அமைப்புகளில் பணிபுரிந்தார். டிபி. எச்.ஐ.வி ஆகிய நோய்களின் தடுப்பில் முக்கிய பணீயாற்றினார். யுனிசெப், உலகவங்கி ஆகியவற்றின் பல கமிட்டிகளில் பணீபுரிந்தார்

    இவ்வாரம் அவர் உலகசுகாதார மையத்தின் திட்டங்களுக்கான துணை இயக்குனர் ஆக நியமிக்கபட்டுள்ளார்.

    “தனக்கு கிடைத்த இவ்வாய்ப்பு இந்தியாவுக்கு அளிக்கபட்ட கவுரமாக” கருதி செயல்படுவதாக சவும்யா பேட்டி அளித்தார்

    இந்தியாவின் புகழையும், இந்திய மருத்துவர்களின் திறமையையும் ஹைலைட் செய்யவும், சேவை பணியில் அனைவரையும் ஈடுபட வைக்கவும் வேண்டிய ஊக்கத்தை சவும்யாவின் தேர்வு அளிக்கும் என வல்லமை நம்பி அவரை வல்லமையாளராக அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது

    வல்லமையாளர் சவும்யா சாமிநாதனுக்கு நல்வாழ்த்துகள்.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    171007 -Ananda -lr

     

    ”அவ்வையை கைலாஸம் ஆனை முகன்சேர்த்தார்,
    COWவ்வுக்கு வைகுண்டம், கண்ணபிரான் -செவ்வாயர்,
    உண்டென்று ஓங்கி உலகளக்கும் உத்தமர்,
    பண்டமாற் றாய்கீதை பார்க்கு(உலகுக்கு)’’….கிரேசி மோகன்….!

    Share
  • சித்ரா-5 ( கடைசி பாகம்)

    (காதலின் புதியதொரு பரிமாணம்)
    மூலம்: வங்கமொழி: ரவீந்திரநாத் தாகூர்;
    ஆங்கில வடிவின் தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்
    *****************

    தொடர்ச்சி: காட்சி- 8

    Chithra-4
    அர்ஜுனன்: ஒரு கொள்ளைக்காரர்கள் கூட்டம் சமவெளியை வந்தடைந்துள்ளது என அறிகிறேன். என் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு சென்று பயந்திருக்கும் கிராமமக்களை நான் காக்க வேண்டும்.

    சித்ரா: நீங்கள் அவர்களைப்பற்றிப் பயப்பட வேண்டாம். தீர்த்த யாத்திரைக்குச் செல்லும்முன் இளவரசி சித்ரா வலிமைவாய்ந்த காவலர்களை நாட்டின் எல்லைப்புறத்து வழிகளில் நிறுத்திவிட்டே சென்றுள்ளாள்.

    அர்ஜுனன்: இருப்பினும் ஒரு சிறு பொழுதிற்காவது நான் எனது க்ஷத்திரியனுடைய கடமையைச் செய்ய அனுமதிப்பாயாக. வீணே இருக்கும் என் கைகளைச் சேரும் புதுப் புகழுடன் நான் அதனை உனக்குத் தகுதியான ஒரு தலையணையாக ஆக்குவேன்.

    சித்ரா: என் கரங்களில் சிறைப்படுத்திவைத்து நான் உங்களைச் செல்ல அனுமதிக்காவிட்டால்? நீங்கள் முரட்டுத்தனமாக என்னிடமிருந்து உங்களை விடுவித்துக் கொண்டு செல்வீர்களா? அப்படியானால் செல்லுங்கள்! ஆனால் ஒருமுறை இரண்டாக முறிந்த கொடி திரும்பச் சேராது என்பதைத் தாங்கள் அறியவேண்டும். உங்களுடைய தாகம் தணிந்துவிட்டதெனில் செல்லுங்கள். இல்லையென்றால், மகிழ்ச்சி எனும் தேவதை சலனபுத்தியுள்ளவள், யாருக்காகவும் காத்திருக்க மாட்டாள் எனத் தெரிந்து கொள்ளுங்கள். சிறிது நேரம் அமருங்கள், என் தலைவா! தங்களை அலைக்கழிக்கும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தங்கள் எண்ணத்தை யார் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது? அவள் சித்ராவா?

    அர்ஜுனன்: ஆம். சித்ரா தான். எந்தவொரு வேண்டுதல் நிறைவேறுவதற்காக அவள் தீர்த்தயாத்திரை சென்றுள்ளாள் என வியக்கிறேன். அவளுக்குத் தேவையானது என்னவாக இருக்கும்?

    சித்ரா: அவளுடைய தேவைகளா? ஏன்? அதிர்ஷ்டமற்ற அவளிடம் எப்போது, என்னதான் இருந்தது? அவளுடைய பெண் உள்ளத்தை சிறு அறையில் அடைத்திடும் அவளுடைய குணங்கள் அனைத்துமே அவளுக்குச் சிறைக்கதவுகளாகும். அவள் அறியப்படாதவள். நிறைவை அடையாதவள். அவளுடைய பெண்மையுள்ளத்துக் காதல் கிழிந்த ஆடைகளால்தான் போர்த்தப்பட்டுள்ளது. அழகு அவளுக்கு மறுக்கப்பட்டது. உற்சாகமற்ற காலைப்பொழுதினைப்போல், வெளிச்சமெல்லாம் கருமேகங்களால் மறைக்கப்பட்டு, கருங்கல் மலையின்மீது அமர்ந்திருக்கும் உருவைப்போன்றவள் அவள். அவள் வாழ்க்கையைப் பற்றி என்னிடம் கேளாதீர்கள். உங்கள் செவிகளுக்கு அது இனிமையாக இராது.

    அர்ஜுனன்: அவளைப்பற்றிய அனைத்தையும் அறிந்துகொள்ள நான் ஆவலாக இருக்கிறேன். ஒரு வினோதமான நகருக்கு இரவுநேரத்தில் வந்திருக்கும் வழிப்போக்கனைப்போல உணர்கிறேன். மாடங்கள், கோபுரங்கள், மரத்தோப்புகள் முதலியன புரியாத நிழல்போலக் காட்சியளிக்கின்றன; உறக்கத்தின் அமைதியிடையே கடலின் மெல்லிய புலம்பல் கேட்கிறது. இந்த வழிப்போக்கனும் ஆச்சரியமான அதிசயங்களைக் காட்டும் விடியலுக்காகக் காத்திருக்கிறான். ஓ! எனக்கு அவளுடைய கதையைக் கூறுவாய்!

    சித்ரா: கூறுவதற்கு இன்னும் என்ன இருக்கிறது?

    அர்ஜுனன்: நான் என் மனக்கண்ணில் அவளைக் காண்கிறேன்- ஒரு வெண்ணிறப் புரவியின் மீதமர்ந்து, பெருமிதத்துடன் தனது இடதுகையில் அதன் கடிவாளங்களைப் பிடித்துக்கொண்டும், வலதுகரத்தில் வில்லினை ஏந்தியபடியும், வெற்றிதேவதை ஒருத்தி தன்னைச் சுற்றிலும் நம்பிக்கையைப் பரப்பிச் செல்வதனைக் காண்கிறேன். மிகுந்த கவனத்துடன் உள்ள தாய்ச்சிங்கத்தைப்போல அவள் தனது குட்டிகளைக் கொடூரமான அன்பினால் பாதுகாக்கிறாள். அணிகளால் அலங்கரிக்கப்படாத பெண்ணின் கரங்கள், தளைகளற்ற பலத்துடன் இருப்பின் அதுவே அவளுக்கு அழகாகும். நீண்ட குளிர்காலத்து உறக்கத்திலிருந்து விழித்தெழும் பாம்பினைப்போல் எனது உள்ளம் அமைதியற்று இருக்கின்றது. வா, இரட்டை ஒளிவளையங்கள் விண்வெளியில் பறந்துசெல்வது போல அருகருகே நாமிருவரும் விரையும் புரவிகளில் அமர்ந்து வேகமாகச் செல்லலாம். இந்த மயக்கமான பசும் சிறையிலிருந்து, குளிர்ந்த, உற்சாகமற்ற, அடர்ந்த, வாசமிகுந்த, மூச்சையடைக்கும் தன்மைகொண்ட இவ்விடத்திலிருந்து சென்றுவிடலாம்.

    சித்ரா: அர்ஜுனா, உண்மையாகச் சொல்லுங்கள், இப்போது எனது இந்தக் காமமூட்டும் மென்மையை நான் ஏதோவொரு மாயத்தால் உதறித்தள்ளிவிட்டு, உலகத்தின் கரடுமுரடான ஆரோக்கியமான பிடியிலிருந்து சுருங்கும் சிறியமலர் போல வாடி உதிர்ந்து, கடன்வாங்கிய ஆடைகளைப்போல எனது உடலிலிருந்து (மென்மையான இப்பெண்மையை) கழற்றி எறிந்துவிட்டாலும், உங்களால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியுமா? நான் இயலாமையை வெளிப்படுத்தும் செய்கைகளை நிராகரித்து நேராகவும் வலிமையான உள்ளத்துடனும் நிமிர்ந்து, எனது சிரத்தை மலைமீதுள்ள ஒரு நெடுமரம் போல உயர்த்திக்கொண்டு நின்றும், ஒரு மெல்லிய கொடியைப்போல புழுதியில் தவழாமலும் இருந்தால், ஒரு ஆணின் கண்களுக்கு நான் விருப்பமுள்ளவளாக இருப்பேனா? இல்லை, இல்லை, உங்களால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாது. நான் என்னை இந்த நளினமான பெண்மை விரும்பும் நிலையற்ற இளமையின் பொருட்களால் சூழ்ந்துகொண்டு உங்களுக்காகப் பொறுமையாகக் காத்திருப்பேன். உங்கள் விருப்பப்படி நீங்கள் திரும்ப வரும்போது, இந்த எனது அழகிய உடல் எனும் கோப்பையில் புன்னகை ததும்ப இன்பம் எனும் மதுவை நிரப்பித் தங்களுக்கு வழங்குவேன். இந்த மது தங்களுக்கு நிறைவைத்தந்து சலிப்பினையும் தரும்போது தாங்கள் விளையாடவோ, வேலை செய்யவோ வெளியே செல்லலாம். நான் முதுமையை அடைந்து தளர்ச்சியுறும்போது, நன்றியறிதலுடன் எனக்கு அளிக்கப்படும் வாழ்வினை ஏற்றுக்கொண்டு எனக்காக ஒதுக்கப்பட்ட ஒரு ஓரமாக ஒதுங்குவேன். இரவின் காதல்துணை பகலில் தங்களுக்கு உதவியாளாக இருந்தால் உங்களுடைய வீர உள்ளத்திற்கு அது மகிழ்ச்சியைத் தருமா? இடதுகையானது பெருமைவாய்ந்த வலதுகரத்தின் சுமையைப் பகிர்ந்துகொள்ளப் பழகிக்கொண்டால் அது உங்களுக்கு சம்மதமா?

    அர்ஜுனன்: நான் உன்னைச் சரியாகப் புரிந்துகொள்ள இயலாதவனாக இருக்கிறேன். ஒரு தங்கச்சிலைக்குள் ஒளிந்திருக்கும் தேவதைபோல நீ இருக்கிறாய். என்னால் உன்னைத்தொடவோ, உனது விலைமதிப்பற்ற பரிசுகளுக்கு ஈடுசெய்யவோ முடியவில்லை. ஆகவே எனது காதல் முழுமையடையாமல் உள்ளது. சில பொழுதுகளில் புரிந்துகொள்ள முடியாத உனது சோகமான பார்வை, உன்னை நீயே பரிகசித்துக் கொள்ளும் விளையாட்டுத்தனமான சொற்கள், இவை எனக்கு நீ உனது மென்மையான தேகத்தைப் பிளந்து வெளிப்பட முயல்வதனையும் உன்னைத்தகிக்கும் ஒரு புனிதமான நெருப்பெனும் வலியிலிருந்து புன்னகையோடு நீ விடுபட முயல்வதனையும் கீற்றுகளான காட்சிகளாக எனக்கு அறிவிக்கின்றன. உண்மையின் முதல் தோற்றம் மாயைதான். அவள், அந்த மாயை, தனது காதலனை நோக்கிப் பொய்த்தோற்றத்தோடு செல்கிறாள். ஆனால் சரியான சமயம் வாய்க்கும்போது தனது அணிமணிகளையும், முகத்திரையையும் களைந்தெறிந்து விட்டு நிர்வாணமான பெருந்தன்மையில் காட்சியளிக்கிறாள். உண்மையின் எளிய வடிவமான முடிவான உன்னை அடைய நான் தேடுகிறேன். ஏன் இந்தக் கண்ணீர், என்னுயிரே? முகத்தை ஏன் கரங்களால் மூடிக்கொள்கிறாய்? நான் உன்னை வருத்தப்படுத்தி விட்டேனா, என் அன்பே? நான் கூறியதனையெல்லாம் மறந்துவிடு. இப்போதைய பொழுதில் நான் திருப்தியாக இருப்பேன். ஒரு மர்மமான பறவை இருளிலுள்ள தன் கூட்டிலிருந்து இனிய இசையுடன் புறப்பட்டு வருவதனைப்போல் ஒவ்வொரு அழகிய பொழுதும் என்னிடம் வரட்டும். எப்பொழுதும் இதனை உணர்ந்து கொள்ளும் எல்லையில் நான் இருந்துகொண்டு எனது நாட்களை முடிவுக்குக் கொண்டுவருவேன்.

    காட்சி- 9

    சித்ரா:

    (போர்த்து மூடியவண்ணம்) அன்பரே, கோப்பையின் கடைசித்துளிவரை பருகிவிட்டீர்களா? இதுதான், உண்மையாக, முடிவா? இல்லை, எல்லாம் முடிந்துவிட்டாலும் எதாவது மிச்சமிருக்கும்; அதுவே நான் தங்கள் காலடியில் சமர்ப்பிக்கும் கடைசி அர்ப்பணம்.

    என் இதயத் தெய்வமான உங்களை வழிபட சுவர்க்கத்தின் பூந்தோட்டத்திலிருந்து ஈடிணையற்ற அழகுடைய மலர்களைக் கொண்டுவந்தேன். சடங்குகள் முடிவுற்றதெனில், மலர்கள் வாடி விட்டால், அவற்றைக் கோவிலிலிருந்து வெளியே எறிந்து விடுகிறேன். (போர்வையை விலக்கி அவளுடைய உண்மையான ஆணின் உடையில் காட்சியளிக்கிறாள்.) இப்போது உங்களுடைய பக்தனைக் கருணை நிறைந்த கண்களால் காணுங்கள்.

    நான் உங்களை வழிபட்ட மலர்களைப்போன்று நிறைவான அழகு உடையவளல்ல. என்னிடம் பலவிதமான குறைகள் உள்ளன. உலகப்பாதையில் நான் ஒரு தேசாந்திரி, எனது உடைகள் அழுக்கானவை, எனது பாதங்கள் முள்தைத்து ரத்தம் கசிகின்றன. சில பொழுதுக்கே உண்டான பூவைப்போன்ற அழகை நான் எங்கிருந்து பெறுவேன். நான் பெருமையுடன் தங்களுக்குக் கொடுக்க வந்துள்ளது ஒரு பெண்ணின் இதயத்தினை மட்டுமே! இதில் ஒரு சாமானியப்பெண்ணின் வலிகளும், இன்பங்களும் சேர்க்கப்பட்டுள்ளன; நம்பிக்கையும், பயங்களும், அவமானங்களும் இணைந்துள்ளன; இங்குதான் காதல் பீறிட்டெழுந்து தடுமாறிக்கொண்டு நித்தியமான வாழ்க்கையை நோக்கிச் செல்கிறது. இதனுள் தான் கௌரவமான உயர்வான பூரணமற்ற தன்மை இருக்கிறது. பூவாலாகிய பூசனை முடிந்துவிட்டால், என் தலைவனே, இனி வரப்போகும் நாட்களுக்கு என்னைத் தங்கள் அடிமையாகக் கொள்ளுங்கள்.

    நான்தான் சித்ரா, அரசமகள். ஒருநாள் சிவனின் கோவிலுக்கு ஒரு பெண் அணிமணிகளால் தன்னை அலங்கரித்துக்கொண்டு உங்களிடம் வந்தது ஒருவேளை உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த நாணம்கெட்ட பெண் உங்களிடன் ஒரு ஆணைப்போல் காதல்புரிய வந்தாள். நீங்கள் அவளை மறுத்தீர்கள்; நீங்கள் செய்தது நன்றே. என் தலைவா, நானே அந்தப்பெண். அவள் என்னைப்போல வேடம் தரித்தவள். பின் கடவுள்களின் வரத்தால் நான் ஓராண்டிற்கு ஒரு மானிட வடிவு பெறக்கூடிய பிரகாசமான வடிவைப் பெற்று, என் தலைவனின் உள்ளத்தை அந்தப் பொய்ம்மையின் கனத்தால் களைப்படையச் செய்தேன். நிச்சயமாக நான் அந்தப் பெண்ணல்ல.

    நானே சித்ரா. வழிபட வேண்டிய தேவதையல்ல, இருப்பினும் பரிதாபப்பட்டு ஒதுக்க வேண்டிய ஒரு பூச்சியைப் போன்ற பொருளுமல்ல. நீங்கள் என்னை அபாயமும் வீரமும் நிறைந்த உங்கள் பயணத்திலும் துணையாகக் கொள்வீர்களாயின், என்னைத் தங்களுடைய பெரும் கடமைகளில் பங்கெடுக்க அனுமதிப்பீர்களாயின், அப்போது எனது உண்மை வடிவினை அறிந்து கொள்வீர்கள். எனது கருவில் வளர்ந்து கொண்டிருக்கும் உங்கள் குழந்தை, மகனாகப் பிறந்தால், நானே அவனை இரண்டாவது அர்ஜுனனாக வளர்ப்பேன்; காலம் வரும்போது உங்களிடம் அனுப்பி வைப்பேன்; கடைசியில் நீங்கள் என்னை உண்மையாக அறிந்து கொள்வீர்கள். இன்று நான் தங்களுக்குத் தரக்கூடியது அரசனின் மகளான சித்ராவை மட்டுமே!

    அர்ஜுனன்: அன்பே, எனது வாழ்க்கை முழுமை அடைந்தது.

    {நிறைந்தது}

    Share
  • படக்கவிதைப் போட்டி (130)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    22386294_1449648895089305_585560320_n
    ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (14.10.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (76)

    கலையால் இணைவோம்

    நலம்-2-1-1

    பாரம்பரிய இசை, நாட்டியம் எல்லாம் பக்தி மார்க்கமாக இருந்தவை. பிறர் பாராட்ட வேண்டும், பெரும்பொருள் ஈட்ட வேண்டும் என்று ஏதேதோ காரணங்களுக்காக இவைகளைக் கற்க நினைத்தால் ஓரளவுதான் வெற்றி பெற முடியும்.

    சுயநலம் கொண்ட பெற்றோர்

    எழுபது வயதுக்கு மேலான ஒரு பரதநாட்டிய ஆசிரியை என்னிடம் கூறினார்: “அந்தப் பெண் நன்றாக ஆடுவாள். ஆனால் அவளுடைய தாய் அவளையே நான் கவனித்துக்கொண்டிருக்க வேண்டும், பொது இடங்களில் ஆட அவளுக்குத்தான் நிறைய வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தினார். `இனி வராதே!’ என்று நான் அவளை நிறுத்திவிட்டேன்”. சொல்லும்போதே அவர் முகத்தில் அப்படி ஒரு கோபம்.

    இதனால் பாதிப்படைந்தவர்கள் பலர். முன்னுக்கு வரவேண்டிய மாணவியை இழந்த ஆசிரியை, கலையார்வம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதால் ஏமாற்றமடைந்த மாணவி. போதாத குறைக்கு, தாயின் கனவுகளும் பேராசையால் நொறுங்கிவிட்டன.

    எத்தனை பாட்டுகள் தெரியும் என்று விரல்விட்டுக் கணக்குப் போடுவதைவிட, கற்ற சிலவற்றை ஒருவர் எவ்வளவு முழுமையாகக் கற்றிருக்கிறார் என்பதுதான் முக்கியம்.

    திறமையைக் காட்ட அவசரம்

    ஒரு முறை நான் மேடையில் பாடி முடிந்ததும், “சங்கீதம் படிச்சுக் குடுப்பீங்களா? எத்தனை மாசத்திலே மேடை ஏத்துவீங்க?” என்று தாய்மார்கள் கேட்டபோது திகைத்துப்போனேன்.

    இவர்களைப்போன்ற பெற்றோர் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கிறோம், அதனால் அவர்கள் நாம் சொல்வதையெல்லாம் கேட்டாக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    இவர்களுக்கு இணங்கி சொல்லிக்கொடுத்தால், பாட்டுகூட ஏதோ பாடத்தை ஒப்பிப்பதுபோல் இருக்கும். அனுபவித்துப் பாடுவதுபோல் இருக்குமா? பாவம் எப்படி வரும்?

    இப்படிச் செய்வது தவறான முறை என்று ஆசிரியர்களுக்குப் புரியாமல் இல்லை. ஆனாலும், வேறு வாத்தியார்களை நாடிப் போய்விட்டால், நம் வருமானத்திற்கு என்ன வழி?’ என்று, வாரத்துக்கு ஓர் உருப்படி என்று பெயருக்குச் சொல்லிக் கொடுப்பார்கள். அதனால் சொல்லிக் கொடுப்பவருக்கோ, கற்பவருக்கோ கிஞ்சித்தும் மனநிறைவு கிடைக்காது.

    குழுவாகப் பங்கேற்பது

    ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் நுண்கலை சம்பந்தப்பட்ட ஒரு காரியத்தில் ஈடுபடுகையில், போட்டி மனப்பான்மை எழக்கூடும். `பார்ப்பவர்கள் என்னையே பாராட்ட வேண்டும்!’ என்ற எண்ணத்துடன் செய்வார்கள். அவர்கள் எதிர்பார்த்த பாராட்டு பிறருக்குக் கிடைத்துவிட்டாலோ, ஆத்திரமும் பொறாமையும் கொள்வார்கள்.

    இதைத் தவிர்க்க, ஆசிரியர் ஒரு மாணவன்மீது கூடுதலான அன்பையோ, கவனத்தையோ காட்டாமல் இருப்பது அவசியம். ஓர் அமைப்பின்கீழ் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கையில், பங்கு பெறுபவர்களின் பெயர்கள் தனித்தனியாகக் குறிப்பிடாமல் இருக்கும்போது, `நாம் எல்லாரும் இணைந்து இயங்கினால்தான் நிகழ்ச்சி வெற்றி பெற முடியும்!’ என்ற மனப்பக்குவம் அவர்களுக்கு வருகிறது. போட்டியோ, கர்வமோ எழ வாய்ப்பில்லை.

    சமீபத்தில் இப்படி ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். பத்து மாணவிகள் ஒருவருக்கொருவர் ஒப்பனை செய்து, பிறர் ஏவாமலேயே மண்டபத்தை அலங்கரிப்பதிலிருந்து நாற்காலிகளைக் கொண்டுவந்து போடுவதுவரை எல்லா வேலைகளையும் தாமே முன்னின்று செய்தார்கள். `கடினமான வேலை’ என்று அஞ்சி நழுவாது, பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது. இவர்கள்தாம் தலைமைப் பதவிக்கு ஏற்றவர்கள் என்று தோன்றிப்போயிற்று.

    `பிற வகுப்புகளைச் சார்ந்த மாணவிகள் ஆடும்போது, கேலியாகச் சிரிக்கவோ, பேசவோ கூடாது,’ என்ற நியதியைப் பின்பற்றுகிறார்கள் இவர்கள். அப்படிச் செய்தால்தான், `நான்தான் உயர்த்தி!’ என்ற தலைக்கனம் கூடுகிறது. ஒருவரது திறமையும் ஆட்டங்கண்டு போகிறது.

    இம்மாணவிகளின் குடும்பத்தினர் ஆசிரியையிடம் தம் பெண்களை ஒப்படைத்துவிட்டதைப்போன்று நடந்துகொண்டனர். குறுக்கே வரவில்லை. தாங்களும் சேர்ந்து உழைத்தார்கள். இவர்களுக்குள் மொழி வேறுபாடு இருந்தாலும், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    பிறரது பார்வையில்

    ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியின்போது, தமிழரல்லாத ஒருவர் என்னைக் கேட்டார், “உங்கள் நாட்டியத்தில் ஒவ்வொரு விரலசைவுக்கும் அர்த்தம் இருக்கிறது போலிருக்கிறதே?” என்று.

    “ஒவ்வாமைக்கும், அசுரனுக்கும் ஒரே முத்திரைதான்,” என்று நான் ஆரம்பித்து, சிலவற்றை விளக்கச் சிரித்தார்.

    அவர் மேலும் துளைத்தார்: “யோகாசனம் செய்வது போல் சில சமயம் வருகிறதே!”

    யோகா பயின்றால் நாட்டியம் ஆடுவது எளிது. குனியும்போது மூச்சை வெளிவிட வேண்டும், நிமிர்கையில் மூச்சை உள்ளுக்கிழுக்க வேண்டும். ஒரே காலில் நீண்ட காலம் நிற்க இவர்களால் முடியும். இந்த மாணவிகள் ஒவ்வொரு வகுப்பும் தொடங்குமுன் சில யோகாசனப் பயிற்சிகள் செய்கிறார்களாம்.

    பாட்டில் உணர்ச்சி வேண்டாமா?

    வாய்ப்புகள் அதிகமாக வேண்டும் என்ற எண்ணத்துடன், ஊடகத்தைச் சேர்ந்த புகைப்படக்காரர் இருந்தால், ஒரு கலைஞர் வலியப்போய் அவருடன் நட்பு கொண்டவர்போல் நடிப்பது பயனளிக்கலாம். ஆனால், அவர்தான் திறமை மிக்கவர் என்று எல்லாரும் ஒப்புக்கொள்வார்களா என்பது சந்தேகம்தான்.

    நானே சகலம்(?)

    தியாகராஜ ஆராதனையின்போது, நூற்றுக்கணக்கான இசை வல்லுனர்கள் தம் பக்தியைச் செலுத்த வருவதாகப் பெயர். ஆனால், ஒரு பாடகி முதல் வரிசையில் அமர்ந்துகொண்டு, தன்முன் மூன்று ஒலிபெருக்குகளை வைத்துக்கொண்டு பாடியதையும், முன்பொருமுறை ஒரு புகைப்படக்காரரைப் பார்த்து புன்னகை பூத்து, அச்சமயம் பாடாமல் இருந்ததையும் தொலைகாட்சியில் கண்டபோது மனம் நொந்தேன். தன்னையே நினைத்துக் கொண்டிருந்தால் பக்தி எப்படி வரும்? பாட்டிலும் உயிர் இருக்காது.

    நல்ல வேளை, `இசையே இறைவனைத் துதிக்கும் வழி!’ என நம்பி வாழ்ந்த வாக்கேயக்கார்கள் இப்போது உயிருடன் இல்லை!

    மேடைக் கச்சேரிகளின்போது, பாடகரும், வாத்தியக்காரர்களும் ஒருவரது திறமையை மற்றவர் `பேஷ்!, `பலே!’ என்று வாயாரப் பாராட்டினால் கச்சேரியும் சிறக்கும், இரு தரப்பினர் இடையே ஆழ்ந்த நட்பும் உண்டாகும்.

    பல ஆண்டுகளுக்குமுன் பார்த்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. பார்வையற்ற ஒரு வாத்தியக்காரரை சபையோர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தியபோது பாடகர் முகத்தில் ஆத்திரம் கொப்புளித்தது.

    ரசிகர்கள் தலையாட்டினால் அது அவருக்குத் தெரியும் என்று நினைத்து அவர்கள் வாத்திய இசையை மெச்சும்வண்ணமாக அப்படி ஆரவாரம் செய்தார்கள் என்பது அவருக்குப் புரியவில்லை!

    அவர் முன்னணியில் இருந்த பாடகர். ஆனால், எல்லோருடைய கவனமும், `அவர் முகத்தில் எத்தனை கோபம், பாரேன்!’ என்று அவர் முகத்தில்தான் இருந்தது. இசையில் நிலைக்கவில்லை.

    மனிதன் தீவா?

    தீவுதான் தனியாக இருக்கும். எப்போதாவது, எதற்காகவாவது நாம் பிறரை நாடாமல் இருக்கிறோமா?

    `இவரால் நம் காரியம் ஆகவேண்டும்,’ என்ற முன்யோசனையில்லாது பிறருடன் பழகுவதுகூட நன்மையைத்தான் விளைவிக்கும்.

    அண்மையில் ஒரு கலைநிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். ஆங்கில இசையுடன் கூடிய `கோரஸ்’, குழுவாக வயலின், பியானோ, பரதநாட்டியம் என்று சகலமும் இருந்தன. அக்கலைஞர்களை ஒருங்கிணைத்தது இசை, வறுமை.

    வசதி குறைந்த இளைஞர்கள் பல ஆசிய நாடுகளிலிருந்து வந்திருந்தனர். அவர்களுக்குப் போதிப்பவர்கள் பணம் சம்பாதிப்பதைப் பெரிதாகக் கருதாது, தாம் கற்றுத் தேர்ந்த கலைகளைப் பரப்புவதன்மூலம் சமூக சேவை செய்பவர்கள்.

    நிகழ்ச்சி ஏற்பாட்டார்களுடைய குழந்தைகள் வசதி நிறைந்தவர்கள் ஆனாலும், தம்மைப்போல் இல்லாதவர்களுடன் கலந்து பழகி, அதனால் நன்மை பெற்றவர்கள். இவர்களுக்கு இயல்பான தாராள மனப்பான்மை வசதியற்றவர்களுக்கும் பழகிப்போக, அவர்களும் பிறருக்கு உதவி செய்வதிலும், தமக்குத் தெரிந்தவற்றைப் பகிர்ந்துகொள்வதிலும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கோடீஸ்வரரின் புதல்வியான ஒரு சீனப்பெண் புடவையும் பொட்டும் அணிந்து, அறிவிப்புகள் செய்தாள். அவளுக்குப் புடவை அணிவித்தது வசதியற்ற தமிழ்ப்பெண். ஆனால், கலைகளில் சிறந்தவள். பரோபகாரத்தால் இருவருக்குமிடையே நல்லுறவு ஏற்பட்டது.

    செல்வச்செழிப்பு ஒருத்தியை கர்வியாகவும் ஆக்கவில்லை, `அப்படி நாமும் இல்லையே!’ என்ற ஏக்கமோ, பொறாமையோ இன்னொருத்திக்கு எழவுமில்லை. கலையிலிருந்த ஆர்வத்தால் இருவரும் ஒன்றாகிப்போனார்கள்.

    கலை பேதங்களை விலக்கும் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்!

    சுயநலத்தையே பெரிதாகக் கருதி ஈடுபட்டால், நாமும் வளரமாட்டோம், நம் கலையும் வளராது.

    தொடரும்

    Share